Monday, December 04, 2006

கடமை தவறும் பி.ஜே.பி!

குமுதம் ரிப்போர்ட்டரில் திரு. சோலை எழுதிய கட்டுரை!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில், அடுத்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகிவிடும்.

இதுவரை நாடாளுமன்றமும், மாநிலங்களவையும் எப்படிச் செயல்பட்டன? ஜனநாயக தேவதை சந்தியில் நிறுத்தப்பட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

முன்னர், ஆட்சிப் பீடத்தில் இருந்த பி.ஜே.பி. இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. என்ன காரணத்தினாலோ, அந்தக் கட்சி ஆரம்பம் முதலே ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துக் கொண்டிருக்கிறது.

அதிகாரத்தை இழந்துவிட்ட ஆத்திரம் என்பதா? சகிப்புத்தன்மைக்கு சந்நியாசம் கொடுத்துவிட்டதா? அந்தக் கட்சியின் தலைவர்கள் மரியாதைக்குரியவர்கள். ஆனால், இன்றுவரை அவையை முழுமையாக ஒத்தி வைக்கும் அளவிற்கு முரட்டுத்தனமாகவே நடந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு முறை அவை கூடும்போதும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அழைக்கின்றார். அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்புத் தாருங்கள் என்று கோருகிறார். சரி என்று பி.ஜே.பி. தலைவர்களும் சொல்கிறார்கள். ஆனால், மன்றத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறார்கள்.

எந்தெந்தப் பிரச்னைகளை முன்னிறுத்தி அவையை பி.ஜே.பி. முடக்கியது என்று பார்த்தால், வேடிக்கையாகவும் இருக்கும். வேதனையாகவும் இருக்கும். மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி அவையில் விவாதம் கோருவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. ஆனால், அப்படி எந்தப் பிரதான பிரச்னை மீதும் பி.ஜே.பி. விவாதம் கோரியதில்லை. ஏதாவது சாதாரணக் காரணம் கூறி சபையை முடக்கி விடுகிறார்கள்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. முதல் நாளே சபாநாயகரை பி.ஜே.பி. முற்றுகையிட்டது. ‘நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அஃப்சலைத் தூக்கில் போடு’ என்று மன்றத்தில் ரகளை செய்தனர்.

அஃப்சலை சபாநாயகர் பாதுகாப்பாக வைத்திருக்கிறாரா? தூக்கில் போடும் அதிகாரம் அவருக்கு உண்டா? அல்லது தூக்குக் கயிறைத் திருடிக்கொண்டு வந்து விட்டாரா? அவரைச் சுற்றி நின்று, ‘தூக்கில் போடு, தூக்கில் போடு’ என்று ரகளை செய்தனர்.

தண்டனையை எதிர்த்து முகமது அஃப்சல் மேல்முறையீடு செய்திருக்கிறார். குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பியிருக்கிறார். தண்டனையை எதிர்த்து மீண்டும் அவர் உச்சநீதிமன்றத்தை நாடமுடியும் என்று வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில், அவரைத் தூக்கில் போடு என்றால் என்ன அர்த்தம்? பி.ஜே.பி. தங்கள் பிறவி எதிரியாகக் கருதும் இஸ்லாமியச் சமுதாயத்தின் ஒரு புதல்வன் என்பதால்தான், நடைமுறைகள் முழுமையாவதற்கு முன்னரே தூக்கில் போடச் சொல்கிறார்களா?

லாகூர் சிறையில் ஒரு சீக்கிய சகோதரன் தூக்கு தண்டனைக் கைதியாக இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியாவில் இதயம் உள்ள அனைவரும் குரல் கொடுக்கிறார்கள். அந்த அணியில் நாடாளுமன்ற பி.ஜே.பி உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவும் இருக்கிறார். அவர் ஓர் அணியோடு இந்தியா _ பாகிஸ்தான் வாகா எல்லைக்குச் சென்றார். ‘லாகூர் சிறையின் தூக்குக் கொட்டடியில் இருக்கும் சீக்கிய சகோதரனை தூக்கில் போடாதீர்கள்’ என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதனை மனிதாபிமானம் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், முகமது அஃப்சலைத் தூக்கில் போடு என்று நாடாளுமன்றத்தை பி.ஜே.பி. முடக்குவதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

இந்த இரட்டை அளவுகோல்தான் இந்துத்துவ சக்திகளின் நீதியாகும். ஒரு சமுதாயத்தையே வெறுப்பது கற்கால சமுதாயம் கண்ட நியதியாகும். மக்கிப்போன அந்த இறந்த காலத்தின் நியதியை இப்போது பி.ஜே.பி. நீதி என்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்து. தீவிரவாதிகளிடம் மைய அரசு மென்மையாக நடந்துகொள்கிறது என்று பி.ஜே.பி. குற்றம் சாட்டுகிறது. அதற்காகவும் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் என்றது. உள்நாட்டுப் பாதுகாப்பை அபாயத்தின் விளிம்பிற்கே இழுத்துச் சென்றது இதே பி.ஜே.பி.தான். இதே அத்வானிதான்.

என்றைக்கு அயோத்தியில் அத்வானி தலைமையில் பாபர் மசூதியை இடித்தார்களோ, அன்றைக்குத்தான் தீவிரவாத நெருப்பு கனியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பற்பல நகரங்களில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. இரு சமுதாயங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், நெருப்பு வைத்தவர்கள் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொண்டனர்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாகத்தான் மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. அங்கேயும் ஏதுமறியாத அப்பாவி மக்கள்தான் பலியானார்கள். அந்த அநியாய மரணங்கள் இவர்களுடைய கணக்கில்தான் வரவு வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கே பதில் சொல்ல முடியாது தவிப்பவர்கள் இன்னொரு உயிரைத் தூக்கில் போடு என்று நாடாளுமன்றத்தையே அசிங்கப்படுத்துகிறார்கள்.

நேபாளத்திலிருந்து டெல்லிக்குப் பறந்து வந்த இந்திய விமானம், இவர்களுடைய ஆட்சியில்தான் ஆப்கானிஸ்தானத்து காந்தகாருக்குக் கடத்தப்பட்டது. கடத்திய தீவிரவாதிகள் விடுதலை செய்யச் சொன்ன பயங்கரவாதிகளையெல்லாம், இவர்கள் விடுதலை செய்தார்கள். அவர்களை காந்தகாருக்கு அழைத்துச் சென்று, தீவிரவாதிகளிடம் பத்திரமாக ஒப்படைத்ததும் பி.ஜே.பி.யின் பெரிய மனிதர்தான். இவ்வளவு மென்மையாக மன்மோகன் சிங் அரசு நடந்துகொள்ளவில்லை.

கரையேறத் தவிக்கும் அலைகளைப்போல, பி.ஜே.பி. ஆட்சியில் இரண்டு சமுதாய மக்களும் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஊருக்குள்ளேயே இருவேறு சமுதாயங்களைப் பிரிக்கும் தடுப்புச் சுவர்களை எழுப்பினார்கள். அத்தகைய அவலமும், கேவலமும் மன்மோகன் ஆட்சியில் இல்லவே இல்லை.

குஜராத்தில் நரேந்திர மோடிகள் மனித வேட்டை நடத்தினார்கள். கிராமங்களெல்லாம் அக்கினிக்கு இரையாகின. கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகளைக் கிழிக்கும் கோரங்களெல்லாம் நடந்தன. அந்தப் படுகொலைகள் இன்றைக்கும் உலக அரங்கில், இந்தியாவின் அவமானச் சின்னங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. அத்தகைய குலை நடுங்கும் ரத்த வெறிப் ‘பாதுகாப்பை’ மன்மோகன் சிங் ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது.

‘அய்யோ! உள்நாட்டில் பாதுகாப்பு இல்லையே’ என்று வாடகைக் கண்ணீர் வடிக்கும் இவர்களுடைய ஆட்சியில்தான், நாடாளுமன்றமே தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அன்றைக்கு அந்த மன்றத்தைத் தீவிரவாதிகள் நாசப்படுத்த முனைந்தனர். இன்றைக்கு அந்த மன்றத்தைத் தேவையற்ற கூச்சல்களால் இவர்கள் தலைகுனிய வைக்கிறார்கள்.

இன்றைக்கு எத்தனை எத்தனையோ பிரச்னைகள் எதிர்நோக்கியிருக்கின்றன. ஒரு பக்கம் விலைவாசி வானத்தில் ஏறிக் கூத்தாடுகிறது. இன்னொரு பக்கம் பொருளாதார மண்டலம் என்ற பெயரால் உழவர்களின் ஒரே சொத்தான நிலங்கள் பறிபோகின்றன. இந்திய _ அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பொன் விலங்கா? பூ விலங்கா? என்று தெரியாது குழம்பிக் கொண்டிருக்கிறோம்.

எதிர்காலமே இளைய தலைமுறைக்கு இருள்மயமாகத் தெரிகிறது. சொல்லத் தெரியாத சோகத்தில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உண்டா? இந்தக் கூட்டத் தொடரிலாவது அதற்கான மசோதா அரங்கேறுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நதி நீர்ப் பிரச்னைகள் பொறுமை கடந்து அணைகளை உடைக்கும் அபாயத்தில் இருக்கின்றன. இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்னைகளை நாடு எதிர்நோக்கியிருக்கிறது. அவைகளை விவாதிப்பதற்குத்தான் நாடாளுமன்றம். அந்த மன்றத்தில் எதிர்க்கட்சியின் பணிதான் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஆனால், அஃப்சலை தூக்கில் போடு என்று முற்றுகையிட்டு, நாடாளுமன்றத்தை பி.ஜே.பி. கொலைக்களமாக்கப் பார்க்கிறது. இதுதான் இப்போது இந்தியாவின் தலையாய பிரச்னையா?

முகமது அஃப்சலுக்குத் தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம். அவருடைய கருணை மனு காத்திருப்பது ஜனாதிபதி மாளிகையில்.

அவருக்கு என்ன தண்டனை என்று இறுதி முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்றம் அல்ல.

எதிர்க்கட்சி என்ற முறையில் பி.ஜே.பி. தொடர்ந்து தனது கடமையைச் செய்யத் தவறி வருகிறது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் - 03.12.06

2 comments:

said...

//லாகூர் சிறையில் ஒரு சீக்கிய சகோதரன் தூக்கு தண்டனைக் கைதியாக இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியாவில் இதயம் உள்ள அனைவரும் குரல் கொடுக்கிறார்கள். அந்த அணியில் நாடாளுமன்ற பி.ஜே.பி உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவும் இருக்கிறார். அவர் ஓர் அணியோடு இந்தியா _ பாகிஸ்தான் வாகா எல்லைக்குச் சென்றார். ‘லாகூர் சிறையின் தூக்குக் கொட்டடியில் இருக்கும் சீக்கிய சகோதரனை தூக்கில் போடாதீர்கள்’ என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதனை மனிதாபிமானம் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், முகமது அஃப்சலைத் தூக்கில் போடு என்று நாடாளுமன்றத்தை பி.ஜே.பி. முடக்குவதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?//

அவங்க ஆளுங்கனாதான் அவங்களுக்கு மனிதாபிமானம் பீச்சியடிக்கும்

மத்தவங்களதான் மனுசனாவே மதிக்கலியே அதுகள் அவர்களை யாரும் மதிக்கவில்லை என்பது வேறு விடயம்.

இவர்களிடம் இருந்து கடமையை எதிர்பாக்குறது தப்புங்கனா

said...

..இவர்களிடம் இருந்து கடமையை எதிர்பாக்குறது தப்புங்கனா..

ரொம்ப சரியா சொன்னீங்க இறையடியான்.