Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, June 02, 2008

இஸ்லாமும் இந்தியாவும்!

' இஸ்லாமும் இந்தியாவும்' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு. டி.ஞானையா எழுதியிருக்கும் நூலைப் பற்றிய தேவ. பேரின்பனின் விமரிசனக் கட்டுரை.

மத அடிப்படைவாதம் இன்றைய உலக அரசியலில் மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம், இந்து முதலிய மதங்களின் அடிப்படைத்தன்மைகளைப் புதுப்பிப்பது என்ற பெயரால் நவீன அரசியல் ஒன்று நடத்தப்படுகிறது. அது பாசிசத்தையும் பயங்கர வாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு அதன் வழியே அறிவிக்கப்படாத போர் ஒன்றும் உலகு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இது யாருடைய போர்? எதற்காக நடத்தப்படுகிறது? யாருடைய நலனுக்காக இந்த மனிதப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உலகச் சந்தை செயல்பாட்டிலிருந்தே விடை காண முடியும். காலனிய காலங்களில் பழமையாளர்களாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் தேசிய அளவில் வளர்க்கப்பட்ட மத வகுப்புவாதம் இன்று உலகு தழுவியதாகவும், மக்களின் குடிமை வாழ்வில் அதிகாரத்தோடு தலையிட்டு கொலைவெறியாகவும். பாசிசமாகவும் மாறிவிட்டது.

அது இப்போது உலக மயத்தை இயக்கும் மூலதன சக்திகளின் அரசியல் கருவியாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சாமுவேல் ஹட்டிங்டனின் ‘பண்பாடுகளின் மோதல்’ கோட்பாடு ஏகாதிபத்தியத்தின் கொள்கையியலாகப் போற்றப்படுகிறது.

இதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல நிலைகளில் வளர்க்கப்பட்ட மதம் சிதைக்கப்பட்டு பாசிசத்தின் கருவியாக இன்று மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.

அடையாள அரசியலின் வழியே இது ஒவ்வொரு தனி நபரையும் அடைகிறது; அவனை வெறியூட்டுகிறது; அவனது மரபுசார்ந்த மதம் என்ற வேரைப் பிடுங்கி அரசியல் அதிகாரத்துக்கான ஒரு கருவியாகுகிறது.

மதம் ஒரு கருத்தியலாக - ஒரு சமூக நிறுவனமாக - ஒரு நம்பிக்கை ஏற்பாடாக - ஒரு தத்துவ முறையின் சாதனமாக சமூக வாழ்விலும், தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல் தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல்பாடாகவே அமைந்தது. அது அரசியல் தன்மையுடையதாகவே வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மதம் என்று எதுவும் இல்லை. மதம் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை. அது என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம் என்றார் டர்க்ஹைம். அந்தச் செயல் வெறும் பண்பாடு வகைப்பட்டதல்ல; பண்பாடு வழியே ஆன அரசியல் பற்றியது. அரசியல் வர்க்கப்போராட்டம் பற்றியது.

மதங்களின் வரலாறு நெடுகிலும் இந்த அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியைக் காணமுடியும். ஏசு சிலுவையில் கொல்லப்பட்டதும், புத்தர் ஆட்சியைத் துறந்ததும், நபிகள் நாயகம் மெதினா ஆட்சியை அமைத்ததும், தமிழகத்தில் சமணர்கள் சைவர்களால் வேட்டையாடப்பட்டு கழுவேற்றப்பட்டதும் இன்ன பிறவும் அரசியல்தான்.

மதம் என்ற எல்லைக்குள்ளேயே மனித நேயத்தை போற்றுவதற்கான மக்கள் நலனுக்கான இயக்கம் அனைத்து மதங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. அதுவும் ஒரு அரசியல் வகைப்பட்ட இயக்கமாகவே இயங்கியது.

மரபு சார்ந்த மானுட உணர்வு மற்றும் நிறுவனம் என்ற வகையில் மக்களை அரசியல் ரீதியாக செயல்படவைக்க அது பயன்படுத்தப்படுவது 20ஆம் நூற்றாண்டு அரசியலில் தீவிரமடைந்தது. காலனியத்தை எதிர்த்த தேசிய புரட்சிகளுக்கு மக்களைத் திரட்ட மதம் புதிய விளக்கங்களைப் பெற்றது. அதே சமயத்தில் முதலாளியத்தின் வளர்ச்சியால் மறையும் வர்க்கங்களின் / சமூகப்பகுதிகளின் நலனைக் காக்கவும் மதப்பழமைவாதம் அரசியலாக வளர்க்கப்பட்டது.

அதே சமயத்தில், முதலாளித்துவப் புரட்சி ஜனநாயக ஆட்சி முறை மதச்சார்பின்மை கோட்பாட்டை அடிப்படையான கோட்பாடாக முன்வைத்தது. இதுவுலகப் பிரச்சனைகளில் மதம் தலையிடக்கூடாது என்ற கொள்கை மக்களின் குடிமை வாழ்விலும், அரசியல்/சமூக வாழ்விலும் மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தது. அறிவியல் மனோநிலையை வளர்ப்பதன் மூலம் இத்தகைய மதச்சார்பற்ற தன்மையை வளர்க்க அரசுகளே செயல்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் மதச்சார்பின்மைக்கு இந்த அடிப்படை உண்டு.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவியலுக்கு எதிரான ‘போலி அறிவியல்’ மேலைய நாடுகளில் வளர்க்கப்பட்டு அடையாள அரசியல் மாற்றாக முன் வைக்கப்பட்டது. அது ‘நாம்’ ‘அவர்கள்’ என்ற இரண்டு எதிர்எதிரான படைப்பிரிவை உருவாக்கியது. இரண்டுக்கும் இடையிலான புனிதப்போரை - அதிகாரத்தை - இதிகாசப்போரை பிரகடனப்படுத்தியது.

மனித உள்ளங்களில் மதவெறி கொண்ட போர் மனநிலை சதா நிலவுவதற்கான கருத்தியல் நியாயங்கள், கோட்பாடுகள் மிகுந்த செலவு செய்து பரப்பப்படுகிறது. தனது அடையாளப் பெருமிதத்தை மீட்பதற்காகவே மதங்களின் பெருமரபு ஒன்றும் ஆக்கப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயத்தின் சுரண்டலை எதிர்த்த கிளர்ச்சிகள் இடதுசாரித் தன்மையை உலகு தழுவிய அளவில் வளர்ந்துவரும் நிலையில் - பெண் விடுதலை - ஒடுக்கப்பட்டோர்; சமூக நீதி போன்ற ஜனநாயக எழுச்சி உருவாகி வரும் நிலையில் கிருத்துவ / இஸ்லாமிய / இந்து மத அடிப்படையிலான ‘பெருமரபு’ ஒன்று அரசியலாக ஆக்கப்பட்டு அந்தப் பெரு மரபுக்கு நிரந்தர எதிரியாக மாற்றுமதம் ஒன்றை முன் வைத்து பண்பாடு அரசியல் ஒன்றை வளர்ப்பதில் ஏகாதிபத்தியம் கவனமாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் வகுப்புவாதம் இன்றைய வளர்ச்சியில் ஒவ்வொருவரின் மூளையையும், இருதயத்தையும் வேட்டையாடிய வண்ணம் உள்ளது. 80சதவீதமான மக்களை இந்துத்துவா அடிப்படையில் திரட்டவும், 15 சதவீதமான இஸ்லாமிய மக்களை எதிர்த்த தர்மயுத்தத்தின் வழியே ராமராஜ்யம் ஒன்றுகட்டவும் ஆன பிரகடனங்களுக்கான கருத்தியல்கள் வலுவாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அறிவியல் மனோநிலை வளர்ச்சி குன்றிய மதச் சார்பற்ற வாழ்நிலை பலவீனமாக உள்ள நிலையில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை கோட்பாடு வகுப்பு வாதத்தின் மதச்சார்பு வாழ்க்கைமுறையோடு கூடிய அரசியல் தாக்குதலால் நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்துத்துவா பாசிசத்தை நோக்கிய கருத்தியல்களை வலுவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் வெளியார்; பழமையாளர்; மாறாதவர்கள்; ஒவ்வாதவர்கள்; சகிப்புத்தன்மையற்றவர்கள்; முரடர்கள்; பயங்கரவாதிகள்; இப்படிஇன்னபிற. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் பொதுவாக ‘அவர்கள்’ என்ற எதிரிப்படையினராக வைக்கப்பட்டு அணுகப்படும் கண்ணோட்டம் இன்று மேலோங்கி வளர்க்கப்பட்டுள்ள சூழலில் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள ஞானையாவின் ‘இஸ்லாமும் இந்தியாவும்’ என்ற இந்தநூல் சிறந்த ஆதார நூலாக வந்துள்ளது.

இஸ்லாமியராக இல்லாத ஒருவர் - கம்யூனிஸ்டாக வாழ்பவர் இத்தகைய நூலை எழுதியிருப்பது நூலுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாம் குறித்த ஆய்வு வகைப்பட்ட அரசியல் நூல் என்ற பெருமையைத் தமிழில் இந்நூல் பெறுகிறது; மார்க்சியத்தின் அடிப் படைகளைத் தளர்த்திவிடாமல் நூலாசிரியர் விவாதத்தை நடத்திச் செல்வது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இந்நூலில் ஞானையா வாசகரோடு ஒரு நீண்ட உரையாடலை நடத்துகிறார்; வலுவான வாதங்களை முன்வைக்கிறார். தனது நியாயங்களை நிலைநாட்டுகிறார். கடைசியில் முஸ்லிம் இந்தியர்களுக்கு அறிவார்த்த மானவேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறார்.

நூலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு விளக்கப்படுகிறது.

மதங்களின் வரலாற்றில் இஸ்லாம்தான் கடைசியில் தோன்றிய உலகளாவிய மதம் என்பது குறிப்பிடத்தக்கது. அராபிய சமூக - பொருளாதார வாழ் நிலையிலிருந்து இஸ்லாம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை எளிய தமிழில் அழகுபட விவரிக்கும் ஆசிரியர் இஸ்லாமின் சமத்துவம் - சமாதானம் குறித்த செய்திகளையும், நெறிகளையும் இஸ்லாமிய அடிப்படைகளை அடியொற்றி விளக்குவது சிறப்பானது. இறைத்தூராக அறியப்படும் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் மக்கள் வாழ்க்கை அவரை வேட்டையாடியது; அவர் மதீனாவுக்கு குடிபெயர்ந்து தனது அரசை நிறுவினார்.

அந்த அரசு மத சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாமிய அரசாக விளங்கியது.

முகமது நபி இறை அவதாரமாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை. அற்புதங்கள் நிகழ்த்தவில்லை. அது ஏக இறைக் கோட்பாடு மானுட நற்செயல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது அமைந்தது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளுக்குப் பிறகு அமைந்த கலிஃபாக்களின் ஆட்சி இஸ்லாமிய அரசை நிறுவியது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய விஸ்தரிப்பும், பிளவுகளும் தோன்றியதையும் அது குறித்த விவரங் களையும் நூல் விவரிக்கிறது. ஆனால், இஸ்லாமிய ஷரியத் சட்டதிட்டங்களை மீறாமல் அதேசமயத்தில் இஸ்லாம் மதத்தின் மனிதநேயம், அறிதலியல் கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவர்கள் நபிகள் நாயகத்தின் ‘திண்ணைத்தோழர்கள்’ என்றழைக்கப்பட்ட அவரது நேரடி சீடர்கள். இவர்கள் வழியே ஏழை எளிய மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அரசு அதிகாரத்தையும், வசதிகளையும் மறுத்த சூஃபிக்கள் இயக்கம் ஏழை மக்களின் பெரு மூச்சாக இயங்கியது. ஆனால் அது அதிகாரப் பூர்வமான இஸ்லாமிய ஏற்பாட்டால் ஏற்கப்படவில்லை.

சூஃபிக்கள் ஆன்மிகவாதிகள் அவுலியாக்கள் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் வழியே பிறதத்துவங்களுடன் இஸ்லாமியதத்துவம் உறவுகொண்டது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் உடைமை வர்க்கச் சார்பு அரசு முறைகளை எதிர்த்தும் இஸ்லாமிய சூஃபிகள் போராடினர். பாரசீகம் தொடங்கி இந்தியா வரை இந்த மரபுபரவியது. இதன் வரலாற்றுப் போக்கைத் தனியாக நூலில் விளக்கியிருந்தால் நூலின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

இந்தியாவில் இஸ்லாமின் வரலாறு குறித்த அத்தியாயங்கள் இந்துத்துவாவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு நல்ல பதிலடியைத் தருகிறது. தமிழகத்தில் இஸ்லாம் என்ற அத்தியாயம் வரலாற்று வழியிலான ஆதாரங்களை வழங்குகிறது. அரபு வணிகர்கள் மூலம் கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இஸ்லாம் வருகை புரிந்தது; மொகலாய படையெடுப்புகள் வழியே இங்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக, மலையாளத்துக்கும், தமிழுக்கும் இஸ்லாமியர் அளித்த பங்களிப்பு இந்த தேசிய இனங்களின் மரபுகளில் ஒன்றாகப் பரிணமித்தது.

இந்திய விடுதலைப்போரின் நீண்டவரலாற்றை முஸ்லிம் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது. நாடு மத அடிப்படையில் பிளவுபட்டதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் பயன் படுத்திக் கொள்ளப்படவில்லை. காங்கிரஸ்-லீக்பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்; தேசிய அரசு அமைக்கப்பட்டு அதில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இணைக்கப்படவேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் கவனத்தில் கூட கொள்ளப்படவில்லை. இதன் விளைவு: மத அடிப்படையில் பிளவு, வரலாற்றின் மிகப்பெரிய குடிபெயர்வு / மதக்கலகம் - படுகொலைகள். இறுதியாக, மகாத்மா காந்தியின் படுகொலை.

1947க்குப் பிறகு கடந்த 60ஆண்டுகளில் இந்துத்துவா சக்திகள் பாசிசத்தன்மையோடு வளர்ந்தற்கான காரணங்கள் முதலாளித்துவ நெருக்கடியின் போக்கிலிருந்து கண்டறிய வேண்டும். 1947க்குப் பிறகு இந்திய முஸ்லிம்களுக்கு என்று அகில இந்திய கட்சி ஒன்று செயல்படவில்லை என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) இஸ்லாமிய சகோதரத்துவம், உலகுதழுவிய இஸ்லாமிய அரசு ஆகியவற்றின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசியல் மறுகட்டுமானம் உலக வளர்ச்சிப் போக்கின் விளைவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.

இது அமெரிக்கா முன்வைக்கும் அரசு பயங்கர வாதத்துக்கு எதிர்விளைவாகவும் வளர்க்கப்படுகிறது. இவை பேரிலான ‘ஜிகாத்’ கருத்தியல் ஏகாதிபத்தியத்தின் வளையத்துக்குள் சிக்கிக்கொண்டதாகவே அமைந்துவிடுகிறது. அராபிய நாடுகளின் மீதான தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா இஸ்லாம் மதத்துக்குள் தலையிட்டு அல்கொய்தாக்களையும், தாலிபான்களையும் தயாரித்தது. குவினை மத அடிப்படை வாத அடிப்படையில் மறுவாசிப்பு செய்வதற்கான மதரஸாக்களின் நடவடிக்கைகளை ஊக்குவித்தது.

இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் ஏகாதிபத்திய அரசியல் சதியின் விளைவுகளில் ஒன்றே ஆகும். எந்தவகையான மத அடிப்படை வாதமும் மொத்த மதத்தையும் அதன் உறுப்பினர்களையும் தனக்கு மட்டுமே உரியதாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால், உண்மை அதற்கு நேர் எதிரானது. மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆராய்ந்து இந்திய முஸ்லிம்களைச் சமூகப் பொருளாதார அடிப்படையில் / அவர்களது வர்க்க வாழ் நிலையின் மீது அரசியல் செயல்பாடு அமையவேண்டும். நீதிபதி சக்கார் குழுவின் அறிக்கை இதில் ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட அத்தியாயம் மிகச்சிறப்பாக வாதங்களை முன்வைக்கிறது.

நூலின் இறுதியில் முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றுவிடப்படுகிறது.

மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு தமது சமூகப் பொருளாதார, பண்பாடு மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை வேண்டுகோள் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்குள் நடைபெற வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் அது பேசுகிறது. இவை பற்றியெல்லாம் இஸ்லாமியர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், அறிஞருமான ஞானையா அவர்களின் நூல் இந்தத் தருணத்தின் தேவையைச் சிறப்பான முறையில் நிறைவுசெய்கிறது.

இஸ்லாமும் இந்தியாவும்
ஆசிரியர்: டி.ஞானையா,
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024,
விலை : ரூ 160.00

நன்றி: கீற்று.காம்

Wednesday, May 28, 2008

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - பேரா. ஆ. சிவசுப்பிரமணியன்

வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

மனுவின் காலம்

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

மனு செய்த கொடுமை

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

தமிழ்நாட்டில் மனுதர்மம்

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’
என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும்செய்யுள் வடிவில் அமைந்தன.

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

நன்றி: விழி

Wednesday, April 23, 2008

ஜனநாயகத்தைக் கண்டுபிடித்தவர் அத்வானி!

"கட்சியின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியில் இல்லாதக் காரணத்தாலேயே நான் ராஜினாமா செய்கின்றேன். மத்தியப் பிரதேச பட்ஜட் கூட்டத்தொடருக்குப் பின் இதுதொடர்பான விரிவான தகவலை நான் வெளியிடுவேன்"

மத்தியப் பிரதேச மாநில பாஜகவின் முகம் என பாஜக அகில இந்திய தலைமையினால் கருதப்படும் பாஜகவின் மூத்த தலைவர் கோபினாத் முண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெரிவித்த வாசகங்கள் இவை.

அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 4000 பேரும் கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்தார்களாம்.

டெல்லிக்குச் சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் முண்டே மறுத்திருந்தார்.

ஆனா, இதெல்லாம் பழைய கதை!

நேற்று (செவ்வாய்க் கிழமை) டெல்லிக்குச் சென்ற முண்டே, அத்வானி, வெங்கையா நாயுடு, ராஜ்னாத் சிங் ஆகியோரை சந்தித்தார். அத்வானியுடனான 5 மணி நேர சந்திப்பு முடிந்தவுடன் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

பல வருடங்களாகக் கட்சியில் இருந்த அனுபவத்தை வைத்து, 'கட்சியில் ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக' புகார் கூறிய முண்டே, ஒரே நாளில், அதுவும் 5 மணி நேர சந்திப்பிலேயே தனது கூற்றினை மாற்றிக் கொண்டதைப் பார்த்தால், காணாமல் போயிருந்த ஜனநாயகத்தை அந்த 5 மணி நேரத்தில் அத்வானிதான் கண்டுபிடித்துக் கொடுத்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வரும்போது, வரலாறு பாட புத்தகங்களில் 'ஜனநாயகத்தை கண்டுபிடித்தவர் அத்வானி' என்று எழுதப் பட்டால் யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது.

நல்லா கூத்தடிக்கறாங்கப்பா!

Wednesday, January 23, 2008

படாத பாடுபடும் பாரத ரத்னா!

"ஆத்தோட போற தண்ணி.. அய்யா குடி.. அம்மா குடி'-ன்னு சொல்வாங்களே அந்தக் கதையா ஆயிப் போச்சு பாரத ரத்னா!

நாட்டின் மிக உயரிய விருதான இதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்று பாஜகவின் அத்வானி கூறியிருந்தார். அ‌வரைத் தொட‌ர்‌ந்து க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மூ‌‌த்த தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ஜோ‌திபாசு‌க்கு‌ம், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌‌சி‌யி‌ன் மாயாவ‌தி‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் க‌‌ன்‌சிராமு‌க்கு‌ம் அவ்விருதை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு‌க்கு கோ‌ரி‌க்கை ‌விடுத்‌திரு‌ந்தன‌ர்.

இதற்கிடையில் சிவசேனா தலைவர் பாக்தாக்கரேயும் அவர் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்; 'இ‌ந்த ‌விருது‌க்காக எனது பெய‌ர் ‌சிபா‌ரிசு செ‌ய்ய‌ப்ப‌ட்டு எ‌ன‌க்கு வழ‌ங்க நே‌ரி‌ட்டா‌ல் நா‌ன் ஒரு போது‌ம் ஏ‌ற்கமா‌ட்டே‌ன்'. நரி, திராட்சைப்பழக் கதை நினைவுக்கு வருகிறதா?

பாரத ரத்னா விருது, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது . இந்த விருதைப் பெற வாஜ்பாய் எப்படி தகுதியுடையவர் என்ற கேள்விக்கு பதிலாக 'ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்க வாஜ்பாய் பாடுபட்டுள்ளார் . அதைக் கெளரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா அவருக்கு வழங்கப்பட வேண்டும்' என்கிறார் அத்வானி.

ஆனால் வரலாற்றின் பக்கங்களோ வேறு விதமான உண்மைகளை பறை சாற்றுகின்றன.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மோடியின் ஆதரவோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் கோர வெறியாட்டம் போட்டனர். இன்றும் அம்மாநில சிறுபான்மை மக்களை அதிகபட்ச அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன இந்துத்துவ சக்திகள். பிரதமர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்த வாஜ்பாய் 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப் பட்டதைத் தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இவர்தான் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டாராம்.

1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் வாஜ்பாய் என் சங்பரிவாரங்கள் அவருக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. ஆனால், 'சம்பவத்தன்று கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறியாச் சிறுவன் நான். எந்தவித போராட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை ' என்று வாஜ்பாயே கையெழுத்து போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.

சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கு கொள்ளவில்லை. தவிர 'ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் தருவதில்லை' என்ற தனது வடிகட்டிய சந்தர்ப்பவாத சுயநலப் போக்கிலிருந்து அது சிறிதும் விலகாமலேயே இருந்தது. சிறுவயதிலிருந்தே இத்தகைய கொள்கைகள், சித்தாத்தங்களில் பயிற்சி பெற்று வந்த வாஜ்பாய் எப்படி விடுதலைப் போரில் பங்கேற்றிருப்பார்?

வாஜ்பாய் மட்டுமல்லாது, இதே ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்தவர்கள்தான் அத்வானி, மோடி உள்ளிட்ட பெரும்பான்மையான பாஜக தலைவர்கள். உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள், காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நாட்டின் உயர் பதவிகளை கைப்பற்றியிருக்கிறார்கள். நாட்டின் உயரிய விருதுகளும் அவர்களுக்கு வேண்டுமாம்!

இதோடு ஏன் நிறுத்த வேண்டும்? "அப்படியே சாவர்க்கருக்கு ஒரு பாரத ரத்னா, மோடிக்கு ஒரு பரம்வீர் சக்ரா, கோட்ஸேவுக்கு ஒரு பத்மபூஷன்... சூடா பார்சல்...!"

என்னங்கையா... உடுப்பி ஹோட்டல்ல நெய்தோசையா ஆர்டர் பண்றீங்க?

Tuesday, July 24, 2007

விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!

தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு. மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட, மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும், இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.



"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.


சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.


மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.


இஸ்லாமியர்கள் போரிட்டவரலாற்றை இன்று நினைத்தாலும் உடல் மெய்சிலிர்க்கும்.



சுதந்திர தின வைரவிழாவுக்கு இன்னும் 23 நாட்கள்...

.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள்!

Wednesday, December 20, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

தொண்டன் என்பவர் எனது பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

யதார்தத்தை சுள்ளென்று உறைக்கும்படி சொல்லும் ஒரு விஷயம்.

அது பின்னூட்டத்திலேயே அமுங்கி போகலாமா?

அதனால் அந்த பின்னூட்டத்தை முன் வைத்து இந்தப் பதிவு!

தொண்டன் said...

\\ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரைஇது ஒரு அனானியின் பின்னோட்டக் கவிதையாம் இது யாருக்கும் தெரியாம அழிஞ்சு போகக்கூடாதாம் அதுனால மீள் பதிவாம்.

நல்லாயிருக்கு.

ஆமா அரபு நாட்டுல வேலை பார்த்தப்போ ஈஸ்வரனுக்குப் பதிலா அல்லாவைத்தான் இவரு வணங்கியிருப்பாரோ. இருக்கும் இருக்கும் இல்லைனா இவர் தலை போயிருக்கனுமே!. இவர்தான் இப்படின்னா இன்னும் எத்தனையோ முஸ்லிமல்லாதவங்க அரபு நாட்டுல பணத்துக்காக அல்லாவை வணங்குறாங்களா?.

800 வருஷமா இஸ்லாமியருக்கு கீழேதானப்பா நம்ம நாடு இருந்துச்சு அப்ப இணைவைச்ச குற்றத்திற்கு எவ்வளவு கழுத்து அறுபட்டிருக்கனும். இல்ல இந்த நாட்டு மன்னரெல்லாம்
முஸ்லிம் மன்னனுக்குப் பயந்து அல்லாவுக்கு குல்லாவும் ஈஸ்வருக்கு அல்வாவும் கொடுத்துட்டாங்களா?. இன்னும் இதுமாதிரி பழய பல்லவி வேணாம் கேட்டு கேட்டு புலிச்சுப்போச்சு புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க.
20/12/06 4:38 PM

இது போன்ற ஒரு அரிய தகவலை பின்னூட்டத்தில் தந்த தொண்டன் அவர்களுக்கு நன்றி.

'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?

Monday, December 18, 2006

தமிழ் மண்ணே வணக்கம்! - பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே!
இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ?’
என்கிற நம் மூதாதையர் பற்றிய வரலாற்று உணர்வுதான் நமக்கு விடுதலையின் தேவையை உணர்த்தியது.

எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல். அந்த உணர்வைத் தமிழன் தொலைத்ததால் தான், நம்முடைய கீழாநெல்லியை வெளிநாட்டுக்காரர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். வரலாறு தெரியாமல் போனதால்தான், தமிழகப் பள்ளிகளில் தமிழ் பேசினால் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தண்டனை கிடைக்கிறது. தமிழ்க் குடும்பங்களின் கிழவன், கிழவிகளைப் பயன்படாதவர்களாக, பாரமானவர்களாகப் பார்ப்பதற்கும் நமக்கு வரலாற்று அறிவு இல்லாமல் போனதுதான் முக்கிய காரணம்.

கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.

வரலாறு என்பதை, படித்தால் வேலை கிடைக்காத ஒரு பாடப் பிரிவாக வைத்துவிட்டோம். நம் பெருமைகளை, இழப்புகளை, அதற்கு நாம் தந்த விலையைத் தெரிந்துகொள்வதற்கு வரலாறுதான் நமக்கு கடந்த காலம் காட்டும் கண்ணாடி என்பதை மறந்துவிட்டோம்.

சரி, கடந்த காலத்தை தெரிந்து வைத்துக்கொண்டு என்ன செய்வது?

காலம் காட்டும் கண்ணாடிதான், வருங்காலத்துக்கான பாதைகளையும் காட்டும் கைவிளக்கு. எனவே, வரலாற்றைத் தொலைப்பது என்பது வருங்காலத்தையே தொலைப்பதற்குச் சமம்.

நம் நாட்டின் மிகப் பெரிய தீமை, சாதிப் பிரிவினையும், தீண்டாமைக் கொடுமையும் ஆகும். குஜராத்தில் பூகம்பம் வந்தது. உயர்ந்து நின்ற கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாயின. இடிபாடுகளுக்கிடையில் ஆயிரக் கணக்கில் இறந்து கிடந்தனர் நம் மக்கள். கை கால் இழந்து, எலும்பு முறிந்து ஊனமுற்றவர்களாயினர். உயிர் துறந்து, உடைமை துறந்து கூட்டம் கூட்டமாக முகாம்களில் தங்கியிருந்தனர். அந்த நிலையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், எங்களுக்கும் ஒரே உலையில் உணவு சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று பெரிய போராட்டத்தையே நடத்தினர் நம் உயர்சாதிச் சகோதரர்கள். இதைவிட அவமானமும் துயரமும் வேறென்ன இருக்க முடியும்?

பண்டமாற்று முறையில் தேன் கொடுத்து, மீன் வாங்கி உயிர் வாழ்ந்த ஒரு கலாசாரத்திலிருந்து வந்தவர்களுக்குள்தான் இப்போது இத்தகைய கொடூரப் பிரிவினை. எப்படிச் சேர்ந்து வாழ்ந்தோம் என்கிற வரலாறு அடுத்த தலைமுறைக்கு உணர்த்தப்பட்டால் தான், பிரித்த சூழ்ச்சி எதுவென்று உணர முடியும்.

‘நான் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவன் இல்லை’ என்பதை உணர்த்துவதற்காகத்தான் மார்பில் நூல் அணிந்தார்கள் என்பதை நாம் உணர்த்தி இருந்தால், உழவர்கள் சூத்திரர்களாக ஆகியிருக்க மாட்டார்கள். ‘உழந்தும் உழவே தலை’ என்று சொல்கிற திருக்குறளின் அர்த்தமும், ஆழமும்தானே நம் வரலாறு!

இனம், மொழி, நாடு, அரசியல், பொருளாதாரம், இலக்கியம்... இதுபோன்ற ஒவ்வொரு சமூகவியல் துறைக்கும் வரலாறு தேவை. நடந்த நிகழ்வுகளையும் செய்திகளையும் முறைப்படுத்தி வருங்காலத்துக்குச் சான்றாகவும், அறிவுறுத்தலாகவும் அமைவதே வரலாறு. நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவங்களே, வரலாறு! அனுபவங்களைத் தொலைத்துவிட்டு புதியதொரு வாழ்க்கையை வாழ்வது அறிவுடைமை ஆகாது.

‘முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது?’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது? அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன?’ என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும், வருங்காலத்தைக் கணிக்கவும் பயன்படுகிற சமூக விஞ்ஞானமாக வரலாற்றை பார்ப்பதே சரியான அணுகுமுறை.

இன்று நடக்கிற ‘இந்து - முஸ்லிம்’ மதக் கலவரங்களுக்கும், நம் மெக்காலே கல்வி முறையில் பயின்ற வரலாற்றுப் பாடத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.‘ஸ்டூவர்ட் மில்’ என்கிற ஆங்கில வரலாற்றாசிரியர், ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இன்று இந்தியாவில் இந்து, முஸ்லிம் மதக் கலவரங்கள் நடப்பதற்கும், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் இரு நாட்டு இந்து - முஸ்லிம்களுக்கு இடையிலான அறிவிக்கப்படாத போராகப் பாவிக்கப்படுவதற்கும், வரலாற்று ஆசிரியர்களின் பிரிவினைகளுக்கும் நேரடியாகச் சம்பந்தம் இருக்கிறது. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியே நமக்கு மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் பாடமாக்கப் பட்டது.

நமக்கென்று ஒரு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று நமக்கே சொல்லப்பட்டது. நாமும் கிளிப்பிள்ளைகளைப் போலத் திரும்ப அதையே சொன்னோம். நமது மன்னர்களைப் பற்றிய பெருமைகளையும், அவர்களின் போர்த் தந்திரங்களையும், வரி வசூலிக்கும் முறையையும் மட்டுமே வரலாறு என நமக்குப் போதிக்கப்பட்டது. மன்னர்களின் வரலாற்றையே மக்களின் வரலாறுதான் உருவாக்குகிறது என்பது நமக்கு இந்த விஞ்ஞான யுகத்தில் கூடப் புரியவில்லை.

‘மங்கலம்’ என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு ‘மங்கலம்’, ‘அகரம்’ என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும்.

ஹிட்லரின் சுயநலத்துக்கு அவருடைய ‘இன மேன்மை வரலாறு’ தான் கருவியாக இருந்தது. ‘ஆரியர்கள், உலகம் ஆளப் பிறந்தவர்கள்’, ‘உலகம் நமதே!’ என்கிற கோஷத்துக்குப் பின்னால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் விலை பேசப்பட்டன.

பித்தப்பை கற்கள் காரணமாக லூயி மன்னன் அதிக வலியில் துடிதுடிக்க நேர்ந்ததும், அதன் பொருட்டு எழுந்த கோபமுமே பிரெஞ்சுப் புரட்சியின் ஆணி வேர்.

இந்திய வரலாற்றில், இஸ்லாமிய மன்னர்கள் கொடூரமானவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளரங்கசீப் மன்னனை கொடூரமானவனாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சொல்லிவருகிறோம். அதுவே, தஞ்சையை ஆண்ட இந்து, மராத்திய மன்னர்களின் அந்தப்புரப் பெண்களின் வயது 12-லிருந்து தொடங்குவதைச் சொல்வது இல்லை. எல்லா மத அரசர்களும் மக்களைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அரசர்களை மட்டும் மோசமானவர்களாகச் சித்திரிப்பது வரலாற்றுப் பிழை அல்லவா?

வாழ்ந்த வரலாறும், வீழ்ந்த வரலாறும் முழுமையாகத் தெரிந்தாலொழிய பாபர் மசூதி, ராமர் கோயில் போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு கிடைக்காது.

‘முன்பு ஒரு காலத்தில் அவர்களிடம் பைபிள் இருந்தது... நம்மிடம் நிலங்கள் இருந்தன. இன்று நம்மிடம் பைபிள் இருக்கிறது. அவர்களிடம் நம் நிலங்கள் இருக்கின்றன. நமது நிலத்தில் நாமே அடிமைகள்’ என்கிற ஒரு ஆப்பிரிக்கக் கவிதையில் கறுப்பு - வெள்ளைப் பிரிவினையின் வரலாறும், மதங்கள் மக்களை அடிமை கொள்ள எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்கிற தகவலும் பொதிந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொன்றையும் வருங்காலத் தலைமுறை, வரலாறாகப் படிக்கும்போதுதான், நடந்த தவற்றை மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். காரணம், வரலாற்று உணர்வுதான் சூழ்ச்சிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் கேடயம். தாக்குவதற்காக அல்ல; தற்காப்பதற்காக நமது முன்னோர்களின் வரலாற்றை, நமது அடுத்த தலைமுறைக்குச் சரியான கோணத்தில் விளக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

நன்றி: ஆனந்த விகடன் 29-11-06