Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday, January 25, 2012

சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?

வினவு இணையத் தளத்தில் சவூதி ஓஜர் நிறுவனத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்கள். அதாகப்பட்டது, சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். இதில் பலவகைகளில் தொழிலாளர் நலன் நசுக்கப் படுகிறது.. ப்ளா.ப்ளா.ப்ளா..ப்ளா.. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள்.

டீடெய்லா படிக்கணும்னா வினவு பதிவிலேயே படிச்சுக்குங்க.

இந்தப் பதிவுக்கு வினவு வைத்திருக்கும் தலைப்பு: சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப் படுத்தும் அல்லாவின் தேசம்!

என்னாது? சௌதி ஓஜர் = சவுதி அரேபியா = அல்லாவின் தேசமா? ஆமாங்க.. அப்படித்தான் போட்டிருக்காங்க. ஏன்னா, லெபனான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் ஆட்சியாளர்கள்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாம். இந்த இரண்டு குடும்பத்தினர்தான் சவூதி அரேபியா நாடு. சவூதி அரேபியா நாடுதான் அல்லாவின் தேசம். நம்புங்க மக்களே! சவுதியிலேயே இருக்கும் வினவு செய்தியாளரே இதை எழுதியிருக்காரு. அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்.

அப்படின்னா 'ஓஜர்' என்ற பெயருக்குச் சொந்தக்காரர்களான www.ogerinternational.com என்ற ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவன குழுமத்திற்கு என்ன நேர்ந்தது? ஓ... அவங்க வேற இருக்காங்களா? அப்படின்னா ஃப்ரான்ஸ் தேசத்தையும் அல்லாவின் தேசம்னு அறிவிச்சுடுவோம். மேட்டர் சால்வ்டு! என்ன வந்தாலும் வச்ச தலைப்பை மட்டும் நாங்க மாத்த மாட்டோம்ல!

ஒருவழியா தலைப்பு மேட்டரை செட்டில் பண்ணியாச்சு.. இனி பதிவுக்கு போவோம்.

சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன சொல்றார்னா, அல்லாவின் தேசமான சவுதியின் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான சவுதி ஓஜர் நிறுவனத்தில் தொழிலாளர்கள் நசுக்கப் படுகிறார்கள். ஒடுக்கப் படுகிறார்கள். அடக்குமுறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இத்யாதி..இத்யாதி.. உண்மைதானே? ஆமாம். உண்மையாகத்தான் இருக்கும். சவுதியிலிருந்து அந்த செய்தியாளரே அந்தக் கொடுமைகளையெல்லாம் நேரடியாக பார்ப்பதால்தானே அப்படி எழுதியிருக்கிறார்?

ஆனா, நமக்கு இதுல புரியாத ஒரு விஷயம் என்னன்னா அந்த செய்தியாளரையும் அடக்குமுறைக்கு எதிரா போராடுற மற்ற உழைப்பாளர்களையும் சவுதி ஓஜர் நிறுவனம் ஆள் வைத்து கடத்திக் கொண்டுபோய் சவூதியில் வைத்து கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்களா என்ன? தப்பிச்சு கிப்பிச்சு வர முடியாதபடி சங்கிலி கிங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்களோ என்னவோ! இதையே நான் வினவு கிட்டே வினவினேனுங்க. அவரு அதுக்கு இன்னும் பதில் சொல்லலை. ஒருவேளை 'நான்தான் வினவு. நான் மட்டும்தான் வினவுவேன். மத்தவங்கள்லாம் வினவக்கூடாது'ன்னு ஏதும் பாலிஸி வச்சிருக்காரோ என்னவோ! சரி.. அது போகட்டும் விடுங்க!

அடுத்ததாக, இந்த பிரச்னைக்கு சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன தீர்வு சொல்கிறார் என்று பார்ப்போம்.

சௌதி ஓஜரின் உரிமையாளர்கள் ஆளும் வர்க்கம் + முதலாளி வர்க்கம் = சுரண்டும் வர்க்கம்.

தொழிலாளர்கள் = சுரண்டப்படும் வர்க்கம் + ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் + போராட வேண்டிய வர்க்கம்

அதாவது, நம்ம சட்டசபையில் இருக்கிறதல்லவா, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி? அது மாதிரி இங்கே முதலாளி கட்சி, தொழிலாளி கட்சி! முதலாளி கட்சியில எல்லோரும் கெட்ட பசங்க.. தொழிலாளி கட்சியில உள்ளவங்க எப்பவுமே போரடிக்கிட்டே இருக்க வேண்டியவங்க. தொழிலாளி ஒருத்தர் கொஞ்சம் பணம் சேர்த்து முதலாளி ஆயிட்டார்னு வச்சுக்குங்க.. அப்ப அவரும் கெட்ட பையனா ஆயிடுவாரு.

வினவு சொல்வதுபோல தொழிலாளி வர்க்கத்தினர் எல்லோரும் ஒருங்கிணைந்து முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராடினால் என்ன ஆகும்? இந்த நான்கு விளைவுகளில் ஏதோ ஒன்று நிகழலாம்:

1. முதலாளி வர்க்கம் அடிபணிந்து தொழிலாளர் வர்க்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளலாம்.

2. 'நான் அப்படித்தான் செய்வேன். உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ' என்று வீம்பு பிடிக்கலாம்.

3. போராடும் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டு வேறு நாட்டு தொழிலாளர்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

4. 'எனக்கு இந்த நிறுவனமே வேண்டாம்' என்று அதை பூட்டிப் போட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்க்க போய்விடலாம்.

இதில் முதலாவது விளைவு நிகழ வேண்டுமென்பதுதான் வினவின் கனா. ஆனால் அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்பது கொஞ்சம் யோசித்தாலே தெரியும். மற்ற மூன்று விளைவுகளில் ஒன்று நிகழ்ந்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் கதி என்னவாகும்?

எனவே, வர்க்கப் பாகுபாடு, ஒருங்கிணைந்த போராட்டம் என்பதெல்லாம் இந்தப் பிரச்னைக்கு தீர்வே அல்ல. மாறாக, தீர்வைத் தேடும் ஒரு வழிமுறை மட்டுமே. அதுவும் தோற்றுப் போவதற்கான சாத்தியங்களே அதிகம்.

அப்படியானால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமை இரு தரப்பினருக்கும் அவரவரின் உரிமை மற்றும் கடமைகளை வரையறுக்க வேண்டும். அவ்வாறு ஏற்கனவே வரையறுக்கப் பட்டிருந்தால் அவற்றை அவர்களுக்கு நினைவுறுத்த வேண்டும். அவற்றை மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரமும் அந்தத் தலைமைக்கு இருக்க வேண்டும். இவையெல்லாம் ஏற்கனவே இஸ்லாத்தில் இருக்கின்றன தோழர்களே!

தொழிலாளியின் வியர்வை உலருமுன் அவனுடைய ஊதியத்தை அவனுக்கு கொடுத்துவிடும்படி முதலாளிகளுக்கு கட்டளையிடும் இஸ்லாம், தொழிலாளர்கள் முதலாளிகளிடம் நடந்துக் கொள்ள வேண்டிய விதத்தையும் சொல்லித் தருகிறது.

அந்த கட்டளைகளை முதலாளி மீறினால் என்னவாகும்? அந்த வயதான தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே சொன்னாரே, “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”. நிச்சயம் அது நடக்கும்!

Sunday, June 15, 2008

ஜிஹாதி ஹிட் லிஸ்டும் கோவை அல்-உம்மாவும்!

'திண்ணை.காம்'-ல் மலர் மன்னன் என்பாருடன் நடந்த ஒரு விவாதத்தில் எதிர்வினையாக சகோ.வஹ்ஹாபி அவர்களின் வலைப்பதிவில் கண்ட பதிவு இது! (ஆனால் திண்ணை.காம்-ல் இது வெளியானதாகத் தெரியவில்லை) கோவையில் என்ன நடந்தது என்பதை பல ஆதாரங்களுடன் விளக்கும் ஒரு தொகுப்பு ஆவணமாகவே இதைக் காண்கிறேன். வஹ்ஹாபி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

************

பலமுறை சொன்னதுதான்; மீண்டும் சொல்வதில் தவறில்லை: எந்த ஒன்றைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றி முழுக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் அடிப்படை அளவாவது தெரிந்து கொண்டு எழுதுதல் நலம். இல்லையெனில், சென்ற வாரத் திண்ணையில் 'ஹிட்லிஸ்ட்-ல் பெயர் வருவதற்கு' எழுதிய கார்கில் ஜெய்யும் மலர் மன்னனைப் போலவே இறுதிவரை 'அங்கீகாரம் இல்லாத' வரிசையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

தனக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி எழுதாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, "தஸ்லீமா அக்காவிடம் போய்க் கேள்; ரஸூல் அண்ணனிடம் கேள்" என்றெல்லாம் எழுதி, தன் அறியாமையைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமா? அவ்விருவரைக் குறித்து அலசி ஆராயா விட்டாலும் குறைந்த பட்சம் திண்ணையில் மட்டுமாவது என்ன பேசப் பட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டு ஜெய் எழுதியிருக்கலாம்.

போகட்டும்.

ஹிட் லிஸ்ட் உருவாகும் அடிப்படையைப் பார்ப்போம்:

இலங்கைக்கு நமது அமைதிப் படையை அனுப்பிய 'குற்றம்' செய்ததால் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஹிட் லிஸ்ட்டில் வந்தார்.

சீக்கியரின் பொற்கோவிலில் இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட 'குற்றம்' செய்ததால் இந்தியாவின் இரும்பு மனுஷி என்றழைக்கப் பட்ட இந்திராகாந்தி ஹிட் லிஸ்ட்டில் ஏறினார்.

இவ்விரு பிரதமர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெயரும் ஹிட் லிஸ்ட்டில் ஏற்றப் பட்டது. அப்பெயருக்குச் சொந்தமானவர் காந்திஜி.

"இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் சொந்த நாடு. அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறிய 'குற்றம்' செய்ததால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றார்.

இதுபோல் நிறைய காட்டுகள் உள. அவை அனைத்தும் சொல்லும் ஒரேயொரு செய்தி என்னவெனில், "ஹிட் செய்பவர்களின் பார்வையில் 'குற்றம்' செய்பவர்களாகக் கருதப் படுபவர்கள்தாம் ஹிட் லிஸ்ட்டுக்குள் கொண்டுவரப் படுவார்கள்" என்பதே.

முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கை என்பதே, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்பதுதான். "ஒருவனே" என்றபோதே, "இரண்டாமவர் இல்லை - அவர் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக இருப்பினும்" என்பது அடக்கம்.

இந்த அடிப்படையைக்கூட அறியாமல், "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?" என்று மலர் மன்னர் திண்ணையில் சவால் விட்டதற்குச் சில சகோதரர்கள் பதில் எழுதினர்; நானும் அவரது கூற்றிலுள்ள அறியாமையைச் சுட்டிக் காட்டி விளக்கம் எழுதி இருந்தேன்.

முஸ்லிம்களின் கொள்கையைச் சொல்வது 'குற்றம்' என்று கருதும் 'ஜிஹாதி'களுக்கு அவ்வாறு சொல்லும் இபுனு பஷீர் வகையறாக்களை ஹிட் லிஸ்ட்டில் வைக்கும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அது மலர் மன்னனுக்கு எப்படித் தெரியும்? இதே ஐயத்தை ஜெய் கிளப்பியிருக்கிறார்.

ஒரேயொரு வாய்ப்புள்ளது.

மலர் மன்னனுக்கு வடநாட்டில் நிறைய 'முக மதிய' நண்பர்கள் இருப்பதாக அவரே திண்ணையில் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒட்டுத் தாடியை உடைய 'ஜிஹாதி'களாக இருப்பதற்கும் அவர்களது ஹிட் லிஸ்ட்டில் இபுனு பஷீருடைய பெயரும் அவரைப் போலவே அறிவிப்புச் செய்யும் என் போன்றோரது பெயர்களும் ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அல்லது, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் 'குற்றம்' செய்பவர்களைத் தமிழக அளவில் அழித்தொழிக்கும் எண்ணத்தோடு தென்காசியில் குண்டு வைத்த 'ஜிஹாதி'களது ஹிட் லிஸ்ட்டில் எங்களுடைய பெயர்கள் இருப்பதற்கோ ஏறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.

***

அடுத்து, முஸ்லிம்களைத் தடுக்கும் காவல்துறையின் கதி என்னவாகும் என்பது கார்கில் ஜெய்யிக்குத் தெரியாது என்பதால் அதைக் கோவை அல்-உம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

கோவையில் அல்-உம்மா என்ற அமைப்பே துடைத்தெறியப் பட்டதைக்கூட அறியாமல் எழுதும் ஜெய்யிக்குக் கோவைக் கலவவரங்கள் குறித்து நிறைய செய்திகள் சொல்ல வேண்டும்.

கோவை நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் அதேவேளை சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றை மூன்றாகப் பிரித்துக் கொள்தல் நலம்:

  1. உக்கடம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை.

  2. காவல்துறையும் காவிகளும் கைகோர்த்துக் கொண்டு கோவையின் முழு முஸ்லிம் சமுதாயத்துக்கே எதிராக ஆடிய கோரத்தாண்டவம்.

  3. தொடர் குண்டு வெடிப்புகள்.


1. காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை

கடந்த 1997 நவம்பர் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று ஒரு பைக்கில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பயணித்ததற்காகக் போக்குவரத்துக் காவலர் செல்வராஜினால் தடுக்கப் பட்டு, அபராதம் செலுத்துமாறு பணிக்கப் பட்டனர்.

செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டு அபராதத் தொகையை அம்மூவரும் செலுத்தியிருந்தால் கோவை கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சாத்தானின் ஆணவக் குணம் மேலோங்கியதால் அம்மூவரும் தம் சகாக்கள் சிலரைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்து, கடமையைச் செய்தக் காவலர் செல்வராஜை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளர் இராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டிலுள்ள அல்-உம்மா அலுவலகத்திற்குக் காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும் அல்-உம்மாவின் பொதுச் செயலாளர் அன்சாரீ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ்(22), ஷபி(22), மற்றும் ஷஃபி(20) ஆகிய மூன்று முஸ்லிம் வாலிபர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

சரணந்தவர்களை விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி, உரிய/உச்சபட்ச தண்டனை வழங்கியிருந்தால் 19 அப்பாவி முஸ்லிம் உயிர்களைப் பலிவாங்கிய கொடுமையையும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கானச் சொத்துகளின் நாசத்தையும் முஸ்லிம் பெண்களின் மானபங்கத்தையும் கோவை சந்தித்திருக்காது.

***

2. கோவை முஸ்லிம்களுக்கு எதிரான காவி-காவலர்களின் போர்

காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் (30.11.1997) கோவை நகர் முழுதும் காவி-காவலர்களின் கோரத் தாண்டவம் அரங்கேறியது. காவலர் செல்வராஜின் உடல் வைக்கப் பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீவைத்தும் எரித்தனர். அந்தப் பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனைப் பார்த்த காவிக் கலவரக் கும்பல் நேராக அந்த வேனுக்குச் சென்று வேனில் இருந்த ஹபீப் ரகுமான் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றது.

சற்று நேரங் கழித்து, மருத்துவமனை வளாக நிலவரம் தெரியாமல் உக்கடப் பகுதிக் கலவரத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரைப் பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிஃபும் சுல்தான் என்பவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவ்விருவரையும் கொல்வதற்குக் காவிப்படை ஓடிவந்தது. அவ்விருவரும் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு ஓடினர். ஆனால் வன்முறைக் காவிகள் அவர்களை விரட்டிப் பிடித்துத் தாக்கினர். ஆரிஃபை அடித்துக் கொன்றனர். சுல்தான் பலத்த காயங்களுடன் தப்பி ஓடி விட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் கொலைவெறிக் காவிகள் குவிந்திருப்பதை அறியாமல் லியாகத் அலிகான் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவரை மருத்துவமனையின் வசலிலேயே வன்முறைக் கும்பல் தடியால் அடித்துக் கொன்றது.

அந்தக் கலவரத்தில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மட்டும் ஹபீப் ரகுமான், ஆரிஃப், லியாகத் அலிகான் ஆகிய மூவர் கத்தியால் குத்தப் பட்டும் அடித்தும் கொலை செய்யப் பட்டனர்.

ஹாரிஸ் என்ற இளைஞர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப் பட்டான்.

அந்தக் கொடுமையை ஜூனியர் விகடன் [7 டிசம்பர் 1997] நம் கண்முன் கொண்டு வருகிறது:"கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஓர் ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட - வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகி விட்டது."

காவிக் கொலைவெறியர்களோடு காவலர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய கோவைக் கொலைகளுள் அரசு மருத்துவமனை வளாகக் கொலைகள் தொடர்பாக மட்டும் 14 காவியரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்து, பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகிய மூவர் விடுதலை செய்யப் பட்டனர்.

ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேற்காணும் 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, "11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை" என்பதாகக் கூறி அனைவர் மீதும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். கோவை மருத்துவமனை வளாகக் கொலை பாதகர்கள் அனைவரும் அந்த வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலையானபோது நீதிதேவதை கண்களை மட்டுமின்றி முகத்தையே மூடிக் கொண்டாள். இது, 30.11.1997இல் நடந்தேறிய கோவை அரசு மருத்துவமனை வளாக வன்முறைக் கொலைகளும் அவை சார்ந்த வழக்குகள் மட்டுமே.

கோவை நகர் முழுதும் நடந்தேறிய காவி-காவலர்கள் ஆடிய கோரத் தாண்டவம் குறித்து பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (13-26 டிசம்பர் 1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்:

"மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (30.11.1997) வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சிசாலை-டவுன்ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவியரும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கையக் கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர்
சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்துத் தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன. (தான் தேர்தலில் ஜெயித்தால் "முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்" என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியுமிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தண்டபாணி).

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர்; அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர்.
ஹபீபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது.
வார்டு பாய் ஒருவர் அவரை ஓர் அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக்
காப்பாற்றினார்.

தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்
தலைவி அழுது கொண்டே 'எனது கல்யாணப் பட்டுச்சேலை எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை' என்று நம்மிடம்
சொன்னார். 'அருகிலுள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள்
தங்களுக்கு உதவ முன்வரவில்லை' என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.


"பிரபலப் பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் 'எ காங் இன் தி வீல்' என்ற தலைப்பில் 3 ஜனவரி 1998இல் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன; அல்லது சூறையாடப்பட்டன; கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றம் சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு இது சிறிய பிரச்சினை அல்ல. 12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரின் தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை."


தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி 14 டிஸம்பர் 1997 இதழில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:

"நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட
(முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதைக் கடைகள், முதல்தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர்தான் தீ வைப்புச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில், 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட, சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்"


காவிகளோடு காவலர்கள் கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்களைக் கொடூரமாகக் கொன்றும் அவர்தம் சொத்துகளைச் சூறையாடியும் ஆடிய கோரத் தாண்டவம் வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டு, டெல்லியில் இயங்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடமும் சமர்ப்பித்து முறையாக நீதி கோரப் பட்டது. அப்போது கிடைக்க வேண்டிய நீதி கிடைத்திருந்தால் கோவை குண்டுவெடிப்பு நாசம் தவிர்க்கப் பட்டிருக்கும்.

***

3. கோவை குண்டு வெடிப்பு

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.

காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோவை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 7.4.2000இல் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 166 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை 7.3.2002இல் தொடங்கியது.

சிறையில் அடைக்கப்பட்ட 166 பேரில், 3 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்ளை உறுதிப் படுத்தியோ மறுத்தோ, விசாரிக்கப் பட்ட 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அம்மூவரும் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்தது.

இவ்வழக்கில் கைதான சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கையின் எந்த இடத்திலும் இவர்களது பெயர்கள் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் ஒருவரைக் குற்றவாளி/நிரபராதி என்று உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. FIR பதிவு செய்யாமல், எந்தவித ஆவணமும் இல்லாமல், சாட்சிகளும் இல்லாமல் சர்தாரும் அப்துல்லாஹ்வும் சிறைவாசம் அனுபவித்த கொடுமையும் இவ்வழக்கில்தான் நடந்தேறியது.

45 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.

இக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மஅதனி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மஅதனி மனுக் கொடுத்தார். மஅதனியின் மனுவை உச்சநீதி மன்றம் காது கொடுத்துக் விசாரிக்கக்கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது.

முஸ்லிம் 'தீவிரவாதி' மஅதனியிடம் இப்படிக் கறாராக நடந்து கொண்ட இதே உச்சநீதி மன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்த ஜெயேந்திரருக்கு, அவ்வழக்குத் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.

"மஅதனியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மஅதனியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரைக் குறைந்தபட்சம் மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

சில மாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓர் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அவ்வறிக்கையில் பேரா. அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர் வீராசாமி, கவிஞர் சுகிர்தராணி, வழக்கறிஞர் ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மஅதனி பிணையில் விடுவிக்கப்படவில்லை. (அந்த அறிக்கையையும் அதில் கையெழுத்திட்டவர்களையும் "தீவிரவாதிகளுக்குப் பால்" வார்ப்பதாகச் சாடி திண்ணையில் ஒரு கட்டுரையும் வந்தது).

ஆனால் இப்போது மஅதனி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மஅதனியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீஸ் ஆகியவை எப்படி ஈடுகட்டும்? இது மஅதனிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வி.

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டபோது சிறுவன் அப்பாஸுக்கு வயது 16. அவனுக்குச் சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவனுக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவன் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, 'எய்ட்ஸ்' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவனது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனையின் அலட்சியம் என்பதா, அல்லது மருத்துவத் துறையிலும் புகுந்து கொண்டு பழி தீர்த்துக் கொள்ளும் காவிவெறி என்பதா?.

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இம்முஸ்லிம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், பிணைகூட கிடைக்காமல் ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது?.

'தடா'சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில்கூட, நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டுப் பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரணக் குற்றவியல் சட்டங்களின்கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 166 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப் படாத மஅதனிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மஅதனி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டு்கால 'தண்டனையை' அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில, தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

மஅதனி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போலப் பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.

ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், "இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக"க் 'கண்டுபிடித்து'த் தீர்ப்பளித்தது. "இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்" என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், "இந்நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக" எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலஸும் நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.

கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின்படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும், எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

"இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் சில முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; மாறாக, இந்துத் தீவிரவாதிகளும் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை" என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முஸ்லிம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, கோவை கலவரத்தைப் பற்றி சிறப்பு நீதிமன்றம் வாய் திறக்கவே மறுத்துவிட்டது.

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே 'அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. "குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ஆனால், "உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக"க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாஃபைச் சாட்சி சொல்ல போலீஸார் அழைத்து வந்தனர். முனாஃப் நீதிமன்றத்திலேயே, "தன் அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீஸார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை" அம்பலப் படுத்தியதோடு, போலீஸார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.

விசாரணையின்போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபோது, போலீஸாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி 'உதவி' செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியோ, போலீஸாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

குற்றவாளிகளைச் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீஸார் 'அடையாளம் காட்டி' இருக்கின்றனர். போலீஸாரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை போலீஸார் தயார் படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்தது. "இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரைப் பிடித்துச் சென்று போலீசில் அன்றே ஒப்படைத்ததையும் போலீஸார் அவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும் அந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும் 'கைது செய்யப் பட்ட' 38 முஸ்லிம்களுக்கும் எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு, சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று 'வெவ்வேறு இடங்களில்' குண்டு வைத்த தீவிரவாதிகளை 'நேரில் பார்த்த சாட்சியாக' விஜயகுமார் என்ற ஒரே ஆள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், 'வேறுபட்டப் பல இடங்களில்' குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை 'நேரில் பார்த்த சாட்சிகளாக' நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், 'இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கின் மிக முக்கியமான குற்றவாளியாக முன் நிறுத்தப்பட்ட மஅதனிக்கு எதிராக அழைத்து வரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீஸாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீஸ் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள்; அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மஅதனி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றித் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முஸ்லிம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.

***

நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பட்டது.

அல்-உம்மாவின் தலைவர் கோவை பாஷாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலாளர் அன்ஸாரீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது.

தங்களின் ஆணவத்தால் தங்களையே அழித்துக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் சொந்தச் சமுதாய மக்களின் விலை மதிப்பற்ற 19 உயிர்களையும் கோடிக்கணக்கில் உடமைகளையும் தம் சமுதாயப் பெண்கள்தம் மானத்தையும் இழந்து வீதியில் நிற்பதற்கு முதல் காரணமானவர்களான அல்-உம்மாவின் அந்த பைக் வீரர்கள் மூவரும் முஸ்லிம்களின் மன்னிப்புக்குக்கூட அருகதை அற்றவர்கள்.

காவலர் செல்வராஜ் கொலை, கோவைக் கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவை குறித்து இன்னும் ஏராளம் எழுதலாம். இவற்றையெல்லாம் அறியாமல் வெறுமனே, "கோவை அல்-உம்மாவிடம் கேட்டுக் கொள்" என்று இல்லாத ஓர் அமைப்பிடம் போய்க் கேட்கச் சொன்ன கார்கில் ஜெய் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். நான் பொய் எழுதியிருக்கிறேனாம். மலர் மன்னன் உண்மையை எழுதியிருக்கிறாராம். இரண்டையும் இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறாராம்.

போகிற போக்கில் சேறடிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை முன்வைத்து எழுதுபவன் என்று திண்ணை வாசகர்களுக்கு வஹ்ஹாபியைப் பற்றி நன்கு தெரியும். உண்மைகளை ஜெய் நிரூபிக்கட்டும். அதற்கு முன்னர் இக்கட்டுரையில் இணைப்பாகவும் ஆறாவது சுட்டியாகவும் கொடுக்கப் பட்டுள்ள உயிரோடு எரிக்கப் படும் இளைஞனையும் அதை ஆசையோடு வேடிக்கை பார்க்கும் கடமை தவறாத காவலரையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.

ஃஃஃ

சுட்டிகள்:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80806056&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805152&edition_id=20080515&format=html

http://poar-parai.blogspot.com/2008/01/rss.html

http://newscap.wordpress.com/2008/02/04/

http://to.wahhabi.googlepages.com/Kovai_violance.jpg

http://nihalvu.blogspot.com/2006/06/blog-post.html

http://www.keetru.com/vizhippunarvu/sep07/jawaahirullah.php

http://www.thinnai.com/?module=displaystory&story_id=206100610&format=html

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1193:2008-05-04-17-14-12&catid=36:2007&Itemid=78

http://www.hindu.com/2006/03/08/stories/2006030809270500.htm

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1096:2008-05-01-08-55-50&catid=36:2007&Itemid=78

Monday, June 02, 2008

இஸ்லாமும் இந்தியாவும்!

' இஸ்லாமும் இந்தியாவும்' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு. டி.ஞானையா எழுதியிருக்கும் நூலைப் பற்றிய தேவ. பேரின்பனின் விமரிசனக் கட்டுரை.

மத அடிப்படைவாதம் இன்றைய உலக அரசியலில் மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம், இந்து முதலிய மதங்களின் அடிப்படைத்தன்மைகளைப் புதுப்பிப்பது என்ற பெயரால் நவீன அரசியல் ஒன்று நடத்தப்படுகிறது. அது பாசிசத்தையும் பயங்கர வாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு அதன் வழியே அறிவிக்கப்படாத போர் ஒன்றும் உலகு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இது யாருடைய போர்? எதற்காக நடத்தப்படுகிறது? யாருடைய நலனுக்காக இந்த மனிதப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உலகச் சந்தை செயல்பாட்டிலிருந்தே விடை காண முடியும். காலனிய காலங்களில் பழமையாளர்களாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் தேசிய அளவில் வளர்க்கப்பட்ட மத வகுப்புவாதம் இன்று உலகு தழுவியதாகவும், மக்களின் குடிமை வாழ்வில் அதிகாரத்தோடு தலையிட்டு கொலைவெறியாகவும். பாசிசமாகவும் மாறிவிட்டது.

அது இப்போது உலக மயத்தை இயக்கும் மூலதன சக்திகளின் அரசியல் கருவியாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சாமுவேல் ஹட்டிங்டனின் ‘பண்பாடுகளின் மோதல்’ கோட்பாடு ஏகாதிபத்தியத்தின் கொள்கையியலாகப் போற்றப்படுகிறது.

இதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல நிலைகளில் வளர்க்கப்பட்ட மதம் சிதைக்கப்பட்டு பாசிசத்தின் கருவியாக இன்று மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.

அடையாள அரசியலின் வழியே இது ஒவ்வொரு தனி நபரையும் அடைகிறது; அவனை வெறியூட்டுகிறது; அவனது மரபுசார்ந்த மதம் என்ற வேரைப் பிடுங்கி அரசியல் அதிகாரத்துக்கான ஒரு கருவியாகுகிறது.

மதம் ஒரு கருத்தியலாக - ஒரு சமூக நிறுவனமாக - ஒரு நம்பிக்கை ஏற்பாடாக - ஒரு தத்துவ முறையின் சாதனமாக சமூக வாழ்விலும், தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல் தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல்பாடாகவே அமைந்தது. அது அரசியல் தன்மையுடையதாகவே வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மதம் என்று எதுவும் இல்லை. மதம் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை. அது என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம் என்றார் டர்க்ஹைம். அந்தச் செயல் வெறும் பண்பாடு வகைப்பட்டதல்ல; பண்பாடு வழியே ஆன அரசியல் பற்றியது. அரசியல் வர்க்கப்போராட்டம் பற்றியது.

மதங்களின் வரலாறு நெடுகிலும் இந்த அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியைக் காணமுடியும். ஏசு சிலுவையில் கொல்லப்பட்டதும், புத்தர் ஆட்சியைத் துறந்ததும், நபிகள் நாயகம் மெதினா ஆட்சியை அமைத்ததும், தமிழகத்தில் சமணர்கள் சைவர்களால் வேட்டையாடப்பட்டு கழுவேற்றப்பட்டதும் இன்ன பிறவும் அரசியல்தான்.

மதம் என்ற எல்லைக்குள்ளேயே மனித நேயத்தை போற்றுவதற்கான மக்கள் நலனுக்கான இயக்கம் அனைத்து மதங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. அதுவும் ஒரு அரசியல் வகைப்பட்ட இயக்கமாகவே இயங்கியது.

மரபு சார்ந்த மானுட உணர்வு மற்றும் நிறுவனம் என்ற வகையில் மக்களை அரசியல் ரீதியாக செயல்படவைக்க அது பயன்படுத்தப்படுவது 20ஆம் நூற்றாண்டு அரசியலில் தீவிரமடைந்தது. காலனியத்தை எதிர்த்த தேசிய புரட்சிகளுக்கு மக்களைத் திரட்ட மதம் புதிய விளக்கங்களைப் பெற்றது. அதே சமயத்தில் முதலாளியத்தின் வளர்ச்சியால் மறையும் வர்க்கங்களின் / சமூகப்பகுதிகளின் நலனைக் காக்கவும் மதப்பழமைவாதம் அரசியலாக வளர்க்கப்பட்டது.

அதே சமயத்தில், முதலாளித்துவப் புரட்சி ஜனநாயக ஆட்சி முறை மதச்சார்பின்மை கோட்பாட்டை அடிப்படையான கோட்பாடாக முன்வைத்தது. இதுவுலகப் பிரச்சனைகளில் மதம் தலையிடக்கூடாது என்ற கொள்கை மக்களின் குடிமை வாழ்விலும், அரசியல்/சமூக வாழ்விலும் மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தது. அறிவியல் மனோநிலையை வளர்ப்பதன் மூலம் இத்தகைய மதச்சார்பற்ற தன்மையை வளர்க்க அரசுகளே செயல்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் மதச்சார்பின்மைக்கு இந்த அடிப்படை உண்டு.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவியலுக்கு எதிரான ‘போலி அறிவியல்’ மேலைய நாடுகளில் வளர்க்கப்பட்டு அடையாள அரசியல் மாற்றாக முன் வைக்கப்பட்டது. அது ‘நாம்’ ‘அவர்கள்’ என்ற இரண்டு எதிர்எதிரான படைப்பிரிவை உருவாக்கியது. இரண்டுக்கும் இடையிலான புனிதப்போரை - அதிகாரத்தை - இதிகாசப்போரை பிரகடனப்படுத்தியது.

மனித உள்ளங்களில் மதவெறி கொண்ட போர் மனநிலை சதா நிலவுவதற்கான கருத்தியல் நியாயங்கள், கோட்பாடுகள் மிகுந்த செலவு செய்து பரப்பப்படுகிறது. தனது அடையாளப் பெருமிதத்தை மீட்பதற்காகவே மதங்களின் பெருமரபு ஒன்றும் ஆக்கப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயத்தின் சுரண்டலை எதிர்த்த கிளர்ச்சிகள் இடதுசாரித் தன்மையை உலகு தழுவிய அளவில் வளர்ந்துவரும் நிலையில் - பெண் விடுதலை - ஒடுக்கப்பட்டோர்; சமூக நீதி போன்ற ஜனநாயக எழுச்சி உருவாகி வரும் நிலையில் கிருத்துவ / இஸ்லாமிய / இந்து மத அடிப்படையிலான ‘பெருமரபு’ ஒன்று அரசியலாக ஆக்கப்பட்டு அந்தப் பெரு மரபுக்கு நிரந்தர எதிரியாக மாற்றுமதம் ஒன்றை முன் வைத்து பண்பாடு அரசியல் ஒன்றை வளர்ப்பதில் ஏகாதிபத்தியம் கவனமாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் வகுப்புவாதம் இன்றைய வளர்ச்சியில் ஒவ்வொருவரின் மூளையையும், இருதயத்தையும் வேட்டையாடிய வண்ணம் உள்ளது. 80சதவீதமான மக்களை இந்துத்துவா அடிப்படையில் திரட்டவும், 15 சதவீதமான இஸ்லாமிய மக்களை எதிர்த்த தர்மயுத்தத்தின் வழியே ராமராஜ்யம் ஒன்றுகட்டவும் ஆன பிரகடனங்களுக்கான கருத்தியல்கள் வலுவாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அறிவியல் மனோநிலை வளர்ச்சி குன்றிய மதச் சார்பற்ற வாழ்நிலை பலவீனமாக உள்ள நிலையில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை கோட்பாடு வகுப்பு வாதத்தின் மதச்சார்பு வாழ்க்கைமுறையோடு கூடிய அரசியல் தாக்குதலால் நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்துத்துவா பாசிசத்தை நோக்கிய கருத்தியல்களை வலுவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் வெளியார்; பழமையாளர்; மாறாதவர்கள்; ஒவ்வாதவர்கள்; சகிப்புத்தன்மையற்றவர்கள்; முரடர்கள்; பயங்கரவாதிகள்; இப்படிஇன்னபிற. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் பொதுவாக ‘அவர்கள்’ என்ற எதிரிப்படையினராக வைக்கப்பட்டு அணுகப்படும் கண்ணோட்டம் இன்று மேலோங்கி வளர்க்கப்பட்டுள்ள சூழலில் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள ஞானையாவின் ‘இஸ்லாமும் இந்தியாவும்’ என்ற இந்தநூல் சிறந்த ஆதார நூலாக வந்துள்ளது.

இஸ்லாமியராக இல்லாத ஒருவர் - கம்யூனிஸ்டாக வாழ்பவர் இத்தகைய நூலை எழுதியிருப்பது நூலுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாம் குறித்த ஆய்வு வகைப்பட்ட அரசியல் நூல் என்ற பெருமையைத் தமிழில் இந்நூல் பெறுகிறது; மார்க்சியத்தின் அடிப் படைகளைத் தளர்த்திவிடாமல் நூலாசிரியர் விவாதத்தை நடத்திச் செல்வது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இந்நூலில் ஞானையா வாசகரோடு ஒரு நீண்ட உரையாடலை நடத்துகிறார்; வலுவான வாதங்களை முன்வைக்கிறார். தனது நியாயங்களை நிலைநாட்டுகிறார். கடைசியில் முஸ்லிம் இந்தியர்களுக்கு அறிவார்த்த மானவேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறார்.

நூலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு விளக்கப்படுகிறது.

மதங்களின் வரலாற்றில் இஸ்லாம்தான் கடைசியில் தோன்றிய உலகளாவிய மதம் என்பது குறிப்பிடத்தக்கது. அராபிய சமூக - பொருளாதார வாழ் நிலையிலிருந்து இஸ்லாம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை எளிய தமிழில் அழகுபட விவரிக்கும் ஆசிரியர் இஸ்லாமின் சமத்துவம் - சமாதானம் குறித்த செய்திகளையும், நெறிகளையும் இஸ்லாமிய அடிப்படைகளை அடியொற்றி விளக்குவது சிறப்பானது. இறைத்தூராக அறியப்படும் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் மக்கள் வாழ்க்கை அவரை வேட்டையாடியது; அவர் மதீனாவுக்கு குடிபெயர்ந்து தனது அரசை நிறுவினார்.

அந்த அரசு மத சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாமிய அரசாக விளங்கியது.

முகமது நபி இறை அவதாரமாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை. அற்புதங்கள் நிகழ்த்தவில்லை. அது ஏக இறைக் கோட்பாடு மானுட நற்செயல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது அமைந்தது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளுக்குப் பிறகு அமைந்த கலிஃபாக்களின் ஆட்சி இஸ்லாமிய அரசை நிறுவியது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய விஸ்தரிப்பும், பிளவுகளும் தோன்றியதையும் அது குறித்த விவரங் களையும் நூல் விவரிக்கிறது. ஆனால், இஸ்லாமிய ஷரியத் சட்டதிட்டங்களை மீறாமல் அதேசமயத்தில் இஸ்லாம் மதத்தின் மனிதநேயம், அறிதலியல் கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவர்கள் நபிகள் நாயகத்தின் ‘திண்ணைத்தோழர்கள்’ என்றழைக்கப்பட்ட அவரது நேரடி சீடர்கள். இவர்கள் வழியே ஏழை எளிய மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அரசு அதிகாரத்தையும், வசதிகளையும் மறுத்த சூஃபிக்கள் இயக்கம் ஏழை மக்களின் பெரு மூச்சாக இயங்கியது. ஆனால் அது அதிகாரப் பூர்வமான இஸ்லாமிய ஏற்பாட்டால் ஏற்கப்படவில்லை.

சூஃபிக்கள் ஆன்மிகவாதிகள் அவுலியாக்கள் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் வழியே பிறதத்துவங்களுடன் இஸ்லாமியதத்துவம் உறவுகொண்டது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் உடைமை வர்க்கச் சார்பு அரசு முறைகளை எதிர்த்தும் இஸ்லாமிய சூஃபிகள் போராடினர். பாரசீகம் தொடங்கி இந்தியா வரை இந்த மரபுபரவியது. இதன் வரலாற்றுப் போக்கைத் தனியாக நூலில் விளக்கியிருந்தால் நூலின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

இந்தியாவில் இஸ்லாமின் வரலாறு குறித்த அத்தியாயங்கள் இந்துத்துவாவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு நல்ல பதிலடியைத் தருகிறது. தமிழகத்தில் இஸ்லாம் என்ற அத்தியாயம் வரலாற்று வழியிலான ஆதாரங்களை வழங்குகிறது. அரபு வணிகர்கள் மூலம் கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இஸ்லாம் வருகை புரிந்தது; மொகலாய படையெடுப்புகள் வழியே இங்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக, மலையாளத்துக்கும், தமிழுக்கும் இஸ்லாமியர் அளித்த பங்களிப்பு இந்த தேசிய இனங்களின் மரபுகளில் ஒன்றாகப் பரிணமித்தது.

இந்திய விடுதலைப்போரின் நீண்டவரலாற்றை முஸ்லிம் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது. நாடு மத அடிப்படையில் பிளவுபட்டதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் பயன் படுத்திக் கொள்ளப்படவில்லை. காங்கிரஸ்-லீக்பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்; தேசிய அரசு அமைக்கப்பட்டு அதில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இணைக்கப்படவேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் கவனத்தில் கூட கொள்ளப்படவில்லை. இதன் விளைவு: மத அடிப்படையில் பிளவு, வரலாற்றின் மிகப்பெரிய குடிபெயர்வு / மதக்கலகம் - படுகொலைகள். இறுதியாக, மகாத்மா காந்தியின் படுகொலை.

1947க்குப் பிறகு கடந்த 60ஆண்டுகளில் இந்துத்துவா சக்திகள் பாசிசத்தன்மையோடு வளர்ந்தற்கான காரணங்கள் முதலாளித்துவ நெருக்கடியின் போக்கிலிருந்து கண்டறிய வேண்டும். 1947க்குப் பிறகு இந்திய முஸ்லிம்களுக்கு என்று அகில இந்திய கட்சி ஒன்று செயல்படவில்லை என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) இஸ்லாமிய சகோதரத்துவம், உலகுதழுவிய இஸ்லாமிய அரசு ஆகியவற்றின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசியல் மறுகட்டுமானம் உலக வளர்ச்சிப் போக்கின் விளைவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.

இது அமெரிக்கா முன்வைக்கும் அரசு பயங்கர வாதத்துக்கு எதிர்விளைவாகவும் வளர்க்கப்படுகிறது. இவை பேரிலான ‘ஜிகாத்’ கருத்தியல் ஏகாதிபத்தியத்தின் வளையத்துக்குள் சிக்கிக்கொண்டதாகவே அமைந்துவிடுகிறது. அராபிய நாடுகளின் மீதான தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா இஸ்லாம் மதத்துக்குள் தலையிட்டு அல்கொய்தாக்களையும், தாலிபான்களையும் தயாரித்தது. குவினை மத அடிப்படை வாத அடிப்படையில் மறுவாசிப்பு செய்வதற்கான மதரஸாக்களின் நடவடிக்கைகளை ஊக்குவித்தது.

இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் ஏகாதிபத்திய அரசியல் சதியின் விளைவுகளில் ஒன்றே ஆகும். எந்தவகையான மத அடிப்படை வாதமும் மொத்த மதத்தையும் அதன் உறுப்பினர்களையும் தனக்கு மட்டுமே உரியதாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால், உண்மை அதற்கு நேர் எதிரானது. மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆராய்ந்து இந்திய முஸ்லிம்களைச் சமூகப் பொருளாதார அடிப்படையில் / அவர்களது வர்க்க வாழ் நிலையின் மீது அரசியல் செயல்பாடு அமையவேண்டும். நீதிபதி சக்கார் குழுவின் அறிக்கை இதில் ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட அத்தியாயம் மிகச்சிறப்பாக வாதங்களை முன்வைக்கிறது.

நூலின் இறுதியில் முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றுவிடப்படுகிறது.

மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு தமது சமூகப் பொருளாதார, பண்பாடு மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை வேண்டுகோள் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்குள் நடைபெற வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் அது பேசுகிறது. இவை பற்றியெல்லாம் இஸ்லாமியர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், அறிஞருமான ஞானையா அவர்களின் நூல் இந்தத் தருணத்தின் தேவையைச் சிறப்பான முறையில் நிறைவுசெய்கிறது.

இஸ்லாமும் இந்தியாவும்
ஆசிரியர்: டி.ஞானையா,
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024,
விலை : ரூ 160.00

நன்றி: கீற்று.காம்

Thursday, May 08, 2008

மதமாற்றத்தை விளையாட்டா எடுத்துக்கலாமா?

நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் கல்லடி விளையைச் சேர்ந்த இளைஞர் தங்கமெர்ஜின். இந்துவான இவர் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீமாக தாய் மதத்திற்குத் திரும்பினார் (இப்படி சொல்றதுதான் இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டு!) .

மதம் மாறி சில மாதங்கள் ஆன நிலையில் இப்போது (மே 5) தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி இடலாக்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தங்கமெர்ஜின் தஞ்சம் புகுந்தார்.

இதற்கிடையே இந்து வாலிபர் ஒருவரை கட்டாய மதமாற்றம் செய்யப்போவதாக தவறான தகவல் பரப்பப் பட்டு இந்து அமைப்பினர் அந்த பகுதியில் திரண்டு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கினர்.

பள்ளிவாசல் நிர்வாகிகள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் தங்கமெர்ஜினை போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

முஸ்லீம் மத கோட்பாடுகள் தனக்கு பிடித்து இருந்ததால் அந்த மதத்துக்கு மாறியதாக தங்கமெர்ஜின் தெளிவாக போலீசாரிடம் தெரிவித்தார்.

அதே சமயம் தங்கமெர்ஜினின் அண்ணனும், அவரது தாயாரும் அதை மறுத்து, தங்கமெர்ஜின் கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

'தங்கமெர்ஜின் ஒரு பெண் மீது ஆசைப்பட்டிருக்கிறான். 'அந்த பெண்ணை உனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் நீ மதம் மாற வேண்டும்' என சிலர் அவனுக்கு ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பெண் மீது கொண்ட மோகத்தில் அவன் மதம் மாறி உள்ளான். தற்போது அவனை மதமாற்றிய நபர்கள் ஏமாற்றி விட்டனர். தங்கமெர்ஜின் மதம் மாறியதும் அவனது தந்தை மகாலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தங்கமெர்ஜினை மீண்டும் எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.' என்று அவர்கள் கூறினர்.

தங்கமெர்ஜின் அவரது குடும்பத்தினர் சொல்வது போல ஒரு முஸ்லிம் பெண்ணின் மீது ஆசைப்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார் என்றால் அது தவறு. இஸ்லாமின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் வெறும் உணர்ச்சி வேகத்தில் மதம் மாறுவது, மத மாற்றம் அல்ல; அது வெறும் பெயர் மாற்றம்தான்!

ஆனால், இந்தச் செய்தியில் பல முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருக்கின்றன.

'கட்டாய மத மாற்றம்' என்று புரளியைக் கிளப்பியவர்கள், பிறகு 'திருமண ஆசை காட்டி' மதம் மாற்றினார்கள் என்கிறார்கள். அப்படி எந்தத் திருமணமும் நடந்ததாகவும் தெரியவில்லை. ஆசை காட்டியவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றால் தங்கமெர்ஜின் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருந்து கொண்டிருக்கிறார்?

கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றி ஆள் சேர்க்க வேண்டிய தேவை இஸ்லாமிற்கு என்றும் இருந்ததில்லை!

கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கு தங்கமெர்ஜின் விபரம் புரியாத சிறுவன் அல்ல. 22 வயதைக் கடந்த வாலிபர். நல்லது எது கெட்டது எது என்பதை உணர்ந்து கொள்ளும் பருவத்தை அடைந்தவர்.

அப்படி கட்டாயப் படுத்திதான் அவரை மதம் மாற்றினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், போலிசாரின் விசாரணையில் அவர் உண்மையை சொல்லியிருக்க முடியும். போலிசாரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றவர்கள் முஸ்லிம்களே என்பதால் முஸ்லிம்கள் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதும் புரிகிறது!

தங்கமெர்ஜினின் தந்தை கோமா நிலைக்குச் சென்றது வருத்தத்திற்குறிய ஒரு விஷயம்தான். ஆனால் அவரது மதமாற்றத்தால்தான் அவர் உடல் நலம் பாதிக்கப் பட்டார் என்பது ஒரு செண்டிமெண்டல் பிளாக் மெயில் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தங்கமெர்ஜின் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பெற்றோர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு மகன் என்ற முறையில் தனது பெற்றோருக்குரிய கடமைகளை அவரால் நிறைவேற்ற முடியும். இஸ்லாம் அதைத்தான் வலியுறுத்துகிறது.

மதமாற்றம் என்பது விளையாட்டு விஷயம் அல்ல. இது போன்ற ஒரு கடினமான முடிவை எடுத்து அதில் திடமாகவும் இருக்கும் தங்கமெர்ஜினுக்கு பாராட்டுக்கள்!

Thursday, March 22, 2007

4. இந்துமத சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13

சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது. அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"

சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.

சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்பு கோரினர்.

இந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.

2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).

மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"

3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூ உபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான, போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)

''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.

5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.

குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)

6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.

குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)

7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.

8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.

குர்ஆன் கூறுகிறது:

74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.

114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.

வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Friday, March 16, 2007

2. வேதங்களில் இறைக்கோட்பாடு

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)

இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக் கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

Thursday, March 15, 2007

1. இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

இந்து மதம்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?
ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்
''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹம்மது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்
இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது, அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூறவியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே. அவனே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் நம்புகிறான். ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப் பாருங்கள்.

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாகம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

Tuesday, February 20, 2007

நான் ஏன் முஸ்லிமானேன்? - யுவான் ரிட்லி

சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார்.

மேலும்,2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி இது:



தொடர்புடைய சுட்டி: ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

Thursday, February 08, 2007

நூற்றாண்டுகளை கடக்க மறுப்பவர்கள்!

கணவன் தன் மனைவியை எந்த முறைகளில் கண்டிக்கலாம்? எந்த சூழ்நிலையில் அடிக்கலாம்? அப்படி அடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பதை ஒரு இஸ்லாமிய அறிஞர் விளக்கும் வீடியோ காட்சி ஒன்றை எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் பதிந்து வைத்திருந்தார். அதே பதிவில் எம்.ஐ.டி-யில் இயற்பியல் பாடங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வீடியோ காட்சியையும் பதிந்திருந்தார்.

அந்த பதிவில் அனானிமஸாக பின்னூட்டமிட்ட அவரது நண்பர் ஒருவர் இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் ஒப்பிட்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் அவர் சொல்கிறார், "இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு."

குடும்பம் சீர்குலையாமல் இருப்பதற்காக பொறுப்பற்று இருக்கும் மனைவியை கண்டிப்பது பற்றி இஸ்லாம் சொல்லும் பரிந்துரையை, எம்.ஐ.டி-யில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுவதோடு ஒப்பிட்டு, தாம் நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்கள் இவர்கள். பாவம்.. தன் நிலை என்னவென்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளப் பிடிக்காமல் மாற்றானை பழிப்பதில் தற்காலிக இன்பம் பெறும் பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

உங்கள் ஓப்பீடு சரியல்ல நண்பர்களே! அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.

ஜூனியர் விகடன் 28-01-07 தேதி இதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகப்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் ஒதுங்குகிறது. காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஆறுமுகம் என்பவர் தனது மூத்த மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, ‘இறந்து போனது எனது மகள் பரிமளாதான். அவளை நாங்கள்தான் கொலை செய்துவிட்டோம்’ என்கிறார்.

தந்தையே தனது மகளின் கையையும் காலையும் கட்டி நடுக்கடலில் தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார். இதில் இன்னொரு கொடுமை, இந்தக் கொலைக்கு அவர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டதுதான்!

இந்தக் கொடூர கொலைக்கு காரணம் என்ன? பரிமளாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால், இது அவரது குடும்பத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், வினோத்தின் ஜாதி வேறு என்பதுதான்.

எழிலான நண்பர்களே, இந்த நிகழ்வு ஒரு சிறு உதாரணம் மட்டுமே! எம்.ஐ.டி-யின் தொழில் நுட்பத்தை கொஞ்ச நேரம் ஓரமாக வைத்து விட்டு, இந்த சமுதாய அவலத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். சாதி வேறுபாடு ஒரு தந்தை தான் பெற்ற மகளையே கொலை செய்ய தூண்டுகிறது. இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன் காட்டரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பார்களாம். அத்தகைய மடத்தனங்களுக்கு முடிவு கட்டிய இஸ்லாம் இன்று பல நூற்றாண்டுகளை கடந்து வந்து விட்டது. உங்கள் சமுதாயம் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள் எம்.ஐ.டி-யின் உயர் தொழில் நுட்பத்தில் உங்கள் பிரச்னைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கிறீர்கள்.

பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல் நீங்கள் simply sweeping them under the carpet! இந்த அணுகுமுறை பயன் தராது நண்பர்களே! மற்றவர்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என்று தூண்டித்துருவி உலகின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்புவதாலும், உங்கள் பிரச்னை தீர்ந்து விடாது. Be brave and Face it! மாற்றாரின் குறைகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்த எந்த சமுதாயமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!

இன்றைக்கு இஸ்லாத்தை பழித்து என்ன பதிவு போடலாம் என்று YouTube-ல் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து நான் மேலே சுட்டிக் காட்டிய ஜூனியர் விகடன் கட்டுரை போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

பிராமணர் ஒருவரால் வளர்க்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி சிந்தியுங்கள். இந்துவாக இருந்து பின் சீர்திருத்தவாதியாக மாறிய தந்தை பெரியாரின் கொள்கைகளை கொஞ்சம் நடுநிலையான கண்ணோட்டத்தில் சிந்தித்து பாருங்கள். அன்று மீனாட்சிபுர மக்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை யோசியுங்கள். இன்றும் நெல்லை ஆய்குடி மக்கள் ஏன் ''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!'' என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பதையும் யோசியுங்கள். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் நண்பர்களே!

உங்கள் முன் இரண்டு choices இருக்கின்றன:

1. "எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!

2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.

The Choice is Yours! வாழ்த்துக்கள்!

Friday, January 26, 2007

இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!

நமது அருமை நண்பர் திரு.நீலகண்டன் அவர்கள் இங்கிலாந்தின் மசூதிகளில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை தமது பதிவில் இட்டிருக்கிறார்.

அந்த வீடியோக்கள் சுட்டிக் காட்டும் சில உண்மைகள்:

1. அங்கு தொழ வருபவர்களிடையே ஜாதி வேறுபாடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அண்ணல் அம்பேத்கர் எழுதியிருந்தது போல ஷேக், சைய்யது, மொகல், பதான் எல்லோரும் ஒருவரோடொருவர் இணைந்து நின்று தொழுகிறார்கள்.

2. மசூதிக்கு உள்ளே சென்று தொழ ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றோ மற்றவர்கள் வெளியில் நின்று தொழ வேண்டும் என்றோ யாரும் கட்டுப்பாடுகள் போட்டிருப்பதாக தெரியவில்லை.

3. மசூதியில் தொழுபவர்கள் அனைவரும் ஒரே முறையில்தான் தொழுகிறார்கள்.

4. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை.

5. இங்கிலாந்து வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடாக இருந்தபோதிலும் இங்கு உள்ள மசூதி ஒன்றில் கருப்பின முஸ்லிம் ஒருவர் சொற்பொழிவு நடத்த முடிகிறது. 'இங்கு சொற்பொழிவு நடத்த எங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது' என்று யாரும் காவல்துறையை அழைக்கவில்லை.

6. இங்கு தொழுகை நடத்தும் இமாம் கையில் தட்டேந்தி வந்திருப்பவர்களிடம் காசு கேட்கவில்லை.

7. மசூதிக்கு வந்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கை கொடுத்து முகமன் சொல்லிக் கொள்ளலாம். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும் இங்கு இல்லை.

8. மசூதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முக்கியஸ்தர்கள் தாமதமாக வந்தாலும் தொழுகை அவர்களுக்காக காத்திருக்காது.

9. ஆண்களெல்லாம் சட்டையை கழட்டிவிட்டு வர வேண்டிய தேவையில்லை.

10. மிக முக்கியமாக, இஸ்லாத்தை வெறுப்பவர்கள் கூட மசூதி உள்ளே சென்று வீடியோ எடுக்க முடியும் என்ற அளவுக்கு இங்கு ரகசியங்கள் எதுவும் இல்லை!

என்னங்க.. அந்த பேச்சாளரோட பேச்சைப் பத்தி நான் ஒன்னுமே சொல்லலைங்கிறீங்களா? குர்ஆன், ஹதீஸ் இவற்றுக்கு மாற்றமான பேச்சுக்களை நாங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்குறதில்லை.

Thursday, January 04, 2007

பாரதியும் இஸ்லாமும் - மாலன்

" மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் 'உங்க' பாரதியார்?" என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.

"சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை"

"அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?"

"சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்"

"சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்"

"நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்" என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார்.கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்" என்றார்.

"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்."

"நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?"

நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:

நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார்.அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்"

பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்." இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?" என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.

"சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ' பரமாத்மாவான அல்லா ஹீத்த ஆலா அருள் புரிவாராக' என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்?"

"இது என்ன புதுக் கதை?"

"இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள்.அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது."

"படியுமேன். கேட்போம்"

"நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்"

"மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?"

" 'மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்' என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?"

"நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்"

நான் படித்துக் காட்டினேன்:" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."

"அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?"

"படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:

"பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்"

"கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?"

பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில், 1905ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.

அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார்."

"அவருக்கு இஸ்லமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?"

"அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் 'தாடி ஐயர்' (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை.' ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து' என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும், 1918ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்."

"இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?"

"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.

பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."

"ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?"

"அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது: " நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார்".

வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.

"ஓ! அப்படியா!அப்ப நான் வர்ரேன். உங்க 'பாய்' பாரதியாரிடமும் சொல்லுங்க!' என்றார் நண்பர் கிண்டலாக. நான் புன்னகைத்தேன்.

நன்றி: திசைகாட்டி

Tuesday, November 28, 2006

ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...


"நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு 'கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை - நானா? அல்லது அவர்களா?).

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. 'வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.

இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: "பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''

(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh at aol dot com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)

தமிழாக்கம்: அப்துல் அலீம் சித்தீக்
நன்றி: மக்கள் உரிமை