Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, June 02, 2008

இஸ்லாமும் இந்தியாவும்!

' இஸ்லாமும் இந்தியாவும்' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு. டி.ஞானையா எழுதியிருக்கும் நூலைப் பற்றிய தேவ. பேரின்பனின் விமரிசனக் கட்டுரை.

மத அடிப்படைவாதம் இன்றைய உலக அரசியலில் மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம், இந்து முதலிய மதங்களின் அடிப்படைத்தன்மைகளைப் புதுப்பிப்பது என்ற பெயரால் நவீன அரசியல் ஒன்று நடத்தப்படுகிறது. அது பாசிசத்தையும் பயங்கர வாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு அதன் வழியே அறிவிக்கப்படாத போர் ஒன்றும் உலகு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இது யாருடைய போர்? எதற்காக நடத்தப்படுகிறது? யாருடைய நலனுக்காக இந்த மனிதப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உலகச் சந்தை செயல்பாட்டிலிருந்தே விடை காண முடியும். காலனிய காலங்களில் பழமையாளர்களாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் தேசிய அளவில் வளர்க்கப்பட்ட மத வகுப்புவாதம் இன்று உலகு தழுவியதாகவும், மக்களின் குடிமை வாழ்வில் அதிகாரத்தோடு தலையிட்டு கொலைவெறியாகவும். பாசிசமாகவும் மாறிவிட்டது.

அது இப்போது உலக மயத்தை இயக்கும் மூலதன சக்திகளின் அரசியல் கருவியாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சாமுவேல் ஹட்டிங்டனின் ‘பண்பாடுகளின் மோதல்’ கோட்பாடு ஏகாதிபத்தியத்தின் கொள்கையியலாகப் போற்றப்படுகிறது.

இதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல நிலைகளில் வளர்க்கப்பட்ட மதம் சிதைக்கப்பட்டு பாசிசத்தின் கருவியாக இன்று மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.

அடையாள அரசியலின் வழியே இது ஒவ்வொரு தனி நபரையும் அடைகிறது; அவனை வெறியூட்டுகிறது; அவனது மரபுசார்ந்த மதம் என்ற வேரைப் பிடுங்கி அரசியல் அதிகாரத்துக்கான ஒரு கருவியாகுகிறது.

மதம் ஒரு கருத்தியலாக - ஒரு சமூக நிறுவனமாக - ஒரு நம்பிக்கை ஏற்பாடாக - ஒரு தத்துவ முறையின் சாதனமாக சமூக வாழ்விலும், தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல் தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல்பாடாகவே அமைந்தது. அது அரசியல் தன்மையுடையதாகவே வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மதம் என்று எதுவும் இல்லை. மதம் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை. அது என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம் என்றார் டர்க்ஹைம். அந்தச் செயல் வெறும் பண்பாடு வகைப்பட்டதல்ல; பண்பாடு வழியே ஆன அரசியல் பற்றியது. அரசியல் வர்க்கப்போராட்டம் பற்றியது.

மதங்களின் வரலாறு நெடுகிலும் இந்த அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியைக் காணமுடியும். ஏசு சிலுவையில் கொல்லப்பட்டதும், புத்தர் ஆட்சியைத் துறந்ததும், நபிகள் நாயகம் மெதினா ஆட்சியை அமைத்ததும், தமிழகத்தில் சமணர்கள் சைவர்களால் வேட்டையாடப்பட்டு கழுவேற்றப்பட்டதும் இன்ன பிறவும் அரசியல்தான்.

மதம் என்ற எல்லைக்குள்ளேயே மனித நேயத்தை போற்றுவதற்கான மக்கள் நலனுக்கான இயக்கம் அனைத்து மதங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. அதுவும் ஒரு அரசியல் வகைப்பட்ட இயக்கமாகவே இயங்கியது.

மரபு சார்ந்த மானுட உணர்வு மற்றும் நிறுவனம் என்ற வகையில் மக்களை அரசியல் ரீதியாக செயல்படவைக்க அது பயன்படுத்தப்படுவது 20ஆம் நூற்றாண்டு அரசியலில் தீவிரமடைந்தது. காலனியத்தை எதிர்த்த தேசிய புரட்சிகளுக்கு மக்களைத் திரட்ட மதம் புதிய விளக்கங்களைப் பெற்றது. அதே சமயத்தில் முதலாளியத்தின் வளர்ச்சியால் மறையும் வர்க்கங்களின் / சமூகப்பகுதிகளின் நலனைக் காக்கவும் மதப்பழமைவாதம் அரசியலாக வளர்க்கப்பட்டது.

அதே சமயத்தில், முதலாளித்துவப் புரட்சி ஜனநாயக ஆட்சி முறை மதச்சார்பின்மை கோட்பாட்டை அடிப்படையான கோட்பாடாக முன்வைத்தது. இதுவுலகப் பிரச்சனைகளில் மதம் தலையிடக்கூடாது என்ற கொள்கை மக்களின் குடிமை வாழ்விலும், அரசியல்/சமூக வாழ்விலும் மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தது. அறிவியல் மனோநிலையை வளர்ப்பதன் மூலம் இத்தகைய மதச்சார்பற்ற தன்மையை வளர்க்க அரசுகளே செயல்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் மதச்சார்பின்மைக்கு இந்த அடிப்படை உண்டு.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவியலுக்கு எதிரான ‘போலி அறிவியல்’ மேலைய நாடுகளில் வளர்க்கப்பட்டு அடையாள அரசியல் மாற்றாக முன் வைக்கப்பட்டது. அது ‘நாம்’ ‘அவர்கள்’ என்ற இரண்டு எதிர்எதிரான படைப்பிரிவை உருவாக்கியது. இரண்டுக்கும் இடையிலான புனிதப்போரை - அதிகாரத்தை - இதிகாசப்போரை பிரகடனப்படுத்தியது.

மனித உள்ளங்களில் மதவெறி கொண்ட போர் மனநிலை சதா நிலவுவதற்கான கருத்தியல் நியாயங்கள், கோட்பாடுகள் மிகுந்த செலவு செய்து பரப்பப்படுகிறது. தனது அடையாளப் பெருமிதத்தை மீட்பதற்காகவே மதங்களின் பெருமரபு ஒன்றும் ஆக்கப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயத்தின் சுரண்டலை எதிர்த்த கிளர்ச்சிகள் இடதுசாரித் தன்மையை உலகு தழுவிய அளவில் வளர்ந்துவரும் நிலையில் - பெண் விடுதலை - ஒடுக்கப்பட்டோர்; சமூக நீதி போன்ற ஜனநாயக எழுச்சி உருவாகி வரும் நிலையில் கிருத்துவ / இஸ்லாமிய / இந்து மத அடிப்படையிலான ‘பெருமரபு’ ஒன்று அரசியலாக ஆக்கப்பட்டு அந்தப் பெரு மரபுக்கு நிரந்தர எதிரியாக மாற்றுமதம் ஒன்றை முன் வைத்து பண்பாடு அரசியல் ஒன்றை வளர்ப்பதில் ஏகாதிபத்தியம் கவனமாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் வகுப்புவாதம் இன்றைய வளர்ச்சியில் ஒவ்வொருவரின் மூளையையும், இருதயத்தையும் வேட்டையாடிய வண்ணம் உள்ளது. 80சதவீதமான மக்களை இந்துத்துவா அடிப்படையில் திரட்டவும், 15 சதவீதமான இஸ்லாமிய மக்களை எதிர்த்த தர்மயுத்தத்தின் வழியே ராமராஜ்யம் ஒன்றுகட்டவும் ஆன பிரகடனங்களுக்கான கருத்தியல்கள் வலுவாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அறிவியல் மனோநிலை வளர்ச்சி குன்றிய மதச் சார்பற்ற வாழ்நிலை பலவீனமாக உள்ள நிலையில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை கோட்பாடு வகுப்பு வாதத்தின் மதச்சார்பு வாழ்க்கைமுறையோடு கூடிய அரசியல் தாக்குதலால் நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்துத்துவா பாசிசத்தை நோக்கிய கருத்தியல்களை வலுவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் வெளியார்; பழமையாளர்; மாறாதவர்கள்; ஒவ்வாதவர்கள்; சகிப்புத்தன்மையற்றவர்கள்; முரடர்கள்; பயங்கரவாதிகள்; இப்படிஇன்னபிற. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் பொதுவாக ‘அவர்கள்’ என்ற எதிரிப்படையினராக வைக்கப்பட்டு அணுகப்படும் கண்ணோட்டம் இன்று மேலோங்கி வளர்க்கப்பட்டுள்ள சூழலில் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள ஞானையாவின் ‘இஸ்லாமும் இந்தியாவும்’ என்ற இந்தநூல் சிறந்த ஆதார நூலாக வந்துள்ளது.

இஸ்லாமியராக இல்லாத ஒருவர் - கம்யூனிஸ்டாக வாழ்பவர் இத்தகைய நூலை எழுதியிருப்பது நூலுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாம் குறித்த ஆய்வு வகைப்பட்ட அரசியல் நூல் என்ற பெருமையைத் தமிழில் இந்நூல் பெறுகிறது; மார்க்சியத்தின் அடிப் படைகளைத் தளர்த்திவிடாமல் நூலாசிரியர் விவாதத்தை நடத்திச் செல்வது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இந்நூலில் ஞானையா வாசகரோடு ஒரு நீண்ட உரையாடலை நடத்துகிறார்; வலுவான வாதங்களை முன்வைக்கிறார். தனது நியாயங்களை நிலைநாட்டுகிறார். கடைசியில் முஸ்லிம் இந்தியர்களுக்கு அறிவார்த்த மானவேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறார்.

நூலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு விளக்கப்படுகிறது.

மதங்களின் வரலாற்றில் இஸ்லாம்தான் கடைசியில் தோன்றிய உலகளாவிய மதம் என்பது குறிப்பிடத்தக்கது. அராபிய சமூக - பொருளாதார வாழ் நிலையிலிருந்து இஸ்லாம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை எளிய தமிழில் அழகுபட விவரிக்கும் ஆசிரியர் இஸ்லாமின் சமத்துவம் - சமாதானம் குறித்த செய்திகளையும், நெறிகளையும் இஸ்லாமிய அடிப்படைகளை அடியொற்றி விளக்குவது சிறப்பானது. இறைத்தூராக அறியப்படும் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் மக்கள் வாழ்க்கை அவரை வேட்டையாடியது; அவர் மதீனாவுக்கு குடிபெயர்ந்து தனது அரசை நிறுவினார்.

அந்த அரசு மத சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாமிய அரசாக விளங்கியது.

முகமது நபி இறை அவதாரமாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை. அற்புதங்கள் நிகழ்த்தவில்லை. அது ஏக இறைக் கோட்பாடு மானுட நற்செயல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது அமைந்தது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளுக்குப் பிறகு அமைந்த கலிஃபாக்களின் ஆட்சி இஸ்லாமிய அரசை நிறுவியது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய விஸ்தரிப்பும், பிளவுகளும் தோன்றியதையும் அது குறித்த விவரங் களையும் நூல் விவரிக்கிறது. ஆனால், இஸ்லாமிய ஷரியத் சட்டதிட்டங்களை மீறாமல் அதேசமயத்தில் இஸ்லாம் மதத்தின் மனிதநேயம், அறிதலியல் கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவர்கள் நபிகள் நாயகத்தின் ‘திண்ணைத்தோழர்கள்’ என்றழைக்கப்பட்ட அவரது நேரடி சீடர்கள். இவர்கள் வழியே ஏழை எளிய மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அரசு அதிகாரத்தையும், வசதிகளையும் மறுத்த சூஃபிக்கள் இயக்கம் ஏழை மக்களின் பெரு மூச்சாக இயங்கியது. ஆனால் அது அதிகாரப் பூர்வமான இஸ்லாமிய ஏற்பாட்டால் ஏற்கப்படவில்லை.

சூஃபிக்கள் ஆன்மிகவாதிகள் அவுலியாக்கள் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் வழியே பிறதத்துவங்களுடன் இஸ்லாமியதத்துவம் உறவுகொண்டது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் உடைமை வர்க்கச் சார்பு அரசு முறைகளை எதிர்த்தும் இஸ்லாமிய சூஃபிகள் போராடினர். பாரசீகம் தொடங்கி இந்தியா வரை இந்த மரபுபரவியது. இதன் வரலாற்றுப் போக்கைத் தனியாக நூலில் விளக்கியிருந்தால் நூலின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

இந்தியாவில் இஸ்லாமின் வரலாறு குறித்த அத்தியாயங்கள் இந்துத்துவாவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு நல்ல பதிலடியைத் தருகிறது. தமிழகத்தில் இஸ்லாம் என்ற அத்தியாயம் வரலாற்று வழியிலான ஆதாரங்களை வழங்குகிறது. அரபு வணிகர்கள் மூலம் கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இஸ்லாம் வருகை புரிந்தது; மொகலாய படையெடுப்புகள் வழியே இங்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக, மலையாளத்துக்கும், தமிழுக்கும் இஸ்லாமியர் அளித்த பங்களிப்பு இந்த தேசிய இனங்களின் மரபுகளில் ஒன்றாகப் பரிணமித்தது.

இந்திய விடுதலைப்போரின் நீண்டவரலாற்றை முஸ்லிம் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது. நாடு மத அடிப்படையில் பிளவுபட்டதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் பயன் படுத்திக் கொள்ளப்படவில்லை. காங்கிரஸ்-லீக்பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்; தேசிய அரசு அமைக்கப்பட்டு அதில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இணைக்கப்படவேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் கவனத்தில் கூட கொள்ளப்படவில்லை. இதன் விளைவு: மத அடிப்படையில் பிளவு, வரலாற்றின் மிகப்பெரிய குடிபெயர்வு / மதக்கலகம் - படுகொலைகள். இறுதியாக, மகாத்மா காந்தியின் படுகொலை.

1947க்குப் பிறகு கடந்த 60ஆண்டுகளில் இந்துத்துவா சக்திகள் பாசிசத்தன்மையோடு வளர்ந்தற்கான காரணங்கள் முதலாளித்துவ நெருக்கடியின் போக்கிலிருந்து கண்டறிய வேண்டும். 1947க்குப் பிறகு இந்திய முஸ்லிம்களுக்கு என்று அகில இந்திய கட்சி ஒன்று செயல்படவில்லை என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) இஸ்லாமிய சகோதரத்துவம், உலகுதழுவிய இஸ்லாமிய அரசு ஆகியவற்றின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசியல் மறுகட்டுமானம் உலக வளர்ச்சிப் போக்கின் விளைவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.

இது அமெரிக்கா முன்வைக்கும் அரசு பயங்கர வாதத்துக்கு எதிர்விளைவாகவும் வளர்க்கப்படுகிறது. இவை பேரிலான ‘ஜிகாத்’ கருத்தியல் ஏகாதிபத்தியத்தின் வளையத்துக்குள் சிக்கிக்கொண்டதாகவே அமைந்துவிடுகிறது. அராபிய நாடுகளின் மீதான தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா இஸ்லாம் மதத்துக்குள் தலையிட்டு அல்கொய்தாக்களையும், தாலிபான்களையும் தயாரித்தது. குவினை மத அடிப்படை வாத அடிப்படையில் மறுவாசிப்பு செய்வதற்கான மதரஸாக்களின் நடவடிக்கைகளை ஊக்குவித்தது.

இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் ஏகாதிபத்திய அரசியல் சதியின் விளைவுகளில் ஒன்றே ஆகும். எந்தவகையான மத அடிப்படை வாதமும் மொத்த மதத்தையும் அதன் உறுப்பினர்களையும் தனக்கு மட்டுமே உரியதாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால், உண்மை அதற்கு நேர் எதிரானது. மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆராய்ந்து இந்திய முஸ்லிம்களைச் சமூகப் பொருளாதார அடிப்படையில் / அவர்களது வர்க்க வாழ் நிலையின் மீது அரசியல் செயல்பாடு அமையவேண்டும். நீதிபதி சக்கார் குழுவின் அறிக்கை இதில் ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட அத்தியாயம் மிகச்சிறப்பாக வாதங்களை முன்வைக்கிறது.

நூலின் இறுதியில் முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றுவிடப்படுகிறது.

மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு தமது சமூகப் பொருளாதார, பண்பாடு மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை வேண்டுகோள் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்குள் நடைபெற வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் அது பேசுகிறது. இவை பற்றியெல்லாம் இஸ்லாமியர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், அறிஞருமான ஞானையா அவர்களின் நூல் இந்தத் தருணத்தின் தேவையைச் சிறப்பான முறையில் நிறைவுசெய்கிறது.

இஸ்லாமும் இந்தியாவும்
ஆசிரியர்: டி.ஞானையா,
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024,
விலை : ரூ 160.00

நன்றி: கீற்று.காம்

Wednesday, May 28, 2008

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - பேரா. ஆ. சிவசுப்பிரமணியன்

வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

மனுவின் காலம்

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

மனு செய்த கொடுமை

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

தமிழ்நாட்டில் மனுதர்மம்

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’
என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும்செய்யுள் வடிவில் அமைந்தன.

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

நன்றி: விழி

Sunday, January 27, 2008

ஹிட்லர், சாவர்க்கர், மோடி!

விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லக் கட்டாயப்படுத்திய குஜராத் அரசை எதிர்த்து இப்படிக் கூறினார். ''எனக்கு நீரிழிவு நோய் மட்டும் இல்லையென்றால் இந்தத் தள்ளாத வயதில், மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணமடையவே விரும்புவேன்'' என்று கொடூரங்கள் அரங்கேறிய 2002லில் அகமதாபாத்தில் துணிச்சலாகக் கூறினார்.

இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள், தங்கள் கண்டனங்களையும், குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை அல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இவை யாவும் அன்றைய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு பரப்பட்ட இஸ்லாமிய விரோத அரசியலாலும், அதனால் உந்தப்பட்ட பெரும்பான்மை உயர்சாதி ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நடுநிலையார்கள் அறிந்ததுதான்.

அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம்... அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.... கோத்ராவில் ராமபக்தர்களை, இஸ்லாமியர்கள் ரயில்பெட்டிக்குள் அடைத்து தீ வைத்து கொன்றதால் ஏற்பட்ட இந்துக்களின் பதில் தாக்குதல்தான் என்று, திரும்பத் திரும்ப எழுதினார்கள். பேசினார்கள். ஆனால் இதே, ஆக்ஷன் ரீ-ஆக்ஷன் வாதத்தை, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கோ, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கோ இவர்கள் கூறவில்லை. இதை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை.

எட்டு நூற்றாண்டுகள் சிறுபான்மையினரான முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டு வந்தபோது, எதிர்த்துக் கலவரம் செய்யாத இந்துக்கள், இந்துக்களே ஆட்சி செய்யும் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டத்தில் இசுலாமியர்களைத் திட்டமிட்டு அழிக்க வேண்டிய நோக்கமென்ன? 14 சதவீதமான இஸ்லாமியர்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் என்று இந்துத்துவவாதிகள் பரப்பும் கருத்துக்கு உண்மைத் தன்மை உள்ளதா? மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் 80 சதவீத இந்துக்கள் வாழும் நாடு என்றும் பேசி வரும் சங் பரிவார்களின் திட்டம்தான் என்ன?

ஆர்.எஸ்.எஸ். தலைமை நாக்பூரில் இருந்தாலும், அதன் தத்துவ பரிசோதனையை மிகப் பெரிய அளவில் செய்து பார்த்த சோதனைக்கூடம் குஜராத். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் ஐயாயிரத்துக்கும் மேல், சொத்துக்களை இழந்தவர்கள் ஏழாயிரம்பேர். நிம்மதியை இழந்தவர்கள் ஒட்டு மொத்த குஜராத் வாழ் அப்பாவிகள்.

குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில், இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து இந்துக்களோடு இணைந்து வாழ வேண்டுமென்று, தனது ஆட்சியில் புதுப்புது சட்டங்களை கொண்டு வந்தார் மோடி. தங்களது மத, கலாச்சார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாத இஸ்லாமியர்கள், தங்களது தனித்தன்மையை விட்டு கொடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு வந்த துணிச்சலுக்கு காரணம், இந்திய அரசியல் சட்டம்தாதன் என நம்பினார்கள். ஆனால், இந்தியாவில் செயல்படுத்தப்படும் மதச்சார்பற்ற சட்டங்கள், தான் ஆட்சி செய்யும் குஜராத்திற்குள் நுழைய முடியாது என்பதற்கு, உதாரணம் காட்டுவதற்குதான் 'கோத்ரா' என்ற ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம், சங் பரிவார் கற்றுக் கொடுத்த இன அழித்தொழிப்பு பரிசோதனையை செய்து பார்த்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், திரை மறைவில் நடந்த விஷயங்களை மறைத்து, ஆக்ஷன் ரீ ஆக்ஷன் என்ற கருத்து பொதிந்த சென்டிமென்டான நாடகத்தை அரங்கேற்றி, சங்பரிவார் அமைப்புக்குள் ஹீரோவாகவும், பொதுமக்களின் பார்வையில் அப்பாவியாகவும் காட்சி தந்தார் மோடி.

குஜராத் கலவரத்தில் தலைமை தாங்கி நர வேட்டையாடியதே மோடிதான் என்பதை எத்தனையோ நடுநிலையாளர்கள் எடுத்துக் காட்டியும் பெரும்பாலனவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.

ஹிட்லரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட சாவர்க்கரின் கொள்கைகளை அடியொற்றுகிற, தீண்டாமையை கட்டிக் காக்கின்ற, உழைப்பாளி மக்களை சுரண்டுகின்ற, இனக்குழுக்கள் அனைத்தையும் இந்து என்கின்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர நினைக்கின்ற, விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிற ஒரு அமைப்பின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.

குஜராத் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க..வை குற்றம் சாட்டியபோது, 1984ல் டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியது பா.ஜ.க..

சமீபத்தில் யமுனா ராஜேந்திரன் என்ற ஆய்வு எழுத்தாளர் எழுதிய கட்டுரையொன்றில் குஜராத் சம்பவம் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விவரித்திருந்தார். அதில், "கலவரம் துவங்குவதற்கு முன்பாகவே இந்துக்களின் வீடுகளில் காவிக்கொடி அடையாளம் வைத்து, இஸ்லாமியர் வீடுகளை விலக்கி வைத்து காட்டினார்கள் பஜ்ரங்தள் தொண்டர்கள். சபர்மதி எக்ஸ்பிரஸ் தாக்குதல் சம்பவம் வருவதற்கு முன் இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.

பல உண்மை அறியும் குழுக்களும், வாக்காளர் பட்டியல், ரேஷன்கடை அட்டவணை இவைகளைப் பார்த்து தெரிந்து கொண்ட பின்புதான், இஸ்லாமியர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொன்றார்கள். இதற்கு குஜராத் அரசிலுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டன.

பல இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்கள் இஸலாமியப் பெயரில் இல்லாமல், பொதுவான பெயர்களிலும், இந்துப் பெயர்களில் செயல்பட்டு வந்தாலும், அதைச் சரியாகக் கண்டு பிடித்து சங்பரிவார் தொண்டர்கள் அழித்தார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். எவ்வளவு தெளிவான திட்டம்!!

அரசும், காவல்துறையும், இன அழித்தொழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட அமைப்புகளும் இணைந்து நடத்திய குஜராத் வெறியாட்டத்தில் மொத்தம் இறந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மூவாயிரம் என சில அமைப்புகள் கணக்கு சொன்னாலும், வெளியில் வராமல் அமுங்கிப் போன உண்மைகள் ஏராளம்.

இன மோதல், அல்லது இன அழித்தொழிப்பு இவைகளை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டுமென்ற கான்சப்டில்தான், 'ஷாகா' கற்றுக்கொடுக்கும் அமைப்பாக இருந்த சங் பரிவார், பா.ஜ.க. என்ற அரசியல் பிரிவை 1980ல் துவங்கியது. வி.ஹெச்.பி. பஜ்ரங்தள் ஆகியவை கலவரங்களை உருவாக்கும். ஆர்.எஸ்.எஸ். நேரடி களப்பணியில் இறங்கும். அதற்கு பின் பா.ஜ.க. அதை வைத்து அரசியல் செய்யும். 1990ல் ரத யாத்திரையை சோமநாதபுரத்தில் துவங்கி வட இந்தியா முழுவதும் சென்றார் அத்வானி. ரதம் கடந்து சென்ற பாதையெங்கும் இஸ்லாமியப் பிணங்களாக விழுந்தன. அதன் உச்சபட்சமாக 1992ல் அயோத்யாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே நாளில் மகராஷ்டிராவில் பா.ஜ.க. சிவசேனா, போலீஸ் கூட்டணியால் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. இதிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதனால் கோபமுற்று, பீதியடைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தங்களைப் பார்த்து சங்பரிவார அமைப்புகள் அச்சப்படவும், பாகிஸ்தான் உதவியோடு குண்டுவெடிப்பை மும்பையில் நிகழ்த்தினார்கள். இதில் சம்மந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வழங்கு நடந்து, சமீபத்தில் தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பல அப்பாவிகளும் அடக்கம் என்பது ஒரு பக்கமிருந்தாலும், இதுபோன்ற வழக்கு, கைது, விசாரணை, தண்டனை எதுவும், மும்பையில் இஸ்லாமியர்களை கொன்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இன்றுவரை நிதர்சனமான உண்மை.

கோவையிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை போலீஸ்தான் துவக்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஏற்கனவே பா.ஜ.க.வின் ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க தலைவர்கள் பணம் வாங்கிய விவகாரத்தை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய தெஹல்காதான், இன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்களைக் கொலை செய்யச் சொன்னது மோடிதான் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

இதை மறுக்க முடியாத பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர், தெஹல்கா எப்போதும் பா.ஜ.க.வை மட்டுமே புலனாய்வு செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை புலனாய்வு செய்வதில்லை என்று தன் தரப்பை மறுக்க முடியாமல், மற்ற கட்சியிலும் தவறுகள் நடப்பதுபோல் குற்றம்சாட்டியுள்ளார். நீயும் செஞ்சே, நானும் செஞ்சேன் என்பதுபோல்.

வருணதர்மத்தை, எந்த ஆட்சி நடந்தாலும் கட்டிக்காக்கும் உயர்சாதி அரசு அதிகாரிகளைக் கொண்ட மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த பல ஆண்டுகளாக காவல்துறை பதவிகளிலிருந்து, சிவில் நிறுவனப்பதவிகள், முடிவெடுக்கும் அதிகார மையங்களில் இஸ்லாமிய, தலித் அதிகாரிகளும், அறிவாளிகளும் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்ட அமெரிக்காவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் தாக்குதல் பீதியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும்கூட, அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு சகல உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் இது மிகவும் குறைவு.

தெஹல்கா வார இதழின் நிருபர் ஆஷிஸ் கேத்தான் ஆறு மாத காலம் குஜராத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகளோடு ஒன்றி கோத்ராவில் இந்துக்களை எரித்தது, இந்து வெறியர்கள் என்பதை பல்வேறு விதமான வாக்குமூலங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவிலுள்ள நடுநிலையாளர்களும் மனிதாபிமானமிக்கவர்களும், பல்வேறு உண்மை அறியும் குழுக்களும் கடந்த ஐந்து வருடங்களில் உரத்துக் கூறிய விஷயங்களை, மோடியின் சிஷ்யர்கள் வாக்குமூலமாகக் கொடுத்ததை வீடியோவில் பதிவு செய்து மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது தெஹல்கா. இதை ஜந்து வருடங்களுக்கு முன்பே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முழுக்க முழுக்க மோடியின் ஆலோசனைகளின் பேரில் வி.ஹெச்.பியும், பஜ்ரங்தள்ளும் செய்த சதி என்பதும் அதை வைத்து மூன்று நாட்களில் எவ்வளவு இஸ்லாமியர்களை கொல்ல முடியுமோ கொல்லுங்கள் என்று அரசு உத்தரவிட்டதின் வெளிப்பாடுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக பெங்களுரைச் சேர்ந்த ரூத்மனோரமா, டெல்லியைச் சேர்ந்த ஷயதா ஹமீது, அகமதாபாத் பராக் நத்வி, ஷீபா ஜார்ஜ், மாரிதெக்காரா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் 10 நாட்கள் குஜராத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள். அதில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எந்தவொரு காட்டுமிராண்டி தேசத்திலும் நடந்திராதது என்று குறிப்பிட்டார்கள்.

அகமதாபாத், கோத்ரா, வதோத்ரா, சபர்காந்த், பாஞ்ச் மகால் ஆகிய நகரம், கிராமம் சார்ந்த பகுதிகளில் நடந்த கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிறுவர் சிறுமிகளிடமும் கொடூரங்களைப் புரிவதற்கு உதவிய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காவல்துறையினரிடம், அடியாட்களாக பயன்படுத்தபட்ட பழங்குடி மக்களின் தலைவர்களிடம் பேசி கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்தக் குழுவினர் 100 பக்கமுள்ள அவர்களுடைய அறிக்கையில் சுருக்கமாக சொல்லப்பட்ட காரணிகள், வன்முறைகள் தனனெழுச்சியாக நடந்ததாகத் தெரியவில்லை. யாரைத் தாக்குவது என்பது முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கு அழுத்தமான ஆதாரங்கள் உள்ளன. இவை மிகவும் குறைவாக வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இவற்றின் அளவும் விரிவும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் ஏகமாக நடந்துள்ளன. நிவாரண முகாம்களிலும் அடைக்கலமாயிருக்கும் பெண்களும், சிறு மற்றும் பெரும் கூட்டத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். மிருகத்தனமாகக் கற்பழிப்பு செய்யப்பட்ட பெண்கள் கடைசியில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். பெண்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் அரசும், போலீசும் பகிரங்கமாகத் துணை போயிருக்கின்றன.

குஜராத்தி மொழி பத்திரிக்கைகள் சிலவும் உண்மைகளை மறைத்து, இஸ்லாமியர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கு ஏதுவாக செய்திகளை வெளியிட்டார்கள். இது முழுக்கவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தனர் இந்த பெண்கள் குழுவினர். அதை அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க அரசுக்கு பயந்து கொண்டு எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை.

நடந்துவிட்ட கொடூரத்தின் உண்மையை எத்தனை முறை நிரூபிக்க வேண்டியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இந்து முனனணித் தலைவர் ராம கோபாலன், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட, "முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்தா"? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதில் இந்தியாவில் இந்து ஆட்சி அமைய ஸ்பெயின் நாட்டில் எப்படி கிறிஸ்தவர்களால், இஸ்லாமியாகள் கொல்லப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கர்ப்பிணிகள், குழந்