விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்!
இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சொக்கலிங்கம் உரையாற்றிய போது அவர் சொன்னார், "விவேகானந்தருக்கு இஸ்லாம் மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் என்ன? அவர் சொன்னார்: இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டுமெனில் with vedantic brain and Islamic body. இது விவேகானந்தரே எழுதியவை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தும் இதில் இருக்கிறது."
இதைப் படித்த பிறகுதான் அதுவரை விவேகானந்தரைப் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு அவரைப் பற்றியும் அவரது கொள்கைகள், போதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இந்துத்துவாவாதிகள் குரு என போற்றும் ஒரு ஆன்மீகத் தலைவர் இத்தகைய நல்லிணக்கக் கருத்துக்களையும் கொண்டிருப்பாரா என்ற ஆச்சரியமும் எனக்கு இருந்தது. ஏனென்றால் இந்துத்துவமும் மதநல்லிணக்கமும் mutually exclusive என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றுதானே? இது இருக்கும் இடத்தில் அது இருக்காது!
விவேகானந்தரைப் பற்றி நான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு அதிக சிரமம் வைக்காமல் அவரது கருத்துக்கள் என சிலவற்றை ஜடாயு என்பவர் தன் பதிவில் வைத்திருந்தார். அதைப் படித்தபோது இந்துத்துவாக்கள் ஏன் இவரைப் போற்றி புகழ்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டது. ஆனால் ஒரு சிறந்த சிந்தனாவாதி என போற்றப் படும் விவேகானந்தர் இப்படியும் சொல்லியிருப்பாரா, அல்லது இன்றைய இந்துத்துவவாதிகள் அவரது கருத்துக்களை தங்களின் கருத்தியல்புகளுக்கு ஏற்ப திரித்து கூறுகிறார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனென்றால் கருத்துத் திரிப்பு என்பது இவர்களுக்கு கை வந்த கலை ஆச்சே!
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணத்தைக் குறித்து விவேகானந்தரின் கருத்தாக இவர்கள் சொல்கிறார்கள்,
"ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை."
மிஃராஜ் பயணத்தைப் பற்றி ஒரு சாதாரணர் இத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு சிந்தனாவாதியாகவும் வேதாந்தியாகவும் போற்றப்படும் விவேகானந்தர் இது போன்ற முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தால் அது ஆச்சரியமான ஒன்றுதான்.
தன்னை ஒரு யோகியாக கருதிக் கொண்டிருந்த விவேகானந்தர், நபி (ஸல்) அவர்களையும் தன்னைப் போல ஒரு யோகி என்ற பிம்பத்தில் அடைக்க முயன்றிருக்கிறார். ஆனால் மிஃராஜ் விண்ணேற்றம், வஹி எனப்படும் இறைவசன வெளிப்பாடுகள் போன்ற நிகழ்வுகள் யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் யாருக்கும் நேரக்கூடிய அனுபவங்களல்ல. ஒரு யோகி என தான் நினத்துக் கொண்டிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இத்தகைய அனுபவங்கள் நேர்ந்தது எப்படி என்பதை விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு சாதாரணர் வரும் முடிவுக்குத்தான் விவேகானந்தர் வந்திருக்கிறார். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் கற்பனையானதாக வெறும் பிரமையாகத்தான் இருக்கும் என்ற முடிவு.
ஆனால் உண்மை என்ன? நபி (ஸல்) அவர்களை ஒரு யோகி என விவேகானந்தர் கற்பிதம் செய்திருந்ததுதான் தவறு. நபி (ஸல்) அவர்கள் ஒரு யோகி அல்லர். அவர் தன்னை ஒரு யோகி என்று என்றும் சொல்லிக் கொண்டதில்லை. ஒரு யோகிக்கு தேவையான பயிற்சிகளை அவர் மேற்கொண்டதில்லை. அவர் இறைத்தூதர். அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் ஒரு இறைத்தூதருக்கு நிகழக்கூடியதுதான்.
ஒரு சிந்தனாவாதியாக போற்றப்படும் விவேகானந்தருக்கு இந்த எளிய உண்மை விளங்காமல் போனது எப்படி? I think he just failed to think out of the box! அறிஞர் பெருமக்கள் தங்களுக்கு முழுதும் விளங்காத ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் விவேகானந்தர் தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருந்த மிஃராஜ் பற்றி தனது கருத்துக்களை வெளிப் படுத்தியிருப்பது நம்மை மேலும் ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.
அப்பட்டமாக ஒரு இந்துத்துவவாதியின் குரல் இங்கு வெளிப்படுகிறது! இஸ்லாம் (இங்கு முகமதியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் விவேகானந்தர்) ஒரு சகிப்புத் தன்மையற்ற மார்க்கம் என்று சொன்ன அதே விவேகானந்தர் இன்னொரு இடத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.விவேகானந்தரின் கருத்தாக மேலும் சொல்கிறார்கள்;
பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்!
...சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும்.... ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம்.
'பிற சமயத்தவரை கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது' என்று சொன்ன அதே மனிதர் 'எல்லா சமயங்களையும் எல்லா இனங்களையும் அன்போடு நோக்கும் சமத்துவத்தை பாராட்டத்தக்க அளவில் அணுகிய மதம் இஸ்லாம்' என்றும் சொல்லியிருக்கிறார். என்ன ஒரு முரண்பாடு? ஒரு சிந்தனாவாதி இப்படியா முன்னுக்குப் பின் முரணாக பேசுவார்?
விவேகானந்தரின் இன்னொரு கூற்று:
வேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்டவெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும்.
கிருஸ்துவர்கள் பைபிளுக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு குர்ஆன் இன்றளவும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. ஆனால் இந்துமத வேதங்கள் இந்துக்களாலேயே எப்பொழுதோ மறக்கப் பட்டு விட்டன. அவை வழக்கொழிந்து போய் பல காலமாகி விட்டது. மேற்கண்ட விவேகானந்தரின் கூற்றுக்கு ஒரு பொருள்தான் இருக்க முடியும், 'நாங்கள் ஏற்கனவே எங்கள் வேதங்களை புறக்கணித்து விட்டதைப் போல கிருஸ்துவர்களும் முஸ்லிம்களும் அவரவர் வேதங்களை புறக்கணிக்க வேண்டும்'.
இதையே கொஞ்சம் கொச்சையாக சொல்ல வேண்டுமெனில், 'ஏற்கனவே குப்பைக்கு போன உமியை நான் கொண்டு வர்றேன், நீ உன்னுடைய அவல் கொண்டு வா, அது ரெண்டையும் கலந்து குப்பையில வீசிட்டு நாம ரெண்டு பேரும் 'அம்போ'ன்னு நிப்போம்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஆன்மீகவாதியான விவேகானந்தர் இப்படியா சொல்லியிருப்பார்? நம்ப முடியவில்லை!
பி.கு:
மேலே குறிப்பிட்ட பதிவை படிக்குமுன் விவேகானந்தரைப் பற்றி நான் உயர்வாகத்தான் நினைத்திருந்தேன். இப்போது, நான் அந்தப் பதிவை படித்திருக்கவே கூடாதோ என்று நினைக்கிறேன்.