லஞ்சம் கொடுப்பதற்காகவே ஒரு கரன்ஸி நோட்டு!
அண்மையில் ஒரு போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து விதிகளை மீறியதாக சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தினார். அவர் இலஞ்சம் கேட்க, ஓட்டுனர் ஒரு பெறும் தொகையுடைய நோட்டை கொடுத்திருக்கிறார். காவலருக்கோ ஆச்சரியம்! மகிழ்ச்சியோடு வாங்கிய காவலரின் முகம் ரூபாயில் எழுதப் பட்டிருந்த தொகையை கண்டவுடன் சிவந்து விட்டது.
ஏனெனில் மதிப்பு எழுதப்படும் இடத்தில் 'பூஜ்ய ரூபாய்' என்ற எழுத்துக்களுடன் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். ரூபாயின் மேல்பகுதியில் 'அனைத்து மட்டத்திலும் இலஞ்சத்தை ஒழிப்போம்' என பொறிக்கப் பட்டிருந்தது. மேலும் வழக்கமாக ரூபாயின் 'I Promise to pay..' என எழுதப் பட்டிருக்கும் இடத்தில் 'நான் இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என எழுதப் பட்டிருந்தது.அந்தக் காவலரின் முகத்தில் முதலில் மகிழ்ச்சி; பிறகு ஏமாற்றம்; அடுத்து கோபம்; எனக்கூறும் சரவணன், அந்த ரூபாயை திருப்பிப் பார்க்கச் சொல்ல, காவலரும் அச்சத்துடன் திருப்பிப் பார்க்கிறார். அதன் பின் பகுதியில் 'சமூகத்தில் அனைத்து மட்டத்திலிருந்தும் இலஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமும், அதிகாரமும் அளியுங்கள்' என்பதாக எழுதப் பட்டிருக்கிறது. அதன் கீழேயே, சாதாரண மக்களும் இலஞ்சத்திற்கெதிராக எவ்வாறு போராடுவது எனப் பயிற்றுவிக்கும் 'ஐந்தாவது தூண்' (5th Pillar) என்ற சமூக சேவை நிறுவனத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருக்கிறது.
'இதுதான் சாலையில் இலஞ்சத்தால் நேரடியாக பாதிக்கப்படும் சாதாரண மனிதன் அதை எதிர் கொள்ள வேண்டிய வழி' எனக் கூறும் திரு M.B. நிர்மல்தான் இந்த ஐந்தாவது தூணின் நிறுவனர். 'ஐந்தாவது தூண் சேவைக்காக இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் சின்னமாக காந்தியின் கைத்தடியை பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவர்தான் சேவையின் உண்மையான பிதா' என்கிறார் நிறுவனர்.இந்த நிர்மல்தான் இருபது ஆண்டுகளுக்கு முன் 'எக்ஸ்னோரா' என்ற அமைப்பை நிறுவியவர். இன்று சாலை தூய்மை பணியில் ஒரு பெரும் சேவை நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது.
நன்றி: சமரசம் 1-15 மே 2007
