Thursday, May 17, 2007

நில மோசடியில் ஈடுபட்ட சாமியார் தலைமறைவு!



சென்னை: பெரும் நில மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் சம்பந்தியுமான ஈவிபி பெருமாள்சாமி ரிஷி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதிமுகவில் முன்பு மாவட்டச் செயலாளராகவும், வாரியத் தலைவராகவும் இருந்தவர் பெருமாள்சாமி. பின்னர் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதிமுகவில் இருந்தபோது ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.


கட்சியிலிருந்து ஒதுங்கிய பின்னர் தன்னை ஒரு துறவி போல காட்டிக் கொண்டார். தனது பெயருக்குப் பின்னார் ரிஷி என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சில கோவில்களையும் கட்டினார்.


டோட்டலாக தன்னை உருமாற்றிக் கொண்ட போதிலும், தனது ரியல் எஸ்டேட் தொழிலை தொடர்ந்து நடத்தினார். இவருக்குச் சொந்தமாக ஒரு பொறியியல் கல்லூரியும் உள்ளது.


இந்த நிலையில் பெருமாள்சாமி மீது தி.நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் ரவி அப்பாசாமி என்பவருக்கு மதுராந்தகத்தைச் சேர்ந்த பெருமாள் ரெட்டி என்பவர் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், கோயம்பேடு 100 அடி சாலையில் பெருமாள்சாமிக்குச் சொந்தமான பூர்வீக நிலமான 26 கிரவுண்ட் நிலத்தை நீங்கள் 2005ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு கடந்த மார்ச் மாதம் பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த நிலத்தை ரூ. 14 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு எனக்கு பெருமாள்சாமி விற்று விட்டார்.


ஆனால் நீங்கள் அவரை மிரட்டி ரூ. 31கோடிக்கு வாங்கியுள்ளீர்கள். எனவே இது செல்லாது என்று கூறியிருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார்.


இதை விசாரித்த நீதிமன்றம், மாம்பலம் போலீஸாரை இதுகுறித்து விசாரிக்கப் பணித்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி அப்பாசாமி வழக்கு போட்டார். அதில், 2005ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டேன். நிலத்துக்கு பெருமாள்சாமி அதிக விலை சொல்லியபோதும் அதை ஏற்றுக் கொண்டு கடந்த மார்ச் மாதம் ரூ. 31 கோடியைக் கொடுத்து நிலத்தைப் பதிவு செய்தேன்.


ஆனால் தனது உறவினரான பெருமாள் ரெட்டி மூலம் திடீரென வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பெருமாள்சாமி. அவருக்கு முறையாக நிலத்தை விற்கவில்லை பெருமாள்சாமி. நிலத்தை விற்பது தொடர்பாக அவர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்பத்திரம் போலியானது, அது பதிவு செய்யப்படவில்லை.


மேலும் இப்போது கூடுதலாக ரூ. 61 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறி பெருமாள்சாமி, அவரது மகன் சந்தோஷ் ரெட்டி, ஆகியோர் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பெருமாள் ரெட்டி கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. போலியான பத்திரத்தை வைத்துக் கொண்டு ரவி அப்பாசாமியை மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து பெருமாள் ரெட்டி, சந்தோஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். பெருமாள் சாமி ரிஷி, அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


பெரும் நில மோசடியில் ஈடுபட்டுள்ள பெருமாள் சாமி, வெறும் விளம்பரங்கள் மூலமே வளர்ந்தவர். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இவரது ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்க முடியும்.


தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் சம்பந்தியான பெருமாள்சாமி, பெருமளவில் நில மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.




பின் குறிப்பு:
'ரிஷி'(?!) சாரோட போட்டோவில நெத்தியில நீ....ளமா போட்டிருக்காரே நாமம்.. அதைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?

Sunday, May 06, 2007

விபச்சாரிகளின் வங்கி!

தலைப்பைப் பார்த்துவிட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம். நம் நாட்டுச்சட்டப்படி விபச்சாரம் தண்டனைக்குறிய குற்றம். இருப்பினும் இங்கே ஒரு சாதனையாகச் சொல்லப்பட்டுள்ள செய்தியை படிக்கும்போது விபச்சாரம் ஒரு தேசிய தொழிலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை

மே 05, 2007 கொல்கத்தா:

விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்கத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆதரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ரெட் லைட் ஏரியாவான சோனாகாச்சி பகுதியில்தான் முதலில் இந்த வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. அங்கு கணிசமான அளவு விபச்சாரப் பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விபச்சாரப் பெண்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்த கூட்டுறவு வங்கி ரூ . 15 லட்சம் வரை கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களைத் தேடிப் போய் அவர்களுக்கு இந்த வங்கி சேவை செய்து வருகிறது.

கொல்கத்தாவில் 2, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 7 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது. வங்கியன் கடன் வழங்கும் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சாந்தனு சாட்டர்ஜி வங்கியின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், செக்ஸ் உழைப்பாளிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த வங்கியை தொடங்கினோம். இப்போது தினசரி ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்யப்படுகிறது என்றார்.

இந்த வங்கியின் தலைவரும் , செக்ஸ் உழைப்பாளியுமான அமிதா தாஸ் கூறுகையில், இன்னும் நிறைய சிவப்பு விளக்குப் பகுதிகளில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

வங்கியின் ஆண்டு முதலீட்டின் அளவு ரூ. 9 கோடியைத் தொட்டு விட்டதாம்.

இந்த வங்கியில் கணக்குத் தொடங்க எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ. 15 தான். தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்குமாறு விபச்சாரப் பெண்களிடம் இந்த வங்கி பிரசாரம் செய்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள் . தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள். தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.

இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விபச்சாரப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனராம்.

====

விபச்சாரிகள்- செக்ஸ் தொழிலாளர்களாம்!

தொழிலாளர்களின் ஆட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது! பாலியல் சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் கண்டவனுக்கும் முந்தானை விரிக்கும் விபச்சாரிகளின் செயலை உழைப்பு என குறிப்பிடுவது சரியா? காடு-கழனிகளில் அரைவயிற்றுடன் ஒருநாளின் மூன்றில் இரண்டு பங்கு கால்கடுக்க, உடல்நோக உழைக்கும் விவசாயினுடைய உழைப்பும் இதுவும் ஒன்றா?

விபச்சாரத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வேண்டுமாம்! நாடு உருப்படுமா? அதேபோல் 'குடிமகன்'களுக்கும் வங்கி லோன் வழங்கி அரசே உதவலாமே! வங்கி வழங்கும் கடன்தொகையால் ஆணுறையை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த கடனை அவலமான இந்த தொழிலிலிருந்து வெளிப்பட்டு வேறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கொடுக்கலாமே!


இத்தகைய அவலங்களைக் கண்டுகொள்ளாமல் போனால் வெகுசீக்கிரம் அன்னை பாரதம் என்று அறியப்படும் நம்நாடு வேறு பெயரில் அறியப்படும் அபாயம் இருக்கிறது.

Saturday, May 05, 2007

காதலை எதிர்க்கும் இந்துத்துவாக்கள்!

அந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களோ, அவர்கள் சார்ந்த சமூகங்களோ குறிப்பிடப் படாமலிருந்தால், 'வழக்கமான காதல் பிரச்னைதானே..!' என்று அதை கடந்து போயிருப்பீர்கள். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட ஆண் ஒரு முஸ்லிமாகவும் பெண் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு இந்துவாகவும் இருந்து தொலைத்து விட்டதால், மத்தியப் பிரதேச இந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது. பேனையே பெருமாளா ஆக்குறவங்களுக்கு பெருச்சாளியே கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?

குஜராத்துக்கு அடுத்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். இதன் தலைநகரமான போபாலில் உள்ள ஈத்கா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா வட்வாணி, பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. அகமதாபாத் ஏரியாவில் பிரியங்கா குடும்பம் வசித்து வந்தபோது, பக்கத்து வீட்டு முகமது உமர் என்ற இளைஞரோடு அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்குப் போன பிரியங்கா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இரு வீட்டாருக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், ''நாங்க ரெண்டு பேரும் மேஜர். ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். எங்க காதலைக் கண்டிப்பா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. அதனால நாங்க இந்த ஊரை விட்டுப்போய் கல்யாணம் பண்ணிக்கிறோம். நாங்க போன பிறகு யாரும் எந்த கலவரமும் செய்யாதீங்க'' என காதல் ஜோடியான உமரும், பிரியங்காவும் எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கின்றனர்.

பிரியங்காவின் கடிதத்தைப் பார்த்துக் கொதித்துப் போன அவளுடைய பெற்றோர், உமர் தங்கள் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகப் புகார் கொடுத்தனர்.

ஈத்கா ஹில்ஸ் காவல் நிலைய போலீஸ், உமரின் சகோதரர் ஷகீல் என்பவரைத் தூக்கிவந்து சட்ட விரோதமாக சிறையில் அடைத்து, 'உமர் எங்கே?' என மிரட்டியது. இப்படி ஷகீல் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளை எப்படியோ உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாகப் படம் பிடித்து வெளியிட்டது. அதன் பிறகு கவர்னர் தலையிட்டு, ஷகீல் விடுதலை செய்யப்பட்டர். இந்த விவகாரம் எல்லா மீடியாக்களிலும் பரபரப்பான விஷயமாக... போபால் நகரம் சூடாகியது.

வி.ஹெச்.பி., பஜ்ரங்தளம் போன்ற இந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடத்திவரும் 'இந்து கன்னிகள் பாதுகாப்பு மன்றம்' இந்தக் காதல் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'பிரியங்காவை மீட்டு உமரைக் கைது செய்ய வேண்டும்' என போராட்டத்தில் குதித்தது. அதன் உச்சக் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி போபால் நகரம் முழுக்க பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இந்துத்துவ கும்பல் இரட்டை முகம் கொண்டவை என்பதற்கு இது ஒரு உதாரணம். 'இந்து கன்னிகளை பாதுகாக்க போராட்டம்' நடத்தும் இதே கும்பலைச் சேர்ந்தவன்தான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீனின் அப்பாவி மனைவி கவுசர்பீ-யை கற்பழித்து எரித்து கொலை செய்ய காரணமாக இருந்த கயவன் வன்சாரா . இவன் RSS கும்பலில் உறுப்பினனாக இருந்தவன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இப்படி ஒருபுறம் காதலுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்க... மும்பையில் ஒரு கோயிலில் தனது பெயரை உமேஷ் என மாற்றி இந்துவாக மாறினார் உமர் . அதே கோயிலில் பிரியங்காவை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குப் போன தம்பதி, ''எங்கள் திருமணத்தை அங்கீகரித்து, எங்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்'' என மனு செய்தனர். அவர்கள் கேட்ட படியே உத்தரவிட்டது கோர்ட். ஆனாலும் பிரச்னை ஓய்ந்துவிடவில்லை.

உமர் உமேஷாக மாறிய பிறகும் ஏன் பிரச்னை ஓயவில்லை? 'யார் வேண்டுமானாலும் இந்து மதத்திற்கு மாறி வரலாம்' என்று இணையத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் இதற்கு பதிலளிப்பார்களா? ஒருவேளை உமர் ஆர்யசமாஜிடம் போய் ஐயாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து ஒரு சர்டிபிகேட் வாங்கியிருந்தால் இந்த பிரச்னை தீர்ந்திருக்குமா?

சிந்தி சமூகத்தின் போபால் நகரத் தலைவரும், உமாபாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பகவன்தாஸ் சம்தானி என்பவரின் கருத்தைப் பாருங்கள்..!

''பிரியங்காகிட்ட செல்போன் இருக்கு. அதோடு டூவீலர்ல காலேஜ் போயிருக்கா. செல்போனும் டூவீலரும்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். காதலர்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கிட்டு ஊரு சுத்த ஆரம்பிச்சிடுறாங்க. எங்க சிந்தி இனப் பெண்கள் இனி வெளியே போகும்போது துப்பட்டாவுல முகத்தை மூடக் கூடாது. செல்போன், டூவீலர் பயன்படுத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிருக்கோம். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்காம பெற்றோருடைய கண்காணிப்பிலேயே வச்சிருக்க சொல்லி இருக்கோம்''

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள்..! இந்த விஞ்ஞான யுகத்தில் உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கையில், இவர்கள் நூற்றாண்டுகளை கடக்க மறுத்து அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.! இவங்கதான் சொல்றாங்க, இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை என்று!

இதையெல்லாம் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருக்கு..! அதை கண்டுபிடிச்சவர் இந்த இந்துத்துவ கும்பலை சேர்ந்தவர்தான். வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்பவரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்து இது..! "இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் மயங்குவதற்கு உடல்ரீதியான காரணம் ஒன்று இருக்கிறது.
முஸ்லிம்கள் விருத்த சேதனம் (circumcision) செய்து கொள்வதால் அவர்களால் இந்துப் பெண்களுக்கு அதிக உடல் சுகம் (Sharirik anand) கொடுக்க முடிகிறது . இந்து ஆண்கள் இதை செய்து கொள்வதில்லை". 'இது'தான் முஸ்லிம் ஆண்களின் 'ரகசிய ஆயுதம்' என்பது இவரது கண்டுபிடிப்பு..!!!!!

அடப்பாவிகளா! இந்து மத அமைப்பு ஒன்றின் தலைவராக இருப்பவர் பேசுற பேச்சா இது? இந்து சகோதரிகளை இதை கேவலமாக வேறு யாராவது அவமானப் படுத்த முடியுமா?

பிரியங்கா வீட்டிலும் சரி, உமரின் வீட்டிலும் சரி... யாரும் பேசத் தயாராக இல்லை. போபால் முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தரும், 'ஜமாத்-ஏ-உலமா-ஹிந்த்'தின் செய்தித் தொடர்பாளருமான ஹையத் யூசுப், ''இது உமரோட சொந்தப் பிரச்னை. இதுல நாங்க தலையிட ஒண்ணுமே கிடையாது. ஏற்கெனவே இங்கே அடிக்கடி இந்து-முஸ்லிம் பிரச்னை உருவாகும் சூழ்நிலையில் வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள அமைப்புகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதை நிறுத்த வேண்டும். ரெண்டு குடும்பமும் பேசித் தீர்த்துக்க வேண்டிய பிரச்னையை ஊதிப் பெருசாக்க நினைக்கக் கூடாது'' என்றார் வருத்தத்தோடு.

பற்றி எரியும் இந்தப் பிரச்னை பற்றிய வீடியோ செய்தியையும் கண்டு களியுங்கள்!

நன்றி: ஜூனியர் விகடன், சிந்த் டைம்ஸ்