Showing posts with label மனுஸ்மிருதி. Show all posts
Showing posts with label மனுஸ்மிருதி. Show all posts

Wednesday, May 28, 2008

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - பேரா. ஆ. சிவசுப்பிரமணியன்

வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

மனுவின் காலம்

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

மனு செய்த கொடுமை

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

தமிழ்நாட்டில் மனுதர்மம்

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’
என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும்செய்யுள் வடிவில் அமைந்தன.

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

நன்றி: விழி

Thursday, January 25, 2007

அம்பேத்காரும் இந்துவா?

"மநுஸ்மிருதி மற்றும் அதைப்போன்ற பிற நூல்களில், மிகவும் கீழ்த்தரமாகக் காணப்படும் கருத்துகள், மிக மோசமான வகையில் மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. எனவே, இம்மாநாடு மிக அழுத்தந்திருத்தமாக இதைக் கண்டிப்பதுடன் - அதன் ஒரு வெளிப்பாடாக, மநுஸ்மிருதியை எரிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.''

- 25.12.1927 அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம்

புரட்சியாளர் அம்பேத்கர் மநுஸ்மிருதியை எரித்த (25.12.1927) 80ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மூட்டிய தீ, நாடெங்கும் பற்றி எரிய வேண்டிய தேவையை, எவரும் எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. சமத்துவத்திற்கானப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே மநுஸ்மிருதி எரிப்பு. ‘மநுஸ்மிருதிகள் வழக்கொழிந்து விட்டன; இதை எரிப்பதன் மூலம் அம்பேத்கர் ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?' என்று அன்றே கேட்கப்பட்டது. இன்றும் இதுபோன்று கேள்வி எழுப்புகின்றவர்களுக்கும் சேர்த்து அம்பேத்கர் தெளிவாக பதிலளித்துள்ளார் : "இந்துக்கள் மநுஸ்மிருதியைப் பின்பற்றுவதால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் வன்கொடுமைகளை இழைக்கின்றனர். அது, வழக்கொழிந்துவிட்ட ஒரு நூல் என்பது உண்மை எனில், அதை யாராவது எரித்தால், அதற்கு இந்துக்கள் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதை எரிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். காந்தி, அயல்நாட்டுத் துணிகளை எரித்ததால் என்ன கிடைத்தது? நியுயார்க்கில் மிஸ் மேயோ எழுதிய ‘அன்னை இந்தியா' என்ற நூலை எரித்ததால் என்ன சாதித்தார்கள்? அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய சைமன் குழுவைப் புறக்கணித்ததால், என்ன சாதிக்கப்பட்டது? இவற்றையெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன காரணமோ, மநுஸ்மிருதியை எரிப்பதற்கும் அதுதான் காரணம்.''

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியைத் தூண்டும் ‘புனித ஆற்றலை' - மநுஸ்மிருதியும், பகவத் கீதையும், இந்து சாஸ்திரங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்து வன்முறைகளுக்கு அவைதான் ஊற்றுக்கண். ஆனால், கீழ்த்தரமான இந்நூல்களை விமர்சித்தால், அதை விமர்சிப்பவர்களைத்தான் அரசு கைது செய்கிறது. ‘தமிழ் நாடு முஸ்லிம் மக்கள் கட்சி'யின் தலைவர் எஸ்.எம். பாஷா, மகாபாரதத்தை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, அவரைக் கைது செய்துமிருக்கிறது (‘தினத்தந்தி' 30.12.06). ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், "சாதிப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பிரகடனப்படுத்தியதன் ஒரு பகுதியாக - ‘அகண்ட இந்து செயல்திட்டம்' ஒன்றை சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது (‘தி இந்து' 3.1.07).

அரசியல் தளத்தில் மய்ய ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவாரங்கள், தற்பொழுது மீண்டும் ‘ராமன் கோயிலைக் கட்டுவோம்' என்று கிளம்பியிருக்கின்றன. உத்திரப் பிரதேச தேர்தலைக் கவனத்தில் கொண்டும், வாஜ்பாய் சொல்வது போல, ‘லக்னோ வழியாக புதுதில்லி செல்லவும்' அவை திட்டமிட்டுள்ளன. அதற்கான அடிப்படைவாதப் பணிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இந்து உணர்வைத் தூண்டி ‘ஓட்டுப் பொறுக்கும் அரசியல்'தான் அது என்று சொல்லப்பட்டாலும், அது இந்து முஸ்லிம் கலவரத்திற்குதான் வித்தூன்றும். இக்கலவரங்கள் மூலம் ‘இந்து ஒற்றுமை' வலுப்பெறுவதால், அதை செயல்படுத்துகின்றனர். இந்த அகண்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே பெரியார் சிலை உடைப்பு!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே தேசியமாக சித்தரித்து, இந்து பண்பாட்டைத் திணிக்க முயல்கின்றனர். எனவே, அதற்கு எதிராக நாம் முன்னிறுத்தும் பண்பாடு, மிகவும் வலிமை வாய்ந்ததாக - சாதி, மத ஒழிப்புப் பண்பாடாக இருந்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்று பொதுவாகக் கூறுவது போதாமையாகும். இதற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது: "... பார்ப்பன எதிர்ப்பை, இந்து மத எதிர்ப்பாக நாம் மாற்றக் கூடாது... மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்; வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். கடவுள் இல்லை என்பதைக் கருத்தியலாகப் பரப்ப வேண்டும். ஆனால், மதத்தோடும் கோயிலோடும் போர் புரிவது, எதிர்விளைவை உண்டாக்கும்'' (‘தமிழர் கண்ணோட்டம்' சனவரி 2007). பார்ப்பனர்களை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனக் கடவுளர்களையும், அவர்களின் மதத்தையும், கோயிலையும் எதிர்க்க வேண்டாம் என்பது, கடைந்தெடுத்த முரண்பாடு இல்லையா?

பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும். இக்கருத்தியல்களை உள்ளடக்காத தமிழ்ப் பண்பாட்டை, இந்து பண்பாடு எளிதில் செறித்துவிடும்!

நன்றி: கீற்று.காம் - மநுஸ்மிருதியை எரிப்போம்!