Thursday, October 09, 2008

ஈழத்தமிழர் விவகாரம்: இந்நாள் முதல்வருக்கும் முன்னாள் முதல்வருக்கும் பாராட்டுக்கள்!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் உக்கிரமான போரில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். லட்சக் கணக்கான தமிழர்கள் வீடின்றி உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் திக்கற்றுள்ளனர்.

தமிழர்கள் இவ்வாறு இனப்படுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என்ற வாசகத்துடன் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தமது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பை போல இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

'இது பக்கத்து நாட்டு பிரச்னைதானே? நம் நாட்டில், நமது மாநிலத்தில் நடக்கவில்லையே?' என்று சும்மா இருந்து விடாமல், 'இந்தப் பிரச்னையைப் பற்றி இப்போதுதான் பத்திரிக்கைகளில் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி பிறகு கருத்துச் சொல்கிறேன்' என்று நழுவாமல், அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப் படுவது எந்த நாட்டில் நடந்தாலும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த முதல்வர் கருணாநிதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

தமிழின மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், ரேடார், ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி, அந்த இனப்படுகொலையில் இந்திய அரசும் முக்கியப் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

'இலங்கையில் தமிழர்களைக் குறி வைத்துத்தான் இலங்கை அரசு, தனது ராணுவத்தை முழுமையாக களம் இறக்கி விட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. விடுதலைப் புலிகளின் வீரர்களை மட்டும் குறி வைத்து இலங்கை படைகள் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒட்டுமொத்த படையும், அனைத்துத் தமிழர்களையும் எதிரிகளாக பாவித்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இலங்கை படைகளால் கொன்று குவிக்கப்படுகிறவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அப்பாவித் தமிழ் மக்களும்தான் அதிகளவில் கொல்லப்படுகின்றனர். அதனால் மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் திமுக தனது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்' என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

'இலங்கையில் கொல்லப்படுவது சிறுபான்மையினர்தானே? அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் நமக்கு அரசியலில் ஏதாவது ஆதாயம் கிடைக்கவா போகிறது?' என்று 'நமக்கென்ன?' என்று இருந்து விடாமல், 'பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் ராஜபக்சேவை ஆதரித்தால் நமக்கு பிற்காலத்தில் உதவும்' என்று அரசியல் கணக்குப் போட்டு அவரை தமிழகத்திற்கு அழைத்து, அவர் செய்து கொண்டிருக்கும் 'தீரச்செயல்'களுக்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவிக்காமல், அநியாயமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழின மக்களுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

அப்பாவி மக்களுக்கெதிரான அராஜகங்கள் எங்கே நடந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், அவை நிறுத்தப்பட வேண்டும்!

அராஜகவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தை பிரதிநிதிப்பவர்களாக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

'மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்' - நபிகள் நாயகம்

"ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?" என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் "இல்லை. மாறாக மனிதன் தனது சமுதாயத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள்.

'(நீதி செலுத்துங்கள்! அது) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது.' (திருக்குர்ஆன் 4:135, 5:8)