இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் (வருங்கால) குடியரசுத் தலைவரே?
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரிக்கப் போவதாக பாஜக-வின் முக்கிய கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான பால் தாக்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற திரு செகாவத் அவர்களும் போட்டியில் இருக்கும்போது, காங்கிரஸ் வேட்பாளரான திருமதி பாட்டீலை சிவசேனா ஆதரிப்பதாக சொல்வது சாதாரணமாக யாரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்தான். ஆனால் இம்முறை இந்த அறிக்கை ஒருவகையில் எதிர்பார்க்கப் பட்டதுதான் என்பதால் இது யாருடைய புருவத்தையும் உயர்த்தி யிருக்காது.
திருமதி பாட்டீலின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப் பட்டதுமே அவர் ஒரு காரியம் செய்தார். இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
எந்நேரமும் தலையில் முக்காடிட்ட வண்ணம் காட்சி தரும் ஒரு பெண்மணி, 'பர்தா' எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை முறை குறித்து இப்படி ஒரு நகைப்பிற்குறிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தான் ஒரு இந்துத்துவ சிந்தனை உடையவர்' என்று காட்டிக் கொண்டு இந்துத்துவாக்களையும் திருப்தி படுத்தி அவர்களின் ஆதரவும் வாக்குகளும் தனக்கே கிடைக்கே வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இவர் இப்படி பேசியிருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளையும் இவர் வாங்கினால்தால் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்ற நிலை இல்லை அல்லவா!
தான் திட்டமிட்டபடியே முதல் கட்டமாக சிவசேனாவை 'மடக்கிய'தன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை நமது வருங்கால குடியரசுத் தலைவர் நிரூபித்திருக்கிறார்.
வாழ்க வளமுடன்!
பின் குறிப்பு:
நான் ஏன் 'குடியரசுத் தலைவரே' என்று தலைப்பிட்டிருக்கிறேன்?
ராஷ்டபதி ஆண்பாலா பெண்பாலா என்ற பிரச்னை ஒரு புறமிருக்க, மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் ஒரு பெண்மணியை 'தலைவி' என்று அழைப்பது சரியா? தலைவன், தலைவி ஆகியவை முறையே ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான ஒருமை விளிச்சொற்கள் அல்லவா? 'தலைவர்' என்பதுதானே இருபாலாருக்கும் பொதுவான மரியாதை விளிச்சொல்? அப்படியென்றால், 'குடியரசுத் தலைவர்' என்று அழைப்பதுதானே முறை? தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.