Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, October 09, 2008

ஈழத்தமிழர் விவகாரம்: இந்நாள் முதல்வருக்கும் முன்னாள் முதல்வருக்கும் பாராட்டுக்கள்!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் உக்கிரமான போரில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். லட்சக் கணக்கான தமிழர்கள் வீடின்றி உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் திக்கற்றுள்ளனர்.

தமிழர்கள் இவ்வாறு இனப்படுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என்ற வாசகத்துடன் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தமது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பை போல இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

'இது பக்கத்து நாட்டு பிரச்னைதானே? நம் நாட்டில், நமது மாநிலத்தில் நடக்கவில்லையே?' என்று சும்மா இருந்து விடாமல், 'இந்தப் பிரச்னையைப் பற்றி இப்போதுதான் பத்திரிக்கைகளில் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி பிறகு கருத்துச் சொல்கிறேன்' என்று நழுவாமல், அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப் படுவது எந்த நாட்டில் நடந்தாலும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த முதல்வர் கருணாநிதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

தமிழின மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், ரேடார், ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி, அந்த இனப்படுகொலையில் இந்திய அரசும் முக்கியப் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

'இலங்கையில் தமிழர்களைக் குறி வைத்துத்தான் இலங்கை அரசு, தனது ராணுவத்தை முழுமையாக களம் இறக்கி விட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. விடுதலைப் புலிகளின் வீரர்களை மட்டும் குறி வைத்து இலங்கை படைகள் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒட்டுமொத்த படையும், அனைத்துத் தமிழர்களையும் எதிரிகளாக பாவித்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இலங்கை படைகளால் கொன்று குவிக்கப்படுகிறவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அப்பாவித் தமிழ் மக்களும்தான் அதிகளவில் கொல்லப்படுகின்றனர். அதனால் மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் திமுக தனது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்' என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

'இலங்கையில் கொல்லப்படுவது சிறுபான்மையினர்தானே? அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் நமக்கு அரசியலில் ஏதாவது ஆதாயம் கிடைக்கவா போகிறது?' என்று 'நமக்கென்ன?' என்று இருந்து விடாமல், 'பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் ராஜபக்சேவை ஆதரித்தால் நமக்கு பிற்காலத்தில் உதவும்' என்று அரசியல் கணக்குப் போட்டு அவரை தமிழகத்திற்கு அழைத்து, அவர் செய்து கொண்டிருக்கும் 'தீரச்செயல்'களுக்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவிக்காமல், அநியாயமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழின மக்களுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

அப்பாவி மக்களுக்கெதிரான அராஜகங்கள் எங்கே நடந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், அவை நிறுத்தப்பட வேண்டும்!

அராஜகவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தை பிரதிநிதிப்பவர்களாக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

'மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்' - நபிகள் நாயகம்

"ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?" என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் "இல்லை. மாறாக மனிதன் தனது சமுதாயத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள்.

'(நீதி செலுத்துங்கள்! அது) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது.' (திருக்குர்ஆன் 4:135, 5:8)

Monday, June 02, 2008

இஸ்லாமும் இந்தியாவும்!

' இஸ்லாமும் இந்தியாவும்' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு. டி.ஞானையா எழுதியிருக்கும் நூலைப் பற்றிய தேவ. பேரின்பனின் விமரிசனக் கட்டுரை.

மத அடிப்படைவாதம் இன்றைய உலக அரசியலில் மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம், இந்து முதலிய மதங்களின் அடிப்படைத்தன்மைகளைப் புதுப்பிப்பது என்ற பெயரால் நவீன அரசியல் ஒன்று நடத்தப்படுகிறது. அது பாசிசத்தையும் பயங்கர வாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு அதன் வழியே அறிவிக்கப்படாத போர் ஒன்றும் உலகு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இது யாருடைய போர்? எதற்காக நடத்தப்படுகிறது? யாருடைய நலனுக்காக இந்த மனிதப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உலகச் சந்தை செயல்பாட்டிலிருந்தே விடை காண முடியும். காலனிய காலங்களில் பழமையாளர்களாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் தேசிய அளவில் வளர்க்கப்பட்ட மத வகுப்புவாதம் இன்று உலகு தழுவியதாகவும், மக்களின் குடிமை வாழ்வில் அதிகாரத்தோடு தலையிட்டு கொலைவெறியாகவும். பாசிசமாகவும் மாறிவிட்டது.

அது இப்போது உலக மயத்தை இயக்கும் மூலதன சக்திகளின் அரசியல் கருவியாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சாமுவேல் ஹட்டிங்டனின் ‘பண்பாடுகளின் மோதல்’ கோட்பாடு ஏகாதிபத்தியத்தின் கொள்கையியலாகப் போற்றப்படுகிறது.

இதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல நிலைகளில் வளர்க்கப்பட்ட மதம் சிதைக்கப்பட்டு பாசிசத்தின் கருவியாக இன்று மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.

அடையாள அரசியலின் வழியே இது ஒவ்வொரு தனி நபரையும் அடைகிறது; அவனை வெறியூட்டுகிறது; அவனது மரபுசார்ந்த மதம் என்ற வேரைப் பிடுங்கி அரசியல் அதிகாரத்துக்கான ஒரு கருவியாகுகிறது.

மதம் ஒரு கருத்தியலாக - ஒரு சமூக நிறுவனமாக - ஒரு நம்பிக்கை ஏற்பாடாக - ஒரு தத்துவ முறையின் சாதனமாக சமூக வாழ்விலும், தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல் தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல்பாடாகவே அமைந்தது. அது அரசியல் தன்மையுடையதாகவே வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மதம் என்று எதுவும் இல்லை. மதம் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை. அது என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம் என்றார் டர்க்ஹைம். அந்தச் செயல் வெறும் பண்பாடு வகைப்பட்டதல்ல; பண்பாடு வழியே ஆன அரசியல் பற்றியது. அரசியல் வர்க்கப்போராட்டம் பற்றியது.

மதங்களின் வரலாறு நெடுகிலும் இந்த அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியைக் காணமுடியும். ஏசு சிலுவையில் கொல்லப்பட்டதும், புத்தர் ஆட்சியைத் துறந்ததும், நபிகள் நாயகம் மெதினா ஆட்சியை அமைத்ததும், தமிழகத்தில் சமணர்கள் சைவர்களால் வேட்டையாடப்பட்டு கழுவேற்றப்பட்டதும் இன்ன பிறவும் அரசியல்தான்.

மதம் என்ற எல்லைக்குள்ளேயே மனித நேயத்தை போற்றுவதற்கான மக்கள் நலனுக்கான இயக்கம் அனைத்து மதங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. அதுவும் ஒரு அரசியல் வகைப்பட்ட இயக்கமாகவே இயங்கியது.

மரபு சார்ந்த மானுட உணர்வு மற்றும் நிறுவனம் என்ற வகையில் மக்களை அரசியல் ரீதியாக செயல்படவைக்க அது பயன்படுத்தப்படுவது 20ஆம் நூற்றாண்டு அரசியலில் தீவிரமடைந்தது. காலனியத்தை எதிர்த்த தேசிய புரட்சிகளுக்கு மக்களைத் திரட்ட மதம் புதிய விளக்கங்களைப் பெற்றது. அதே சமயத்தில் முதலாளியத்தின் வளர்ச்சியால் மறையும் வர்க்கங்களின் / சமூகப்பகுதிகளின் நலனைக் காக்கவும் மதப்பழமைவாதம் அரசியலாக வளர்க்கப்பட்டது.

அதே சமயத்தில், முதலாளித்துவப் புரட்சி ஜனநாயக ஆட்சி முறை மதச்சார்பின்மை கோட்பாட்டை அடிப்படையான கோட்பாடாக முன்வைத்தது. இதுவுலகப் பிரச்சனைகளில் மதம் தலையிடக்கூடாது என்ற கொள்கை மக்களின் குடிமை வாழ்விலும், அரசியல்/சமூக வாழ்விலும் மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தது. அறிவியல் மனோநிலையை வளர்ப்பதன் மூலம் இத்தகைய மதச்சார்பற்ற தன்மையை வளர்க்க அரசுகளே செயல்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் மதச்சார்பின்மைக்கு இந்த அடிப்படை உண்டு.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவியலுக்கு எதிரான ‘போலி அறிவியல்’ மேலைய நாடுகளில் வளர்க்கப்பட்டு அடையாள அரசியல் மாற்றாக முன் வைக்கப்பட்டது. அது ‘நாம்’ ‘அவர்கள்’ என்ற இரண்டு எதிர்எதிரான படைப்பிரிவை உருவாக்கியது. இரண்டுக்கும் இடையிலான புனிதப்போரை - அதிகாரத்தை - இதிகாசப்போரை பிரகடனப்படுத்தியது.

மனித உள்ளங்களில் மதவெறி கொண்ட போர் மனநிலை சதா நிலவுவதற்கான கருத்தியல் நியாயங்கள், கோட்பாடுகள் மிகுந்த செலவு செய்து பரப்பப்படுகிறது. தனது அடையாளப் பெருமிதத்தை மீட்பதற்காகவே மதங்களின் பெருமரபு ஒன்றும் ஆக்கப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயத்தின் சுரண்டலை எதிர்த்த கிளர்ச்சிகள் இடதுசாரித் தன்மையை உலகு தழுவிய அளவில் வளர்ந்துவரும் நிலையில் - பெண் விடுதலை - ஒடுக்கப்பட்டோர்; சமூக நீதி போன்ற ஜனநாயக எழுச்சி உருவாகி வரும் நிலையில் கிருத்துவ / இஸ்லாமிய / இந்து மத அடிப்படையிலான ‘பெருமரபு’ ஒன்று அரசியலாக ஆக்கப்பட்டு அந்தப் பெரு மரபுக்கு நிரந்தர எதிரியாக மாற்றுமதம் ஒன்றை முன் வைத்து பண்பாடு அரசியல் ஒன்றை வளர்ப்பதில் ஏகாதிபத்தியம் கவனமாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் வகுப்புவாதம் இன்றைய வளர்ச்சியில் ஒவ்வொருவரின் மூளையையும், இருதயத்தையும் வேட்டையாடிய வண்ணம் உள்ளது. 80சதவீதமான மக்களை இந்துத்துவா அடிப்படையில் திரட்டவும், 15 சதவீதமான இஸ்லாமிய மக்களை எதிர்த்த தர்மயுத்தத்தின் வழியே ராமராஜ்யம் ஒன்றுகட்டவும் ஆன பிரகடனங்களுக்கான கருத்தியல்கள் வலுவாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அறிவியல் மனோநிலை வளர்ச்சி குன்றிய மதச் சார்பற்ற வாழ்நிலை பலவீனமாக உள்ள நிலையில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை கோட்பாடு வகுப்பு வாதத்தின் மதச்சார்பு வாழ்க்கைமுறையோடு கூடிய அரசியல் தாக்குதலால் நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்துத்துவா பாசிசத்தை நோக்கிய கருத்தியல்களை வலுவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் வெளியார்; பழமையாளர்; மாறாதவர்கள்; ஒவ்வாதவர்கள்; சகிப்புத்தன்மையற்றவர்கள்; முரடர்கள்; பயங்கரவாதிகள்; இப்படிஇன்னபிற. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் பொதுவாக ‘அவர்கள்’ என்ற எதிரிப்படையினராக வைக்கப்பட்டு அணுகப்படும் கண்ணோட்டம் இன்று மேலோங்கி வளர்க்கப்பட்டுள்ள சூழலில் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள ஞானையாவின் ‘இஸ்லாமும் இந்தியாவும்’ என்ற இந்தநூல் சிறந்த ஆதார நூலாக வந்துள்ளது.

இஸ்லாமியராக இல்லாத ஒருவர் - கம்யூனிஸ்டாக வாழ்பவர் இத்தகைய நூலை எழுதியிருப்பது நூலுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாம் குறித்த ஆய்வு வகைப்பட்ட அரசியல் நூல் என்ற பெருமையைத் தமிழில் இந்நூல் பெறுகிறது; மார்க்சியத்தின் அடிப் படைகளைத் தளர்த்திவிடாமல் நூலாசிரியர் விவாதத்தை நடத்திச் செல்வது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இந்நூலில் ஞானையா வாசகரோடு ஒரு நீண்ட உரையாடலை நடத்துகிறார்; வலுவான வாதங்களை முன்வைக்கிறார். தனது நியாயங்களை நிலைநாட்டுகிறார். கடைசியில் முஸ்லிம் இந்தியர்களுக்கு அறிவார்த்த மானவேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறார்.

நூலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு விளக்கப்படுகிறது.

மதங்களின் வரலாற்றில் இஸ்லாம்தான் கடைசியில் தோன்றிய உலகளாவிய மதம் என்பது குறிப்பிடத்தக்கது. அராபிய சமூக - பொருளாதார வாழ் நிலையிலிருந்து இஸ்லாம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை எளிய தமிழில் அழகுபட விவரிக்கும் ஆசிரியர் இஸ்லாமின் சமத்துவம் - சமாதானம் குறித்த செய்திகளையும், நெறிகளையும் இஸ்லாமிய அடிப்படைகளை அடியொற்றி விளக்குவது சிறப்பானது. இறைத்தூராக அறியப்படும் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் மக்கள் வாழ்க்கை அவரை வேட்டையாடியது; அவர் மதீனாவுக்கு குடிபெயர்ந்து தனது அரசை நிறுவினார்.

அந்த அரசு மத சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாமிய அரசாக விளங்கியது.

முகமது நபி இறை அவதாரமாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை. அற்புதங்கள் நிகழ்த்தவில்லை. அது ஏக இறைக் கோட்பாடு மானுட நற்செயல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது அமைந்தது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளுக்குப் பிறகு அமைந்த கலிஃபாக்களின் ஆட்சி இஸ்லாமிய அரசை நிறுவியது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய விஸ்தரிப்பும், பிளவுகளும் தோன்றியதையும் அது குறித்த விவரங் களையும் நூல் விவரிக்கிறது. ஆனால், இஸ்லாமிய ஷரியத் சட்டதிட்டங்களை மீறாமல் அதேசமயத்தில் இஸ்லாம் மதத்தின் மனிதநேயம், அறிதலியல் கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவர்கள் நபிகள் நாயகத்தின் ‘திண்ணைத்தோழர்கள்’ என்றழைக்கப்பட்ட அவரது நேரடி சீடர்கள். இவர்கள் வழியே ஏழை எளிய மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அரசு அதிகாரத்தையும், வசதிகளையும் மறுத்த சூஃபிக்கள் இயக்கம் ஏழை மக்களின் பெரு மூச்சாக இயங்கியது. ஆனால் அது அதிகாரப் பூர்வமான இஸ்லாமிய ஏற்பாட்டால் ஏற்கப்படவில்லை.

சூஃபிக்கள் ஆன்மிகவாதிகள் அவுலியாக்கள் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் வழியே பிறதத்துவங்களுடன் இஸ்லாமியதத்துவம் உறவுகொண்டது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் உடைமை வர்க்கச் சார்பு அரசு முறைகளை எதிர்த்தும் இஸ்லாமிய சூஃபிகள் போராடினர். பாரசீகம் தொடங்கி இந்தியா வரை இந்த மரபுபரவியது. இதன் வரலாற்றுப் போக்கைத் தனியாக நூலில் விளக்கியிருந்தால் நூலின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

இந்தியாவில் இஸ்லாமின் வரலாறு குறித்த அத்தியாயங்கள் இந்துத்துவாவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு நல்ல பதிலடியைத் தருகிறது. தமிழகத்தில் இஸ்லாம் என்ற அத்தியாயம் வரலாற்று வழியிலான ஆதாரங்களை வழங்குகிறது. அரபு வணிகர்கள் மூலம் கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இஸ்லாம் வருகை புரிந்தது; மொகலாய படையெடுப்புகள் வழியே இங்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக, மலையாளத்துக்கும், தமிழுக்கும் இஸ்லாமியர் அளித்த பங்களிப்பு இந்த தேசிய இனங்களின் மரபுகளில் ஒன்றாகப் பரிணமித்தது.

இந்திய விடுதலைப்போரின் நீண்டவரலாற்றை முஸ்லிம் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது. நாடு மத அடிப்படையில் பிளவுபட்டதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் பயன் படுத்திக் கொள்ளப்படவில்லை. காங்கிரஸ்-லீக்பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்; தேசிய அரசு அமைக்கப்பட்டு அதில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இணைக்கப்படவேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் கவனத்தில் கூட கொள்ளப்படவில்லை. இதன் விளைவு: மத அடிப்படையில் பிளவு, வரலாற்றின் மிகப்பெரிய குடிபெயர்வு / மதக்கலகம் - படுகொலைகள். இறுதியாக, மகாத்மா காந்தியின் படுகொலை.

1947க்குப் பிறகு கடந்த 60ஆண்டுகளில் இந்துத்துவா சக்திகள் பாசிசத்தன்மையோடு வளர்ந்தற்கான காரணங்கள் முதலாளித்துவ நெருக்கடியின் போக்கிலிருந்து கண்டறிய வேண்டும். 1947க்குப் பிறகு இந்திய முஸ்லிம்களுக்கு என்று அகில இந்திய கட்சி ஒன்று செயல்படவில்லை என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) இஸ்லாமிய சகோதரத்துவம், உலகுதழுவிய இஸ்லாமிய அரசு ஆகியவற்றின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசியல் மறுகட்டுமானம் உலக வளர்ச்சிப் போக்கின் விளைவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.

இது அமெரிக்கா முன்வைக்கும் அரசு பயங்கர வாதத்துக்கு எதிர்விளைவாகவும் வளர்க்கப்படுகிறது. இவை பேரிலான ‘ஜிகாத்’ கருத்தியல் ஏகாதிபத்தியத்தின் வளையத்துக்குள் சிக்கிக்கொண்டதாகவே அமைந்துவிடுகிறது. அராபிய நாடுகளின் மீதான தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா இஸ்லாம் மதத்துக்குள் தலையிட்டு அல்கொய்தாக்களையும், தாலிபான்களையும் தயாரித்தது. குவினை மத அடிப்படை வாத அடிப்படையில் மறுவாசிப்பு செய்வதற்கான மதரஸாக்களின் நடவடிக்கைகளை ஊக்குவித்தது.

இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் ஏகாதிபத்திய அரசியல் சதியின் விளைவுகளில் ஒன்றே ஆகும். எந்தவகையான மத அடிப்படை வாதமும் மொத்த மதத்தையும் அதன் உறுப்பினர்களையும் தனக்கு மட்டுமே உரியதாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால், உண்மை அதற்கு நேர் எதிரானது. மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆராய்ந்து இந்திய முஸ்லிம்களைச் சமூகப் பொருளாதார அடிப்படையில் / அவர்களது வர்க்க வாழ் நிலையின் மீது அரசியல் செயல்பாடு அமையவேண்டும். நீதிபதி சக்கார் குழுவின் அறிக்கை இதில் ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட அத்தியாயம் மிகச்சிறப்பாக வாதங்களை முன்வைக்கிறது.

நூலின் இறுதியில் முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றுவிடப்படுகிறது.

மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு தமது சமூகப் பொருளாதார, பண்பாடு மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை வேண்டுகோள் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்குள் நடைபெற வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் அது பேசுகிறது. இவை பற்றியெல்லாம் இஸ்லாமியர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், அறிஞருமான ஞானையா அவர்களின் நூல் இந்தத் தருணத்தின் தேவையைச் சிறப்பான முறையில் நிறைவுசெய்கிறது.

இஸ்லாமும் இந்தியாவும்
ஆசிரியர்: டி.ஞானையா,
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024,
விலை : ரூ 160.00

நன்றி: கீற்று.காம்

Wednesday, April 23, 2008

ஜனநாயகத்தைக் கண்டுபிடித்தவர் அத்வானி!

"கட்சியின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியில் இல்லாதக் காரணத்தாலேயே நான் ராஜினாமா செய்கின்றேன். மத்தியப் பிரதேச பட்ஜட் கூட்டத்தொடருக்குப் பின் இதுதொடர்பான விரிவான தகவலை நான் வெளியிடுவேன்"

மத்தியப் பிரதேச மாநில பாஜகவின் முகம் என பாஜக அகில இந்திய தலைமையினால் கருதப்படும் பாஜகவின் மூத்த தலைவர் கோபினாத் முண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெரிவித்த வாசகங்கள் இவை.

அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 4000 பேரும் கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்தார்களாம்.

டெல்லிக்குச் சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் முண்டே மறுத்திருந்தார்.

ஆனா, இதெல்லாம் பழைய கதை!

நேற்று (செவ்வாய்க் கிழமை) டெல்லிக்குச் சென்ற முண்டே, அத்வானி, வெங்கையா நாயுடு, ராஜ்னாத் சிங் ஆகியோரை சந்தித்தார். அத்வானியுடனான 5 மணி நேர சந்திப்பு முடிந்தவுடன் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

பல வருடங்களாகக் கட்சியில் இருந்த அனுபவத்தை வைத்து, 'கட்சியில் ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக' புகார் கூறிய முண்டே, ஒரே நாளில், அதுவும் 5 மணி நேர சந்திப்பிலேயே தனது கூற்றினை மாற்றிக் கொண்டதைப் பார்த்தால், காணாமல் போயிருந்த ஜனநாயகத்தை அந்த 5 மணி நேரத்தில் அத்வானிதான் கண்டுபிடித்துக் கொடுத்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வரும்போது, வரலாறு பாட புத்தகங்களில் 'ஜனநாயகத்தை கண்டுபிடித்தவர் அத்வானி' என்று எழுதப் பட்டால் யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது.

நல்லா கூத்தடிக்கறாங்கப்பா!

Wednesday, January 23, 2008

படாத பாடுபடும் பாரத ரத்னா!

"ஆத்தோட போற தண்ணி.. அய்யா குடி.. அம்மா குடி'-ன்னு சொல்வாங்களே அந்தக் கதையா ஆயிப் போச்சு பாரத ரத்னா!

நாட்டின் மிக உயரிய விருதான இதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்று பாஜகவின் அத்வானி கூறியிருந்தார். அ‌வரைத் தொட‌ர்‌ந்து க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மூ‌‌த்த தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ஜோ‌திபாசு‌க்கு‌ம், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌‌சி‌யி‌ன் மாயாவ‌தி‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் க‌‌ன்‌சிராமு‌க்கு‌ம் அவ்விருதை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு‌க்கு கோ‌ரி‌க்கை ‌விடுத்‌திரு‌ந்தன‌ர்.

இதற்கிடையில் சிவசேனா தலைவர் பாக்தாக்கரேயும் அவர் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்; 'இ‌ந்த ‌விருது‌க்காக எனது பெய‌ர் ‌சிபா‌ரிசு செ‌ய்ய‌ப்ப‌ட்டு எ‌ன‌க்கு வழ‌ங்க நே‌ரி‌ட்டா‌ல் நா‌ன் ஒரு போது‌ம் ஏ‌ற்கமா‌ட்டே‌ன்'. நரி, திராட்சைப்பழக் கதை நினைவுக்கு வருகிறதா?

பாரத ரத்னா விருது, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது . இந்த விருதைப் பெற வாஜ்பாய் எப்படி தகுதியுடையவர் என்ற கேள்விக்கு பதிலாக 'ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்க வாஜ்பாய் பாடுபட்டுள்ளார் . அதைக் கெளரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா அவருக்கு வழங்கப்பட வேண்டும்' என்கிறார் அத்வானி.

ஆனால் வரலாற்றின் பக்கங்களோ வேறு விதமான உண்மைகளை பறை சாற்றுகின்றன.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மோடியின் ஆதரவோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் கோர வெறியாட்டம் போட்டனர். இன்றும் அம்மாநில சிறுபான்மை மக்களை அதிகபட்ச அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன இந்துத்துவ சக்திகள். பிரதமர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்த வாஜ்பாய் 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப் பட்டதைத் தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இவர்தான் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டாராம்.

1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் வாஜ்பாய் என் சங்பரிவாரங்கள் அவருக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. ஆனால், 'சம்பவத்தன்று கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறியாச் சிறுவன் நான். எந்தவித போராட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை ' என்று வாஜ்பாயே கையெழுத்து போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.

சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கு கொள்ளவில்லை. தவிர 'ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் தருவதில்லை' என்ற தனது வடிகட்டிய சந்தர்ப்பவாத சுயநலப் போக்கிலிருந்து அது சிறிதும் விலகாமலேயே இருந்தது. சிறுவயதிலிருந்தே இத்தகைய கொள்கைகள், சித்தாத்தங்களில் பயிற்சி பெற்று வந்த வாஜ்பாய் எப்படி விடுதலைப் போரில் பங்கேற்றிருப்பார்?

வாஜ்பாய் மட்டுமல்லாது, இதே ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்தவர்கள்தான் அத்வானி, மோடி உள்ளிட்ட பெரும்பான்மையான பாஜக தலைவர்கள். உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள், காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நாட்டின் உயர் பதவிகளை கைப்பற்றியிருக்கிறார்கள். நாட்டின் உயரிய விருதுகளும் அவர்களுக்கு வேண்டுமாம்!

இதோடு ஏன் நிறுத்த வேண்டும்? "அப்படியே சாவர்க்கருக்கு ஒரு பாரத ரத்னா, மோடிக்கு ஒரு பரம்வீர் சக்ரா, கோட்ஸேவுக்கு ஒரு பத்மபூஷன்... சூடா பார்சல்...!"

என்னங்கையா... உடுப்பி ஹோட்டல்ல நெய்தோசையா ஆர்டர் பண்றீங்க?

Friday, January 18, 2008

நரேந்திர மோடியும் தாவுத் இப்றாஹிமும்!

மரண வியாபாரி மோடி குஜராத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதால் அம்மணி ஜெயலலிதா அவருக்கு விருந்து வைக்கிறாராம். சோ ராமசாமி மோடிக்கு பாராட்டு விழா நடத்துகிறாராம்.


சில மாதங்களுக்கு முன்பு டெஹல்கா இந்த இந்துத்துவ பயங்கரவாதியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலங்களைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டபோது, இந்த ஜெயலலிதாவோ ராமசாமியோ இவனைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இன்றைய பாராட்டுக்கும் விருந்துக்கும் என்ன காரணம்? ஜாதிப் பற்றா? அல்லது, தேர்தலில் வென்றவர்களெல்லாம் உத்தமர்களாகி விட்டதாக மனு தர்மமோ சாணக்கிய சாஸ்திரமோ சொல்கிறதா?


சிபு சோரன் என்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மன்மோகன்சிங் அமைச்சரவையில் நிலக்கரித்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப் பட்டபோது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.. நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப் பட்டார். அப்போது பாஜக அதை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது. ஏனய்யா... சிபு சோரன் தேர்தலில் வென்று எம்.பி. ஆனவர்தானே? ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியின் தலைவரும் கூட. நியாயப்படி பார்த்தால் தேர்தலில் வென்றதால் உத்தமராகிப் போன சிபு சோரனுக்கு பாஜக பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்!


சிபுசோரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், 1975-ல் ஒரு இனக்கலவரம் நடப்பதற்கும், அதில் 10 பேர் மரணமடைவதற்கும் இவர் காரணமாக இருந்தாராம். இனக்கலவரம் நடக்க காரணமாக இருந்தவரே குற்றவாளி என்றால், ஒரு இனத்தையே அழிப்பதற்கு திட்டம் தீட்டி, ஆண், பெண், முதியவர், சிறுவர்கள், வயிற்றுச் சிசு என எந்தப் பாகுபாடுமில்லாமால் 3000 பேரை கொன்று குவிக்க தூண்டுகோலாக இருந்த கொடூரன் எவ்வளவு பெரிய குற்றவாளி? இவன் எத்தனை தேர்தலில் வென்றால்தான் என்ன?



கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மோடி, இதற்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று 'இரத்தம் கொதிக்க'க் கூறியதாகவும், தான் ஒரு மாநில முதல்வராக இல்லாதிருந்தால் உடனடியாக ஜுஹாபுரா (அஹமதாபாத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி)-வில் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாகக் கூறினார் என குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அர்விந்த் பாண்டியா தெரிவித்துள்ளது தெஹெல்கா வீடியோவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களை அழைத்துப் பேசிய மோடி தாம் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் மாநில
முழுவதும் முஸ்லிம்களை எல்லா வழியிலும் மூர்க்கத் தனமாக அழிக்க வேண்டும் என்றும் கூறியதாக
வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் போட்ட காவிப் பயங்கரவாதிகளின் வழியில் குறுக்கிடக்கூடாது என காவல் துறைக்கு மோடி அரசு கட்டளை இட்டது. மேலும் அடைக்கலம் தேடிவந்த முஸ்லிம்களைப் பிடித்து கலவர வெறியர்களிடம் ஒப்படைத்துத் தான் மேற்கொண்ட பணிக்கு தீரா இழுக்கையும் மோடி அரசின் காவல் துறை தேடிக் கொண்டது - நன்றி: சத்தியமார்க்கம்.காம் .


இதற்கெல்லாம் கொடியவன் மோடியும் அவனது அடிவருடிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மும்பை குண்டுவெடிப்புகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் தாவுத் இப்றாஹிம் இந்த பயங்கரவாதிகளின் டெக்னிக்கை பயன்படுத்தி, ஒரு கட்சியை துவங்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் ஒரு மாநில முதல்வராகியிருக்கலாம். பிரதமராகக் கூட ஆகலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளெல்லாம் கிடைத்திருக்கும்!

என்ன நாஞ்சொல்றது?

Monday, November 19, 2007

ம.பி. சிறையில் தாடிக்குத் தடை!

'சிறைக் கைதிகள், தாடி வைக்கக்கூடாது; குல்லாய் அணியக்கூடாது' என்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச பா.ஜ. அரசு, புது தடைகளைப் போட்டுள்ளது. 'கைதிகள் அடையாளம் காண, இவை தடையாக இருப்பதால், தாடி வளர்க்கவும், குல்லாய் அணியவும் தடை விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது.


அரசின் சிறுபான்மை நலத்துறை தலைவர் அன்வர் கூறுகையில், "கைதிகளிடம் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆனால், அரசு இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளதா என்பதை அவர் உறுதி செய்ய தயங்கினார்.

போபால் மத்திய சிறை கண்காணிப் பாளர் சோம்குன்வார் கூறுகையில், "கைதிகளை சிறைக்குள் அனுப்பும் முன்பு, தாடியை மழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். அவர்களின் தாடி மழித்த போட்டோ தான், போலீஸ் பதிவேட்டில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீபாவளியை ஒட்டி நடத்தப்படும், எருமை மாட்டு மோதல் விளையாட்டுக்கும் சவுகான் அரசு தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போல நடக்கும் இந்த மோதல், பல ஆண்டுகளாக ம.பி.யில் இந்துக்கள் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்
இந்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது சீக்கியர்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!
கிரிமினல் கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமை பெற்ற இருள்நீக்கியார் தண்டம் + தாடி + காவி உடையுடனேயே உள்ளே சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!




Tuesday, July 24, 2007

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை!

அரசியல் பண்ண காரணமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்துத்துவாக்கள் 'ராமர் பாலம்' என்ற ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு நல்ல திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.



'ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்கிறார் பெண் துறவி உமாபாரதி.

'ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்கிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.

ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், "புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தொகாடியா சொன்னாராம். பாபர் மசூதி போன்ற, சரித்திரப் பிரசித்திப் பெற்ற புராதன சின்னங்களை இவர்கள் இடித்துத் தள்ளுவார்களாம். ராமர் பாலம் என்ற, இல்லாத ஒன்றை இவர்கள் காப்பாற்றப் போகிறார்களாம்..!!!!

சேது சமுத்திரம் போன்ற, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.

'சர்ச்சைக்குறிய அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.

என்ன நாஞ்சொல்றது?

Tuesday, June 26, 2007

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் (வருங்கால) குடியரசுத் தலைவரே?

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரிக்கப் போவதாக பாஜக-வின் முக்கிய கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான பால் தாக்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற திரு செகாவத் அவர்களும் போட்டியில் இருக்கும்போது, காங்கிரஸ் வேட்பாளரான திருமதி பாட்டீலை சிவசேனா ஆதரிப்பதாக சொல்வது சாதாரணமாக யாரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்தான். ஆனால் இம்முறை இந்த அறிக்கை ஒருவகையில் எதிர்பார்க்கப் பட்டதுதான் என்பதால் இது யாருடைய புருவத்தையும் உயர்த்தி யிருக்காது.

திருமதி பாட்டீலின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப் பட்டதுமே அவர் ஒரு காரியம் செய்தார். இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எந்நேரமும் தலையில் முக்காடிட்ட வண்ணம் காட்சி தரும் ஒரு பெண்மணி, 'பர்தா' எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை முறை குறித்து இப்படி ஒரு நகைப்பிற்குறிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தான் ஒரு இந்துத்துவ சிந்தனை உடையவர்' என்று காட்டிக் கொண்டு இந்துத்துவாக்களையும் திருப்தி படுத்தி அவர்களின் ஆதரவும் வாக்குகளும் தனக்கே கிடைக்கே வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இவர் இப்படி பேசியிருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளையும் இவர் வாங்கினால்தால் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்ற நிலை இல்லை அல்லவா!

தான் திட்டமிட்டபடியே முதல் கட்டமாக சிவசேனாவை 'மடக்கிய'தன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை நமது வருங்கால குடியரசுத் தலைவர் நிரூபித்திருக்கிறார்.

வாழ்க வளமுடன்!

பின் குறிப்பு:

நான் ஏன் 'குடியரசுத் தலைவரே' என்று தலைப்பிட்டிருக்கிறேன்?

ராஷ்டபதி ஆண்பாலா பெண்பாலா என்ற பிரச்னை ஒரு புறமிருக்க, மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் ஒரு பெண்மணியை 'தலைவி' என்று அழைப்பது சரியா? தலைவன், தலைவி ஆகியவை முறையே ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான ஒருமை விளிச்சொற்கள் அல்லவா? 'தலைவர்' என்பதுதானே இருபாலாருக்கும் பொதுவான மரியாதை விளிச்சொல்? அப்படியென்றால், 'குடியரசுத் தலைவர்' என்று அழைப்பதுதானே முறை? தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.

Thursday, January 04, 2007

முன்மாதிரி எம்.எல்.ஏ ஹசன் அலி!

ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி இந்துத்துவவாதிகள் 'மத வெறியர்' என்ற ரேஞ்சிற்கு திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர் காமராஜர் படத்திற்கு மாலை மரியாதை செய்ய மறுத்ததுதானாம். இந்துத்துவாக்களுக்கு காங்கிரஸ் தலைவர் காமராஜர் மேல் பாசம் பொத்துக் கொண்டு வழிகிறது பாருங்கள்.

இவர்கள் யாரை இப்படி திட்டித் தீர்க்கின்றார்களோ, அதே எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி செப்-2006-ல் ஜுனியர் விகடனில் ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். ஒரு முன்மாதிரி என்று சொல்லத் தக்க வகையில் தொகுதி நலனை கருத்தில் கொண்டு அவர் செய்யும் வித்தியாசமான ஒரு முயற்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

'ஒரு முஸ்லிமுக்கு இப்படி நல்ல பெயர் கிடைப்பதா?' என்று இந்துத்துவாக்கள் வயிறெரிவதன் காரணம் உங்களுக்கே புரியும்.

**********
தமிழ்நாட்டில் ஒரு காங்கிரஸ் மந்திரிசபை!

‘‘முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தை ஆள ஒரு அமைச்சரவை இருப்பதுதான் உங்களுக்குத் தெரியும். ஆனால், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி யிலும் ஒரு ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ இருக்கிறது. அங்கும் ஒரு மினி அமைச்சரவை இயங்குகிறது... இந்த சங்கதி உங்களுக்குத் தெரியுமா?’’ என நம் நண்பர் ஒருவர் சொன்னபோது முதலில், ‘இதென்ன துக்ளக் தர்பார்?’ என்றுதான் நமக்குத் தோன்றியது.

ஆனால், ராமநாதபுரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஹசன் அலியின் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது, அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


வெளியூர்க்காரரான ஹசன் அலி ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டபோது, ‘ராமநாதபுரத்தை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்’ என அடித்துச் சொல்லியிருந்தார். இப்போது, தன் தலைமையில் முப்பது பேர்கொண்ட ஒரு மாடல் அமைச்சரவையை ஏற்படுத்தி, தான் தேர்தல் சமயத்தில் சொன்னதை செயலில் காட்டியிருக்கிறார் ஹசன் அலி. அவரது அலுவலகத்துக்குப் போனால் நிதி, மருத்துவம், கல்வி, உணவு, விவசாயம், மீன்வளம், அறநிலையம், சட்டம்-ஒழுங்கு, இளைஞர் நலன், காவல்துறை என எல்லாத் துறைகளுக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டு ‘அமைச்சரவை பட்டியல்’ ஒன்று போடப் பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தப் பட்டியலில் அமைச்சரவை உறுப்பினர்களின் பெயரோடு, எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, அவர்களின் மொபைல் போன் நம்பரும் இடம்பெற்றுள்ளது!

ஹசன் அலியை அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது, ஒருபக்கம் மனுக்கள் ஏந்திய கையோடு தொகுதியினரும், மறுபக்கம் வெள்ளை வேட்டி, சட்டையோடு சிலருமாகக் களை கட்டியிருந்தது அலுவலகம். ‘‘போக்குவரத்து மந்திரி யாருப்பா..? ஸ்கூல் விடுற நேரம் பெரியபட்டணத்துக்குப் போதுமான பஸ் வசதி இல்லையாம். டிரான்ஸ் போர்ட் ஆபீஸர்ஸ்கிட்ட பேசுங்க. இந்தாங்க, இந்த மனுவுக்கு ஒரு ரசீது நம்பர் போட்டுக் கொடுங்க..!’’ என்றும், ‘‘ஐயா, உங்க ஊர் குடிநீர் பிரச்னையை கலக்டெர்கிட்ட சொல்லிட்டேன். ஆர்டர் போடுறேன்னு சொல்லிட்டாரு. சந்தோஷமா போயிட்டு வாங்க’’ என்றும் பரபரப்பாக இருந்தார் ஹசன் அலி.

‘‘என்னென்னவோ கனவோடத்தாங்க எம்.எல்.ஏ. ஆனேன். நானே முன்ன நின்னு எல்லா வேலையையும் எடுத்துக்கட்டிப் பாக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, அது அவ்ளோ சுலபமில்லைனு தெரிஞ்சுபோச்சு. அதனால என்ன பண்றதுனு யோசிச்சேன். நான் மெட்ராஸ் பிரசிடென்சி காலேஜ்ல படிச்சப்ப, ‘மாதிரி மந்திரிசபை’னு பசங்களுக்குள்ள அமைச்சுக் கல்லூரி சம்பந்தமான நடவடிக்கைகளை ஆலோசனை பண்ணி எடுப்போம். அதே செட்-அப்பை இங்க செயல்படுத்துனா என்னனு தோணுச்சு. உடனே பொதுகாரியங்களைப் பண்றதுல ஆர்வமுள்ள முப்பது பேரைப் புடிச்சு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி துறைகளை ஒதுக்கிக் கொடுத்துட்டேன். எந்த கோரிக்கையோட வந்தாலும் இந்த முப்பது துறைகள்ல ஏதாவது ஒண்ணுல அடங்கிடும். சம்பந்தப்பட்ட மந்திரி (மந்திரி என்றுதான் சரளமாகக் கூறுகிறார்!) அந்த மனுவை பரிசீலிச்சு, ஏத்துக்கிட்டு ஒரு ரசீது போட்டுக் கொடுப்பாங்க. அந்த மனுவுல என்னோட கையெழுத்தோட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஃபார்வர்ட் பண்ணி விரைவான நடவடிக்கைக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணுவோம். இந்த நிர்வாகத்துக்கு என்னோட சொந்த பணத்தைதான் பயன்படுத்துறேன். அடிக்கடி மீட்டிங் போடுறோம். தொடர்ச்சியா மூணு மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணலைனா, அந்த உறுப்பினர தூக்கிட்டு வேற ஒருத்தர நியமிச்சுருவோம். சட்டசபைக் கூட்டம், வெளியூர் பயணம்னு நான் தொகுதியில் இல்லைனாலும், எல்லா வேலையும் ஸ்மூத்தா போயிட்டு இருக்கும். தி.மு.க. எங்களுக்கு மந்திரி சபைல இடம் கொடுக்கலைனாலும், இந்த மந்திரிசபைல தி.மு.க. உறுப்பினர்களும் இருக்காங்க’’ என்று வாய்விட்டுச் சிரித்தவர் மேலும் தொடர்ந்தார், ‘‘பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தா வேலை சுலபமா முடியுங்கற சின்ன எண்ணத்தோட விரிவாக்கம்தான் இந்த மாடல் மந்திரிசபை. எனக்கு மக்களோட அடிப்படை வசதிகள் பூர்த்தியாகணும். அதுக்கு அப்புறம் பெரியபெரிய தொழிற் சாலைகள் வந்தா போதும். அதுக்கு இதைப்போல என்னா லான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்..!’’ என்று கூறி விடை கொடுத்தார்.

தங்கள் பிரச்னைக்கு ஏதேனும் விடிவு காலம் ஏற்படாதா என்ற ஆதங்கத்துடன் ஹசன் அலியின் ஆபீஸுக்கு வரும் மக்களுக்குப் பொறுப்பான விசாரிப்புகளும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முயற் சிகளும் பெரும் ஆறுதலாக இருக்கிறது. அதற்காகவாவது மனிதரைப் பாராட்டலாம்!

நன்றி: ஜூனியர் விகடன்

போட்டோ, மரியாதை, ஆரத்தி, எம்.எல்.ஏ!

எனது பதிவொன்றில் சகோதரர்கள் வாசகன், அழகு இருவரும் இட்ட பின்னூட்டங்கள் இவை. இவ்வளவு அருமையான தகவல்கள் பின்னூட்டத்திலேயே அமுங்கிப் போகலாமா? அதனால் அதை வைத்து ஒரு தனிப் பதிவு போட்டு விட்டேன்!

நன்றி வாசகன் அவர்களே!
நன்றி அழகு அவர்களே!



வாசகன் said...
மரைக்காயர் பாய்,

நீலகண்டன் என்கிற ஸ்யம் சேவக் தொண்டர் 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான விஷயங்கள்' என்கிற இஸ்லாமிய நூலுக்கு இலவச விளம்பரம்செய்து, 'இறைவனையன்றி யாருக்கும் தலைவணங்காத இஸ்லாமியக் கொள்கையை பதிவிட்டு
விளக்கிக்கொண்டிருக்கிறார்.

எம்.எல்.ஏ ஆகியபின்னரும் தன் கொள்கையில் உறுதியாக நிற்கும் முஸ்லிமை பாராட்ட மனமில்லாமல், இவ்விஷயத்தை வைத்து குளிர்காய முடியுமா? என்று பார்க்கிறார்.

நான் கேட்கிறேன், எம்.எல்.ஏ ஆனால் மத அடையாளங்களை / கொள்கைகளை விட்டுவிட வேண்டுமா என்ன?அப்படியென்றால், பிராமண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டா சட்டசபைக்கு போகின்றனர்?
3/1/07 6:54 PM


திரு. நீலகண்டன் அவர்களுக்கு நான் 2 விஷயங்களுக்காக நன்றி கூற விரும்புகிறேன்.

1. 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்' என்ற நூலை தமிழ்மண வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்காகவும், தாருல் ஹுதா பதிப்பகத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் இலவச விளம்பரம் கொடுத்ததற்காகவும் எனது நன்றி. தாருல் ஹுதா பதிப்பகத்தின் முகவரியையும் அவரே குறிப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை.. அவர்களின் முகவரி இதுதான்.

தாருல் ஹுதா
புதிய எண்: 211 (102), முதல் மாடி,
லிங்கி செட்டி தெரு
மண்ணடி, சென்னை - 600 001

இணையத் தள முகவரி

மேலே குறிப்பிட்ட புத்தகம் தவிர மேலும் பல அரிய இஸ்லாமிய நூற்களை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். நண்பர்கள் இந்த நூற்களை வாங்கி படித்து பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

2. அரசியல்வாதியாக இருந்தாலும் கொள்கையில் உறுதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

நீலகண்டன் அவர்கள் இது போன்ற அவரது சேவைகளை தொடர்ந்து செய்து வரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

வாசகன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கும் நீலகண்டன் மறக்காமல் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

அழகு said...
வாசகன்,

பொதுவாக, சட்டமன்ற உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது தங்கள் தொகுதிக்கு நல்லன செய்வார் என்ற நம்பிக்கையில்.

சிலைக்கு மாலை போடுவதற்கும் ஆரத்தியை ஏற்றுக் கொள்வதற்கும்தான் எம்.எல்.ஏ பதவி என்று உளறிக்
கொட்டுபவனுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்கினால் வாழ்நாள் போதாது.
4/1/07 12:11 AM
சரியா சொன்னீங்க அழகு அவர்களே! அதுல பாருங்க, காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்ல கலந்துக்கிறதுக்காகவே ராம்நாடு மாவட்டம் முழுவதும் ஹசன் அலி அவர்கள் சென்றது இவங்களுக்கு பெருசா தெரியலையாம்! போட்டோவுக்கு மாலை போட மறுத்ததால் அவர் காமராஜரை புறக்கணிக்குறாராம். புறக்கணிக்குறவரு ஏன்யா பிறந்த நாள் கொண்டாட்டத்துல கலந்துக்க வர்றாரு?

நம்புங்கள் இளிச்சவாய் அப்பாவி ஜனங்களே! குஜராத்ல நடந்த இனச்சுத்திகரிப்பு தமிழ்நாட்டுக்கு வரும் நாள் வரை நம்பிக் கொண்டிருங்கள்!

Wednesday, December 13, 2006

சச்சார் அறிக்கையும் சுஷ்மாவின் போலிக் கண்ணீரும்!

ராஜேந்தர் சச்சார் குழுவின் அறிக்கை என்ன சுட்டிக்காட்டுகிறது என்பதை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் "இந்துத்துவவாதிகள் புளுகுவது போல முஸ்லிம்கள் தாஜா செய்யப்படவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்''.

ஆனால், என்றுதான் உண்மைகளை ஒப்புக் கொண்டிருக்கிறது சங்பரிவாரம்? இந்த அறிக்கை முழுவதும் ஒருசார்பானதாகவும், பாரபட்சமானதாகவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.

'இந்த அறிக்கை முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்று கட்சி (பாஜக) உறுதியாக நம்புவதாகவும், சமுதாயத்தில் மேலும் பிளவுகளையே உருவாக்கும் என்றும், சிறுபான்மையினர் மீதான காங்கிரஸ் அணுகுமுறையே முஸ்லிம்களின் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.' (தி ஹிந்து 2-12-06)

வெறும் அறிக்கை யாருக்கும் எதையும் செய்து விடப் போவதில்லை. இதைச் சொல்ல சுஷ்மா ஸ்வராஜ் தேவையில்லை. அது அவருக்கும் தெரியும். ஆனாலும் இப்படிச் சொல்வதன் நோக்கம் முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை நடந்துவிடுமோ என்று வயிற்றெரிச்சலில் பொருமுகிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அப்படி அந்த அறிக்கையின் மீது எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற கெட்ட எண்ணத்தில், "இந்த அறிக்கை மேலும் பிளவுகளையே உருவாக்கும்' என்று பயமுறுத்துகிறார்.

நடவடிக்கை எடுக்கப்பட்டால் பிளவுகளை உருவாக்குவார்கள் போலும். முஸ்லிம் களின் இன்றைய நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றால் என்ன அர்த்தம்? காங்கிரஸ் அவர்களது வாழ்நிலையை முன்னேற்ற எதுவும் செய்யவில்லை என்று தானே அர்த்தம்? அது ஒரு வகையில் பெருமளவு உண்மைதான். ஆனால் காங்கிரஸ் முஸ்லிம்களைத் தாஜா செய்வதாக இத்தனை நாள் சங்பரிவாரம் புலம்பியது அப்பட்டமான பொய் என்பதை சுஷ்மாவே ஒப்புக் கொண்டு விட்டார். இதுவே அவரது பேச்சின் சாராம்சம்.

ஒருபக்கம் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதச் சிறுபான்மையினரையும் அடக்கி ஒடுக்கி ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், அவ்வப்போது முஸ்லிம் பெண்களின் நிலைமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அதை இப்போதும் செய்திருக்கிறார் சுஷ்மா. 'முஸ்லிம்களுக்குள் பாலினப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவையும் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் ஏன் ஒரு பெண் முஸ்லிம் உறுப்பினர் கூட இந்தக் குழுவில் இல்லை' என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

இந்துப் பெண்களின் நிலைமை மட்டும் ஏதோ சுபிட்சமாக இருப்பது போல் இவர் முஸ்லிம் பெண்களைப் பற்றிக் கவலைப்படுகிறார். பெண் கருக்கொலையும், பெண் சிசுக்கொலையும், வரதட்சணைக் கொலையும் தங்கு தடையின்றி நாட்டில் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி இவருக்கொன்றும் தெரியாது போலும்.

நாட்டின் பல மாநிலங்களில் ஆண் - பெண் விகிதாச்சாரம் பெண்களுக்கு எதிரான வகையில் மோசமாகிக் கொண்டிருப்பது பற்றியும் இவருக்கொன்றும் தெரியாது போலும்.

இதற்கெல்லாம் காரணமான இந்துக் கலாச்சாரம் அடிப்படையிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

மேலும், சங்பரிவாரிகள் இருக்கும் இடங்களில் எந்த இந்துப் பெண்ணின் கணவனாவது இறந்து போனால், அந்தப் பெண் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். அசந்தால் கணவனின் சிதையில் தூக்கிப் போட்டு உயிரோடு கொளுத்தி விடுவார்கள். சதிமாதா என்று கோவில் கட்டி கதையை முடித்து விடுவார்கள். இந்த லட்சணத்தில் இவர் முஸ்லிம் பெண்கள் பற்றி கவலைப்படுகிறார்.

உண்மையில் முஸ்லிம்களில் அண் - பெண் விகிதாச்சாரம் இந்துக்களை விட கணிசமான அளவு பெண்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அதாவது பெண் சிசுக் கொலையோ அல்லது மரணமோ முஸ்லிம்களில் மிகக்குறைவாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. அது மட்டுமல்ல, இந்திய முஸ்லிம் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கணக்கெடுப்பின் விவரங்களை ஆய்வு செய்த ரீது மேனன் மற்றும் ஜோயா ஹாசன் அகியோர் வெளியிட்டுள்ள நூலும் இதை உறுதி செய்கிறது.

அது சரி. முஸ்லிம்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதையே எதிர்த்த காவிக் கும்பல் வேறு மாதிரியா பேசும்?

- எம். அசோகன் - தீக்கதிர் (7-12-06)
நன்றி: தமுமுக