உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
துரோகி நம்பர் - 1
உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
நிழல் உலக தாதா கும்பல்களில் 'டபுள் ஏஜெண்ட்' என்ற வார்த்தை ரொம்ப பாப்புலர். ஒரு குழுவின் தலைவரிடம் விசுவாசமாக இருப்பது மாதிரி நடித்தபடி, போட்டியாக இருக்கும் இன்னொரு குழுவுக்கு உளவு பார்க்கிறவர்களுக்கு இப்படித்தான் பெயர்.
இந்திய அரசாங்கத்தின் பிரதான உளவுப்படை 'ரா' (Research and Analysis Wing). இதன் மிக முக்கிய பொறுப்பிலிருந்த உயர்அதிகாரி ஒருவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அமெரிக்காவுக்காக உளவு பார்த்திருப்பது தெரிய வந்தது. விஷயம் வெளியில் கசிந்ததும் அந்த அதிகாரி அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட, இப்போது இந்தியா - அமெரிக்க உறவையே இது பாதித்து இருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், உச்சகட்ட டென்ஷன் அடைந்து கிடப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமரின் ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், ஜே.என்.தீட்சித், 'ரா' நிறுவனத்தின் தலைவர் சகாய் ஆகியோர் படுகவலையோடு இந்த விவகாரம் பற்றி விவாதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த தேச துரோக அதிகாரியின் பெயர் ரவீந்திரசிங். 'ரா' அமைப்பில் இணை செயலாளராக பதவி வகித்தவர். அவரது அலுவலக அறையில் இருந்த ஜெராக்ஸ் மெஷின் இருபது வருடங்களாக ஓவர்டைம் வேலை பார்த்திருக்கிறது. புதுடெல்லியின் லோதி ரோட்டில் இருக்கும் 'ரா' தலைமை அலுவலகத்தில் அந்தஸ்தான பதவியிலிருந்த ரவீந்திரசிங் 'எதையெல்லாம் ஜெராக்ஸ் பிரதியெடுத்து அமெரிக்காவுக்கு கொடுத்திருக்கக்கூடும்?' என்று பட்டியல் போட்டுப் பார்த்து அதிர்ந்துபோய்விட்டனர் பல அதிகாரிகள்.
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரத்துக்காரர் இந்த ரவீந்திரசிங். இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்தவர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோயிலில் தீவிரவாதிகளை அழிக்க ராணுவம் நுழைந்தபோது அதில் தீவிரமாக பங்கு பெற்றவர். அடுத்த சில நாட் களிலேயே அமெரிக்க ராணுவ ரகசியங்கள் தொடர்பாக சில முக்கிய டாகுமெண்ட் களை இவர் எங்கிருந்தோ சுட்டுக்கொண்டு வந்துதர, அப்போதுதான் 'ரா' அமைப்பின் பார்வை இவர் மீது விழுந்தது. 'உளவு பார்ப்ப தில் கில்லாடியான ஆள்' என்று நினைத்து 'ரா' அமைப்பு இவரை ராணுவத்திலிருந்து தங்கள் துறைக்கு இழுத்து உயர்பதவி கொடுத்தது.
ஆனால், அதன் பின்னணி இப்போதுதான் தெரிகிறது. 'ரா' நிறுவனத்தின் உள்ளே நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள வழி தெரியாமல் அமெரிக்கா தவித்து வந்தது. அதனால் சி.ஐ.ஏ. நிறுவனமே அந்த டாகுமெண்ட்களைக் கொடுத்து, ரவீந்திரசிங்கை பெரிய துப்பறியும் புலி மாதிரி காட்டி 'ரா'வில் சேர வழி செய்து கொடுத்ததாக இப்போது தெரிய வந்திருக்கிறது.
'ரா' அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஆபீஸிலிருந்து வீடு திரும்பும் போது கடுமையாக சோதிக்கப்பட்டுதான் வெளியேறுவார்கள். தங்கள் சொந்த பொருட்களைத் தவிர வேறெதையும் அவர்கள் எடுத்துப் போக முடியாது. அவர்கள் எங்கிருந்தாலும் போனில் பேசுவது, ஃபேக்ஸ் அனுப்புவது எல்லாமே கண்காணிக்கப்படும். டெல்லியின் டிஃபன்ஸ் காலனி பகுதியில்தான் நிறைய பேருக்கு வீடு. இவர்களது வீடுகளைக்கூட இன்னொரு மத்திய அரசின் உளவு நிறுவனமான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பார்கள்.
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களைக் கையாளும் இவர்கள் தேச துரோகிகள் ஆகிவிடக்கூடாதே என்ற கவலைதான் இதற்கு காரணம். அப்படி ஏற்கெனவே பலர் மாட்டியும் இருக்கிறார்கள். 'ரா' உயர் அதிகாரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி ஒருவரோடு ஜெய்ப்பூரில் உல்லாச விடுதி ஒன்றில் இருந்ததை, ஐ.பி. அதிகாரிகள் விடியோ எடுத்து, அதை வைத்து அவர் 'டபுள் ஏஜெண்ட்' ஆனதை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். இன்னொரு அதிகாரியும் இதேபோல் சென்னை மெரீனா பீச்சில் வைத்து, அமெரிக்க அதிகாரி ஒருவரோடு பேசியதை விடியோ எடுத்து மடக்கப் பட்டார். இப்படி மாட்டும் 'ரா' அதிகாரிகள் லேசில் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதற்காகவே விடியோ எடுக்கப்படுகிறது.
'ரா' தலைமையகத்தில் கடுமையான சோதனை இருந்தாலும், இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேல் இருக்கும் யாரையும் சோதிப்பதில்லை. உயர் அதிகாரிகள் தப்பு செய்யமாட்டார்கள் என்ற எண்ணமும் மிகமேல் மட்டத்தில் சந்தேகப்படுவது சரியல்ல என்ற நாகரிகமும்(?)தான் காரணம். ரவீந்திரசிங்குக்கு இதுவே வசதியாகி விட்டது. பல டாகுமெண்ட்களை தனது அலுவலக அறையில் இருக்கும் ஜெராக்ஸ் மெஷினிலேயே 'காப்பி' செய்து, வீட்டுக்கு கொண்டு போய் வைத்துவிடுவார். இவருடைய அமெரிக்க உறவினர் ஒருவர் அவ்வப்போது, நேரடி விசிட் அடித்து டாகுமெண்ட்களைக் கையோடு அமெரிக்கா எடுத்துப்போய் விடுவார். இதனால், எந்த சந்தேக வலையிலும் சிக்காமல் அவர் தப்பி வந்திருக்கிறார். 'ரா' நிறுவனத்தின் எல்லா வேலைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலவும் அரசியல் சூழ்நிலை. விடுதலைப் புலிகள், நேபாள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் போன்ற கலகக்குழுக்கள் பற்றிய விவரம், அங்கெல்லாம் நடக்கும் கவிழ்ப்பு முயற்சிகள், அந்நிய நாடுகளின் உளவுப்படைகளின் ஊடுருவல் என எல்லாவற்றையும் கண்காணித்து அறிக்கை தருவார்கள். சில சமயங்களில் 'ரா' அமைப்பேகூட இந்தியாவின் பாதுகாப்பு கருதி சதிவேலைகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுவது உண்டு.
இதுபோன்ற முக்கிய ஆவணங்கள் 'ரா' நிறுவனத்தின் டைரக்டர், பிரதமர், பாதுகாப்பு செயலாளர் போன்ற வர்களைத் தவிர யார் பார்வைக்கும் போகாது. இப்படிப்பட்ட ஆவணங் களைப் பாதுகாக்கும் 'ரா' தலைமையக அதிகாரிகள் பலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் பிரதி எடுத்து சி.ஐ.ஏ. கையில் ரவீந்திரசிங் கொடுத்திருக்கக்கூடும் என்று தற்போது பீதியடைந்திருக்கிறது மத்திய அரசு.
இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இவர் மீது முதல் சந்தேகப்புள்ளி விழுந்தது. ரவீந்திரசிங் அப்போது பொறுப்பு வகித்தது, 'தூரக்கிழக்கு ஆசிய நாடுகள்' செக்ஷனில். ஆனால், அவருக்கு சம்பந்தமில்லாத இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பணிபுரியும் பல அதிகாரிகள் டெல்லி வரும்போது அவர்களைக் கூப்பிட்டு ஏகப்பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார். உயர் அதிகாரி கேட்கிறாரே என்று அவர்களும் தகவல்கள் சொன்னார்கள். இது ஏதோ இன்டர்வியூ மாதிரி தினசரி தொடர்கதையாக, இவரது இந்த ஆர்வம் குறித்து 'ரா' டைரக்டர் சகாய்க்கு தகவல் போனது.
உடனே ரவீந்திரசிங்கின் எல்லா போன்களும் 'டேப்' செய்யப்பட்டன. ஆனால், எதுவும் சிக்கவில்லை. அவர் யார் யாரைச் சந்திக்கிறார் என்று கண் காணித்தனர். ஆனால், மனிதர் ஆபீஸ் விட்டால் வீடு... வீட்டில் கிளம்பினால் ஆபீஸ் என்று படு சமர்த்தாக இருந்தார்.
'இவர் ஏதோ தப்பு செய்கிறார். ஆனால், என்ன செய்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதை உணர்ந்த 'ரா' மேலிடம், விஷயத்தை ஐ.பி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. ஐ.பி. அதிகாரிகள் ரவீந்திரசிங்கின் அலுவலகத்தை அதிரடியாகக் கண்காணித்து, அவர் முக்கிய டாகுமெண்ட்களை ஜெராக்ஸ் எடுப்பதை விடியோ படமாகவே எடுத்து விட்டனர். ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி இது 'ரா' டைரக்டர் கவனத்துக்குப் போக, அன்று 'டைரக்டர் உள்ளிட்ட எல்லோரையும் வீட்டுக்கு போகும்போது சோதனை போடுங்கள்' என்று அவரே உத்தரவு போட்டார். ஆனால், விஷயம் ரவீந்திரசிங்குக்கு முன்கூட்டியே தெரிந்துவிட, அன்று சோதனை போட்டபோது அவரது காரில் இருந்தது தண்ணீர் பாட்டிலும், காலி சாப்பாட்டு கேரியர் மட்டும்தான். தனக்காகத்தான் இந்த சோதனை என்பதை உணர்ந்துகொண்ட அவர் மறுநாளே, 'அமெரிக்காவிலிருக்கும் என் மகளைப் பார்க்கப் போகிறேன்' என்று காரணம் சொல்லி லீவ் கேட்டார். ஆனால், உடனே அவரது லீவ் லெட்டர் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கடுமையான கண்காணிப்பு! ஆபீஸில், வீட்டில், போகும் வழியில் என எங்கும் ஐ.பி. அதிகாரிகள் அவரைத் தொடர்ந்தார்கள். எந்த நிமிடமும் தான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்பது புரிந்தது அவருக்கு. ஏப்ரல் 30 இரவு... டிஃபன்ஸ் காலனியில் இருக்கும் வீட்டுவாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போன அவர் உடனே படுக்கை அறைக்குள் நுழைந்தார். அவர் தூங்கி விட்டார் என நினைத்து வெளியே கண்காணித்த ஐ.பி. அதிகாரிகள் அசட்டையாக இருக்க, தன் மனைவியுடன் பின்பக்க வழியாக எகிறிக்குதித்து வெளியேறிய அவர், தயாராக இருந்த மைத்துனர் காரில் ஏறி நேபாள எல்லைக்குப் பறந்தார். அவருக்கு அமெரிக்க பாஸ்போர்ட்டும், விசாவும் வைத்துக்கொண்டு சிஐ.ஏ. ஏஜெண்டுகள் தயாராக இருக்க, உடனடியாக அமெரிக்காவுக்கும் பறந்துவிட்டார். இப்போது அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் ரவீந்திரசிங் குடும்பம் வைக்கப் பட்டிருக்கிறதாம்.
கிட்டத்தட்ட ஒருமாத காலம் இந்த விஷயம் 'ரா' அதிகாரிகளால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த வியாழக்கிழமைதான் பிரதமர் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு, ரவீந்திரசிங் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் ஏகப்பட்ட மர்மமான கேள்விகள் எழுகின்றன. ரவீந்திரசிங் டபுள் ஏஜெண்ட் ஆக இருக்கிறார் என்பது தெரிந்தும் ஏன் அவர் தப்பி ஓடும் வரை அசந்து இருந்தனர்? 'ரா'வில் இன்னும் நிறைய பேர் அவருக்கு உடந்தையாக இருந்திருப்பார்களோ? என்ற சந்தேகம் ஐ.பி. அதிகாரிகளுக்கு இருக்கிறது. இதற்கு காரணமும் சொல்கிறார்கள். வழக்கமாக சிஐ.ஏ-வுக்காக உளவு பார்த்த இந்திய அதிகாரிகள் மாட்டிக் கொண்டால் அவர்களை அமெரிக்கா 'அம்போ'வென்று விட்டுவிடும். ஆனால், ரவீந்திரசிங்குக்கு அமெரிக்க குடியுரிமை உட்பட ஸ்பெஷல் உபசரிப்பு. இதற்குக் காரணம்.. மேற்கொண்டு, அவர் அமெரிக்காவில் இருந்தபடி இந்திய 'ரா' அதிகாரிகளை ஆட்டிப்படைத்து அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பார் என்பதுதானாம்!
இனி ரவீந்திரசிங்கின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று கேட்டால், "அவரை 'ரா' தனது கண்காணிப்பு பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கிறது. 'ரா' ஏஜெண்டுகள் அமெரிக்காவில் தேடுதல் வேட்டை நடத்துவார்கள். அவர் சில நாட்களில் மாட்டலாம்... பல வருடங்கள் ஆகலாம். ஆனால், என்றாவது ஒருநாள். 'முன்னாள் இந்திய அதிகாரி அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுடப்பட்டுக் கொலை' என்று பேப்பரில் நியூஸ் வரும்" - என்றபடி கண்சிமிட்டுகிறார் 'ரா' உயர் அதிகாரி ஒருவர். தேசபக்தி என்றால் 'கிலோ என்ன விலை?' என்று கேட்கும் இந்த மாதிரி ஆசாமியை அடையாளம் கண்டுபிடிக்கவே இருபது வருடம் ஆகியிருக்கிறது என்றால், இந்தியா எங்கு உளவு பார்த்து என்னதான் புண்ணியம்?!
- ஜூ.வி.க்ரைம் டீம்
சி.ஐ.ஏ-வின் டைரக்டர் ஜார்ஜ் டெனெட், சி.ஐ.ஏ. ஆபரேஷன்ஸ் டைரக்டர் ஜேம்ஸ் பாவிட் என கடந்த வாரம் இரண்டு பேர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. 'இந்தியாவை சரியாக உளவு பார்க்கவில்லை' என ஒரு விசாரணை கமிஷன் குற்றம் சாட்டவேதான் இந்த ராஜினாமா.
இந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது 'கடந்த 98-ம் ஆண்டு இந்தியா
அணுகுண்டு வெடித்ததை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாதது.'
என்னதான் ரஷ்ய நெருக்கத்தை உதறிவிட்டு, அமெரிக்கா மீது இந்தியா பாசம் காட்டினாலும், தொடர்ந்து சந்தேகக் கண்ணோடுதான் இந்தியாவை பார்க்கிறது அமெரிக்கா. சி.ஐ.ஏ. தீவிர கண்காணிப்பு காட்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று!
'ரா' நிறுவனத்துக்குள் ஊடுருவிவிட்டால் போதும்... இந்தியா உள்ளிட்ட பல
நாடுகளை சிஐ.ஏ. சுலபமாக தன் கழுகுப் பார்வைக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்றுதான் 'ரா'வை வளைத்தபடியிருக்கிறது அமெரிக்கா.
இதற்கு அமெரிக்கா ஒரு அதிரடி டெக்னிக்கை வைத்திருக்கிறது. 'ரா' உயர்அதிகாரிகளின் வாரிசுகளாக தேடிப்பிடித்து, அமெரிக்காவில் படிக்கவோ, வேலைபார்க்கவோ வாய்ப்புகளை உருவாக்கித்தந்து, உடனே விசா
கொடுத்து அங்கேயே செட்டிலாக வைக்கிறார்கள். அவர்களை வைத்து அப்பாவை வளைக்கிறார்கள். அப்பா ஒருவேளை உடன்படாவிட்டால் வாரிசு அங்கே நீடிக்க முடியாதாம். விசாவை நீட்டிக்காமல் ஏதாவது காரணம் சொல்லி திரும்பவும் இந்தியாவுக்கு துரத்திவிடுவார்களாம். ரவீந்திரசிங்கின் மகள் அமெரிக்காவுக்கு படிக்கப் போய் அங்கேயே கல்யாணம் செய்து செட்டிலாகி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!
ஜூனியர் விகடன் 16-06-04
1 comments:
இதெல்லாம் வலைப்பூக்களில் வந்தேமாதரம் கோஷம் போடும் போலி தேசாபிமானிகளுக்குத் தெரியுமா?
தெரிந்தாலும் மறந்தும் மறைத்து விடுதல் தானே காவிகளின் தேசபக்தி.
Post a Comment