ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்
புதுடெல்லி, அக்.24-: ராணுவத்தில் உளவாளிகளின் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.
இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி, டெல்லியில் ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரிலும், டெல்லியிலும் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ரிதேஷ்குமார், அனில் குமார் என்ற 2 பேர், பாகிஸ்தானின் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. யுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. அவர்கள் மீது ராணுவ விசாரணையும், போலீஸ் விசாரணையும் நடைபெறும். உள்துறையும் இதுபற்றி விசாரிக்கும். இந்த 3 விசாரணைகளின் மூலம், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளி யார்? என்பது தெரிய வரும்.
இந்திய ராணுவ ரகசிய ஆவணங்கள், காஷ்மீரில் இருந்து, டெல்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் அவை காட்மாண்டு கொண்டு செல்லப்பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்ப உளவாளிகள் திட்டமிட்டு இருந்தது, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துஇருக்கிறது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் உளவாளிகளின் ஊடுருவல் இருக்கிறதா? என்பது கண்டறியப்படும். உளவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
நன்றி: விகடன்.காம்
0 comments:
Post a Comment