லஞ்சம் கொடுப்பதற்காகவே ஒரு கரன்ஸி நோட்டு!
அண்மையில் ஒரு போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து விதிகளை மீறியதாக சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தினார். அவர் இலஞ்சம் கேட்க, ஓட்டுனர் ஒரு பெறும் தொகையுடைய நோட்டை கொடுத்திருக்கிறார். காவலருக்கோ ஆச்சரியம்! மகிழ்ச்சியோடு வாங்கிய காவலரின் முகம் ரூபாயில் எழுதப் பட்டிருந்த தொகையை கண்டவுடன் சிவந்து விட்டது.
ஏனெனில் மதிப்பு எழுதப்படும் இடத்தில் 'பூஜ்ய ரூபாய்' என்ற எழுத்துக்களுடன் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். ரூபாயின் மேல்பகுதியில் 'அனைத்து மட்டத்திலும் இலஞ்சத்தை ஒழிப்போம்' என பொறிக்கப் பட்டிருந்தது. மேலும் வழக்கமாக ரூபாயின் 'I Promise to pay..' என எழுதப் பட்டிருக்கும் இடத்தில் 'நான் இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என எழுதப் பட்டிருந்தது.
அந்தக் காவலரின் முகத்தில் முதலில் மகிழ்ச்சி; பிறகு ஏமாற்றம்; அடுத்து கோபம்; எனக்கூறும் சரவணன், அந்த ரூபாயை திருப்பிப் பார்க்கச் சொல்ல, காவலரும் அச்சத்துடன் திருப்பிப் பார்க்கிறார். அதன் பின் பகுதியில் 'சமூகத்தில் அனைத்து மட்டத்திலிருந்தும் இலஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமும், அதிகாரமும் அளியுங்கள்' என்பதாக எழுதப் பட்டிருக்கிறது. அதன் கீழேயே, சாதாரண மக்களும் இலஞ்சத்திற்கெதிராக எவ்வாறு போராடுவது எனப் பயிற்றுவிக்கும் 'ஐந்தாவது தூண்' (5th Pillar) என்ற சமூக சேவை நிறுவனத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருக்கிறது.
'இதுதான் சாலையில் இலஞ்சத்தால் நேரடியாக பாதிக்கப்படும் சாதாரண மனிதன் அதை எதிர் கொள்ள வேண்டிய வழி' எனக் கூறும் திரு M.B. நிர்மல்தான் இந்த ஐந்தாவது தூணின் நிறுவனர். 'ஐந்தாவது தூண் சேவைக்காக இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் சின்னமாக காந்தியின் கைத்தடியை பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவர்தான் சேவையின் உண்மையான பிதா' என்கிறார் நிறுவனர்.
இந்த நிர்மல்தான் இருபது ஆண்டுகளுக்கு முன் 'எக்ஸ்னோரா' என்ற அமைப்பை நிறுவியவர். இன்று சாலை தூய்மை பணியில் ஒரு பெரும் சேவை நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது.
நன்றி: சமரசம் 1-15 மே 2007
10 comments:
சபாஷ்! அருமையான யோசனை.
பாராட்டுகள் - அந்த ஆட்டோ ஓட்டுனருக்கும் இதைச் செயல்படுத்திவரும் நிர்மல் அவர்களுக்கும்.
அருமையான முயற்சி!
// 'நான் இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என எழுதப் பட்டிருந்தது.//
சபாஷ்!
நல்ல வரவேற்கத்தக்க விஷயம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!!
நல்ல செய்தியை குடுத்து இருக்கிங்க மரைக்காயரே. சுற்றுப்புறத்தில் தூய்மையை ஏற்படுத்திய நிர்மல் இப்பொழுது சமுதாயத்தை தூய்மை படுத்த கிளம்பி இருக்காறு. கண்டிப்பா அவரு இதிலும் வெற்றி பெற வேண்டும்.
மரைக்காயர்,
நல்ல சுவாராஸ்யமான தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அப்புறம் அந்த ஆட்டோக்காரர் கதி என்னாச்சு? பெரும்பாலும் இதுபோன்று லஞ்சம் கொடுக்காதவர்களை கஞ்சா வழக்கிலோ அல்லது கள்ளநோட்டு வழக்கிலோ மாட்டிவிடுவதும் மறுநாள் போலீசார் சொல்வதை அப்படியே செய்தியாக வெளியிடுவதும்தானே நடக்கும்!
இனி மேல் கவலையே இல்லை! எவ்வளவு கேட்டாலும் இந்த நோட்டுகளை தரலாமே!
அந்த போலீஸ்காரர் பழிவாங்காம இருக்கவேண்டும்.
நல்ல தகவலுக்கு நன்றி மரைக்காயரே
ஒரு ராவுத்தன்
குண்டூசி குத்தியா யாணைக்கு வலிக்கப் போகுது.
இப்படி செய்வதால் நல்லது நடக்கும் என்றால் அதை வரவேற்க வேண்டியது தான்.
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
//சுற்றுப்புறத்தில் தூய்மையை ஏற்படுத்திய நிர்மல் இப்பொழுது சமுதாயத்தை தூய்மை படுத்த கிளம்பி இருக்காறு. கண்டிப்பா அவரு இதிலும் வெற்றி பெற வேண்டும்//
நிர்மல் போன்றவர்கள் சமுதாய அக்கறையுடன் செயல்படுத்தும் முயற்சிகளுக்கு நம் அனைவரின் ஒத்துழைப்பும் ஊக்கமும் மிக அவசியம். ஐந்தாவது தூண் என்று குறிப்பிடுவதே பொதுமக்களாகிய நம்மைத்தான்.!
குண்டூசி குத்தி யானைக்கு வலிக்காது என்றாலும் பல நூறு குண்டூசிகள் ஒன்று சேர்ந்தால் அதுவே யானையை அடக்கும் அங்குசம் ஆகலாம் இல்லையா?
//பெரும்பாலும் இதுபோன்று லஞ்சம் கொடுக்காதவர்களை கஞ்சா வழக்கிலோ அல்லது கள்ளநோட்டு வழக்கிலோ மாட்டிவிடுவதும் மறுநாள் போலீசார் சொல்வதை அப்படியே செய்தியாக வெளியிடுவதும்தானே நடக்கும்!//
//அந்த போலீஸ்காரர் பழிவாங்காம இருக்கவேண்டும்.//
:-(
இம்மாதிரி பின்விளைவுகளும் நிகழக்கூடியதுதான். என்ன செய்றது.. பூனைக்கு யாராவது மணி (money அல்ல) கட்டித்தானே ஆகணும்?
Post a Comment