Monday, July 23, 2007

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை - ஆஸ்திரேலியக் காவல்துறை


மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல் பொய்யானது என்றும் இனி ஹனீஃபை காவலில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை" என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.

இலண்டன் விமானநிலையத்தில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து டாக்டர் ஹனீஃபின் சிம் கார்ட் கண்டெடுக்கப்பட்டதையே அவர் மீதான குற்றச்சாட்டிற்கான முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறி வந்தது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் அவருக்கு எதிரான மிக முக்கிய ஆதாரமாக இதனையே ஆஸ்திரேலிய காவல்துறை ஆவணப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு தக்க வலுவான ஆதாரம் இல்லாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த மறுநிமிடமே மீண்டும் ஆஸ்திரேலிய காவல்துறை அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்ததற்கு இந்த சிம்கார்டு விவகாரமே காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் இலண்டனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஹனீஃபின் சிம் கார்டு கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள அவரின் மனைவியின் தம்பி வீட்டிலிருந்தே அவரின் சிம்கார்ட் மற்றும் ஸ்மார்ட் கார்ட் கிடைத்தன என்றும் காவல்துறை கூறியது. இதன் மூலம் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடுக்கிய காரணம் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

எவ்வித உறுதியான ஆதாரமும் இன்றி அநீதியான முறையில் ஹனீஃப் நடத்தப்பட்டுள்ளதற்கு "பண்பாடு" மிக்க மேற்கத்திய நாடுகளின் உள்நோக்கம் தான் காரணம் ஆகும் (Haneef has been treated with gross prejudice and injustice by a purportedly "civilized" Western nation) என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீபின் மீதுள்ள சந்தேகத்திற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கருதியது அவர் இலண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு மறுநாள் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்லவிருந்தது தான். அவர் ஆஸ்திரேலியாவில் வருமானம் போதாத சூழலிலும், தன் மனைவியின் பிரவசத்திற்கு அருகில் இருக்கவுமே இந்தியா செல்லவிருந்தார் என்ற தகவல்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் சந்தேகம் நீங்கி தெளிவு அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு தன் கணவருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய டாக்டர் ஹனீபின் மனைவி புதிதாய் பிறந்த பெண் குழந்தை பற்றி விசாரித்ததாகவும், தான் குற்றமற்றவர் என்று உறுதிபடக் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்தார்.

டாக்டர் ஹனீஃப் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அவரது ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான ஆவணங்களில் குளறுபடி செய்து அவரது குடியுரிமை விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் டாக்டர் ஹனீஃபை காவலில் அடைத்து விசாரணையைத் துவக்கிய நாள் முதல் ஆஸ்திரேலிய அரசு மீது உள்ள சந்தேகத்தை உலக ஊடகங்கள் எழுப்பி வந்திருந்தன. அது இப்போது சந்தேகமற நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய சட்டக்குழுமமும் (Australian Law Council) மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கமும் (Amnesty International) இணைந்து ஆஸ்திரேலியாவின் இந்த அநீதியான செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
தொடர்புடைய பிற சுட்டிகள்: தினத்தந்தி தாட்ஸ்தமிழ்.காம்

9 comments:

said...

ஆஸ்திரேலியாவின் இஸ்லாமோஃபோபியா எனும் நோய்க் கொடூரத்தின் இன்னொரு பாதிப்பு.

said...

ஆமாங்க சுல்தான். முன்னேறிய சமுதாயம் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் கூட முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்றால் மனித உரிமை, மனிதாபிமானம் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள். 'மொதல்ல உள்ளே தள்ளு.. அப்புறம் பாத்துகிகிடுவோம்' கதைதான்! இதே அணுகுமுறையை மற்ற சமுதாயத்தினரிடமும் காட்டுவார்களா என்பது சந்தேகமே!

said...

மருத்துவர் ஹனீப் கைது மற்றும் விசாரனையின்போது வரம்பு மீறாமல் இருக்குமாறு ஆஸ்திரேலிய அரசை பிரதமர் மன்மோஹன் சிங் வேண்டுகோள் விடுத்தது வரவேற்க தக்கது. ஆனால் அதைக்க்கூட பொறுக்காமல் - அம்னீஷியா அத்வானியும் -சங்பரிவார கும்பல்களும் குய்யோமுறையோ என்று கூப்பாடு போட்டு 'முஸ்லிம் எதிர்ப்பு' அரிப்பை தீர்த்துக்கொண்டது. ஆஸ்திரேலிய காவல் துறை - மோடியின் குஜராத் காவல் துறையினரைப்போல நடந்துகொண்டது வண்மையாக கண்டிக்கதக்கது.

said...

மொத்த பதிவையும் ஒரே வார்த்தையில் சொல்வது போல் 'லேபிள்' வார்த்தை.

மரைக்காயர்னா மரைக்காயர் தான்.

said...

வாங்க பிறைநதிபுரத்தாரே!

//ஆஸ்திரேலிய காவல் துறை - மோடியின் குஜராத் காவல் துறையினரைப்போல நடந்துகொண்டது வண்மையாக கண்டிக்கதக்கது. //

மருத்துவர் ஹனீப்பின் டைரியில் இவங்களே சில தொலைபேசி எண்களை எழுதி வைத்து 'ஆதாரங்களை' உருவாக்கியிருக்கிறார்களாம். இதை என்னவென்று சொல்ல?

said...

//மொத்த பதிவையும் ஒரே வார்த்தையில் சொல்வது போல் 'லேபிள்' வார்த்தை//

மல்லிகை மணம், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

"இஸ்லாமோஃபோபியா" - உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள், குறிப்பாக சிறுபான்மையினராக இருப்பவர்கள், எதிர்கொள்ளும் ஒரு பிரச்னைதான் இது.

said...

டாக்டர் அனீப் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன

மெல்போர்ன் : லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு தொடர்பாக பெங்களூரை சேர்ந்த டாக்டர் அனீப் கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளிவர விடாமல் ஆஸ்திரேலிய போலீசார் அடுத்தடுத்து புதிய வழக்குகளை பதிந்து வருகிறார்கள். விசாவும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அனீப் தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் விசாரணையில் கிடைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டாக்டர் அனீப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டதாக ஆஸ்திரேலிய போலீஸ் இன்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனீப் விடுதலை ஆகவுள்ளார். அனீப் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று அனீப்பின் வழக்கறிஞர் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


DINAMALAR 27/07/07

said...

http://thatstamil.oneindia.in/news/2007/07/27/hanif.html

ஜூலை 27, 2007

மெல்போர்ன்: லண்டன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அந் நாட்டு போலீசார் அறிவித்துள்ளது.

லண்டனில் கார் குண்டு வைத்தது மற்றும் கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்கியது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.ஆனால், டாக்டர் ஹனீப்புக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய போலீசார் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகளை போட்டு ஜாமீனில் வர விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து மத்திய அரசும் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஹனீப் விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய போலீசார் தாங்கள் ஜோடித்த ஆவணங்களை கைவிட்டனர். இந் நிலையில் இப்போது டாக்டர் ஹனீப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதனால் கடந்த 3 வார காலமாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹனீப் விடுதலையாகவுள்ளார்.

டாக்டர் ஹனீப் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று ஹனீப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவி மகிழ்ச்சி:

இதன் மூலம் உண்மை வென்று விட்டதாக ஹனீப்பின் மனைவி பிர்தெளஸ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், உண்மையும் நியாயமும் வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், ஹனீப்பை நாடு கடத்தும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா கைவிட வேண்டும். அவர் இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் பெங்களூர் வந்துவிடுவார் என நம்புகிறேன்.

பிரதமருக்கும் வெளியுறவுத்துறைக்கும் என் நன்றிகள். அதே போல ஆஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

said...

அமைதியை போதிக்கும் இஸ்லாத்தின் பெயரைக் கூறிக்கொண்டு வன்முறை/பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அதனைக் கண்டிப்பதில் முஸ்லிம்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இத்தகைய எதிர்ப்புக்களை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி அச்சு/எழுத்துக்களாக முஸ்லிம் பதிவர்கள் ஆவணப்படுத்த வேண்டும். இது அவர்களின் கட்டாயக் கடமையாகும்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர் என்று சந்தேககிக்கபடும் நபர் ஒரு முஸ்லிம் என்று பெயரளவில் தெரிந்திருந்தாலே அவரை முழுக் குற்றவாளியாக்கி அழகு பார்க்கும் அழுக்குக் கலாச்சாரம் இணையம் உட்பட அனைத்து ஊடங்களிலும் ஒழியவேண்டும்.

முக்கியமாக டாக்டர் ஹனீஃப் அவர்களை எவ்வித ஆதாரமுமின்றி "பயங்கரவாதி" என்று பட்டம் சூட்டியதன் மூலம் தனது அடிமன குரோதத்தை எழுத்துக்களை "திண்ணை" மூலம் வெளிப்படுத்திய மதிப்பிற்குரிய மலர் மன்னன் அவர்கள் இதுபற்றிய கருத்தினை இங்கே பதிந்திட வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்,
அபூ ஸாலிஹா