டெஹல்கா அம்பலம்: நிரம்பி வழியும் உண்மைகள்? திகைத்து நிற்கும் மானுடம் - பேரா. அ. மார்க்ஸ்
உயிரைப் பணயம் வைத்து, ஐந்து மாத காலக் கடும் உழைப்பின் மூலம் தெஹல்கா வார இதழ் குஜராத் 2002 குறித்து, ஏற்கெனவே தெரிந்த பல உண்மைகளுக்கு மேலும் பல நிரூபணங்களை வெளிப்படுத்தியுள்ளது. இம்முறை இந்த உண்மைகள், யார் இந்த வரலாறு காணாத வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களின் வாயிலிருந்தே கசிந்திருக்கின்றன. அது தான் ஒரே வித்தியாசம்.
இந்தக் கொலை மனங்கள் ஒவ்வொன்றும், தன் முன் அந்த நுண்ணிய, ஆற்றல் வாய்ந்த உளவுக் கருவி கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை அறியாமல், தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதை வாசிப்பதற்கு அல்லது பார்ப்பதற்கு ரொம்ப நெஞ்சுரம் வேண்டும். அந்தக் காலத்தில் பரிசை கண்ணப்பத் தம்பிரான் கூத்தில் அறிவிப்பார்களே, ''இப்போது துச்சாதன் வரப்போகிறான். கர்ப்பிணிப் பெண்களும், கலங்கிய சித்தம் கொண்டவர்களும் எழுந்து சென்று விடுங்கள்'' என்று. அது போல இந்தக் கொலை வாக்கு மூலங்களை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இவற்றை எதிர் கொள்ள நெஞ்சுரம் வேண்டும். முழுமை யாகப் படித்து முடிப்பதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
"ஒன்பது மாதக் கர்ப்பிணித் துலு.......... அந்தக்...........ளை வயிற்றைக் கிழித்து கருவை வாள்முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டினோம். தாயையும், கருவையும் நெருப்பில் எரித்தோம்.அவர்கள் கரு உயிர்க்கக் கூடாது."
"முதியவர் இஹ்சான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பணத்தைக் கொண்டு வந்து எங்கள் காலடியில் கொட்டிவிட்டு ஓடப் பார்த்தார். பற்றி இழுத்தோம். பின்னாலிருந்து ஒருவன் உதைத்து வீழ்த்தினான். ஒருவன் அவர் மீது கத்தியைப் பாய்ச்சினான். முதலில் கைகளை வெட்டினோம். பின்னர் ஒவ்வொரு உறுப்பாக சிதைத்தோம். குற்றுயிராய்க் கிடந்த உடலையும் கழித்த உறுப்புகளையும் நெருப்பில் எரித்தோம். செத்த உடல்களை எரிக்கக் கூடாது என்பதல்லவா அவர்களின் நம்பிக்கை."
"அது ஒரு சரிவான குழி. ஒரு புறம் சரிந்து இருக்கும், மறுமுனையோ செங்குத் தான உயரம். ஏறித் தப்ப முடியாது. அதில் போய் அவர்கள் ஒண்டினார்கள். பெட்ரோலை அள்ளி ஊற்றி எல்லோரை யும் எரித்துக் கொன்றோம்."
இப்படி இன்னும் இன்னும். இவற்றை எல்லாம் சொல்லுகிற பாபு பஜ்ரங்கி, ராஜேந்திர வியாஸ், ரமேஷ் தவே, மதன் சவால், பிரஹலாத் ராஜு, மஞ்சிலால் ஜெயின், திமன்ட் பட், தீபக் ஷா.. இவர்களெல்லாம் யார்? பஜ்ரங்கதள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க இந்த அமைப்புகளின் முக்கிய உள்ளூர் தலைவர்கள். தம்மை தாதாக்களாகவும், தலைவர்களாகவும், இந்து மதக் காப்பாளர் களாகவும் ஒரே சமயத்தில் அறிவித்துக் கொள்பவர்கள். இவர்கள் இன்று சிறைகளிலோ, தலைமறைவாகவோ இல்லை. வெளிப்படையாக உலவுகின்றனர். பெரிய மனிதர்களாய் தலைவர்களாய், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களாய் பட்டம், பதவி, பணம் எல்லாவற்றுடன் வலம் வருகிறார்கள்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, ஒன்பது சதவீத பொருளாதார வளர்ச்சி, அணுகுண்டுச் சாத்தியமுள்ள ஐந்து வல்லரசுகளில் ஒன்று. ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சி.... இத்தனைப் 'பெருமைக்கும்' உரிய இந்தியாவில் இது எப்படிச் சாத்தியமானது?
இவர்கள் தன்னந்தனியாக இல்லை. இவர்களின் பின்னே, இந்தக் கொலை மனங்களின் பின்னே இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி இருக்கிறது. 'சங்காதன்' என்று சொல்லும் பரிவாரக் கும்பல் உள்ளது. இந்துத்துவம் என்னும் கருத்தியல் உள்ளது. கோரிதான் சபாடியா என்கிற அன்றைய உள்துறை அமைச்சர், வி.எச்.பியின் மாநிலச் செயலர் ஜெயதீப் படேல், சர்வதேசச் செயலாளர் பிரவிண் தொகடியா, எல்லாவற்றிற்கும் மேலாக மாநில முதலமைச்சர் சின்ன சர்தார் நரேந்திர மோடி இருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும்கூட முஸ்லிம்கள் யாருடனும் ஒன்றாக வாழ மாட்டார்கள் எனச் சொல்லி மோடிக்கு ஆதரவளிக்க வாஜ்பேயி இருக்கிறார்.
'மூன்று நாள் அவகாசம் தருகிறோம் செய்து முடியுங்கள். உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது. சாட்சியங்களும் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கைதானவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும். அவர்கள் குடும்பங்களுக்கு தொடர்ந்து தேவையான 'ரேஷன்'கள் வழங்கப்படும்.
உங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை, நாங்கள் பள்ளி நிர்வாகங்களில் பேசிக் கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேசமாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் கூட சாட்சி சொல்ல மாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்...' இத்தனை உறுதி மொழிகளும் அந்த கொலை மனங்களின் பின்னால் நின்றன.
ஒன்றைச் சொல்ல மறக்கக்கூடாது. சங்பரிவாரங்கள் வாக்குத் தவறாதவர் கள் - இந்த மாதிரி விஷயங்களைப் பொறுத்த மட்டில். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றிக் கொண்டுள்ளார்கள்.
கொலை வாட்கள், கூரான திரிசூலங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இவைகளெல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் வழக்கறிஞர்கள் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. காவல் துறைக்கு உரிய ஆணைகள் இடப் படுகின்றன. அகமதாபாத்திலும், பரோடாவிலும் இன்னும் பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், துர்கா வாஹினி, பா.ஜ.க ஆகிய அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள், ஒவ்வொரு கூட்டத்திலும் 60 முதல் 70 பேர்கள் வரை கலந்து கொள்கின்றனர். ''எதிர்ப்படும் முஸ்லிம்கள் எல்லோரையும் சொல்லுங்கள், சூறையாடுங்கள், அழியுங்கள் உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது...'' இன்ன பிற வாக்குறுதிகள்.
ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் 'ஸ்கோர்' எவ்வளவு என தலைமைக்கு தகவல்கள் போய்க் கொண்டே இருக் கின்றன. மாயா கோட்னானி என்றொரு பா.ஜ.க பெண் (சட்டமன்ற உறுப்பினர்) கொலைத் தலங்கள் ஒவ்வொன்றாக 'விசிட்' செய்து ஊக்குவித்து செல்கிறார்.
கோத்ரா, அகமதாபாத் மிக அதிகமான கொலைகள் நடந்த நரோடாபாடியா என்கிற இடத்திற்கும் மோடியே நேரில் செல்கிறார். வெளிப்படையாக அவர் பேச இயலாது என்பதை கொலைஞர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர் வந்து சென்றதே, கண்டனங்கள் கூறாமல் அகல்வதே அவர்களுக்கு அளிக்கும் செய்தி அல்லவா! இரண்டாவது இரும்பு மனிதனல்லவா நரேந்திர மோடி. உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது எங்கனம்?
மெகானி நகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.ஜி எர்டா 'மூன்று மணி நேரம் ஜமாயுங்கள்' என்று சொல்லிவிட்டு அகல்கிறான். பேராசிரியர் பந்துக்வாலா வின் வீட்டிற்குள் பாதுகாப்புக்கு நியமியக்கப்பட்ட காவலர்கள், கும்பல் வந்தவுடன் சீக்கிரம் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு அகல்கிறார்கள்.
ஒரு போலீஸ் வேனில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படும் முஸ்லிம்களை கூண்டோடு எரிப்பதற்கும் கொலைஞர்களிடம் வழி சொல்கிறான் எர்டா. 'நீங்கள் கல்லால் அடியுங்கள். டிரைவர் ஓடி விடுவார். பின் உங்கள் வேலையைச் செய்யலாம்''. அதே நேரத்தில் அங்கு வந்த பதான் என்கிற ஒரு முஸ்லிம் அதிகாரியால் 'காரியம்' கெட்டு விடுகிறது. அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். முஸ்லிம் காவலர்களால் இப்படிக் காப்பாற்றப்பட்ட இன்னொரு சம்பவமும் தெஹல்கா அம்பலப்படுத்துகிகிறது. காவல்துறையிலும், ரெவின்யூ துறையிலும் உரிய அளவு முஸ்லிம் பிரதி நிதித்துவம் தேவை என மனித உரிமையாளர்கள் தொடர்ந்து சொல்லி வருவதை ஒரு கணம் இத்துடன் இணைத்துப் பாருங்கள்.
சபர்கந்தாவின் பப்ளிக் பிராசிகியூட்டர் பாரத் பத், தான் எவ்வாறு முஸ்லிம் சாட்சிகளை மிரட்டினான் என்பதையும் பெருமிதத்துடன் தெஹல்கா நிருபரிடம் சொல்கிறான். மேற்சொன்ன கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டும் அரசு, கொலைகாரர்களிடம் எல்லாப் பாதுகாப்புகளும் வெளிப்படும் என வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சி, சாட்சியங்களையும் தடயங்களையும் உடனடியாக அழித்தொழிக்க சட்ட அறிஞர் குழு, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காட வேண்டிய அரசு வழக்குரைஞரே ஆதரவாகக் சாட்சிகளை மிரட்டும் அவலம், பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைச் சரிவரப் பதிவு செய்யாமலும் முறைப்படி முதல் தகவல் அறிக்கைகளை தயாரிக்காமலும், குற்றம் சாட்டப்பட்டவர் களிடம் உண்மையை அறிய முயலாமல் விருந்துபசாரம் செய்து கொண்டிருந்த காவல்துறை..., மோடியின் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?
இல்யோதார்த் என்கிற தத்துவ அறிஞர் சொல்வது போல இது ஒரு 'முழுமையான குற்றம் (perfect crime) எந்தக் குற்றமானாலும் ஏதேனும் ஒரு பலவீனம் அதில் வெளிப்பட்டிருக்கும். புலனாய்வின் மூல ஆதாரமாக அதுவே அமையும். ஆனால் குஜராத்தில் நடந்ததோ முழுமையான குற்றம் (நுட்பமான திட்டமிட்ட படுகொலை எந்தப் பலவீனமும் இல்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கவே இயலாது.) உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது மட்டுமல்ல கண் முன்னே தலைவர்களாகவும் பதவி உயர்வுகளுடனும் உலா வருவார்கள். ஈடுசெய்யக் கூடிய இழப்புகளும் கூட ஈடுகட்டப்படவில்லை. அகதிகள் திரும்பி வர இயலாது, பிள்ளைகள் தொடர்ந்து பள்ளிகளில் படிக்க இயலாது, பழைய முதலாளிகள் வேலை தரமாட்டார்கள்.... முஸ்லிம்கள் மன நிலை எப்படி இருக்கும்?
கொலைகாரர்களின் வாக்கு மூலங்களை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அவர்களிடம் கிஞ்சிற்றும் குற்ற உணர்வில்லை. தாங்கள் செய்தவற்றில் அவர்களுக்குப் பெருமை. 'நான் பெருமை கொள்கிறேன். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் அதிக முஸ்லிம்களைக் கொல்வேன்'' என்கிறான் பஜ்ரங்கி. ''முஸ்லிம்களைக் கொல்வது தான். அவர்களை உதைப்பதுதான் எங்கள் அரசியல்'' என்றும் அவன் பெருமிதம் கொள்கிறான். மற்றவர்களும் அதே குரலை ஒலிக்கின்றனர். சாரா என்றொரு குற்றப் பரம்பரைச் சாதி ஒன்று. அதே போல கர்வா, பக்ரி, காஹல், ராபரி, பஸ்மல் முதலான அடித்தளச் சாதிகள் சில. இவற்றைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலரையும் மூளைச் சலவை செய்து, பண ஆசை காட்டி கொலைகாரர்களாக மாற்றுகிறது இந்துத்துவம். முஸ்லிம்களைக் கொல்வதன் மூலம் இந்து மதத்திற்குச் சேவை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. எப்படி முஸ்லிம்களைக் கொல்வது இந்து மதத்திற்கு கடமை ஆற்றுவதாக அமையும்? காலங்காலமாக இந்து மதத்தால் வஞ்சிக்கப்பட்டுக் குற்றப் பரம்பரையாக ஆக்கப்பட்டவர்கள் ஏன் இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்? இந்தக் கேள்விகளை எழுப்ப இன்று ஒரு காந்தி இல்லை, பெரியார் இல்லை, அம்பேத்கர் இல்லை.
ஜான்சி ராணி போல உணர்ந்ததாக ஒரு கொலை மனம் கூறுகிறது. தான் ஒரு முஸ்லிம் பெண்ணை வன்முறையாக உடலுறவு கொண்டதைத் தன் மனைவி முன்பே பெருமையாகச் சொல்கிறான் இன்னொரு கொலையாளி. இதெல்லாம் என்ன? மனித மனத்தில் சிந்தனை வெறுப்புகள் எங்கே புதையுண்டு கிடந்தன? இவற்றைத் தோண்டி வெளிக் கொணரும் சாத்தியம் இந்துத்துவவாதிகளுக்கு எப்படி வந்தது?
முஸ்லிம்களை ரத்தமும் சதையுமான மனித உயிர்களாய், நேற்றுவரை நம்முடன் பழகியவர்களாய், சமூக உறவுகள் கொண்டவர்களாய் இந்தக் கொலை மனங்கள் பார்க்கத் தயாராக இல்லை. அவர்கள் தனி மனிதர்கள் இல்லை. தனி அடையாளங்கள் அவர்களுக்கில்லை. நேற்று வரை பக்கத்து வீட்டுக்காரராக இருந்த ஒருவரைக் கொன்று குவிப்பதற்கு இன்று எனக்கு வெட்கமில்லை. 'அவர்கள்' எல்லோரும் ஒரே அடையாளமுடையவர்கள். ஒட்டு மொத்தமாய் எதிரிகள் 'அவர்களைக்' கொல்வது குற்றமல்ல. பாவமல்ல. மாறாகப் பலி கொடுத்துப் 'பாரதத்தை' தூய்மை செய்வது - கொலை மனங்களின் 'லாஜிக்' இதுதான்.
இந்தக் கொலைமனங்கள் ஒளிந்திருப்பது ஏதோ பாபு பஜ்ரங்கிகளிடம் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்துத்துவவாதியிடமும் (இந்தக் கொலை மனம்) உள்ளது. நரேந்திர மோடி, அத்வானி, வாஜ்பேயி, தொகாடியா, சுதர்ஸன், இராம கோபாலன் எல்லோரிடம் இந்த மனங்கள் புதைந்துள்ளன. சிலர் தெஹல்காவின் உளவுக் காமெராவிடம் மாட்டிக் கொண்டு விட்டனர். இன்னும் சிலர் மாட்டவில்லை. அவ்வளவுதான்.
நன்றி: தமுமுக ஆன்லைன்
4 comments:
மோடி என்ற மிருகம் ஆட்சி செய்யும் குஜராத்திலுள்ள நீதித் துறையையும் காவல் துறையையும் இன்னமும் நம்புகின்ற முஸ்லிம்களின் நிலை ...
நன்றி அதி.அழகு அவர்களே.
இவன்களை மிருகம் என்று சொல்வது கூட மிருகங்களை கேவலப்படுத்துவதாக இருக்கும். சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் மின்னஞ்சலில் சில படங்களை அனுப்பியிருந்தார். பிஸியான சாலை ஒன்றில் ஒரு நாய் அடிபட்டு இறந்து கிடக்கிறது. அது புரியாத இன்னொரு நாய், தனது சகாவை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தனது உயிரையும் பொருட்படுத்தாது அடிபட்ட அந்த நாயையே சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த மிருகங்களுக்கு இருக்கும் கருணை கூட இந்த அரக்கன்களுக்கு இல்லையே!
படிக்கப் படிக்க பதைக்கிறது மனம்.
காந்தியின் அதே குஜராத்தில் தான் இப்படியும் கொடூரர்கள் இருக்கிறார்கள்
என்று எண்ணும் போது....
முஸ்லிம் பெயரில் இருந்த தீவிரவாதிக்கு தூக்குத்தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று கூக்குரலிட்ட சோ மாறிகளும் டோண்டுக்களும் இப்போது எங்கே.. போய்விட்டனர்?
நன்றி புகழேந்தி அவர்களே.
காந்திஜியையே கொன்ற காலிகளின் கும்பல்தானே இது! அவர்களெல்லாம் இன்னும் சோமாறிகளாகவும் கேப்மாறிகளாகவும்தான் இருக்கிறார்கள் போல.
Post a Comment