Wednesday, December 13, 2006

சச்சார் அறிக்கையும் சுஷ்மாவின் போலிக் கண்ணீரும்!

ராஜேந்தர் சச்சார் குழுவின் அறிக்கை என்ன சுட்டிக்காட்டுகிறது என்பதை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் "இந்துத்துவவாதிகள் புளுகுவது போல முஸ்லிம்கள் தாஜா செய்யப்படவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்''.

ஆனால், என்றுதான் உண்மைகளை ஒப்புக் கொண்டிருக்கிறது சங்பரிவாரம்? இந்த அறிக்கை முழுவதும் ஒருசார்பானதாகவும், பாரபட்சமானதாகவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.

'இந்த அறிக்கை முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்று கட்சி (பாஜக) உறுதியாக நம்புவதாகவும், சமுதாயத்தில் மேலும் பிளவுகளையே உருவாக்கும் என்றும், சிறுபான்மையினர் மீதான காங்கிரஸ் அணுகுமுறையே முஸ்லிம்களின் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.' (தி ஹிந்து 2-12-06)

வெறும் அறிக்கை யாருக்கும் எதையும் செய்து விடப் போவதில்லை. இதைச் சொல்ல சுஷ்மா ஸ்வராஜ் தேவையில்லை. அது அவருக்கும் தெரியும். ஆனாலும் இப்படிச் சொல்வதன் நோக்கம் முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை நடந்துவிடுமோ என்று வயிற்றெரிச்சலில் பொருமுகிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அப்படி அந்த அறிக்கையின் மீது எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற கெட்ட எண்ணத்தில், "இந்த அறிக்கை மேலும் பிளவுகளையே உருவாக்கும்' என்று பயமுறுத்துகிறார்.

நடவடிக்கை எடுக்கப்பட்டால் பிளவுகளை உருவாக்குவார்கள் போலும். முஸ்லிம் களின் இன்றைய நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றால் என்ன அர்த்தம்? காங்கிரஸ் அவர்களது வாழ்நிலையை முன்னேற்ற எதுவும் செய்யவில்லை என்று தானே அர்த்தம்? அது ஒரு வகையில் பெருமளவு உண்மைதான். ஆனால் காங்கிரஸ் முஸ்லிம்களைத் தாஜா செய்வதாக இத்தனை நாள் சங்பரிவாரம் புலம்பியது அப்பட்டமான பொய் என்பதை சுஷ்மாவே ஒப்புக் கொண்டு விட்டார். இதுவே அவரது பேச்சின் சாராம்சம்.

ஒருபக்கம் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதச் சிறுபான்மையினரையும் அடக்கி ஒடுக்கி ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், அவ்வப்போது முஸ்லிம் பெண்களின் நிலைமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அதை இப்போதும் செய்திருக்கிறார் சுஷ்மா. 'முஸ்லிம்களுக்குள் பாலினப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவையும் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் ஏன் ஒரு பெண் முஸ்லிம் உறுப்பினர் கூட இந்தக் குழுவில் இல்லை' என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

இந்துப் பெண்களின் நிலைமை மட்டும் ஏதோ சுபிட்சமாக இருப்பது போல் இவர் முஸ்லிம் பெண்களைப் பற்றிக் கவலைப்படுகிறார். பெண் கருக்கொலையும், பெண் சிசுக்கொலையும், வரதட்சணைக் கொலையும் தங்கு தடையின்றி நாட்டில் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி இவருக்கொன்றும் தெரியாது போலும்.

நாட்டின் பல மாநிலங்களில் ஆண் - பெண் விகிதாச்சாரம் பெண்களுக்கு எதிரான வகையில் மோசமாகிக் கொண்டிருப்பது பற்றியும் இவருக்கொன்றும் தெரியாது போலும்.

இதற்கெல்லாம் காரணமான இந்துக் கலாச்சாரம் அடிப்படையிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

மேலும், சங்பரிவாரிகள் இருக்கும் இடங்களில் எந்த இந்துப் பெண்ணின் கணவனாவது இறந்து போனால், அந்தப் பெண் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். அசந்தால் கணவனின் சிதையில் தூக்கிப் போட்டு உயிரோடு கொளுத்தி விடுவார்கள். சதிமாதா என்று கோவில் கட்டி கதையை முடித்து விடுவார்கள். இந்த லட்சணத்தில் இவர் முஸ்லிம் பெண்கள் பற்றி கவலைப்படுகிறார்.

உண்மையில் முஸ்லிம்களில் அண் - பெண் விகிதாச்சாரம் இந்துக்களை விட கணிசமான அளவு பெண்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அதாவது பெண் சிசுக் கொலையோ அல்லது மரணமோ முஸ்லிம்களில் மிகக்குறைவாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. அது மட்டுமல்ல, இந்திய முஸ்லிம் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கணக்கெடுப்பின் விவரங்களை ஆய்வு செய்த ரீது மேனன் மற்றும் ஜோயா ஹாசன் அகியோர் வெளியிட்டுள்ள நூலும் இதை உறுதி செய்கிறது.

அது சரி. முஸ்லிம்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதையே எதிர்த்த காவிக் கும்பல் வேறு மாதிரியா பேசும்?

- எம். அசோகன் - தீக்கதிர் (7-12-06)
நன்றி: தமுமுக

6 comments:

Anonymous said...

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்த நிஜம் வெளிப்பட, எங்கே முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மை நடந்துவிடுமோ என்ற எரிச்சலில் சுஷ்மா பேசியிருக்கிறார். இதே எரிச்சலில் தான் தமிழிலும் சிலர் பதிவெழுதுகிறார்கள்.

*Anbu

said...

அன்பு, உங்கள் கருத்துக்கு நன்றி.

said...

சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் தேவையா என்ற தலைப்பில் தங்கவேல் என்பவர் ஒரு பதிவிட்டுள்ளார். அங்கு பதிந்த என் பின்னூட்டத்தை இங்கு தருகிறேன்:

நல்ல புரிதலுடன் எழுதியுள்ளீர்கள்.
சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆதிக்கசக்திகள் நினைக்கின்றன. நிஜத்தில் ஒடுக்கப்படுவது குறித்த புரிதல் உள்ளவர்கள் சேர்ந்துவிட்டால் அவர்கள் தாம் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

சிறுபான்மையினர் குறித்து அரசு ஏதும் அக்கறையாக சொல்லிவிட்டாலே, அலறி மாரில் அடித்துக்கொள்ள இங்கு ஆதிக்கவர்க்கம் ஆயத்தமாயிருக்கிறது. இதன் நீட்சியாகவே இங்கு பிறமதத்தவர் மீதான (பரஸ்பரம்) எழுத்துவன்முறையும் இங்கு நிகழ்கிறது.

'கோடியில் ஒருவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுப்பதே, காலமெல்லாம் அதைச் சொல்லிக்காட்டி, கோடிக்கணக்கானப் பேருக்கு கிடைக்கவேண்டிய குமாஸ்தா பதவிகளைத் தடுக்கும் குயுக்தியாகவே தெரிகிறது' என்று நண்பர் ஒருவர் சொன்னார். மிகையில்லை.

Anonymous said...

Why female literacy among muslims is so low.who is preventing muslim
women from getting access to education.If christians are doing
so well in education why is that muslims are so backward.All because of the refusal of muslims
to join mainstream and their conservative outlook.

said...

//சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆதிக்கசக்திகள் நினைக்கின்றன. நிஜத்தில் ஒடுக்கப்படுவது குறித்த புரிதல் உள்ளவர்கள் சேர்ந்துவிட்டால் அவர்கள் தாம் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.//

சிந்திக்க வேண்டிய கருத்து. நன்றி தமிழ் மகன்.

said...

சிறுபான்மையினருக்கு அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனில் அதை அவர்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுப்போம். அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம் என்ற பரிவாரங்களுக்கு சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொன்னால் பொறுக்க முடியுமா? முடியாது அதுதான் பொங்கியெழுகிறார்கள் தரணியை ஆளப்பிறந்தவர்கள் போல.

-முஸ்லிம்