Wednesday, April 23, 2008

ஜனநாயகத்தைக் கண்டுபிடித்தவர் அத்வானி!

"கட்சியின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியில் இல்லாதக் காரணத்தாலேயே நான் ராஜினாமா செய்கின்றேன். மத்தியப் பிரதேச பட்ஜட் கூட்டத்தொடருக்குப் பின் இதுதொடர்பான விரிவான தகவலை நான் வெளியிடுவேன்"

மத்தியப் பிரதேச மாநில பாஜகவின் முகம் என பாஜக அகில இந்திய தலைமையினால் கருதப்படும் பாஜகவின் மூத்த தலைவர் கோபினாத் முண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெரிவித்த வாசகங்கள் இவை.

அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 4000 பேரும் கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்தார்களாம்.

டெல்லிக்குச் சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் முண்டே மறுத்திருந்தார்.

ஆனா, இதெல்லாம் பழைய கதை!

நேற்று (செவ்வாய்க் கிழமை) டெல்லிக்குச் சென்ற முண்டே, அத்வானி, வெங்கையா நாயுடு, ராஜ்னாத் சிங் ஆகியோரை சந்தித்தார். அத்வானியுடனான 5 மணி நேர சந்திப்பு முடிந்தவுடன் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

பல வருடங்களாகக் கட்சியில் இருந்த அனுபவத்தை வைத்து, 'கட்சியில் ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக' புகார் கூறிய முண்டே, ஒரே நாளில், அதுவும் 5 மணி நேர சந்திப்பிலேயே தனது கூற்றினை மாற்றிக் கொண்டதைப் பார்த்தால், காணாமல் போயிருந்த ஜனநாயகத்தை அந்த 5 மணி நேரத்தில் அத்வானிதான் கண்டுபிடித்துக் கொடுத்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வரும்போது, வரலாறு பாட புத்தகங்களில் 'ஜனநாயகத்தை கண்டுபிடித்தவர் அத்வானி' என்று எழுதப் பட்டால் யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது.

நல்லா கூத்தடிக்கறாங்கப்பா!

Tuesday, March 25, 2008

ஓவியர் ஹுசைன் இப்படிச் செய்திருக்கக் கூடாது!


ஓவியர் ஹுசைன் வரைந்த 'மகாபாரதம்: கங்கா ஜமுனா யுத்தம்' என்ற ஓவியம் நியூயார்க் நகரில் நடந்த ஏலம் ஒன்றில் சாதனை அளவாக 1.6 மில்லியன் டாலருக்கு விலை போயிருக்கிறது. 4 அல்லது 6 லட்சம் டாலருக்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ஓவியம், இந்துத்துவாக்கள் அளித்த இலவச விளம்பரத்தினால் இந்த சாதனையை எட்டிப் பிடித்திருக்கிறது.
க்ரிஸ்டீ நிறுவனம் இந்த ஓவியத்தை ஏலம் விடப்போகிறது என்று தெரிந்ததும், 'இந்திய அமெரிக்க அறிவுசீவிகள் சபை' (Intellectual என்றால் 'அறிவுசீவி' என்றுதானே அர்த்தம்? ) ஒரு கடிதம் எழுதி 'ஹுசைன் இந்துக் கடவுள்களை மரியாதைக் குறைவான முறைகளில் சித்தரித்து ஓவியம் வரைந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதால், அவரது ஓவியங்களை ஏலம் விடக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார்களாம். 'மீறி ஏலம் விட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்று அவர்கள் சொல்லியும் க்ரிஸ்டீ நிறுவனம் அவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. இலவச விளம்பரம் கிடைக்கிறதென்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்?
ஏலம் நடந்த அன்று வெளியே கூச்சலும் ஆர்ப்பாட்டமுமாக இருந்தபோது, உள்ளே அந்த ஓவியம் கனஜோராக, எதிர்பார்க்கப் பட்டதை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொகைக்கு விற்கப் பட்டது.
ஆனால், ஹூசைன் இப்படி செய்திருக்கக் கூடாதுதான்! இஸ்லாம், முஸ்லிம்கள் உருவப்படங்கள் வரைவதை தடை செய்திருக்கிறது. பிற மதக் கடவுள்களை ஏசுவதையும் பழிப்பதையும் தடை செய்திருக்கிறது. இஸ்லாமியப் பெயரை உடைய ஹுசைன் இந்த இரு கட்டுப்பாடுகளையும் மீறியே இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இந்துத்துவாக்கள் வேண்டுமானால் இரட்டை வேடம் போடுபவர்களாக இருக்கலாம். 'எங்கள் கடவுள்களை மரியாதை குறைவாக வரைந்து விட்டார்' என்று ஒரு பக்கம் கூக்குரல் போட்டுக் கொண்டு, இன்னொரு பக்கம் பங்களாதேஷின் தஸ்லிமா நஸ்ரினுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாம். 'எங்கள் மத உணர்வுகள் புண் பட்டு விட்டன' என்று ஓலமிட்டுக் கொண்டே ஔரங்கசீப் பற்றி ஓவியக் கண்காட்சி நடத்தி முஸ்லிம்களின் மன உணர்வுகளை காயப் படுத்தலாம்.
எனவே, இந்துத்துவாக்கள் இப்படியாக தங்கள் 'இரட்டை நாக்கு'த் திறனை வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு முஸ்லிம் என்ற வகையில் ஹுசைன் இப்படி செய்திருக்கக் கூடாது!

Tuesday, February 05, 2008

சொந்த செலவில் குண்டு வைத்துக் கொண்ட இந்துத்துவ பயங்கரவாதிகள்!


கடந்த 24-01-08 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக முன்னாள் இந்து முண்ணனி தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குண்டு வெடித்த சூழ்நிலையை கவனித்துப் பார்த்தால், ஒரு பெரும் மதக்கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலேயே இச்சதித் திட்டத்தை இந்த பயங்கரவாதிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது புலப்படும்.


இரவு 9:30 மணியளவில் அந்த அலுகலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குண்டு வீசப் பட்டிருக்கிறது. குண்டு வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பு இரவு 7 மணி வரை இந்து முண்ணனி அமைப்பாளர் ராஜூ அங்கு இருந்துள்ளார். சம்பவம் நடப்பது இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாக அவர் வெளியேறியிருக்கிறார். உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்று தாக்குதல் நடத்தியவர்கள் கருதியிருந்தால் அந்த அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அதை செய்திருக்கலாம்.


சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் இந்து முண்ணனித் தலைவர் ராம கோபாலன் தென்காசிக்கு வந்து முஸ்லிம்களை குறித்து அவதூறுகளை வீசியிருக்கிறார். சம்பவத்தை காரணம் காட்டி பாஜக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.


சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செல்லச்சாமி என்பவர் நாட்டு வெடிகுண்டுகளுடன் போலீசாரிடம் பிடிபட்டு, அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வரவில்லை.


இந்த குண்டு வெடிப்பு மூலம் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவே இவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். இச்சமூக விரோதிகளின் திசைதிருப்பல்களில் சிக்காமல் கவனமாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினர் பாராட்டுக்குரியவர்கள்.


நன்றி: தமுமுக, The Hindu

Sunday, January 27, 2008

ஹிட்லர், சாவர்க்கர், மோடி!

விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லக் கட்டாயப்படுத்திய குஜராத் அரசை எதிர்த்து இப்படிக் கூறினார். ''எனக்கு நீரிழிவு நோய் மட்டும் இல்லையென்றால் இந்தத் தள்ளாத வயதில், மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணமடையவே விரும்புவேன்'' என்று கொடூரங்கள் அரங்கேறிய 2002லில் அகமதாபாத்தில் துணிச்சலாகக் கூறினார்.

இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள், தங்கள் கண்டனங்களையும், குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை அல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இவை யாவும் அன்றைய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு பரப்பட்ட இஸ்லாமிய விரோத அரசியலாலும், அதனால் உந்தப்பட்ட பெரும்பான்மை உயர்சாதி ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நடுநிலையார்கள் அறிந்ததுதான்.

அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம்... அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.... கோத்ராவில் ராமபக்தர்களை, இஸ்லாமியர்கள் ரயில்பெட்டிக்குள் அடைத்து தீ வைத்து கொன்றதால் ஏற்பட்ட இந்துக்களின் பதில் தாக்குதல்தான் என்று, திரும்பத் திரும்ப எழுதினார்கள். பேசினார்கள். ஆனால் இதே, ஆக்ஷன் ரீ-ஆக்ஷன் வாதத்தை, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கோ, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கோ இவர்கள் கூறவில்லை. இதை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை.

எட்டு நூற்றாண்டுகள் சிறுபான்மையினரான முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டு வந்தபோது, எதிர்த்துக் கலவரம் செய்யாத இந்துக்கள், இந்துக்களே ஆட்சி செய்யும் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டத்தில் இசுலாமியர்களைத் திட்டமிட்டு அழிக்க வேண்டிய நோக்கமென்ன? 14 சதவீதமான இஸ்லாமியர்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் என்று இந்துத்துவவாதிகள் பரப்பும் கருத்துக்கு உண்மைத் தன்மை உள்ளதா? மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் 80 சதவீத இந்துக்கள் வாழும் நாடு என்றும் பேசி வரும் சங் பரிவார்களின் திட்டம்தான் என்ன?

ஆர்.எஸ்.எஸ். தலைமை நாக்பூரில் இருந்தாலும், அதன் தத்துவ பரிசோதனையை மிகப் பெரிய அளவில் செய்து பார்த்த சோதனைக்கூடம் குஜராத். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் ஐயாயிரத்துக்கும் மேல், சொத்துக்களை இழந்தவர்கள் ஏழாயிரம்பேர். நிம்மதியை இழந்தவர்கள் ஒட்டு மொத்த குஜராத் வாழ் அப்பாவிகள்.

குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில், இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து இந்துக்களோடு இணைந்து வாழ வேண்டுமென்று, தனது ஆட்சியில் புதுப்புது சட்டங்களை கொண்டு வந்தார் மோடி. தங்களது மத, கலாச்சார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாத இஸ்லாமியர்கள், தங்களது தனித்தன்மையை விட்டு கொடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு வந்த துணிச்சலுக்கு காரணம், இந்திய அரசியல் சட்டம்தாதன் என நம்பினார்கள். ஆனால், இந்தியாவில் செயல்படுத்தப்படும் மதச்சார்பற்ற சட்டங்கள், தான் ஆட்சி செய்யும் குஜராத்திற்குள் நுழைய முடியாது என்பதற்கு, உதாரணம் காட்டுவதற்குதான் 'கோத்ரா' என்ற ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம், சங் பரிவார் கற்றுக் கொடுத்த இன அழித்தொழிப்பு பரிசோதனையை செய்து பார்த்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், திரை மறைவில் நடந்த விஷயங்களை மறைத்து, ஆக்ஷன் ரீ ஆக்ஷன் என்ற கருத்து பொதிந்த சென்டிமென்டான நாடகத்தை அரங்கேற்றி, சங்பரிவார் அமைப்புக்குள் ஹீரோவாகவும், பொதுமக்களின் பார்வையில் அப்பாவியாகவும் காட்சி தந்தார் மோடி.

குஜராத் கலவரத்தில் தலைமை தாங்கி நர வேட்டையாடியதே மோடிதான் என்பதை எத்தனையோ நடுநிலையாளர்கள் எடுத்துக் காட்டியும் பெரும்பாலனவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.

ஹிட்லரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட சாவர்க்கரின் கொள்கைகளை அடியொற்றுகிற, தீண்டாமையை கட்டிக் காக்கின்ற, உழைப்பாளி மக்களை சுரண்டுகின்ற, இனக்குழுக்கள் அனைத்தையும் இந்து என்கின்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர நினைக்கின்ற, விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிற ஒரு அமைப்பின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.

குஜராத் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க..வை குற்றம் சாட்டியபோது, 1984ல் டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியது பா.ஜ.க..

சமீபத்தில் யமுனா ராஜேந்திரன் என்ற ஆய்வு எழுத்தாளர் எழுதிய கட்டுரையொன்றில் குஜராத் சம்பவம் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விவரித்திருந்தார். அதில், "கலவரம் துவங்குவதற்கு முன்பாகவே இந்துக்களின் வீடுகளில் காவிக்கொடி அடையாளம் வைத்து, இஸ்லாமியர் வீடுகளை விலக்கி வைத்து காட்டினார்கள் பஜ்ரங்தள் தொண்டர்கள். சபர்மதி எக்ஸ்பிரஸ் தாக்குதல் சம்பவம் வருவதற்கு முன் இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.

பல உண்மை அறியும் குழுக்களும், வாக்காளர் பட்டியல், ரேஷன்கடை அட்டவணை இவைகளைப் பார்த்து தெரிந்து கொண்ட பின்புதான், இஸ்லாமியர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொன்றார்கள். இதற்கு குஜராத் அரசிலுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டன.

பல இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்கள் இஸலாமியப் பெயரில் இல்லாமல், பொதுவான பெயர்களிலும், இந்துப் பெயர்களில் செயல்பட்டு வந்தாலும், அதைச் சரியாகக் கண்டு பிடித்து சங்பரிவார் தொண்டர்கள் அழித்தார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். எவ்வளவு தெளிவான திட்டம்!!

அரசும், காவல்துறையும், இன அழித்தொழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட அமைப்புகளும் இணைந்து நடத்திய குஜராத் வெறியாட்டத்தில் மொத்தம் இறந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மூவாயிரம் என சில அமைப்புகள் கணக்கு சொன்னாலும், வெளியில் வராமல் அமுங்கிப் போன உண்மைகள் ஏராளம்.

இன மோதல், அல்லது இன அழித்தொழிப்பு இவைகளை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டுமென்ற கான்சப்டில்தான், 'ஷாகா' கற்றுக்கொடுக்கும் அமைப்பாக இருந்த சங் பரிவார், பா.ஜ.க. என்ற அரசியல் பிரிவை 1980ல் துவங்கியது. வி.ஹெச்.பி. பஜ்ரங்தள் ஆகியவை கலவரங்களை உருவாக்கும். ஆர்.எஸ்.எஸ். நேரடி களப்பணியில் இறங்கும். அதற்கு பின் பா.ஜ.க. அதை வைத்து அரசியல் செய்யும். 1990ல் ரத யாத்திரையை சோமநாதபுரத்தில் துவங்கி வட இந்தியா முழுவதும் சென்றார் அத்வானி. ரதம் கடந்து சென்ற பாதையெங்கும் இஸ்லாமியப் பிணங்களாக விழுந்தன. அதன் உச்சபட்சமாக 1992ல் அயோத்யாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே நாளில் மகராஷ்டிராவில் பா.ஜ.க. சிவசேனா, போலீஸ் கூட்டணியால் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. இதிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதனால் கோபமுற்று, பீதியடைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தங்களைப் பார்த்து சங்பரிவார அமைப்புகள் அச்சப்படவும், பாகிஸ்தான் உதவியோடு குண்டுவெடிப்பை மும்பையில் நிகழ்த்தினார்கள். இதில் சம்மந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வழங்கு நடந்து, சமீபத்தில் தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பல அப்பாவிகளும் அடக்கம் என்பது ஒரு பக்கமிருந்தாலும், இதுபோன்ற வழக்கு, கைது, விசாரணை, தண்டனை எதுவும், மும்பையில் இஸ்லாமியர்களை கொன்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இன்றுவரை நிதர்சனமான உண்மை.

கோவையிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை போலீஸ்தான் துவக்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஏற்கனவே பா.ஜ.க.வின் ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க தலைவர்கள் பணம் வாங்கிய விவகாரத்தை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய தெஹல்காதான், இன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்களைக் கொலை செய்யச் சொன்னது மோடிதான் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

இதை மறுக்க முடியாத பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர், தெஹல்கா எப்போதும் பா.ஜ.க.வை மட்டுமே புலனாய்வு செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை புலனாய்வு செய்வதில்லை என்று தன் தரப்பை மறுக்க முடியாமல், மற்ற கட்சியிலும் தவறுகள் நடப்பதுபோல் குற்றம்சாட்டியுள்ளார். நீயும் செஞ்சே, நானும் செஞ்சேன் என்பதுபோல்.

வருணதர்மத்தை, எந்த ஆட்சி நடந்தாலும் கட்டிக்காக்கும் உயர்சாதி அரசு அதிகாரிகளைக் கொண்ட மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த பல ஆண்டுகளாக காவல்துறை பதவிகளிலிருந்து, சிவில் நிறுவனப்பதவிகள், முடிவெடுக்கும் அதிகார மையங்களில் இஸ்லாமிய, தலித் அதிகாரிகளும், அறிவாளிகளும் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்ட அமெரிக்காவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் தாக்குதல் பீதியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும்கூட, அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு சகல உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் இது மிகவும் குறைவு.

தெஹல்கா வார இதழின் நிருபர் ஆஷிஸ் கேத்தான் ஆறு மாத காலம் குஜராத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகளோடு ஒன்றி கோத்ராவில் இந்துக்களை எரித்தது, இந்து வெறியர்கள் என்பதை பல்வேறு விதமான வாக்குமூலங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவிலுள்ள நடுநிலையாளர்களும் மனிதாபிமானமிக்கவர்களும், பல்வேறு உண்மை அறியும் குழுக்களும் கடந்த ஐந்து வருடங்களில் உரத்துக் கூறிய விஷயங்களை, மோடியின் சிஷ்யர்கள் வாக்குமூலமாகக் கொடுத்ததை வீடியோவில் பதிவு செய்து மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது தெஹல்கா. இதை ஜந்து வருடங்களுக்கு முன்பே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முழுக்க முழுக்க மோடியின் ஆலோசனைகளின் பேரில் வி.ஹெச்.பியும், பஜ்ரங்தள்ளும் செய்த சதி என்பதும் அதை வைத்து மூன்று நாட்களில் எவ்வளவு இஸ்லாமியர்களை கொல்ல முடியுமோ கொல்லுங்கள் என்று அரசு உத்தரவிட்டதின் வெளிப்பாடுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக பெங்களுரைச் சேர்ந்த ரூத்மனோரமா, டெல்லியைச் சேர்ந்த ஷயதா ஹமீது, அகமதாபாத் பராக் நத்வி, ஷீபா ஜார்ஜ், மாரிதெக்காரா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் 10 நாட்கள் குஜராத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள். அதில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எந்தவொரு காட்டுமிராண்டி தேசத்திலும் நடந்திராதது என்று குறிப்பிட்டார்கள்.

அகமதாபாத், கோத்ரா, வதோத்ரா, சபர்காந்த், பாஞ்ச் மகால் ஆகிய நகரம், கிராமம் சார்ந்த பகுதிகளில் நடந்த கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிறுவர் சிறுமிகளிடமும் கொடூரங்களைப் புரிவதற்கு உதவிய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காவல்துறையினரிடம், அடியாட்களாக பயன்படுத்தபட்ட பழங்குடி மக்களின் தலைவர்களிடம் பேசி கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்தக் குழுவினர் 100 பக்கமுள்ள அவர்களுடைய அறிக்கையில் சுருக்கமாக சொல்லப்பட்ட காரணிகள், வன்முறைகள் தனனெழுச்சியாக நடந்ததாகத் தெரியவில்லை. யாரைத் தாக்குவது என்பது முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கு அழுத்தமான ஆதாரங்கள் உள்ளன. இவை மிகவும் குறைவாக வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இவற்றின் அளவும் விரிவும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் ஏகமாக நடந்துள்ளன. நிவாரண முகாம்களிலும் அடைக்கலமாயிருக்கும் பெண்களும், சிறு மற்றும் பெரும் கூட்டத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். மிருகத்தனமாகக் கற்பழிப்பு செய்யப்பட்ட பெண்கள் கடைசியில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். பெண்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் அரசும், போலீசும் பகிரங்கமாகத் துணை போயிருக்கின்றன.

குஜராத்தி மொழி பத்திரிக்கைகள் சிலவும் உண்மைகளை மறைத்து, இஸ்லாமியர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கு ஏதுவாக செய்திகளை வெளியிட்டார்கள். இது முழுக்கவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தனர் இந்த பெண்கள் குழுவினர். அதை அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க அரசுக்கு பயந்து கொண்டு எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை.

நடந்துவிட்ட கொடூரத்தின் உண்மையை எத்தனை முறை நிரூபிக்க வேண்டியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இந்து முனனணித் தலைவர் ராம கோபாலன், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட, "முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்தா"? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதில் இந்தியாவில் இந்து ஆட்சி அமைய ஸ்பெயின் நாட்டில் எப்படி கிறிஸ்தவர்களால், இஸ்லாமியாகள் கொல்லப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கர்ப்பிணிகள், குழந்தைகள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்களோ, அது போல் இந்தியாவில் நிகழ வேண்டும் என்று தெளிவாக எழுதியிருந்தார்.அதைத்தான் குஜராத்தில் செய்தார் மோடி.

சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானியன் மனு அனுப்பினாலே அதை வழக்காகப் பதிவு செய்துவிடுவோம் என்று கூறும் நீதித்துறை... அவசியமான வழக்குகளில் விடுமுறையிலும் தீர்ப்பு சொல்லும் நீதித்துறை... குஜராத் கொடூரங்களின் சூத்திரதாரி மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

-சே குவேரா.

நன்றி: நக்கீரன் இணைய இதழ்

Wednesday, January 23, 2008

படாத பாடுபடும் பாரத ரத்னா!

"ஆத்தோட போற தண்ணி.. அய்யா குடி.. அம்மா குடி'-ன்னு சொல்வாங்களே அந்தக் கதையா ஆயிப் போச்சு பாரத ரத்னா!

நாட்டின் மிக உயரிய விருதான இதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்று பாஜகவின் அத்வானி கூறியிருந்தார். அ‌வரைத் தொட‌ர்‌ந்து க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மூ‌‌த்த தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ஜோ‌திபாசு‌க்கு‌ம், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌‌சி‌யி‌ன் மாயாவ‌தி‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் க‌‌ன்‌சிராமு‌க்கு‌ம் அவ்விருதை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு‌க்கு கோ‌ரி‌க்கை ‌விடுத்‌திரு‌ந்தன‌ர்.

இதற்கிடையில் சிவசேனா தலைவர் பாக்தாக்கரேயும் அவர் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்; 'இ‌ந்த ‌விருது‌க்காக எனது பெய‌ர் ‌சிபா‌ரிசு செ‌ய்ய‌ப்ப‌ட்டு எ‌ன‌க்கு வழ‌ங்க நே‌ரி‌ட்டா‌ல் நா‌ன் ஒரு போது‌ம் ஏ‌ற்கமா‌ட்டே‌ன்'. நரி, திராட்சைப்பழக் கதை நினைவுக்கு வருகிறதா?

பாரத ரத்னா விருது, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது . இந்த விருதைப் பெற வாஜ்பாய் எப்படி தகுதியுடையவர் என்ற கேள்விக்கு பதிலாக 'ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்க வாஜ்பாய் பாடுபட்டுள்ளார் . அதைக் கெளரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா அவருக்கு வழங்கப்பட வேண்டும்' என்கிறார் அத்வானி.

ஆனால் வரலாற்றின் பக்கங்களோ வேறு விதமான உண்மைகளை பறை சாற்றுகின்றன.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மோடியின் ஆதரவோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் கோர வெறியாட்டம் போட்டனர். இன்றும் அம்மாநில சிறுபான்மை மக்களை அதிகபட்ச அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன இந்துத்துவ சக்திகள். பிரதமர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்த வாஜ்பாய் 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப் பட்டதைத் தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இவர்தான் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டாராம்.

1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் வாஜ்பாய் என் சங்பரிவாரங்கள் அவருக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. ஆனால், 'சம்பவத்தன்று கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறியாச் சிறுவன் நான். எந்தவித போராட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை ' என்று வாஜ்பாயே கையெழுத்து போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.

சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கு கொள்ளவில்லை. தவிர 'ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் தருவதில்லை' என்ற தனது வடிகட்டிய சந்தர்ப்பவாத சுயநலப் போக்கிலிருந்து அது சிறிதும் விலகாமலேயே இருந்தது. சிறுவயதிலிருந்தே இத்தகைய கொள்கைகள், சித்தாத்தங்களில் பயிற்சி பெற்று வந்த வாஜ்பாய் எப்படி விடுதலைப் போரில் பங்கேற்றிருப்பார்?

வாஜ்பாய் மட்டுமல்லாது, இதே ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்தவர்கள்தான் அத்வானி, மோடி உள்ளிட்ட பெரும்பான்மையான பாஜக தலைவர்கள். உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள், காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நாட்டின் உயர் பதவிகளை கைப்பற்றியிருக்கிறார்கள். நாட்டின் உயரிய விருதுகளும் அவர்களுக்கு வேண்டுமாம்!

இதோடு ஏன் நிறுத்த வேண்டும்? "அப்படியே சாவர்க்கருக்கு ஒரு பாரத ரத்னா, மோடிக்கு ஒரு பரம்வீர் சக்ரா, கோட்ஸேவுக்கு ஒரு பத்மபூஷன்... சூடா பார்சல்...!"

என்னங்கையா... உடுப்பி ஹோட்டல்ல நெய்தோசையா ஆர்டர் பண்றீங்க?

Friday, January 18, 2008

நரேந்திர மோடியும் தாவுத் இப்றாஹிமும்!

மரண வியாபாரி மோடி குஜராத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதால் அம்மணி ஜெயலலிதா அவருக்கு விருந்து வைக்கிறாராம். சோ ராமசாமி மோடிக்கு பாராட்டு விழா நடத்துகிறாராம்.


சில மாதங்களுக்கு முன்பு டெஹல்கா இந்த இந்துத்துவ பயங்கரவாதியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலங்களைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டபோது, இந்த ஜெயலலிதாவோ ராமசாமியோ இவனைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இன்றைய பாராட்டுக்கும் விருந்துக்கும் என்ன காரணம்? ஜாதிப் பற்றா? அல்லது, தேர்தலில் வென்றவர்களெல்லாம் உத்தமர்களாகி விட்டதாக மனு தர்மமோ சாணக்கிய சாஸ்திரமோ சொல்கிறதா?


சிபு சோரன் என்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மன்மோகன்சிங் அமைச்சரவையில் நிலக்கரித்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப் பட்டபோது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.. நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப் பட்டார். அப்போது பாஜக அதை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது. ஏனய்யா... சிபு சோரன் தேர்தலில் வென்று எம்.பி. ஆனவர்தானே? ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியின் தலைவரும் கூட. நியாயப்படி பார்த்தால் தேர்தலில் வென்றதால் உத்தமராகிப் போன சிபு சோரனுக்கு பாஜக பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்!


சிபுசோரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், 1975-ல் ஒரு இனக்கலவரம் நடப்பதற்கும், அதில் 10 பேர் மரணமடைவதற்கும் இவர் காரணமாக இருந்தாராம். இனக்கலவரம் நடக்க காரணமாக இருந்தவரே குற்றவாளி என்றால், ஒரு இனத்தையே அழிப்பதற்கு திட்டம் தீட்டி, ஆண், பெண், முதியவர், சிறுவர்கள், வயிற்றுச் சிசு என எந்தப் பாகுபாடுமில்லாமால் 3000 பேரை கொன்று குவிக்க தூண்டுகோலாக இருந்த கொடூரன் எவ்வளவு பெரிய குற்றவாளி? இவன் எத்தனை தேர்தலில் வென்றால்தான் என்ன?



கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மோடி, இதற்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று 'இரத்தம் கொதிக்க'க் கூறியதாகவும், தான் ஒரு மாநில முதல்வராக இல்லாதிருந்தால் உடனடியாக ஜுஹாபுரா (அஹமதாபாத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி)-வில் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாகக் கூறினார் என குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அர்விந்த் பாண்டியா தெரிவித்துள்ளது தெஹெல்கா வீடியோவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களை அழைத்துப் பேசிய மோடி தாம் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் மாநில
முழுவதும் முஸ்லிம்களை எல்லா வழியிலும் மூர்க்கத் தனமாக அழிக்க வேண்டும் என்றும் கூறியதாக
வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் போட்ட காவிப் பயங்கரவாதிகளின் வழியில் குறுக்கிடக்கூடாது என காவல் துறைக்கு மோடி அரசு கட்டளை இட்டது. மேலும் அடைக்கலம் தேடிவந்த முஸ்லிம்களைப் பிடித்து கலவர வெறியர்களிடம் ஒப்படைத்துத் தான் மேற்கொண்ட பணிக்கு தீரா இழுக்கையும் மோடி அரசின் காவல் துறை தேடிக் கொண்டது - நன்றி: சத்தியமார்க்கம்.காம் .


இதற்கெல்லாம் கொடியவன் மோடியும் அவனது அடிவருடிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மும்பை குண்டுவெடிப்புகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் தாவுத் இப்றாஹிம் இந்த பயங்கரவாதிகளின் டெக்னிக்கை பயன்படுத்தி, ஒரு கட்சியை துவங்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் ஒரு மாநில முதல்வராகியிருக்கலாம். பிரதமராகக் கூட ஆகலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளெல்லாம் கிடைத்திருக்கும்!

என்ன நாஞ்சொல்றது?

Tuesday, November 27, 2007

மலேஷியாவில் கோயில்கள் இடிப்பு? உண்மை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயிலை அந்நாட்டு அரசு அப்புறப்படுத்தியது. இதையடுத்து அங்குள்ள இந்துக்கள் சிலர் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். அதோடு இங்குள்ள இந்துத்துவ வகையறாக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிற்கான மலேஷிய தூதரிடம் அங்குள்ள கோயில்களை 'பாதுகாக்க' மனுவும் அளித்தனர். (ஏன்னா, 'இடிக்கிற'தெல்லாம் அவங்க வேலையாச்சே!). ஜெ போன்ற அரசியல்வாதிகளும் இதில் தலையிட்டு குட்டையை குழப்ப முயன்று வருகின்றனர்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? இடிக்கப்பட்ட ஆலயம் பழமையானது என்பதாலும், முறையான அனுமதியின்றி ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதாலும் அதை இடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த நவம்பர் 2005-லேயே, ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ள அந்த இடத்தை காலி செய்து தரும்படி சிலாங்கூர் மாநில அரசு அக்கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கோவிலை இடம் மாற்றிக் கட்டிக் கொள்வதற்காக இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதன் பிறகே அக்கோயில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அக்கட்சி ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வழங்கப்பட்டும் புதிய இடத்துக்கு கோவிலை மாற்றுவதற்கு கோவில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வந்தனர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்துக்கள் கோவில் கட்டும் போது மாநகர மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தங்கள் விருப்பத்திற்கு கட்ட வேண்டாம் என்றும் சாமிவேலு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தை மதரீதியானதாக நாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவில்கள் மட்டுமல்லாது இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுள்ளன என்று மலேஷிய வாழ் முஸ்லிம்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுவாக எந்த நாட்டிலும் இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது வழக்கம்தான். சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன், மதுரையில் இது போல ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன. அவற்றுள் சில கோவில்களும், தர்காக்களும் அடக்கம். அது போல சட்டவரையறைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த மலேஷிய நிகழ்வு. அதை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முற்படுகின்றனர் இந்துத்துவாக்களும் சில அரசியல்வாதிகளும்.

சிறுதகவல்: மலேசியாவில் ஏறத்தாழ பதினேழாயிரம் கோயில்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாம்.



நன்றி: தமுமுக

Saturday, November 24, 2007

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கலாமா?

தனது தாய்நாடான பங்களாதேசிற்கு திரும்பினால் வழக்கு விசாரணைகளை ச்ந்திக்க நேரும் என்பதால் கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கணுமாம். சொல்றது யாருன்னா விகே மல்ஹோத்ரா என்கிற பிஜேபி தலைவர்.

முஸ்லிம்கள் என்பதற்காகவே குஜராத் மக்களை கூட்டம் கூட்டமாக எரித்துக் கொன்ற அதே சங்பரிவார கும்பலைச் சேர்ந்த பிஜேபி தலைவர் ஒருவர்தான் இந்த முஸ்லிம் அம்மணி மேல் இவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்.
காரணம் என்னன்னா கருத்துச் சுதந்திரமாம்!

இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான். அப்போ இவங்களோட கருத்துச் சுதந்திரம் எங்கே புல் புடுங்க போயிருந்துச்சுன்னு தெரியலை!

பிரபல இந்திய எழுத்தாளர் கமலா சுரையா முஸ்லிமாக மாறினார் என்பதற்காக அவரைக் கொல்ல முயற்சி செய்ததும் இதே இந்துத்துவ சக்திகள்தான்! கமலா சுரையாவின் கருத்துக்களுக்கு சுதந்திரம் கிடையாதா என்ன?

சரி போகட்டும்! தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துடலாம்! நரேந்திர மோடி போன்றவைகளெல்லாம் நடமாடும் பேறு பெற்ற இந்தியாவாச்சே! தஸ்லிமாவுக்கு அடைக்கலம் கொடுக்குறதால ஒன்னும் குறைஞ்சு போயிடாது.

ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்..!

'Oh You Hindu! Awake!' என்ற பெயரில் இந்துக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் நூலை எழுதியவர் Dr. சட்டர்ஜி என்பவர். அரிய பல கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூலை எழுதியதற்காக இந்தியரான Dr. சட்டர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டு அதன்பிறகு பங்களாதேஷ் தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம். என்ன நாஞ்சொல்றது?

Monday, November 19, 2007

ம.பி. சிறையில் தாடிக்குத் தடை!

'சிறைக் கைதிகள், தாடி வைக்கக்கூடாது; குல்லாய் அணியக்கூடாது' என்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச பா.ஜ. அரசு, புது தடைகளைப் போட்டுள்ளது. 'கைதிகள் அடையாளம் காண, இவை தடையாக இருப்பதால், தாடி வளர்க்கவும், குல்லாய் அணியவும் தடை விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது.


அரசின் சிறுபான்மை நலத்துறை தலைவர் அன்வர் கூறுகையில், "கைதிகளிடம் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆனால், அரசு இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளதா என்பதை அவர் உறுதி செய்ய தயங்கினார்.

போபால் மத்திய சிறை கண்காணிப் பாளர் சோம்குன்வார் கூறுகையில், "கைதிகளை சிறைக்குள் அனுப்பும் முன்பு, தாடியை மழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். அவர்களின் தாடி மழித்த போட்டோ தான், போலீஸ் பதிவேட்டில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீபாவளியை ஒட்டி நடத்தப்படும், எருமை மாட்டு மோதல் விளையாட்டுக்கும் சவுகான் அரசு தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போல நடக்கும் இந்த மோதல், பல ஆண்டுகளாக ம.பி.யில் இந்துக்கள் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்
இந்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது சீக்கியர்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!
கிரிமினல் கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமை பெற்ற இருள்நீக்கியார் தண்டம் + தாடி + காவி உடையுடனேயே உள்ளே சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!




Monday, November 12, 2007

சோ ராமசாமியின் தேசப்பற்று!

கரண் தாப்பரின் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நா வறண்டு, தண்ணீர் குடித்து, மைக்கை பிடுங்கி எறிந்து, பின்னங்கால் பிடரியில் அடிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய 'மாவீரன்(?)' மோடியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலத்தைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டது டெஹல்கா. அரக்கக் குணம் படைத்த அந்த ஜந்துக்களின் கொடூரச் செயல்களை 'அது'களின் வாயாலேயே கேட்டு உலகமே அதிர்ந்தது. மனதில் கடுகளவேனும் மனிதாபிமானம் உள்ளவர்கள் கூட அந்த வாக்குமூலங்களை ஜீரணிக்க இயலாமல் தவித்தனர். இவன்கள் ஒரு தாயில் வயிற்றில்தான் ஜனித்தார்களா என்பதே நம்ப முடியாததாக இருக்கிறது.


ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், சில இடங்களில் மயான அமைதி நிலவுகிறது!


- செல்வி ஜெயலலிதா: மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு வந்தவர் இவர். சமீபத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் ஒருவர் இறந்ததற்கு கவிதை அஞ்சலி செலுத்திய முதல்வர் கருணாநிதியைக் கண்டித்த அம்மணி, ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான மோடியை கண்டித்து இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை!



- சங்கரமடத்து இருள்நீக்கி சுப்பிரமணியனார்: பாபரி மசூதி விவகாரத்தில் அழையா விருந்தாளியாய் மூக்கை நுழைத்து, மத்தியஸ்தம் என்ற பெயரில் மசூதியை முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க திட்டம்தீட்டியவர் இவர். (ஏன்னா, நாட்டுல மதநல்லிணக்கம் நிலவுறதுக்காக இவர் பாடுபடுறாராம். காலுல சாக்ஸ் மாட்டிண்டு சேரி மக்களை ஆசீர்வதிக்க போனவராச்சே!) ஒட்டுமொத்த குஜராத் முஸ்லிம்களையும் கூண்டோடு கொலை செய்ய வழி செய்த மோடி விவகாரத்தில் இவர் இன்னும் மூச்சு கூட விடவில்லை!


- முன்னாள் பிரதமர் வாஜ் பேய்: 2002-ல் இந்த கொடூரக் கொலைகள் நடந்தபோது, 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப்பட்ட மனுஷன் இவர். 'இந்தக் கொடூரன் இருக்கும் அதே கட்சியில் நானும் இருப்பதா?' என்று அக்கட்சியில் இருந்து இன்னும் இவர் விலகவில்லை! அட்லீஸ்ட் மோடியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று இவர் முணுமுணுக்கக் கூட இல்லை!


- உச்சாநீதி மன்றம்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்க முற்பட்டபோது பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதாகச் சப்பைக் கட்டு கட்டி 'ஆட்சி கலைக்கப்பட்டுவிடும்' என்று உச்சநீதி மன்றம் மிரட்டியது. குஜராத் கொடூரங்களைப் பற்றி இத்தனை ஆதாரங்கள், வாக்குமூலங்கள் வெளியான பிறகும் கொடியவன் மோடியின் ஆட்சியை பறித்து அவனை வீட்டிற்கு அனுப்ப இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை குஜராத் முஸ்லிம்கள் 'பொதுமக்களில்' சேர்த்தி இல்லை போல.

- முதல்வர் கருணாநிதி: "நரேந்திர மோடி தொடர்பாக தெஹல்கா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளதே?" என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது "பத்திரிகைகளில் அதுபற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு என் கருத்தை சொல்கிறேன்." என்று சொன்னவர்தான். இதுவரை கருத்து எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை! அவரோட பிரச்னை அவருக்கு! அடுத்த கூட்டணி வாய்ப்பை கெடுத்துக்கக் கூடாதில்லையா?

- சோ ராமசாமி அய்யர்: மோடியை பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்று சொல்லி போற்றியவர் இவர். 'இவ்வளவு கொடூரமான ஒருவனையா நாம் ஆதரித்து எழுதினோம்' என்று இவர் இன்னும் வெட்கித் தலைகுனியவில்லை. பிஜேபி ஆட்சியில் ராஜ்யசபா எம்.பி. பதவியை அனுபவித்த விசுவாசம் தடுக்கிறது போலும். இதுவே வேறோரு கட்சியின் ஆட்சியிலுள்ள மாநிலத்தில் நடந்திருந்தால், இந்த அய்யர் எப்படி விளாசித் தள்ளியிருப்பார்?

இங்கேதான் சோ ராமசாமியின் தேசப்பற்று வெளிப்படுகிறது. ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடிஅமீன், இவர்களெல்லாம் தங்கள் 'திருச்சேவை'களின் காரணமாக உலக வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்து விட்டார்கள். அதுபோல இந்தியாவின் பெயரை நிலை நிறுத்த யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தில்தான் சோ அய்யர் மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்திருக்கிறார். குஜராத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 'சோதனை முயற்சி'யை இந்தியாவெங்கும் நடத்தி, உலக அரங்கில் இந்தியாவுக்கு நிலையான 'புகழை' பெற்றுத் தந்திடுவார் மோடி.

வாழ்க சோ ராமசாமியின் தேசப்பற்று!

(ஆனால், பாவம் இந்தியா!)

Sunday, November 11, 2007

டெஹல்கா அம்பலம்: நிரம்பி வழியும் உண்மைகள்? திகைத்து நிற்கும் மானுடம் - பேரா. அ. மார்க்ஸ்

உயிரைப் பணயம் வைத்து, ஐந்து மாத காலக் கடும் உழைப்பின் மூலம் தெஹல்கா வார இதழ் குஜராத் 2002 குறித்து, ஏற்கெனவே தெரிந்த பல உண்மைகளுக்கு மேலும் பல நிரூபணங்களை வெளிப்படுத்தியுள்ளது. இம்முறை இந்த உண்மைகள், யார் இந்த வரலாறு காணாத வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களின் வாயிலிருந்தே கசிந்திருக்கின்றன. அது தான் ஒரே வித்தியாசம்.

இந்தக் கொலை மனங்கள் ஒவ்வொன்றும், தன் முன் அந்த நுண்ணிய, ஆற்றல் வாய்ந்த உளவுக் கருவி கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை அறியாமல், தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதை வாசிப்பதற்கு அல்லது பார்ப்பதற்கு ரொம்ப நெஞ்சுரம் வேண்டும். அந்தக் காலத்தில் பரிசை கண்ணப்பத் தம்பிரான் கூத்தில் அறிவிப்பார்களே, ''இப்போது துச்சாதன் வரப்போகிறான். கர்ப்பிணிப் பெண்களும், கலங்கிய சித்தம் கொண்டவர்களும் எழுந்து சென்று விடுங்கள்'' என்று. அது போல இந்தக் கொலை வாக்கு மூலங்களை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இவற்றை எதிர் கொள்ள நெஞ்சுரம் வேண்டும். முழுமை யாகப் படித்து முடிப்பதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

"ஒன்பது மாதக் கர்ப்பிணித் துலு.......... அந்தக்...........ளை வயிற்றைக் கிழித்து கருவை வாள்முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டினோம். தாயையும், கருவையும் நெருப்பில் எரித்தோம்.அவர்கள் கரு உயிர்க்கக் கூடாது."

"முதியவர் இஹ்சான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பணத்தைக் கொண்டு வந்து எங்கள் காலடியில் கொட்டிவிட்டு ஓடப் பார்த்தார். பற்றி இழுத்தோம். பின்னாலிருந்து ஒருவன் உதைத்து வீழ்த்தினான். ஒருவன் அவர் மீது கத்தியைப் பாய்ச்சினான். முதலில் கைகளை வெட்டினோம். பின்னர் ஒவ்வொரு உறுப்பாக சிதைத்தோம். குற்றுயிராய்க் கிடந்த உடலையும் கழித்த உறுப்புகளையும் நெருப்பில் எரித்தோம். செத்த உடல்களை எரிக்கக் கூடாது என்பதல்லவா அவர்களின் நம்பிக்கை."

"அது ஒரு சரிவான குழி. ஒரு புறம் சரிந்து இருக்கும், மறுமுனையோ செங்குத் தான உயரம். ஏறித் தப்ப முடியாது. அதில் போய் அவர்கள் ஒண்டினார்கள். பெட்ரோலை அள்ளி ஊற்றி எல்லோரை யும் எரித்துக் கொன்றோம்."

இப்படி இன்னும் இன்னும். இவற்றை எல்லாம் சொல்லுகிற பாபு பஜ்ரங்கி, ராஜேந்திர வியாஸ், ரமேஷ் தவே, மதன் சவால், பிரஹலாத் ராஜு, மஞ்சிலால் ஜெயின், திமன்ட் பட், தீபக் ஷா.. இவர்களெல்லாம் யார்? பஜ்ரங்கதள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க இந்த அமைப்புகளின் முக்கிய உள்ளூர் தலைவர்கள். தம்மை தாதாக்களாகவும், தலைவர்களாகவும், இந்து மதக் காப்பாளர் களாகவும் ஒரே சமயத்தில் அறிவித்துக் கொள்பவர்கள். இவர்கள் இன்று சிறைகளிலோ, தலைமறைவாகவோ இல்லை. வெளிப்படையாக உலவுகின்றனர். பெரிய மனிதர்களாய் தலைவர்களாய், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களாய் பட்டம், பதவி, பணம் எல்லாவற்றுடன் வலம் வருகிறார்கள்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, ஒன்பது சதவீத பொருளாதார வளர்ச்சி, அணுகுண்டுச் சாத்தியமுள்ள ஐந்து வல்லரசுகளில் ஒன்று. ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சி.... இத்தனைப் 'பெருமைக்கும்' உரிய இந்தியாவில் இது எப்படிச் சாத்தியமானது?


இவர்கள் தன்னந்தனியாக இல்லை. இவர்களின் பின்னே, இந்தக் கொலை மனங்களின் பின்னே இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி இருக்கிறது. 'சங்காதன்' என்று சொல்லும் பரிவாரக் கும்பல் உள்ளது. இந்துத்துவம் என்னும் கருத்தியல் உள்ளது. கோரிதான் சபாடியா என்கிற அன்றைய உள்துறை அமைச்சர், வி.எச்.பியின் மாநிலச் செயலர் ஜெயதீப் படேல், சர்வதேசச் செயலாளர் பிரவிண் தொகடியா, எல்லாவற்றிற்கும் மேலாக மாநில முதலமைச்சர் சின்ன சர்தார் நரேந்திர மோடி இருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும்கூட முஸ்லிம்கள் யாருடனும் ஒன்றாக வாழ மாட்டார்கள் எனச் சொல்லி மோடிக்கு ஆதரவளிக்க வாஜ்பேயி இருக்கிறார்.


'மூன்று நாள் அவகாசம் தருகிறோம் செய்து முடியுங்கள். உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது. சாட்சியங்களும் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கைதானவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும். அவர்கள் குடும்பங்களுக்கு தொடர்ந்து தேவையான 'ரேஷன்'கள் வழங்கப்படும்.

உங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை, நாங்கள் பள்ளி நிர்வாகங்களில் பேசிக் கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேசமாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் கூட சாட்சி சொல்ல மாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்...' இத்தனை உறுதி மொழிகளும் அந்த கொலை மனங்களின் பின்னால் நின்றன.

ஒன்றைச் சொல்ல மறக்கக்கூடாது. சங்பரிவாரங்கள் வாக்குத் தவறாதவர் கள் - இந்த மாதிரி விஷயங்களைப் பொறுத்த மட்டில். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றிக் கொண்டுள்ளார்கள்.

கொலை வாட்கள், கூரான திரிசூலங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இவைகளெல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் வழக்கறிஞர்கள் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. காவல் துறைக்கு உரிய ஆணைகள் இடப் படுகின்றன. அகமதாபாத்திலும், பரோடாவிலும் இன்னும் பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், துர்கா வாஹினி, பா.ஜ.க ஆகிய அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள், ஒவ்வொரு கூட்டத்திலும் 60 முதல் 70 பேர்கள் வரை கலந்து கொள்கின்றனர். ''எதிர்ப்படும் முஸ்லிம்கள் எல்லோரையும் சொல்லுங்கள், சூறையாடுங்கள், அழியுங்கள் உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது...'' இன்ன பிற வாக்குறுதிகள்.


ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் 'ஸ்கோர்' எவ்வளவு என தலைமைக்கு தகவல்கள் போய்க் கொண்டே இருக் கின்றன. மாயா கோட்னானி என்றொரு பா.ஜ.க பெண் (சட்டமன்ற உறுப்பினர்) கொலைத் தலங்கள் ஒவ்வொன்றாக 'விசிட்' செய்து ஊக்குவித்து செல்கிறார்.

கோத்ரா, அகமதாபாத் மிக அதிகமான கொலைகள் நடந்த நரோடாபாடியா என்கிற இடத்திற்கும் மோடியே நேரில் செல்கிறார். வெளிப்படையாக அவர் பேச இயலாது என்பதை கொலைஞர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர் வந்து சென்றதே, கண்டனங்கள் கூறாமல் அகல்வதே அவர்களுக்கு அளிக்கும் செய்தி அல்லவா! இரண்டாவது இரும்பு மனிதனல்லவா நரேந்திர மோடி. உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது எங்கனம்?


மெகானி நகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.ஜி எர்டா 'மூன்று மணி நேரம் ஜமாயுங்கள்' என்று சொல்லிவிட்டு அகல்கிறான். பேராசிரியர் பந்துக்வாலா வின் வீட்டிற்குள் பாதுகாப்புக்கு நியமியக்கப்பட்ட காவலர்கள், கும்பல் வந்தவுடன் சீக்கிரம் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு அகல்கிறார்கள்.


ஒரு போலீஸ் வேனில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படும் முஸ்லிம்களை கூண்டோடு எரிப்பதற்கும் கொலைஞர்களிடம் வழி சொல்கிறான் எர்டா. 'நீங்கள் கல்லால் அடியுங்கள். டிரைவர் ஓடி விடுவார். பின் உங்கள் வேலையைச் செய்யலாம்''. அதே நேரத்தில் அங்கு வந்த பதான் என்கிற ஒரு முஸ்லிம் அதிகாரியால் 'காரியம்' கெட்டு விடுகிறது. அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். முஸ்லிம் காவலர்களால் இப்படிக் காப்பாற்றப்பட்ட இன்னொரு சம்பவமும் தெஹல்கா அம்பலப்படுத்துகிகிறது. காவல்துறையிலும், ரெவின்யூ துறையிலும் உரிய அளவு முஸ்லிம் பிரதி நிதித்துவம் தேவை என மனித உரிமையாளர்கள் தொடர்ந்து சொல்லி வருவதை ஒரு கணம் இத்துடன் இணைத்துப் பாருங்கள்.


சபர்கந்தாவின் பப்ளிக் பிராசிகியூட்டர் பாரத் பத், தான் எவ்வாறு முஸ்லிம் சாட்சிகளை மிரட்டினான் என்பதையும் பெருமிதத்துடன் தெஹல்கா நிருபரிடம் சொல்கிறான். மேற்சொன்ன கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டும் அரசு, கொலைகாரர்களிடம் எல்லாப் பாதுகாப்புகளும் வெளிப்படும் என வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சி, சாட்சியங்களையும் தடயங்களையும் உடனடியாக அழித்தொழிக்க சட்ட அறிஞர் குழு, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காட வேண்டிய அரசு வழக்குரைஞரே ஆதரவாகக் சாட்சிகளை மிரட்டும் அவலம், பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைச் சரிவரப் பதிவு செய்யாமலும் முறைப்படி முதல் தகவல் அறிக்கைகளை தயாரிக்காமலும், குற்றம் சாட்டப்பட்டவர் களிடம் உண்மையை அறிய முயலாமல் விருந்துபசாரம் செய்து கொண்டிருந்த காவல்துறை..., மோடியின் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

இல்யோதார்த் என்கிற தத்துவ அறிஞர் சொல்வது போல இது ஒரு 'முழுமையான குற்றம் (perfect crime) எந்தக் குற்றமானாலும் ஏதேனும் ஒரு பலவீனம் அதில் வெளிப்பட்டிருக்கும். புலனாய்வின் மூல ஆதாரமாக அதுவே அமையும். ஆனால் குஜராத்தில் நடந்ததோ முழுமையான குற்றம் (நுட்பமான திட்டமிட்ட படுகொலை எந்தப் பலவீனமும் இல்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கவே இயலாது.) உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது மட்டுமல்ல கண் முன்னே தலைவர்களாகவும் பதவி உயர்வுகளுடனும் உலா வருவார்கள். ஈடுசெய்யக் கூடிய இழப்புகளும் கூட ஈடுகட்டப்படவில்லை. அகதிகள் திரும்பி வர இயலாது, பிள்ளைகள் தொடர்ந்து பள்ளிகளில் படிக்க இயலாது, பழைய முதலாளிகள் வேலை தரமாட்டார்கள்.... முஸ்லிம்கள் மன நிலை எப்படி இருக்கும்?

கொலைகாரர்களின் வாக்கு மூலங்களை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அவர்களிடம் கிஞ்சிற்றும் குற்ற உணர்வில்லை. தாங்கள் செய்தவற்றில் அவர்களுக்குப் பெருமை. 'நான் பெருமை கொள்கிறேன். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் அதிக முஸ்லிம்களைக் கொல்வேன்'' என்கிறான் பஜ்ரங்கி. ''முஸ்லிம்களைக் கொல்வது தான். அவர்களை உதைப்பதுதான் எங்கள் அரசியல்'' என்றும் அவன் பெருமிதம் கொள்கிறான். மற்றவர்களும் அதே குரலை ஒலிக்கின்றனர். சாரா என்றொரு குற்றப் பரம்பரைச் சாதி ஒன்று. அதே போல கர்வா, பக்ரி, காஹல், ராபரி, பஸ்மல் முதலான அடித்தளச் சாதிகள் சில. இவற்றைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலரையும் மூளைச் சலவை செய்து, பண ஆசை காட்டி கொலைகாரர்களாக மாற்றுகிறது இந்துத்துவம். முஸ்லிம்களைக் கொல்வதன் மூலம் இந்து மதத்திற்குச் சேவை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. எப்படி முஸ்லிம்களைக் கொல்வது இந்து மதத்திற்கு கடமை ஆற்றுவதாக அமையும்? காலங்காலமாக இந்து மதத்தால் வஞ்சிக்கப்பட்டுக் குற்றப் பரம்பரையாக ஆக்கப்பட்டவர்கள் ஏன் இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்? இந்தக் கேள்விகளை எழுப்ப இன்று ஒரு காந்தி இல்லை, பெரியார் இல்லை, அம்பேத்கர் இல்லை.

ஜான்சி ராணி போல உணர்ந்ததாக ஒரு கொலை மனம் கூறுகிறது. தான் ஒரு முஸ்லிம் பெண்ணை வன்முறையாக உடலுறவு கொண்டதைத் தன் மனைவி முன்பே பெருமையாகச் சொல்கிறான் இன்னொரு கொலையாளி. இதெல்லாம் என்ன? மனித மனத்தில் சிந்தனை வெறுப்புகள் எங்கே புதையுண்டு கிடந்தன? இவற்றைத் தோண்டி வெளிக் கொணரும் சாத்தியம் இந்துத்துவவாதிகளுக்கு எப்படி வந்தது?


முஸ்லிம்களை ரத்தமும் சதையுமான மனித உயிர்களாய், நேற்றுவரை நம்முடன் பழகியவர்களாய், சமூக உறவுகள் கொண்டவர்களாய் இந்தக் கொலை மனங்கள் பார்க்கத் தயாராக இல்லை. அவர்கள் தனி மனிதர்கள் இல்லை. தனி அடையாளங்கள் அவர்களுக்கில்லை. நேற்று வரை பக்கத்து வீட்டுக்காரராக இருந்த ஒருவரைக் கொன்று குவிப்பதற்கு இன்று எனக்கு வெட்கமில்லை. 'அவர்கள்' எல்லோரும் ஒரே அடையாளமுடையவர்கள். ஒட்டு மொத்தமாய் எதிரிகள் 'அவர்களைக்' கொல்வது குற்றமல்ல. பாவமல்ல. மாறாகப் பலி கொடுத்துப் 'பாரதத்தை' தூய்மை செய்வது - கொலை மனங்களின் 'லாஜிக்' இதுதான்.

இந்தக் கொலைமனங்கள் ஒளிந்திருப்பது ஏதோ பாபு பஜ்ரங்கிகளிடம் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்துத்துவவாதியிடமும் (இந்தக் கொலை மனம்) உள்ளது. நரேந்திர மோடி, அத்வானி, வாஜ்பேயி, தொகாடியா, சுதர்ஸன், இராம கோபாலன் எல்லோரிடம் இந்த மனங்கள் புதைந்துள்ளன. சிலர் தெஹல்காவின் உளவுக் காமெராவிடம் மாட்டிக் கொண்டு விட்டனர். இன்னும் சிலர் மாட்டவில்லை. அவ்வளவுதான்.


நன்றி: தமுமுக ஆன்லைன்

Sunday, October 21, 2007

மோடியை துரத்தும் குஜராத் பேய்கள்!



CNN-IBN தொலைக்காட்சியின் "Devil's Advocate" (சாத்தானின் வழக்குறைஞர்) என்ற Talk Show வில் தோன்றும் கரண் தாப்பர் அவ்வப்போது பிரபலங்களை நேர்காணல் செய்து பரபரப்பை உண்டாக்குவார். இவருடன் நேர்காணலுக்கு வரும் பிரபலங்களில் பலர் கலங்கியவாறே பேட்டியை முடித்துக் கொள்வர்.

சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் கபில்தேவுடனான நேர்காணலில் கண்கலங்க வைத்தார். அதேபோல் இருவருடங்களுக்கு முன் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான நேர்முகத்தில் நிதானம் இழக்கச் செய்தார். பாதிக்கப் பட்ட பிரபங்களும் நேயர்களும் இவரை உண்மையிலேயே சாத்தானாகப் பார்க்கும் அளவுக்கு இவரின் கேள்விகள் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புகளால் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்ததோடு, வாஜ்பாயின் முகத்தையும் கிழித்த (எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி உலக நாட்டுத் தலைவர்களை சந்திப்பேன் என்று வாஜ்பாயே சொன்னதை நினைவில் கொள்ளவும்) நரேந்திர மோடியின் முகத்தில் அறைந்தாற்போல் கேள்விகளைக் கேட்டு திண்டாடச் செய்துள்ளார். குஜராத்தில் முஸ்லிம்கள் பலரை அகதிகளாக வெளியேறச் செய்த நரேந்திர மோடி, கரன் தாப்பருடனான பேட்டியிலிருந்து கிழிந்த முகத்துடன் வெளியேறியுள்ளார். ஐந்து நிமிடமே நடந்த் பேட்டியின் விபரம் வருமாறு:

கரண்: ஹலோ Devil's Advocate நிகழ்ச்சிக்கு வருக.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தோற்றக் கோளாறு (Image Problem) உள்ளதா? மேலும் வரவிருக்கும் குஜராத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராக முடிசூடுவாரா? இவையே இன்றைய நேர்காணலின் முக்கிய அம்சம்.

திரு. மோடி, உங்களைப் பற்றிப் பேசுவோமா? கடந்த ஆறு வருடங்களில் நீங்கள் முதல்வராக இருந்தபோது, மிகச்சிறந்த நிர்வாகியாக ராஜீவ் காந்தி பவுண்டேசன் தேர்ந்தெடுத்தது. இந்தியா டுடே வெவ்வேறு பதிப்புகளில் மிகவும் திறமையான நிர்வாகியாக அடையாளம் காட்டியது. உங்களின் முகத்திற்கெதிராகவே மக்கள் உங்களை கொடூர கூட்டுக் கொலையாளியாகவும் (Mass Murderer), முஸ்லிம்களை அச்சுறுத்தியதாகவும் முற்றிலும் இருவேறுவிதமாகப் பேசப்படுகிறீர்கள். உங்களிடம் ஏதேனும் தோற்றப்பிழை இருக்கிறதா?

மோடி: மக்கள் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுவதை சரியல்ல என்றே சொல்வேன். இருவர் அல்லது மூவர் மட்டுமே இவ்வாறு என்னைப் பற்றி சொல்கிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்பதே என்னுடைய பதில்.

கரண்: அதாவது இதை சிலரின் சூழ்ச்சி என்கிறீர்களா?

மோடி: நான் அவ்வாறு சொல்லவில்லை.

கரண்: ஆனால் நீங்கள்தான் சொன்னீர்கள். ஒருசிலர் மட்டுமே என்றீர்கள்.

மோடி: நானறிந்தவையில் இது மக்களின் குரல் அல்ல!

கரண்: 2003 செப்டம்பரில் உங்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகஉச்ச நீதிமன்றம் சொன்னதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏப்ரல் 2004-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உங்களை நவீன நீரோ மன்னனாகவே வர்ணித்ததார். ஆதரவற்ற குழந்தைகளும் அப்பாவி பெண்களும் எரித்துக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தபோது வேறு பக்கத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவர் அவர். உச்சநீதிமன்றத்தின் உங்கள் மீதான கண்ணோட்டத்தில்தான் ஏதோ பிரச்னை உள்ளது.

மோடி: கரண்! தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒருமுறை வாசியுங்கள் என்று வேண்டுகிறேன். அதில் எங்கேனும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருந்தால்காட்டலாம்; மகிழ்வடைவேன்.

கரண்: அப்படி எதுவும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. இருந்தாலும் இதுஒரு புரிந்து கொள்ளல்.

மோடி: தீர்ப்பில் அவ்வாறு சொல்லப்பட்டிருந்தால், உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் மகிழ்ச்சியடைவேன்.

கரண் : ஆனாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் குட்டப்பட்டது ஒன்றும் பெரிய விசயமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

மோடி: என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீதிமன்றத் தீர்ப்பை வாசித்து விட்டு உங்களின் கூற்று மெய்யென்றால் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

கரண்: நன்று. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து வெளிப்படையாக சொல்லப்பட்டது மட்டுமல்ல. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 4600 மொத்த வழக்குகளில் சுமார் 2100 வழக்குகள், கிட்டத்தட்ட 40% வழக்குகளில் குஜராத்தி(முஸ்லிம்)களுக்கு நீதி மறுக்கப் பட்டுள்ளதாகக் கருதப்பட்டு அவ்வழக்குகள் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மோடி: வழக்கு மன்றம் நல்ல தீர்ப்பை வழங்கினால் சந்தோசப்படுவேன்.

கரண்: இந்தியா டுடே,உங்களை மிகச்சிறந்த முதலமைச்சராகவும், ராஜிவ் காந்தி பவுண்டேசன் குஜராத்தின் திறமையான நிர்வாகியாகவும் தேர்ந்தெடுத்தபோதிலும், மோடி முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமின்றி நடந்து கொண்டார் என்று சொல்லப்படுவதால்தான் கேட்டேன், உங்களுக்குத் தோற்றப்பிழை (Image Problem) உள்ளதா என்று!

மோடி: நியாயமாக என் மீதான பிம்பம் பற்றி கவலைப்பட ஒருநிமிடமாவது ஒதுக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் குஜராத்திற்காக ஏற்றுக்கொண்ட என்னுடையப் பணிகளில் மூழ்கியுள்ளேன். நான் ஒருபோதும் என்னுடைய பிம்பத்தைப் பற்றி பேசியதில்லை; அதற்காக ஒரு நிமிடம் கூட ஒதுக்காததும் அத்தகைய குழப்பத்திற்குக் காரணம்.

கரண்: என்ன பிரச்சினை என்றால், ஐந்து வருடங்கள் கழிந்தும் 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் உங்களைத் விரட்டுகிறது. அந்த பிரச்னையை தீர்க்க (அந்த ஆவிகளை நண்பர்களாக்க?) நீங்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?

மோடி: கரண் தாப்பர் மாதிரியான ஊடகவியலாளர்களிடம் இதை கொடுத்து விட்டேன். அவர்கள் அனுபவிக்கட்டும்! (?)

கரண்: நான் ஒரு ஆலோசனை சொல்லட்டுமா?

மோடி: எனக்கு ஆட்சேபனையில்லை.

கரண்: குஜராத் படுகொலைகளுக்காக ஏன் நீங்கள் வருத்தம் தெரிவிக்கக் கூடாது? அரசு அவர்களைக் காக்கத் தவறி விட்டது என்று ஏன் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது?

மோடி: நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். எனது பழைய அறிக்கைகளை தேடிப்பாருங்கள்.

கரண்: திரும்ப அதைச் சொல்லலாமே!

மோடி: அவசியமில்லை! 2007 தேர்தலைப் பற்றி நான் நிறைய பேச வேண்டியுள்ளது.

கரண்: ஆக, அதை மீண்டும் சொல்லாததன் மூலம்,உங்கள் அறிக்கையை மக்களை மீண்டும் கேட்கவிடாததன் மூலம், உங்கள் மீதான பிம்பம் தொடர அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

மோடி: நான் ஓய்வெடுக்க வேண்டும்; குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

கரண்: தண்ணீர் ப்ளீஸ்...!

(இந்த இடத்தில் கரண் தாப்பரிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, வேறு பக்கம் பார்க்கிறார் மோடி. அப்போது அவர் முகத்தில் தெரிகிறது பாருங்கள் அப்பட்டமான குற்ற உணர்ச்சி! வெல்டன் கரண்!!!)

Modi: Dosti bani rahe.bas. I'll be happy. You came here. I am happy and thankful to you. I can't do this interview. It's okay your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye. 3-4 questions I've already enjoyed… nahin please.

Karan Thapar: But Modi Sahab..

Narendra Modi: Nahi please, Karan.

Karan Thapar:But Modi saab..

Narendra Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye.

Karan Thapar: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why can't you correct your image?

Narendra Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote 2003 mein mile hote mein sab kar leta.

Tuesday, July 24, 2007

விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!

தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு. மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட, மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும், இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.



"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.


சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.


மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.


இஸ்லாமியர்கள் போரிட்டவரலாற்றை இன்று நினைத்தாலும் உடல் மெய்சிலிர்க்கும்.



சுதந்திர தின வைரவிழாவுக்கு இன்னும் 23 நாட்கள்...

.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள்!

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை!

அரசியல் பண்ண காரணமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்துத்துவாக்கள் 'ராமர் பாலம்' என்ற ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு நல்ல திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.



'ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்கிறார் பெண் துறவி உமாபாரதி.

'ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்கிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.

ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், "புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தொகாடியா சொன்னாராம். பாபர் மசூதி போன்ற, சரித்திரப் பிரசித்திப் பெற்ற புராதன சின்னங்களை இவர்கள் இடித்துத் தள்ளுவார்களாம். ராமர் பாலம் என்ற, இல்லாத ஒன்றை இவர்கள் காப்பாற்றப் போகிறார்களாம்..!!!!

சேது சமுத்திரம் போன்ற, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.

'சர்ச்சைக்குறிய அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.

என்ன நாஞ்சொல்றது?

Monday, July 23, 2007

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை - ஆஸ்திரேலியக் காவல்துறை


மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல் பொய்யானது என்றும் இனி ஹனீஃபை காவலில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை" என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.

இலண்டன் விமானநிலையத்தில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து டாக்டர் ஹனீஃபின் சிம் கார்ட் கண்டெடுக்கப்பட்டதையே அவர் மீதான குற்றச்சாட்டிற்கான முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறி வந்தது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் அவருக்கு எதிரான மிக முக்கிய ஆதாரமாக இதனையே ஆஸ்திரேலிய காவல்துறை ஆவணப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு தக்க வலுவான ஆதாரம் இல்லாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த மறுநிமிடமே மீண்டும் ஆஸ்திரேலிய காவல்துறை அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்ததற்கு இந்த சிம்கார்டு விவகாரமே காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் இலண்டனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஹனீஃபின் சிம் கார்டு கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள அவரின் மனைவியின் தம்பி வீட்டிலிருந்தே அவரின் சிம்கார்ட் மற்றும் ஸ்மார்ட் கார்ட் கிடைத்தன என்றும் காவல்துறை கூறியது. இதன் மூலம் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடுக்கிய காரணம் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

எவ்வித உறுதியான ஆதாரமும் இன்றி அநீதியான முறையில் ஹனீஃப் நடத்தப்பட்டுள்ளதற்கு "பண்பாடு" மிக்க மேற்கத்திய நாடுகளின் உள்நோக்கம் தான் காரணம் ஆகும் (Haneef has been treated with gross prejudice and injustice by a purportedly "civilized" Western nation) என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீபின் மீதுள்ள சந்தேகத்திற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கருதியது அவர் இலண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு மறுநாள் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்லவிருந்தது தான். அவர் ஆஸ்திரேலியாவில் வருமானம் போதாத சூழலிலும், தன் மனைவியின் பிரவசத்திற்கு அருகில் இருக்கவுமே இந்தியா செல்லவிருந்தார் என்ற தகவல்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் சந்தேகம் நீங்கி தெளிவு அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு தன் கணவருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய டாக்டர் ஹனீபின் மனைவி புதிதாய் பிறந்த பெண் குழந்தை பற்றி விசாரித்ததாகவும், தான் குற்றமற்றவர் என்று உறுதிபடக் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்தார்.

டாக்டர் ஹனீஃப் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அவரது ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான ஆவணங்களில் குளறுபடி செய்து அவரது குடியுரிமை விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் டாக்டர் ஹனீஃபை காவலில் அடைத்து விசாரணையைத் துவக்கிய நாள் முதல் ஆஸ்திரேலிய அரசு மீது உள்ள சந்தேகத்தை உலக ஊடகங்கள் எழுப்பி வந்திருந்தன. அது இப்போது சந்தேகமற நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய சட்டக்குழுமமும் (Australian Law Council) மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கமும் (Amnesty International) இணைந்து ஆஸ்திரேலியாவின் இந்த அநீதியான செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
தொடர்புடைய பிற சுட்டிகள்: தினத்தந்தி தாட்ஸ்தமிழ்.காம்

Tuesday, July 10, 2007

"உயிரை எடுப்போம்!" - துறவி உமாபாரதி கர்ஜனை!


சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவி செல்வி உமாபாரதி (முன்னாள் பாஜக) "ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்" என்று கர்ஜித்தார். அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலோ என்னவோ திருச்சி போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்துறவியான உமாபாரதி, 'சேது சமுத்திர திட்டத்தினால் பாதிக்கப்படும் 10 லட்சம் பொது மக்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று அனைத்து மதத்தினரும் உள்ளார்கள். ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்கள் முன்வரவேண்டும். ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்று பேசினார். அவரது இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால்தான் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறவிகளெல்லாம் ஏன்தான் இப்படி 'உயிரை எடுக்குறாங்களோ', தெரியலை!

Tuesday, June 26, 2007

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் (வருங்கால) குடியரசுத் தலைவரே?

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரிக்கப் போவதாக பாஜக-வின் முக்கிய கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான பால் தாக்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற திரு செகாவத் அவர்களும் போட்டியில் இருக்கும்போது, காங்கிரஸ் வேட்பாளரான திருமதி பாட்டீலை சிவசேனா ஆதரிப்பதாக சொல்வது சாதாரணமாக யாரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்தான். ஆனால் இம்முறை இந்த அறிக்கை ஒருவகையில் எதிர்பார்க்கப் பட்டதுதான் என்பதால் இது யாருடைய புருவத்தையும் உயர்த்தி யிருக்காது.

திருமதி பாட்டீலின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப் பட்டதுமே அவர் ஒரு காரியம் செய்தார். இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எந்நேரமும் தலையில் முக்காடிட்ட வண்ணம் காட்சி தரும் ஒரு பெண்மணி, 'பர்தா' எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை முறை குறித்து இப்படி ஒரு நகைப்பிற்குறிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தான் ஒரு இந்துத்துவ சிந்தனை உடையவர்' என்று காட்டிக் கொண்டு இந்துத்துவாக்களையும் திருப்தி படுத்தி அவர்களின் ஆதரவும் வாக்குகளும் தனக்கே கிடைக்கே வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இவர் இப்படி பேசியிருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளையும் இவர் வாங்கினால்தால் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்ற நிலை இல்லை அல்லவா!

தான் திட்டமிட்டபடியே முதல் கட்டமாக சிவசேனாவை 'மடக்கிய'தன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை நமது வருங்கால குடியரசுத் தலைவர் நிரூபித்திருக்கிறார்.

வாழ்க வளமுடன்!

பின் குறிப்பு:

நான் ஏன் 'குடியரசுத் தலைவரே' என்று தலைப்பிட்டிருக்கிறேன்?

ராஷ்டபதி ஆண்பாலா பெண்பாலா என்ற பிரச்னை ஒரு புறமிருக்க, மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் ஒரு பெண்மணியை 'தலைவி' என்று அழைப்பது சரியா? தலைவன், தலைவி ஆகியவை முறையே ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான ஒருமை விளிச்சொற்கள் அல்லவா? 'தலைவர்' என்பதுதானே இருபாலாருக்கும் பொதுவான மரியாதை விளிச்சொல்? அப்படியென்றால், 'குடியரசுத் தலைவர்' என்று அழைப்பதுதானே முறை? தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.

Monday, June 18, 2007

கொலையும் செய்வார் பார்ப்பனர்!

ஆர்குட்டில் பிராமணர்கள் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள் Brahmin என்ற பெயரில். அந்தக் குழுமத்தில் 7,710 உறுப்பினர்கள் இருக்கிறார்களாம்.

இந்தக்குழுவில் சமீபத்தில் ஒரு வாக்கெடுப்பு (poll) தொடங்கியிருக்கிறார்கள். தலைப்பு என்ன தெரியுங்களா? Is it the right time to kill Muslims?



முஸ்லிம்களை கொல்வதற்கு இது சரியான தருணமா?



இதற்கு இதுவரை 7 பேர் 'ஆம்' என்றும் 5 பேர் 'இல்லை' என்றும் பதில் சொல்லியிருக்கிறார்கள். இல்லை என்று சொன்னவர்கள், 'இந்த தருணம் சரியில்லை. வேறொரு தருணத்தில் கொல்லலாம்' என்ற எண்ணத்தில் வாக்களித்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒருவர் கூட இப்படி ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு நடத்துவது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.

கொலைகாரப் பசங்க..! என்னதான் உயர்ந்த ஜாதி, படிச்சவனுங்க என்று சொல்லிக் கொண்டாலும் உள்மனதில் கொலைகார எண்ணம்தான் ஓடும் போல. காந்தியிலிருந்து காஞ்சிபுரம் வரை இதற்கு நிறைய உதாரணங்களை சுட்டிக் காட்டலாம்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் கொன்னுட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு,

2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!

Thursday, June 14, 2007

RAW-விலிருந்து இன்னொரு 'தேசபக்தர்' மாயம்!

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, 'தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, "ரா' என்று அழைக்கப்படும், "ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!' இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார்.

கேபினட் செயலகத்தில் உள்ள, "ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், "24 பர்கானா' மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்' என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், "டிசி' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், "தலைமறைவானவர்' என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், "ரா' உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, "கூமர் நாராயண் உளவு சதி வழக்கு' பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி: தினமலர்

விளங்காத விஷயங்கள்:

RAW போன்ற சென்சிடிவான அமைப்புகளில் ஒருவரை வேலைக்கு சேர்க்குமுன்னரே அந்த நபரின் பிண்ணனியை ஆராய்ந்திருக்க மாட்டார்களா என்ன? தேசவிரோத சக்திகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி 1999-ல் இவரை இந்தப் பணியில் சேர்த்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சமீப காலத்தில் RAW, ராணுவம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதும் 'காணாமல் போவதும்' அதிகரித்திருப்பதன் காரணம் என்ன?

தொடர்புடையை பழைய பதிவுகள்:

உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்
ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்
முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!
அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

Wednesday, June 13, 2007

லஞ்சம் கொடுப்பதற்காகவே ஒரு கரன்ஸி நோட்டு!

அண்மையில் ஒரு போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து விதிகளை மீறியதாக சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தினார். அவர் இலஞ்சம் கேட்க, ஓட்டுனர் ஒரு பெறும் தொகையுடைய நோட்டை கொடுத்திருக்கிறார். காவலருக்கோ ஆச்சரியம்! மகிழ்ச்சியோடு வாங்கிய காவலரின் முகம் ரூபாயில் எழுதப் பட்டிருந்த தொகையை கண்டவுடன் சிவந்து விட்டது.

ஏனெனில் மதிப்பு எழுதப்படும் இடத்தில் 'பூஜ்ய ரூபாய்' என்ற எழுத்துக்களுடன் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். ரூபாயின் மேல்பகுதியில் 'அனைத்து மட்டத்திலும் இலஞ்சத்தை ஒழிப்போம்' என பொறிக்கப் பட்டிருந்தது. மேலும் வழக்கமாக ரூபாயின் 'I Promise to pay..' என எழுதப் பட்டிருக்கும் இடத்தில் 'நான் இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என எழுதப் பட்டிருந்தது.

அந்தக் காவலரின் முகத்தில் முதலில் மகிழ்ச்சி; பிறகு ஏமாற்றம்; அடுத்து கோபம்; எனக்கூறும் சரவணன், அந்த ரூபாயை திருப்பிப் பார்க்கச் சொல்ல, காவலரும் அச்சத்துடன் திருப்பிப் பார்க்கிறார். அதன் பின் பகுதியில் 'சமூகத்தில் அனைத்து மட்டத்திலிருந்தும் இலஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமும், அதிகாரமும் அளியுங்கள்' என்பதாக எழுதப் பட்டிருக்கிறது. அதன் கீழேயே, சாதாரண மக்களும் இலஞ்சத்திற்கெதிராக எவ்வாறு போராடுவது எனப் பயிற்றுவிக்கும் 'ஐந்தாவது தூண்' (5th Pillar) என்ற சமூக சேவை நிறுவனத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருக்கிறது.


'இதுதான் சாலையில் இலஞ்சத்தால் நேரடியாக பாதிக்கப்படும் சாதாரண மனிதன் அதை எதிர் கொள்ள வேண்டிய வழி' எனக் கூறும் திரு M.B. நிர்மல்தான் இந்த ஐந்தாவது தூணின் நிறுவனர். 'ஐந்தாவது தூண் சேவைக்காக இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் சின்னமாக காந்தியின் கைத்தடியை பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவர்தான் சேவையின் உண்மையான பிதா' என்கிறார் நிறுவனர்.




இந்த நிர்மல்தான் இருபது ஆண்டுகளுக்கு முன் 'எக்ஸ்னோரா' என்ற அமைப்பை நிறுவியவர். இன்று சாலை தூய்மை பணியில் ஒரு பெரும் சேவை நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது.


நன்றி: சமரசம் 1-15 மே 2007