Tuesday, November 27, 2007

மலேஷியாவில் கோயில்கள் இடிப்பு? உண்மை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயிலை அந்நாட்டு அரசு அப்புறப்படுத்தியது. இதையடுத்து அங்குள்ள இந்துக்கள் சிலர் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். அதோடு இங்குள்ள இந்துத்துவ வகையறாக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிற்கான மலேஷிய தூதரிடம் அங்குள்ள கோயில்களை 'பாதுகாக்க' மனுவும் அளித்தனர். (ஏன்னா, 'இடிக்கிற'தெல்லாம் அவங்க வேலையாச்சே!). ஜெ போன்ற அரசியல்வாதிகளும் இதில் தலையிட்டு குட்டையை குழப்ப முயன்று வருகின்றனர்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? இடிக்கப்பட்ட ஆலயம் பழமையானது என்பதாலும், முறையான அனுமதியின்றி ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதாலும் அதை இடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த நவம்பர் 2005-லேயே, ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ள அந்த இடத்தை காலி செய்து தரும்படி சிலாங்கூர் மாநில அரசு அக்கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கோவிலை இடம் மாற்றிக் கட்டிக் கொள்வதற்காக இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதன் பிறகே அக்கோயில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அக்கட்சி ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வழங்கப்பட்டும் புதிய இடத்துக்கு கோவிலை மாற்றுவதற்கு கோவில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வந்தனர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்துக்கள் கோவில் கட்டும் போது மாநகர மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தங்கள் விருப்பத்திற்கு கட்ட வேண்டாம் என்றும் சாமிவேலு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தை மதரீதியானதாக நாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவில்கள் மட்டுமல்லாது இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுள்ளன என்று மலேஷிய வாழ் முஸ்லிம்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுவாக எந்த நாட்டிலும் இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது வழக்கம்தான். சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன், மதுரையில் இது போல ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன. அவற்றுள் சில கோவில்களும், தர்காக்களும் அடக்கம். அது போல சட்டவரையறைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த மலேஷிய நிகழ்வு. அதை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முற்படுகின்றனர் இந்துத்துவாக்களும் சில அரசியல்வாதிகளும்.

சிறுதகவல்: மலேசியாவில் ஏறத்தாழ பதினேழாயிரம் கோயில்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாம்.நன்றி: தமுமுக

Saturday, November 24, 2007

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கலாமா?

தனது தாய்நாடான பங்களாதேசிற்கு திரும்பினால் வழக்கு விசாரணைகளை ச்ந்திக்க நேரும் என்பதால் கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கணுமாம். சொல்றது யாருன்னா விகே மல்ஹோத்ரா என்கிற பிஜேபி தலைவர்.

முஸ்லிம்கள் என்பதற்காகவே குஜராத் மக்களை கூட்டம் கூட்டமாக எரித்துக் கொன்ற அதே சங்பரிவார கும்பலைச் சேர்ந்த பிஜேபி தலைவர் ஒருவர்தான் இந்த முஸ்லிம் அம்மணி மேல் இவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்.
காரணம் என்னன்னா கருத்துச் சுதந்திரமாம்!

இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான். அப்போ இவங்களோட கருத்துச் சுதந்திரம் எங்கே புல் புடுங்க போயிருந்துச்சுன்னு தெரியலை!

பிரபல இந்திய எழுத்தாளர் கமலா சுரையா முஸ்லிமாக மாறினார் என்பதற்காக அவரைக் கொல்ல முயற்சி செய்ததும் இதே இந்துத்துவ சக்திகள்தான்! கமலா சுரையாவின் கருத்துக்களுக்கு சுதந்திரம் கிடையாதா என்ன?

சரி போகட்டும்! தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துடலாம்! நரேந்திர மோடி போன்றவைகளெல்லாம் நடமாடும் பேறு பெற்ற இந்தியாவாச்சே! தஸ்லிமாவுக்கு அடைக்கலம் கொடுக்குறதால ஒன்னும் குறைஞ்சு போயிடாது.

ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்..!

'Oh You Hindu! Awake!' என்ற பெயரில் இந்துக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் நூலை எழுதியவர் Dr. சட்டர்ஜி என்பவர். அரிய பல கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூலை எழுதியதற்காக இந்தியரான Dr. சட்டர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டு அதன்பிறகு பங்களாதேஷ் தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம். என்ன நாஞ்சொல்றது?

Monday, November 19, 2007

ம.பி. சிறையில் தாடிக்குத் தடை!

'சிறைக் கைதிகள், தாடி வைக்கக்கூடாது; குல்லாய் அணியக்கூடாது' என்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச பா.ஜ. அரசு, புது தடைகளைப் போட்டுள்ளது. 'கைதிகள் அடையாளம் காண, இவை தடையாக இருப்பதால், தாடி வளர்க்கவும், குல்லாய் அணியவும் தடை விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது.


அரசின் சிறுபான்மை நலத்துறை தலைவர் அன்வர் கூறுகையில், "கைதிகளிடம் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆனால், அரசு இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளதா என்பதை அவர் உறுதி செய்ய தயங்கினார்.

போபால் மத்திய சிறை கண்காணிப் பாளர் சோம்குன்வார் கூறுகையில், "கைதிகளை சிறைக்குள் அனுப்பும் முன்பு, தாடியை மழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். அவர்களின் தாடி மழித்த போட்டோ தான், போலீஸ் பதிவேட்டில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீபாவளியை ஒட்டி நடத்தப்படும், எருமை மாட்டு மோதல் விளையாட்டுக்கும் சவுகான் அரசு தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போல நடக்கும் இந்த மோதல், பல ஆண்டுகளாக ம.பி.யில் இந்துக்கள் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்
இந்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது சீக்கியர்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!
கிரிமினல் கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமை பெற்ற இருள்நீக்கியார் தண்டம் + தாடி + காவி உடையுடனேயே உள்ளே சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!
Monday, November 12, 2007

சோ ராமசாமியின் தேசப்பற்று!

கரண் தாப்பரின் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நா வறண்டு, தண்ணீர் குடித்து, மைக்கை பிடுங்கி எறிந்து, பின்னங்கால் பிடரியில் அடிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய 'மாவீரன்(?)' மோடியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலத்தைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டது டெஹல்கா. அரக்கக் குணம் படைத்த அந்த ஜந்துக்களின் கொடூரச் செயல்களை 'அது'களின் வாயாலேயே கேட்டு உலகமே அதிர்ந்தது. மனதில் கடுகளவேனும் மனிதாபிமானம் உள்ளவர்கள் கூட அந்த வாக்குமூலங்களை ஜீரணிக்க இயலாமல் தவித்தனர். இவன்கள் ஒரு தாயில் வயிற்றில்தான் ஜனித்தார்களா என்பதே நம்ப முடியாததாக இருக்கிறது.


ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், சில இடங்களில் மயான அமைதி நிலவுகிறது!


- செல்வி ஜெயலலிதா: மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு வந்தவர் இவர். சமீபத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் ஒருவர் இறந்ததற்கு கவிதை அஞ்சலி செலுத்திய முதல்வர் கருணாநிதியைக் கண்டித்த அம்மணி, ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான மோடியை கண்டித்து இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை!- சங்கரமடத்து இருள்நீக்கி சுப்பிரமணியனார்: பாபரி மசூதி விவகாரத்தில் அழையா விருந்தாளியாய் மூக்கை நுழைத்து, மத்தியஸ்தம் என்ற பெயரில் மசூதியை முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க திட்டம்தீட்டியவர் இவர். (ஏன்னா, நாட்டுல மதநல்லிணக்கம் நிலவுறதுக்காக இவர் பாடுபடுறாராம். காலுல சாக்ஸ் மாட்டிண்டு சேரி மக்களை ஆசீர்வதிக்க போனவராச்சே!) ஒட்டுமொத்த குஜராத் முஸ்லிம்களையும் கூண்டோடு கொலை செய்ய வழி செய்த மோடி விவகாரத்தில் இவர் இன்னும் மூச்சு கூட விடவில்லை!


- முன்னாள் பிரதமர் வாஜ் பேய்: 2002-ல் இந்த கொடூரக் கொலைகள் நடந்தபோது, 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப்பட்ட மனுஷன் இவர். 'இந்தக் கொடூரன் இருக்கும் அதே கட்சியில் நானும் இருப்பதா?' என்று அக்கட்சியில் இருந்து இன்னும் இவர் விலகவில்லை! அட்லீஸ்ட் மோடியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று இவர் முணுமுணுக்கக் கூட இல்லை!


- உச்சாநீதி மன்றம்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்க முற்பட்டபோது பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதாகச் சப்பைக் கட்டு கட்டி 'ஆட்சி கலைக்கப்பட்டுவிடும்' என்று உச்சநீதி மன்றம் மிரட்டியது. குஜராத் கொடூரங்களைப் பற்றி இத்தனை ஆதாரங்கள், வாக்குமூலங்கள் வெளியான பிறகும் கொடியவன் மோடியின் ஆட்சியை பறித்து அவனை வீட்டிற்கு அனுப்ப இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை குஜராத் முஸ்லிம்கள் 'பொதுமக்களில்' சேர்த்தி இல்லை போல.

- முதல்வர் கருணாநிதி: "நரேந்திர மோடி தொடர்பாக தெஹல்கா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளதே?" என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது "பத்திரிகைகளில் அதுபற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு என் கருத்தை சொல்கிறேன்." என்று சொன்னவர்தான். இதுவரை கருத்து எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை! அவரோட பிரச்னை அவருக்கு! அடுத்த கூட்டணி வாய்ப்பை கெடுத்துக்கக் கூடாதில்லையா?

- சோ ராமசாமி அய்யர்: மோடியை பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்று சொல்லி போற்றியவர் இவர். 'இவ்வளவு கொடூரமான ஒருவனையா நாம் ஆதரித்து எழுதினோம்' என்று இவர் இன்னும் வெட்கித் தலைகுனியவில்லை. பிஜேபி ஆட்சியில் ராஜ்யசபா எம்.பி. பதவியை அனுபவித்த விசுவாசம் தடுக்கிறது போலும். இதுவே வேறோரு கட்சியின் ஆட்சியிலுள்ள மாநிலத்தில் நடந்திருந்தால், இந்த அய்யர் எப்படி விளாசித் தள்ளியிருப்பார்?

இங்கேதான் சோ ராமசாமியின் தேசப்பற்று வெளிப்படுகிறது. ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடிஅமீன், இவர்களெல்லாம் தங்கள் 'திருச்சேவை'களின் காரணமாக உலக வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்து விட்டார்கள். அதுபோல இந்தியாவின் பெயரை நிலை நிறுத்த யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தில்தான் சோ அய்யர் மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்திருக்கிறார். குஜராத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 'சோதனை முயற்சி'யை இந்தியாவெங்கும் நடத்தி, உலக அரங்கில் இந்தியாவுக்கு நிலையான 'புகழை' பெற்றுத் தந்திடுவார் மோடி.

வாழ்க சோ ராமசாமியின் தேசப்பற்று!

(ஆனால், பாவம் இந்தியா!)

Sunday, November 11, 2007

டெஹல்கா அம்பலம்: நிரம்பி வழியும் உண்மைகள்? திகைத்து நிற்கும் மானுடம் - பேரா. அ. மார்க்ஸ்

உயிரைப் பணயம் வைத்து, ஐந்து மாத காலக் கடும் உழைப்பின் மூலம் தெஹல்கா வார இதழ் குஜராத் 2002 குறித்து, ஏற்கெனவே தெரிந்த பல உண்மைகளுக்கு மேலும் பல நிரூபணங்களை வெளிப்படுத்தியுள்ளது. இம்முறை இந்த உண்மைகள், யார் இந்த வரலாறு காணாத வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களின் வாயிலிருந்தே கசிந்திருக்கின்றன. அது தான் ஒரே வித்தியாசம்.

இந்தக் கொலை மனங்கள் ஒவ்வொன்றும், தன் முன் அந்த நுண்ணிய, ஆற்றல் வாய்ந்த உளவுக் கருவி கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை அறியாமல், தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதை வாசிப்பதற்கு அல்லது பார்ப்பதற்கு ரொம்ப நெஞ்சுரம் வேண்டும். அந்தக் காலத்தில் பரிசை கண்ணப்பத் தம்பிரான் கூத்தில் அறிவிப்பார்களே, ''இப்போது துச்சாதன் வரப்போகிறான். கர்ப்பிணிப் பெண்களும், கலங்கிய சித்தம் கொண்டவர்களும் எழுந்து சென்று விடுங்கள்'' என்று. அது போல இந்தக் கொலை வாக்கு மூலங்களை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இவற்றை எதிர் கொள்ள நெஞ்சுரம் வேண்டும். முழுமை யாகப் படித்து முடிப்பதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

"ஒன்பது மாதக் கர்ப்பிணித் துலு.......... அந்தக்...........ளை வயிற்றைக் கிழித்து கருவை வாள்முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டினோம். தாயையும், கருவையும் நெருப்பில் எரித்தோம்.அவர்கள் கரு உயிர்க்கக் கூடாது."

"முதியவர் இஹ்சான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பணத்தைக் கொண்டு வந்து எங்கள் காலடியில் கொட்டிவிட்டு ஓடப் பார்த்தார். பற்றி இழுத்தோம். பின்னாலிருந்து ஒருவன் உதைத்து வீழ்த்தினான். ஒருவன் அவர் மீது கத்தியைப் பாய்ச்சினான். முதலில் கைகளை வெட்டினோம். பின்னர் ஒவ்வொரு உறுப்பாக சிதைத்தோம். குற்றுயிராய்க் கிடந்த உடலையும் கழித்த உறுப்புகளையும் நெருப்பில் எரித்தோம். செத்த உடல்களை எரிக்கக் கூடாது என்பதல்லவா அவர்களின் நம்பிக்கை."

"அது ஒரு சரிவான குழி. ஒரு புறம் சரிந்து இருக்கும், மறுமுனையோ செங்குத் தான உயரம். ஏறித் தப்ப முடியாது. அதில் போய் அவர்கள் ஒண்டினார்கள். பெட்ரோலை அள்ளி ஊற்றி எல்லோரை யும் எரித்துக் கொன்றோம்."

இப்படி இன்னும் இன்னும். இவற்றை எல்லாம் சொல்லுகிற பாபு பஜ்ரங்கி, ராஜேந்திர வியாஸ், ரமேஷ் தவே, மதன் சவால், பிரஹலாத் ராஜு, மஞ்சிலால் ஜெயின், திமன்ட் பட், தீபக் ஷா.. இவர்களெல்லாம் யார்? பஜ்ரங்கதள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க இந்த அமைப்புகளின் முக்கிய உள்ளூர் தலைவர்கள். தம்மை தாதாக்களாகவும், தலைவர்களாகவும், இந்து மதக் காப்பாளர் களாகவும் ஒரே சமயத்தில் அறிவித்துக் கொள்பவர்கள். இவர்கள் இன்று சிறைகளிலோ, தலைமறைவாகவோ இல்லை. வெளிப்படையாக உலவுகின்றனர். பெரிய மனிதர்களாய் தலைவர்களாய், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களாய் பட்டம், பதவி, பணம் எல்லாவற்றுடன் வலம் வருகிறார்கள்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, ஒன்பது சதவீத பொருளாதார வளர்ச்சி, அணுகுண்டுச் சாத்தியமுள்ள ஐந்து வல்லரசுகளில் ஒன்று. ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சி.... இத்தனைப் 'பெருமைக்கும்' உரிய இந்தியாவில் இது எப்படிச் சாத்தியமானது?


இவர்கள் தன்னந்தனியாக இல்லை. இவர்களின் பின்னே, இந்தக் கொலை மனங்களின் பின்னே இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி இருக்கிறது. 'சங்காதன்' என்று சொல்லும் பரிவாரக் கும்பல் உள்ளது. இந்துத்துவம் என்னும் கருத்தியல் உள்ளது. கோரிதான் சபாடியா என்கிற அன்றைய உள்துறை அமைச்சர், வி.எச்.பியின் மாநிலச் செயலர் ஜெயதீப் படேல், சர்வதேசச் செயலாளர் பிரவிண் தொகடியா, எல்லாவற்றிற்கும் மேலாக மாநில முதலமைச்சர் சின்ன சர்தார் நரேந்திர மோடி இருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும்கூட முஸ்லிம்கள் யாருடனும் ஒன்றாக வாழ மாட்டார்கள் எனச் சொல்லி மோடிக்கு ஆதரவளிக்க வாஜ்பேயி இருக்கிறார்.


'மூன்று நாள் அவகாசம் தருகிறோம் செய்து முடியுங்கள். உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது. சாட்சியங்களும் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கைதானவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும். அவர்கள் குடும்பங்களுக்கு தொடர்ந்து தேவையான 'ரேஷன்'கள் வழங்கப்படும்.

உங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை, நாங்கள் பள்ளி நிர்வாகங்களில் பேசிக் கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேசமாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் கூட சாட்சி சொல்ல மாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்...' இத்தனை உறுதி மொழிகளும் அந்த கொலை மனங்களின் பின்னால் நின்றன.

ஒன்றைச் சொல்ல மறக்கக்கூடாது. சங்பரிவாரங்கள் வாக்குத் தவறாதவர் கள் - இந்த மாதிரி விஷயங்களைப் பொறுத்த மட்டில். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றிக் கொண்டுள்ளார்கள்.

கொலை வாட்கள், கூரான திரிசூலங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இவைகளெல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் வழக்கறிஞர்கள் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. காவல் துறைக்கு உரிய ஆணைகள் இடப் படுகின்றன. அகமதாபாத்திலும், பரோடாவிலும் இன்னும் பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், துர்கா வாஹினி, பா.ஜ.க ஆகிய அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள், ஒவ்வொரு கூட்டத்திலும் 60 முதல் 70 பேர்கள் வரை கலந்து கொள்கின்றனர். ''எதிர்ப்படும் முஸ்லிம்கள் எல்லோரையும் சொல்லுங்கள், சூறையாடுங்கள், அழியுங்கள் உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது...'' இன்ன பிற வாக்குறுதிகள்.


ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் 'ஸ்கோர்' எவ்வளவு என தலைமைக்கு தகவல்கள் போய்க் கொண்டே இருக் கின்றன. மாயா கோட்னானி என்றொரு பா.ஜ.க பெண் (சட்டமன்ற உறுப்பினர்) கொலைத் தலங்கள் ஒவ்வொன்றாக 'விசிட்' செய்து ஊக்குவித்து செல்கிறார்.

கோத்ரா, அகமதாபாத் மிக அதிகமான கொலைகள் நடந்த நரோடாபாடியா என்கிற இடத்திற்கும் மோடியே நேரில் செல்கிறார். வெளிப்படையாக அவர் பேச இயலாது என்பதை கொலைஞர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர் வந்து சென்றதே, கண்டனங்கள் கூறாமல் அகல்வதே அவர்களுக்கு அளிக்கும் செய்தி அல்லவா! இரண்டாவது இரும்பு மனிதனல்லவா நரேந்திர மோடி. உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது எங்கனம்?


மெகானி நகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.ஜி எர்டா 'மூன்று மணி நேரம் ஜமாயுங்கள்' என்று சொல்லிவிட்டு அகல்கிறான். பேராசிரியர் பந்துக்வாலா வின் வீட்டிற்குள் பாதுகாப்புக்கு நியமியக்கப்பட்ட காவலர்கள், கும்பல் வந்தவுடன் சீக்கிரம் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு அகல்கிறார்கள்.


ஒரு போலீஸ் வேனில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படும் முஸ்லிம்களை கூண்டோடு எரிப்பதற்கும் கொலைஞர்களிடம் வழி சொல்கிறான் எர்டா. 'நீங்கள் கல்லால் அடியுங்கள். டிரைவர் ஓடி விடுவார். பின் உங்கள் வேலையைச் செய்யலாம்''. அதே நேரத்தில் அங்கு வந்த பதான் என்கிற ஒரு முஸ்லிம் அதிகாரியால் 'காரியம்' கெட்டு விடுகிறது. அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். முஸ்லிம் காவலர்களால் இப்படிக் காப்பாற்றப்பட்ட இன்னொரு சம்பவமும் தெஹல்கா அம்பலப்படுத்துகிகிறது. காவல்துறையிலும், ரெவின்யூ துறையிலும் உரிய அளவு முஸ்லிம் பிரதி நிதித்துவம் தேவை என மனித உரிமையாளர்கள் தொடர்ந்து சொல்லி வருவதை ஒரு கணம் இத்துடன் இணைத்துப் பாருங்கள்.


சபர்கந்தாவின் பப்ளிக் பிராசிகியூட்டர் பாரத் பத், தான் எவ்வாறு முஸ்லிம் சாட்சிகளை மிரட்டினான் என்பதையும் பெருமிதத்துடன் தெஹல்கா நிருபரிடம் சொல்கிறான். மேற்சொன்ன கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டும் அரசு, கொலைகாரர்களிடம் எல்லாப் பாதுகாப்புகளும் வெளிப்படும் என வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சி, சாட்சியங்களையும் தடயங்களையும் உடனடியாக அழித்தொழிக்க சட்ட அறிஞர் குழு, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காட வேண்டிய அரசு வழக்குரைஞரே ஆதரவாகக் சாட்சிகளை மிரட்டும் அவலம், பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைச் சரிவரப் பதிவு செய்யாமலும் முறைப்படி முதல் தகவல் அறிக்கைகளை தயாரிக்காமலும், குற்றம் சாட்டப்பட்டவர் களிடம் உண்மையை அறிய முயலாமல் விருந்துபசாரம் செய்து கொண்டிருந்த காவல்துறை..., மோடியின் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

இல்யோதார்த் என்கிற தத்துவ அறிஞர் சொல்வது போல இது ஒரு 'முழுமையான குற்றம் (perfect crime) எந்தக் குற்றமானாலும் ஏதேனும் ஒரு பலவீனம் அதில் வெளிப்பட்டிருக்கும். புலனாய்வின் மூல ஆதாரமாக அதுவே அமையும். ஆனால் குஜராத்தில் நடந்ததோ முழுமையான குற்றம் (நுட்பமான திட்டமிட்ட படுகொலை எந்தப் பலவீனமும் இல்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கவே இயலாது.) உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது மட்டுமல்ல கண் முன்னே தலைவர்களாகவும் பதவி உயர்வுகளுடனும் உலா வருவார்கள். ஈடுசெய்யக் கூடிய இழப்புகளும் கூட ஈடுகட்டப்படவில்லை. அகதிகள் திரும்பி வர இயலாது, பிள்ளைகள் தொடர்ந்து பள்ளிகளில் படிக்க இயலாது, பழைய முதலாளிகள் வேலை தரமாட்டார்கள்.... முஸ்லிம்கள் மன நிலை எப்படி இருக்கும்?

கொலைகாரர்களின் வாக்கு மூலங்களை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அவர்களிடம் கிஞ்சிற்றும் குற்ற உணர்வில்லை. தாங்கள் செய்தவற்றில் அவர்களுக்குப் பெருமை. 'நான் பெருமை கொள்கிறேன். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் அதிக முஸ்லிம்களைக் கொல்வேன்'' என்கிறான் பஜ்ரங்கி. ''முஸ்லிம்களைக் கொல்வது தான். அவர்களை உதைப்பதுதான் எங்கள் அரசியல்'' என்றும் அவன் பெருமிதம் கொள்கிறான். மற்றவர்களும் அதே குரலை ஒலிக்கின்றனர். சாரா என்றொரு குற்றப் பரம்பரைச் சாதி ஒன்று. அதே போல கர்வா, பக்ரி, காஹல், ராபரி, பஸ்மல் முதலான அடித்தளச் சாதிகள் சில. இவற்றைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலரையும் மூளைச் சலவை செய்து, பண ஆசை காட்டி கொலைகாரர்களாக மாற்றுகிறது இந்துத்துவம். முஸ்லிம்களைக் கொல்வதன் மூலம் இந்து மதத்திற்குச் சேவை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. எப்படி முஸ்லிம்களைக் கொல்வது இந்து மதத்திற்கு கடமை ஆற்றுவதாக அமையும்? காலங்காலமாக இந்து மதத்தால் வஞ்சிக்கப்பட்டுக் குற்றப் பரம்பரையாக ஆக்கப்பட்டவர்கள் ஏன் இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்? இந்தக் கேள்விகளை எழுப்ப இன்று ஒரு காந்தி இல்லை, பெரியார் இல்லை, அம்பேத்கர் இல்லை.

ஜான்சி ராணி போல உணர்ந்ததாக ஒரு கொலை மனம் கூறுகிறது. தான் ஒரு முஸ்லிம் பெண்ணை வன்முறையாக உடலுறவு கொண்டதைத் தன் மனைவி முன்பே பெருமையாகச் சொல்கிறான் இன்னொரு கொலையாளி. இதெல்லாம் என்ன? மனித மனத்தில் சிந்தனை வெறுப்புகள் எங்கே புதையுண்டு கிடந்தன? இவற்றைத் தோண்டி வெளிக் கொணரும் சாத்தியம் இந்துத்துவவாதிகளுக்கு எப்படி வந்தது?


முஸ்லிம்களை ரத்தமும் சதையுமான மனித உயிர்களாய், நேற்றுவரை நம்முடன் பழகியவர்களாய், சமூக உறவுகள் கொண்டவர்களாய் இந்தக் கொலை மனங்கள் பார்க்கத் தயாராக இல்லை. அவர்கள் தனி மனிதர்கள் இல்லை. தனி அடையாளங்கள் அவர்களுக்கில்லை. நேற்று வரை பக்கத்து வீட்டுக்காரராக இருந்த ஒருவரைக் கொன்று குவிப்பதற்கு இன்று எனக்கு வெட்கமில்லை. 'அவர்கள்' எல்லோரும் ஒரே அடையாளமுடையவர்கள். ஒட்டு மொத்தமாய் எதிரிகள் 'அவர்களைக்' கொல்வது குற்றமல்ல. பாவமல்ல. மாறாகப் பலி கொடுத்துப் 'பாரதத்தை' தூய்மை செய்வது - கொலை மனங்களின் 'லாஜிக்' இதுதான்.

இந்தக் கொலைமனங்கள் ஒளிந்திருப்பது ஏதோ பாபு பஜ்ரங்கிகளிடம் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்துத்துவவாதியிடமும் (இந்தக் கொலை மனம்) உள்ளது. நரேந்திர மோடி, அத்வானி, வாஜ்பேயி, தொகாடியா, சுதர்ஸன், இராம கோபாலன் எல்லோரிடம் இந்த மனங்கள் புதைந்துள்ளன. சிலர் தெஹல்காவின் உளவுக் காமெராவிடம் மாட்டிக் கொண்டு விட்டனர். இன்னும் சிலர் மாட்டவில்லை. அவ்வளவுதான்.


நன்றி: தமுமுக ஆன்லைன்