Saturday, December 09, 2006

சகோதரர் எழிலின் பதில்கள்

சகோதரர் எழிலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தனது பதிவில் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பாக, எனது டிஸ்கிளைமரை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்கிறேன். "இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.

எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.

அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."

கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?

எனது இரண்டாவது கேள்வி, புதிதாக இந்து மதத்திற்கு வரும் ஒருவருக்கு ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?

இதற்கு பதில் சொன்ன எழில் நான் சொன்ன சில உதாரணங்களை மறுத்து, "துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை" என்கிறார். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் கேள்வி அதுவல்லவே! துறவறம் எல்லா குருக்களுக்கும் கட்டாயமில்லை. ஆனால் துறவறத்தை மேற்கொண்ட ஒரு குரு அதை முழுதாக கடைப்பிடிக்க வேண்டுமா இல்லையா? இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி துறவு என்ற அறத்தை ஏற்ற, மற்றவர்களால் 'நடமாடும் கடவுள்' என்ற ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்ட ஒருவர், ஒழுக்கம் பிறழ்ந்து கொலை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார் என்றால், அது அந்த தனி நபரின் குற்றம் மட்டுமா? அல்லது அவர் பின்பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களில் உள்ள குறைபாடா? அல்லது ஒரு சாதாரண மனிதரை அந்த அளவுக்கு உயர்த்தி போற்றிய அவரது தொண்டர்களின் தவறா?

மேலும் எழில் சொல்கிறார், "துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம்.... பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை.... அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும். ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்".

ஞானத்தை அடைய பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக 'ஞானம்' என்றால் என்ன என்பதை தீர்மானிக்க முடியுமா? சென்றடைய வேண்டிய இடம் எது என்பதை தெரிந்து கொண்டால்தானே, நாம் போக வேண்டிய பாதையை தேர்ந்தெடுக்க முடியும்? ஆனால் ஞானம் என்பது அப்படி தீர்மானிக்கப் படும் ஒன்றல்ல. வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் சாமான்யர் ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போல தன் முழு வாழ்க்கையையும் ஆன்மீக வழியில் செலவிடும் ஒருவரின் ஞானமும் குடும்பப் பொறுப்புள்ள ஒருவரின் ஞானமும் வேறு வேறாக இருக்கும்.

பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். சென்றடைய வேண்டிய இலக்கே வேறு வேறாக இருந்தால்..?

குருவானவர் சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு எழில் சொல்கிறார், "எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம். ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன. "

நல்வழி, தர்மம், அதர்மம் என்பதற்கு சில விளக்கங்களை எழில் சொல்லியிருக்கிறார். ஆனால் எனது கேள்விக்கான பதில் இதில் இல்லை. நான் கேட்டதை ஒரு உதாரணத்துடன் மறுபடியும் சொல்கிறேன். நடமாடும் கடவுள் என்று ஒருவரை மக்கள் மதித்தார்கள். அவரிடம் அருளாசி பெற படித்தவர்களும் படிக்காதவர்களும் முட்டி மோதினார்கள். ஏனென்றால் அவர் மேல் அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர் தன் மத சம்பிரதாயங்களை பேணிக் காப்பவர் என்ற நம்பிக்கை. ஆன்மீகத்தில் நமக்கு இவர் சரியான வழி காட்டுவார் என்ற நம்பிக்கை. ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு ஏற்றவரல்ல என்பதை காலம் கடந்துதான் மக்கள் தெரிந்து கொண்டார்கள். அவரது உண்மையான முகம் வெளிப்படாமலேயே போயிருந்தால் என்னவாகியிருக்கும்? அவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டவர்களின் கதி என்ன? அவர் போதனைகள் சரியானவையா தவறானவையா என்பதை எப்படி சரி காண முடியும்? இது போன்ற வெளிவேடக்காரர்களை மக்கள் எப்படி அடையாளம் காண்பது?

எனது மூன்றாவது கேள்வி, 'எந்த வேதங்களை பின்பற்றுவது?' வேதங்கள் என்று சொல்லப்படுபனவற்றில் பெண்களை கேவலப்படுத்துவது போல சில வசனங்கள் இருப்பதாக வலைப்பதிவுகளில் கூட சிலர் எழுதியிருந்தார்கள். அது தவிர வேதங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிக்க தடை இருப்பதாகவும் பல இடங்களில் எழுதியிருக்கிறார்கள். விப்ர புராணம் போன்றவைகளில் கடவுளர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக சித்தரிக்கும் கதைகள் இருக்கின்றன. இது போன்ற காரணங்களாலேயே எதுவெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்க, பின்பற்றத்தக்க வேதங்கள் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு எழில் சொன்ன பதில்: "பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் உள்ளது அல்ல. அதன் உட்பொருள் தெரியாமல் கூறினால், அது உங்களுக்கு கேவலமானதாகவே தோன்றும். இதற்கான விளக்கம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. படிக்கவும். புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல. வேதங்களை படிக்க தடை ஏதும் இன்று இல்லை. என்றும் இல்லை. காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதாக சொல்லப்படும் பிரச்சாரம் பொய். அவை பிரிட்டிஷ் காலத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்த அவர்களது கைக்கூலிகளால் திணிக்கப்பட்டவை. கிறிஸ்துவ பிரச்சாரகர்களாலும் இஸ்லாமிய பிரச்சாரகர்களாலும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு இன்று உண்மை என்ற நிலையை அடைந்துவிட்டன. வேதம் படித்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென்றால், எப்படி மாட்டிடையன் கிருஷ்ணன் அவதாரமாக கருதப்பட்டான்? வால்மீகி என்ற வேடனால் எப்படி ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும்?முருகன் ஏன் குறத்தி வள்ளியை திருமணம் செய்துகொள்ளவேண்டும்?கம்பன் என்ற நெசவாளர் சமஸ்கிருதமும் வேதமும் வால்மீகி ராமாயணமும் படித்து கரைதேர்ந்து கம்பராமாயணம் எழுத முடிந்திருக்குமா?சிந்தித்து பாருங்கள். பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்குதடையின்றி படிக்கக்
கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.
"

- பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் இல்லை என்றால் வேதமல்லாத மற்றவைகளில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறாரா எழில்?

- வேதங்களைப் படிக்க தடை எதுவும் இல்லை என்று மூன்று இடங்களில் சொன்ன எழில், மூன்று முறையும் தடை 'இன்று' இல்லை என்று வலியுறுத்தியிருப்பதை கவனித்தால், 'அன்று' தடை இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

- வேதத்தை படிக்க யாருக்கும் தடையில்லை என்பதை விளக்குவதற்காக மாட்டிடையன் கிருஷ்ணன், குறத்தியை திருமணம் செய்த முருகன் என்று சிலவற்றை ஆதாரங்களாக எழில் காட்டியிருக்கிறார். இதுவெல்லாம் புராணக்கதைகள் இல்லையா? இவற்றிற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு? 'புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல' என்று எழிலே சொல்லியிருக்கிறாரே? அதுவுமல்லாமல் 'புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.' என்று சொன்ன எழில் மாட்டிடையன், குறத்தி போன்ற கதாபாத்திரங்களை எப்படி ஆதாரமாக காட்ட முடியும்?

மறுபடியும் என் கேள்விக்கே வருகிறேன். எந்த வேதங்களை பின்பற்றுவது? வேதங்கள் அல்லாத மற்றதை (புராணங்கள், மனு சாஸ்திரம் போன்றவை) பின்பற்ற தேவை இல்லை என்று எழில் ஒப்புக் கொள்கிறாரா? அப்படியென்றால் அவற்றை என்ன செய்வது?

எனது நான்காவது கேள்வி இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்பது. இதற்கு எழிலின் பதில் முழுக்க முழுக்க சமாளிப்புதான். "ஏன் இந்து மதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்க வேண்டும்?" என்று கேட்கிறார். எழிலுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜாதி என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாத அடையாளம் என்பதுதான் உண்மை. ஏதாவது ஒரு நாளிதழைப் பிரித்து மேட்ரிமோனியல் பக்கத்தை அவர் பார்த்தாலே இது புரியும்

எழிலின் அடுத்த சமாளிப்பு, "இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது. அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான்"

இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோருக்கும் சம உரிமை இருப்பதுதானே முறையாகும்? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை செய்யவிடாமல் தடுப்பது மனுதர்மம் உருவாக்கிய வர்ணபேதம்தானே?. மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது மாற்று மதத்தினர் அல்ல. இந்துமதத்தினரேதான். அந்த மனுவையும் கடவுளாக்கி மனாலியில் கோயில் கட்டி கும்பிட்டு வருவதும் அதே இந்துமதத்தினர்தான். மனுதர்மமே தவறு என்றால், அது அறிமுகப்படுத்திய வர்ணாஸ்ரம முறையால் இந்து மதத்திற்கே இழுக்கு என்றால், பாபரி மசூதியை இடிப்பதற்கு பதிலாக இந்த மனு கோவிலை இடித்துத் தள்ளியிருக்க வேண்டாமா?

"இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று
கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே
?" என்கிறார் எழில். சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.

" இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை." என்ற சொல்லும் எழில்தான் அபூமுகை, சுவனப்பிரியனுடன் நடந்த விவாதத்தில், ஒருவர் இறைத்தூதர்தான் என்பதற்கு கே.ஜி. பிள்ளைகளுக்கு புரியுற மாதிரி ஆதாரம் காட்டினால்தான் ஒப்புக் கொள்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

"மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது." என்கிறார் எழில். மனுதர்மம் அறிமுகப்படுத்திய சமூகக் கொடுமைகளுள் முதன்மையானது பிறப்பினடிப்படையில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் வர்ணாஸ்ரமம். இக்கொடுமையை நிவர்த்திக்க இதுவரை மனுதர்மத்தில் எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்த்ப் பட்டிருக்கின்றன என்பதையும் அந்த மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றனவா என்பதையும் எழில் அறியத்தந்தால் நல்லது.

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்துமதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். அப்சலை தூக்கில் போடுவதில் காட்டும் தீவிரத்தை தலித்களின் பிரச்னைகளை போக்கி அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் இருக்க வைப்பதில் காட்டினார்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே இந்துமதக் காவலர்கள்தான் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

எழில் போன்றவர்களின் அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கிறது. இந்துமதத்தைப் பற்றி உயர்வாக சொல்ல எவ்வளவோ இருக்கும்போது இவர்கள் இஸ்லாமை குறை சொல்வதில் நேரம் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்து 'நீங்கள் வந்து எங்கள் மதத்தை தாக்குங்கள்' என்று மறைமுகமாக அழைப்பு வைக்கிறார்கள். அதுதான் அவர்கள் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?

32 comments:

said...

சகோதரர் மரைக்காயர்,

உங்களது தர்க்கங்கள் நேர்மையானதாகவும், மிகவும் பண்புடனும் , அமைதியாகவும் அதே நேரத்தில் மிகுந்த வலிவுடனும் காணப் படுகிறது. உங்கள் புத்தி சாதுர்யம் மற்றும் தர்க்க சாஸ்திர அறிவும் வியக்க வைக்கிறது.

நீங்கள் அளிக்கும் நிதானமான விளக்கங்கங்கள் இணையத்தில் பலரும் கற்றுக் கொள்ள வேண்டியவை.

நீங்கள் குறிப்பிட்ட அந்த முன் முடிவோடு அணுகுபவர் நிச்சயம் இந்த விவாதத்தின் முடிவில் தன்னிடம் / தங்களிடம் உள்ள குறைகளை ஒத்துக் கொண்டு அவை நீக்கப் பட வேண்டும் என்பதை ஒத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.

அருமையான விவாதங்கள். இதை நிதான முறையில் எடுத்துச் செல்லும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.

இது வரை நிகழ்ந்த விவாதங்களில் உங்கள் கருத்துக்களே நியாயமானவையாகவும் பலமானவையாகவும் வெற்றி பெற்றுள்ளவையாகவும் தெரிகின்றன.

மொத்தத்தில் எழில் என்ற 'விழல்' முகமூடி ஏற்கனவே விவாதங்களில் காழ்ப்பைக் கொட்டி ஏற்கனவே கிழிக்கப்பட்டவர்களின் புதியதான ஒன்றோ என ஐயுறுவதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்பதை அவரது ஒவ்வொரு பதிவும் உறுதி செய்கிறது.

உங்களுக்கு இன்னொரு ஐடியா தருகிறேன் அனானியாகவோ வேறு பெயரிலோ இந்து மதத்தைக் கடுமையாக கீழ்த்தரமான வார்த்தைகளால் தாக்கி எழுதுங்கள். அதைப் பிரசுரித்து விட்டு அப்படியெல்லாம் எழுதக்கூடாது என அன்பாகத் தட்டிக் கேட்பதாக எழுதுங்கள்.

யாராவது ஏன் இப்படி அசிங்கமான பின்னூட்டங்களைப் பிரசுரிக்கிறீர்கள் எனக் கேட்டால் அப்படி எல்லாம் செய்யக்கூடது என அறிவுரை தந்திருக்கிறேனே என சமாளியுங்கள்.

இதெல்லாம் நீங்கள் செய்துவிட்டால் நீங்கள் அமைதியாக அழகாக விவாதம் புரிபவர் என்ற பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

நன்றி.

said...

//அதுதான் அவர்கள் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?//

இங்கு தான் மன முதிர்ச்சியையும், இஸ்லாம் கூறும் வழியையும் பின்பற்ற வேண்டும். அவர்கள் வழி அவர்களுக்கென்று...

Anonymous said...

//ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை?//

இப்படிக் கேட்பதற்குப் பெயர் தான் உயர்சாதிக் கொழுப்பு என்பது.

said...

//உங்களுக்கு இன்னொரு ஐடியா தருகிறேன் அனானியாகவோ வேறு பெயரிலோ இந்து மதத்தைக் கடுமையாக கீழ்த்தரமான வார்த்தைகளால் தாக்கி எழுதுங்கள். அதைப் பிரசுரித்து விட்டு அப்படியெல்லாம் எழுதக்கூடாது என அன்பாகத் தட்டிக் கேட்பதாக எழுதுங்கள்.//

சகோதரர் அட்றா சக்கை, உங்கள் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. குரோதம் கொண்ட சிலருடைய செயல்களால் முஸ்லிம்கள் சினமடைவது இயற்கைதான். ஆனால் அவர்கள் அளவிற்கு நாமும் கீழிறங்க வேண்டியதில்லையே!

//இங்கு தான் மன முதிர்ச்சியையும், இஸ்லாம் கூறும் வழியையும் பின்பற்ற வேண்டும். அவர்கள் வழி அவர்களுக்கென்று... //

லொடுக்கு அவர்களே, தங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.

said...

தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேள்வி கேட்பவருடன் வாதிக்கலாம். ஆனால், எள்ளலுடன் கேட்பவருடன்.....

said...

//ரோமானிய அரசர்தான் இறைதூதருக்கான இலக்கணம் அறிந்தவர் என்பது சரியல்ல என்று கருதுகிறேன். இறைதூதருக்கான இலக்கணத்தை ரோமானிய அரசர் அறிந்திருந்தார் என்றால், அவருக்கு அது எப்படி தெரியும் என்ற கேள்வி வரும். "உண்மையான இறைதூதருக்கான இலக்கணம் இதுதான்" என்பதை அவருக்கு யார் சொன்னார்கள் என்ற கேள்வியும் வரும். அவர் சொல்வதுதான் சரியான இறைதூதருக்கான இலக்கணம் என்பதை எப்படி இப்னுபஷீருக்கு அறுதியாக தெரியும் என்ற கேள்வியும் வரும்//

இது மேற்படி நபர் இஸ்லாத்தின் இறைத்தூதர் பற்றிய ஐயமாக சகோதரர் இப்னு பஷீரிடம் கேட்டவை. இதே கேள்விகளை நான் எழிலிடம் கேட்கிறேன். குரு, ஞானி என்பவர் சரியான பாதையைத் தான் காட்டுவார் என்பது எழிலுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்? இறைவனை அடையும் உண்மையான பாதை அந்தக் குரு/ஞானி சொன்னதுதான் என எதனடிப்படையில் நம்புகிறீர்கள்?

ஒரு வாதத்திற்காக காஞ்சி சங்கராச்சாரியாரும், பிரேமானந்தாவும் தங்களை இந்துமத குரு என்று சொல்கிறார்கள்.அதேபோல் சாயிபாபா, ரஜனீஷ், சதுர்வேதி என்று குருக்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. சட்டத்தின் பிடியில் சிக்கும்வரை இவர்கள் நடமாடும் தெய்வங்களாகப் பார்க்கப் பட்டார்கள். கிரிமினல் வழக்குகளில் மாட்டும் வரையில் இவர்களை நம்பியவர்களின் நம்பிக்கை சரியா?

மற்றுமொரு தர்க்க ரீதியான பதிவிற்கு நன்றி மரைக்காயரே.

said...

\\இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை.

மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல.\\
எழில்.

:-(!?)

பாராட்டுக்கள் மரைக்காயர் அவர்களே!. மிக நாகரிகமாக உங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கு.

\\சிலருடைய செயல்களால் முஸ்லிம்கள் சினமடைவது இயற்கைதான். ஆனால் அவர்கள் அளவிற்கு நாமும் கீழிறங்க வேண்டியதில்லையே!\\

நல்ல கருத்து. வாழ்த்துக்கள்.

said...

அருமையான பதில்கள் மரைக்காயர்,

உலகில் ஒரு கேள்விக்குகூட விடையில்லை, விடையை ஒத்துக் கொள்ளாதவர்கள் இருக்கும் வரை.

எளிமையாகவும், விளக்கமாகவும் பதிலளித்துள்ளீர்கள். வன்முறையில் வாதிட்டால், மதம் மாறலாம். ஆனால் மனம் மாறுமா? மனமுவந்து மதம் மாறினால்தான் அதிலுள்ள நன்மைகள் கிடைக்கும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் சிலர், வன்முறையால் வளர்த்த சமூகம் இந்த இசுலாம் சமூகம் என்று கேலிப் பேசுவது வருத்தத்திற்க்குரியதே!

said...

//இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோருக்கும் சம உரிமை இருப்பதுதானே முறையாகும்? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை செய்யவிடாமல் தடுப்பது மனுதர்மம் உருவாக்கிய வர்ணபேதம்தானே?. மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது மாற்று மதத்தினர் அல்ல. இந்துமதத்தினரேதான்//

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் கடைசியாக நீதிமன்றத்தில் இடைவிடா இரண்டாண்டு போராட்டத்துக்குப் பின் இப்போதுதான் நேற்று முன்தினம் தலித்கள் உள்ளே நுழைய அனுமதி கிடைத்திருக்கிறது. இன்னும் நடைமுறைக்கு வருவதற்குள் என்னென்ன ஆகுமோ!

இன்னும் இதுபோல் இந்தியாவெங்கும் எத்தனையோ கோவில்கள்! அதை சரி செய்தாலே உள்ளிருப்பவர்களின் வெளியேற்றத்தை தாமதப்படுத்தலாம்.

அதை விடுத்து முஸ்லீம்களை அழைத்துப் பயனென்ன!

said...

தோழா,

இந்து மதத்திற்கு எத்தனை பேர் புதுப்புது வியாக்கியானம் கொடுத்தாலும் எல்லாமே சப்பைக் கட்டாகவே இருக்கும்.

முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பாருண்டோ எருமையே
காலிற் பிறப்பது முண்டோ கழுதையே!
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எலாம்போக்கிலியே!

என்று செவிட்டில் அறைந்தாற்போல பாட்டு என்னும் சோட்டால் அடித்தாரே பாரதிதாசன், பதில் உண்டா அவாள்களிடம் இதுவரை?

கேட்பவன் கேனயனாக இருந்தால் சொல்லுகிறவன் சொல்லிக் கொண்டேதானே இருப்பாங்கறேன்.

said...

மரைக்காயரே அசத்திட்டீங்க 'பஞ்ச்' என்று குறிப்பிட்டு சொல்லுமளவுக்கில்லாமல் எல்லாமே
'பஞ்ச்'

தன் மதத்துக்கென்று கொள்கைன்னு எதுவுமே கிடையாதுன்னு எழில் திரும்ப திரும்ப நிரூபித்து கொண்டிருக்கிறார் அதன் சறுக்கலே வேதம் புராணம் துறவிகள் இத்யாதி இத்யாதி

said...

//சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.//

சிவபாலன் மரைக்காய்ரை விடுங்கள் அய்யா, கால்கரி சிவாவோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள எந்த அய்ய்ரோ அய்யங்காரோ தயாரா?

சம்ஸ்காரம் என்றெல்லாம் உட்டாலக்கடி அடிக்கும் நேசகுமார் சம்பந்தம் செய்து புரட்சி செய்து காட்டட்டுமே..

said...

//இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்து மதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். //

சரியான இடத்தைத் தொட்டு விட்டீர்கள். இதுதான் ஆர்எஸ்எஸ், பிஜேபி யின் அடிப்படை உத்தி.

//'நீங்கள் வந்து எங்கள் மதத்தை தாக்குங்கள்' என்று மறைமுகமாக அழைப்பு வைக்கிறார்கள். அதுதான் அவர்கள் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?//

அவர்களின் விருப்பத்தை

நிறைவேற்றுங்கள் மரக்கல ராயரே!

உங்களைப்போல் நாகரீக வாதங்கள் அங்கு எடுபடாது. வலையில் பதியும் இந்துத்வாக்களின் மொழியில் நீங்களும் பேசத் தொடங்கினால்தான் அடங்குவார்கள்.

Anonymous said...

1. ***இந்து மதத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள் தாம் எதிர்த்தனர்*** என்பது எல்லோரையும் இந்து என்று பொதுமைப்படுத்த முயல்கிற மற்றொரு திரிபு.

2. ஏன் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து 'இந்துமதம் வாருங்கள்' என்று அழைக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை?

3. இசுலாமியர்களின் ஆன்மீக முன்னேற்றம் பற்றி அளப்பரிய கவலை பூண்டுள்ள எழில் கூட்டம் இந்துக்களின் / பேரளவில் இந்துக்களாக க்ருதப்படுகிறவர்களின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு என்ன செய்து வருகிறது?

நான் எப்போதும் கேட்டு வருகிற கேள்விதான் என்றாலும் இப்போதும் தவிர்க்க முடியவில்லை

ஒரு மரைக்காயர் சிவபாலனாக ஆகவேண்டுமென்று அவாவுறுகிற திருவாளர் எழிலார் குரூப் ஒரு செங்கோடனை சாஸ்திரியாக்க என்ன செய்திருக்கிறார்கள்? சொல்ல முடியுமா?

said...

நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூ பக்கம் வருகிறேன். தலைப்பும் பதிவர் பெயரும் கவர்ந்ததால் படிக்க விழைந்தேன். நேர்மையான எதிர்வாதம்.ஆனால் பதில் சொல்லதான் ஆள் இல்லை.:-(

பொதுவாக இந்து மதத்தின்பால் சாத்வீகமாக யாரும் அழைக்கத் தயங்குவர். காரணம் நீங்கள் ஏற்கனவே கேட்டவைதான் என்றாலும் உள்ளதும் போச்சடா...கதையாகி விடக்கூடாது என்பதே.

RSS சங்க பரிவாரங்கள் இந்து மதத்தின் கோட்பாடுகளைச் சொல்லி அழைப்பதில்லை.மிரட்டலும் கட்டைப் பஞ்சாயத்து அரசியலுமே இவர்களின் ஆயுதம்.

இந்து மதத்துக்கு வரச்சொல்லி முதல் முறையாக எழில் என்பவர் விடுத்திருக்கும் அழைப்பு வியப்பாக இருந்தது. (அவர் கொடுத்திருக்கும் வியாக்கியானங்கள் அவரின் சொந்தக் கருத்தாகவே நான் கருதுகிறேன்.)

இந்து மதத்தினுள் நுழைய மடப்பீடாதிபதிகளின் ஆசிர்வாதம் :-) அவசியம்.உதாரனமாக, ஒரு பிராமணப் பெண்ணை மணப்பதால் அமெரிக்கன் எளிதில் பிராமனனாகி விட முடியும். இதே இலங்கை தமிழன் ஒரு பிராமனப்பெண்ணை மணக்க முடியுமா? வெண்தோல் அமெரிக்கனை அவர்கள் பிராமனனாக ஏற்றுக் கொள்ள தயங்குவதிலை. இதுபோன்ற பல்வேறு முரண்பாடுகளைக் களையாமல் மதப்பிரச்சாரம் செய்வது பயன் இல்லை என்பதை எழில் உணர வேண்டும். (தன்னைவிட தாழ்ந்த சாதிக்காரர்களிடம் வேண்டுமானால் இவரின் பேச்சு எடுபடும்).எழிலின் அசட்டுத்தனமான ஆர்வத்தைப் பாராட்டும் அதே வேளையில் ஓட்டையாகிப் போன தன்மதப் படகை அடைக்கும் முயற்சியையும் செய்ய வேண்டும்.

ரொம்ப நாளாக கேட்க நினைத்தது. முஸ்லிம் பதிவர்கள் மாற்று மதத்தவரை சகோதரர் என்று உரிமையாக அழைக்கிறீர்கள். அதேமாதிரி உயர்சாதி வலைப்பதிவர்களால் ஏன் அழைக்க முடிவதில்லை?

Anonymous said...

I have visited your blog and read all posts. Excellent, I can say.
By logic, your articles proved its value. Yours is a non aggressive writing.

I pity for those who put their nose into religious dialogues asif they knew all, and got nothing but nosecut.

Anybody, whether he is a Hindu or Muslim or Christian want to reform religious matters let them begin with their own religion. It will reduce the noice of barking in the soceity, I belive.

Anonymous said...

//இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.//என்று எழில் முந்தைய பதிவில் தெரிவித்திருந்தார். பார்ப்பணிய ஆதிக்கவாதிகளைத் தான் தன் பாணியில் 'இந்து' என்று அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்துக்கொண்டாலும், இப்போது ஒப்புதல் வாக்குமூலம் போல புதிய பதிவிட்டிருக்கிறார் - இந்து என்று சொல்லிக்கொள்கிற 'ஆரிய ஆதிக்கசாதிகள்' பிறமதங்களையும் அரசியல்படுத்த விரும்புகிறார்கள் என்பதற்கு உதாரணமாயிருக்கிறது அந்தப் பதிவு. 'பிழைப்பு'க்காக என்றால் 'பிழைப்பு நடந்தால் சரி' என்று சொல்லி வைக்கிறேன்.

said...

சகோதரர் மரைக்காயர்,

முஸ்லிம்களை அன்பொழுக இந்து மதத்துக்கு அழைத்த எழில் என்ற முகமூடி அணிந்தவர் தங்களின் பதிலை எதிர்கொள்ள முடியாமல் திணறிப்போய், இப்போது முஸ்லிம்கள் குறித்த சச்சார் அறிக்கை மீதான பிரதமரின் அறிக்கையால் வெகுண்டு ஆத்திரத்தை அடக்க மாட்டாமல் வயிற்றெரிச்சலில் புதிய பதிவொன்றை எழுதியுள்ளார்.

இப்போது புரிகிறதா இவரது கரிசனத்தின் எல்லை?

என்னதான் முயன்றாலும் நல்லபிள்ளை 'வேசம்' கலைந்துவிடும்.

அந்த வேசத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக உங்களுக்கு நன்றி.

said...

அன்பு சகோதரர் மரைக்காயர்,

உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதத்தான் இருக்கிறேன். நாளை அல்லது மறுநாள்.

நடுவில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியுள்ளதை படித்தபோது பகிர்ந்துகொள்ள தோன்றியது. வயிற்றெரிச்சல் ஏதும் இல்லை. அவர் கூறியுள்ளது உண்மைதான். ஆனால், அதனை பகிரங்கமாக சொல்வது சரியல்ல என்று கருதினேன். வேண்டுமென்றே பாஜகவை தூண்டிவிடும் நோக்கத்தோடு கூறியது போன்று எனக்குத் தோன்றியது. அதுதான் ஏன் என்று ஆச்சரியப்பட்டிருந்தேன்.

மற்றபடி சச்சார் கமிட்டி பற்றியும் ஆழ்ந்து படிக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களது வறுமைக்கும் கல்வியின்மைக்கும் அரசாங்கம் காரணமல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். அதனை அந்த பதிவிலேயே குறித்திருக்கிறேன்.

நட்புடன்
எழில்

said...

வேதங்கள் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை ஒன்றை பகுத்தறிவு இந்த வலைப்பதிவில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டுரை வேதங்கள் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும்வகையில் அமைந்திருக்கிறது.

said...

பிரதமர், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றுதானே சொல்லி இருக்கிறார்; இன்னும் வழங்கப்படவில்லையே? அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலை கருத்தில் கொண்டு, முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கனிசமாக அருவடை செய்ய வழக்கமாக அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டுவங்கி அரசியல்தான் இதில் அடங்கி இருக்கிறது. இதை வைத்து பாரதிய ஜனதா, பிரதமருக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடுவது பெரும்பான்மை ஓட்டு வங்கியை புதுப்பிக்கவே.

"இந்துக்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் கடந்த 2000 வருடங்களாக இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு இது பெரிய பிரச்னை அல்ல. அவர்களுக்கு இது பழகிப்போய்விட்டது." - ஞாயிறு, 10 டிசம்பர், 2006 எழில் கூறியது...

மரைக்காயர் கேட்டது போல் எந்த இந்துக்களைச் சொல்கிறீர்கள்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.தேவைப்படும் போதெல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாகச் சொல்வது;

இந்திய முஸ்லிம்களுக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டால் ஏற்கனவே பங்களாதேஷ், பாகிஸ்தான் என்று ஏற்கனவே வழங்கப்பட்டு ?!விட்டதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்!

இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதும் (அவசியப்பட்டால் அஹமதியாக்களையும் சேர்த்துக் கொள்வது); பாபர் மசூதியைச் சொன்னால் பங்களாதேசில் இந்துக் கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது; குஜராத்தில் முஸ்லிம்கள் மாநில அரசு, முதல்வர் உதவியுடன் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு அகதிகளாக்கப்பட்டார்கள் என்றால் காஷ்மீரிலும் பண்டிட்களும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பது.

ஹாஜிகள் கொடுத்த முன்பணத்தில் அடைந்த இலாபத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது திரும்பக் கொடுக்கும் சொற்ப தொகைக்குப் பெயர் மானியமாம்! மானியமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,ஹாஜிகள் விரும்பிய விமானத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கச் சொல்ல வேண்டியதுதானே! தயாரா?

Anonymous said...

முஸ்லிம்களா? இந்துக்களா? என்று பாகுபடுத்தி முஸ்லிமல்லாத அனைவரையும் இந்து என்று முஸ்லிம்களுக்கு எதிராகத் திரட்ட முற்படுகிற கயமைத்தனத்திலிருந்து விடுபட்டு முஸ்லிம்களா அல்லது பார்ப்பணர்களா என்று பார்க்க எழில் தயாராகிவிடுவாரானால், வித்தியாசம் அவருக்கே விளங்கும்.

சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் சுதந்திர இந்தியாவில் எப்படி தன் மேலாண்மையை பிற இனத்தவர்களை பலி கொடுத்து மேற்கொண்டது என்பதும், சுதந்திரத்திற்காக விகிதாச்சார அளவில் அதிகம் பங்களித்த இஸ்லாம் சமூகம் எப்படியெல்லாம் பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் காரணம் காட்டி நியாயம் மறுக்கப்பட்டது என்பதும் 'சின்னப்புள்ளை'க்கும் விளங்கும். வீம்புக்காகவும், வெறுப்பாலும் எழில்கள் எதிர்மறைபதிவிட்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.

said...

//ஒரு மரைக்காயர் சிவபாலனாக ஆகவேண்டுமென்று அவாவுறுகிற திருவாளர் எழிலார் குரூப் ஒரு செங்கோடனை சாஸ்திரியாக்க என்ன செய்திருக்கிறார்கள்? சொல்ல முடியுமா?//

பறை அடித்து மக்களுக்கு செய்தியை சொல்லிக் கிராம துப்புறவுத் தொழிலலாளியாக இருக்கிறேன். இன்னும் கொஞ்சநாளில் நகர துப்புறவுத் தொழிலாளியாய் ப்ரோமோஷன் கிடைத்து மாற்றலாகி விடுவேன்.

நல்ல சூழ்நிலையைக் கெடுக்கும்படியாய் சாஸ்திரி வேலைக்கு என் பெயரை சிபாரிசு செய்யும் அனானியை கண்டிக்கிறேன்

Anonymous said...

//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் //

அதாரம் இல்லமல் எழுதாதிங்க. யார்? யாரை காட்டிக் கெடுத்தார்கள்?

said...

//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் //

அதாரம் இல்லமல் எழுதாதிங்க. யார்? யாரை காட்டிக் கெடுத்தார்கள்?


வாஜ்பாய் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்ததே!

ஒன்றும் தெரியாததுமாதிரிக் கேட்டால் உண்மை உறங்கி விடுமா அண்ணா'னி'

said...

//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் //

அதாரம் இல்லமல் எழுதாதிங்க. யார்? யாரை காட்டிக் கெடுத்தார்கள்?


வாஜ்பாய் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்ததே!

ஒன்றும் தெரியாததுமாதிரிக் கேட்டால் உண்மை உறங்கி விடுமா அண்ணா'னி'

Anonymous said...

//இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்து மதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். //

இந்த வாதம் முழுக்க நேர்மையானதில்லை என்று நினைக்கிறேன். இன்று நாட்டின் தன்னார்வ சேவை நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல இந்து அமைப்புகள் முன்னணியில் இருக்கின்றன. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அமைப்பு என்றே திருப்பித் திருப்பிச் சொல்லி வருவதால் அந்த இயக்கம் பற்றிய முழுத் தகவல்கள் பெரும்பாலும் போய்ச் சேரவில்லை.

நாம் பணிபுரியும் புவனேஷ்வர், மற்றும் ஒரிஸ்ஸா முழுவதும் சாதி ஒழிப்புக்காக அதிகம் பிரசாரம் செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி ஆட்கள் தான். காங்கிரஸ் தான் இங்கே சாதி அரசியல் நடத்துகிறது.

ஆனால் வேறு சில இடங்களில் முஸ்லீம் எதிர்ப்பையே பெரிதாகச் செய்கிறார்கள். இடத்துக்கேற்ற தந்திரங்கள் போலும்!

Anonymous said...

//முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பாருண்டோ எருமையே
காலிற் பிறப்பது முண்டோ கழுதையே!
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எலாம்போக்கிலியே!

என்று செவிட்டில் அறைந்தாற்போல பாட்டு என்னும் சோட்டால் அடித்தாரே பாரதிதாசன்//
இது சூப்பர்.

said...

அநியாயத்துக்கு நிதானமாக எழுதுகிறீர்கள் மரைக்காயரே!

பாராட்டுகள்!

Anonymous said...

நிதானமான போக்கு உங்களது வெற்றி...

said...

//மானியமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,ஹாஜிகள் விரும்பிய விமானத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கச் சொல்ல வேண்டியதுதானே! தயாரா?//

அருமையான கேள்வி நல்லடியார் அவர்களே! ஆனால் பதில்தான் வராது. 'மானியம் கொடுக்கிறோம்' என்று சொல்பவர்களும் அரசியல்வாதிகள். 'அய்யோ! மானியம் கொடுக்கிறார்களே!' என்று கூப்பாடு போடுபவர்களும் அரசியல்வாதிகள். இவர்களுக்கெல்லாம் ஒட்டுக்களின் மீதுதான் கண். சிறுபான்மையினர் நலன் என்பதெல்லாம் சும்மா கண்துடைப்பு.

said...

இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் சகோதரர்கள் பல அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். வேலைப்பளுவினால் என்னால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்க்கும் தனித்தனியாக பதில் எழுத முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.

சகோதரர்கள் நல்லடியார், ஸயீத், ஜி, சுல்தான், அறிவுடைநம்பி, முஸ்லிம், சவூதி தமிழன், வணங்காமுடி, தஞ்சை கண்ணன், அட்றா சக்கை, செங்கோடன், பூமராங், கோபால், அழகு மற்றும் அனானிமஸாக கருத்துக்களை பதிந்தவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பதிவில் சொன்னதை விட இந்தப் பின்னூட்டங்களில் பல சிறப்பான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சகோதரர் எழில் இந்தப் பதிவிற்கு பதில் எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. விரைவில் அவருக்கு பதில் எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.