Friday, February 23, 2007

லேப்டாப்பில் மாட்டிறைச்சி தேடிய பஜ்ரங்தள்!

வெளிநாட்டுப் பயணிகளிடம் வழிப்பறி செய்த பஜ்ரங்தள் கொள்ளையர்கள் கைது!

சங்பரிவார் இயக்கத்தினர் தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த கோர்டன் (44) மற்றும் ஜேக்கப் (52) என்ற இருவரிடம் வழிப்பறி செய்து கையும் களவுமாக பிடிபட்டனர்.

இந்தச் சம்பவம் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் சிண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள பாஜிபானி கிராமத்தில் நடந்துள்ளது.
வெளிநாட்டுக்காரர்களான கோர்டனும் ஜேக்கப்பும் Western Coal Fields Limited என்ற நிலக்கரி நிறுவனத்துக்காக பணி செய்ய வந்துள்ளனர். இவர்கள் தங்களின் பணி தொடர்பாக நாக்பூரிலுள்ள தலைமை அலுவலகம் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 20 பேர் கொண்ட பஜ்ரங்தள் குண்டர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து தாக்கியது. வாகனத்தை நொறுக்கியதோடு லேப்டாப் கம்ப்யூட்டரையும் மொபைல் போன்களையும், பணம் வைக்கப்பட்டிருந்த கைப்பைகளையும் திருடிக் கொண்டு ஓடியிருக்கின்றனர். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப் பதாகவும் மேலும் 11 பேர் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் சின்ட்வார மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.கே.சிஹோர் தெரிவித்தார்.

வெளிநாட்டுக்காரர்கள் இருவரும் தங்கள் தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூருக்கு சென்றுவிட்டு பின்னர் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் வழிப்பறி செய்யப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முறை யான முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தாய்நாடு புறப்பட்டனர்.

'இது தவறாக நடந்துவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டில் தாக்கப் பட்டது, வழிப்பறிக்கு உள்ளாக் கப்பட்டது மிகவும் கேவலமானது' என்றும், இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் சின்ட்வாரா பகுதியின் முக்கிய பஜ்ரங்தள் பிரமுகர் ராஜு கர்னாகர் முதலில் கூறினார்.

ஆனால் பிறகு அந்தர்பல்டி அடித்த அவர் 'வெளிநாட்டுக்காரர்கள் இருவரும் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக எங்கள் ஆட்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவர்களை சோதனைதான் செய்ததாக' மழுப்பினார்.

மாட்டிறைச்சிக்காக சோதனை செய்தவர்கள் லேப்டாப்பையும் மொபைல் போன்களையும் பணப்பைகளையும் ஏன் பறிக்க வேண்டும்? மாட்டிறைச்சியை லேப்டாப்பிலா கொண்டு போவார்கள்?

மத்தியப் பிரதேச - மகாராஷ்டிரா எல்லை வழியாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் அதனை தாங்கள் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் எந்த நிலையிலும் எங்கள் மாடு பிடிக்கும்(!) லட்சியத்தைக் கைவிட மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

இவை அனைத்துமே பொய் என்கிறது போலீஸ். வெளிநாட்டுக்காரர்கள் கொண்டு சென்ற இறைச்சியை கால்நடை மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து பார்த்தபோது கோழி இறைச்சி என்பது தெரிய வந்தது என தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் ஒருவேளை மாட்டிறைச்சியையே இரண்டு வெளிநாட்டுக்காரர்களும் கொண்டு சென்றிருந்தாலும் கூட அதைத் தடுக்க இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்தனர்.

அதோடு தீவிர சோதனைக்குப் பிறகு காவிக் கும்பலால் களவாடப்பட்ட மொபைல் போன்களும், பணப்பையும், லேப்டாப் கம்ப்யூட்டரும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச - மராட்டிய எல்லையில் வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் வழிப்பறியிலும் பஜ்ரங்தள் இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி முஸ்லிம்களும் ஏழை தலித்களும் இவ்வாறு முடக்கப் பட்டு தீங்குகள் இழைக்கப்பட்டபோது ஓடிவராத பாஜக ஆளும் மத்தியப் பிரதேச அரசின் காவல்துறை, வெளிநாட்டுக்காரர்கள் தாக்கப்பட்ட பின் ஓடி வந்ததற்கு ஒரு 'தந்திர' காரணம் உண்டு என்றும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக இன்றைய அரசுகள் எல்லாம் அந்நிய முதலீடுகளுக்காக ஆலாய் பறந்துவரும் சூழலில் வெளிநாட்டுக்காரர்களிடம் திருடினால், தாக்குதல் நடத்தினால் அந்நிய முதலீடுகள் நின்றுவிடும், எனவே அரசுகளுக்கு பொல்லாத(!) கோபம் வந்துவிட்டது. எனவே, தங்களது செல்ல குரங்குப் படையைக் கூட கைது செய்ய வேண்டிய நிலைக்கு மத்தியப் பிரதேச பாஜக அரசு தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்காரர்களை வழிப்பறி செய்ததின் மூலமாக சர்வதேச அளவில் நாட்டின் மானத்தை கப்பலேற்றிய காவிகள் உருப்படுவது எப்போது?

நன்றி: சுட்டி1, சுட்டி2, சுட்டி3, சுட்டி4

0 comments: