Thursday, May 17, 2007

நில மோசடியில் ஈடுபட்ட சாமியார் தலைமறைவு!



சென்னை: பெரும் நில மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் சம்பந்தியுமான ஈவிபி பெருமாள்சாமி ரிஷி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதிமுகவில் முன்பு மாவட்டச் செயலாளராகவும், வாரியத் தலைவராகவும் இருந்தவர் பெருமாள்சாமி. பின்னர் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதிமுகவில் இருந்தபோது ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.


கட்சியிலிருந்து ஒதுங்கிய பின்னர் தன்னை ஒரு துறவி போல காட்டிக் கொண்டார். தனது பெயருக்குப் பின்னார் ரிஷி என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சில கோவில்களையும் கட்டினார்.


டோட்டலாக தன்னை உருமாற்றிக் கொண்ட போதிலும், தனது ரியல் எஸ்டேட் தொழிலை தொடர்ந்து நடத்தினார். இவருக்குச் சொந்தமாக ஒரு பொறியியல் கல்லூரியும் உள்ளது.


இந்த நிலையில் பெருமாள்சாமி மீது தி.நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் ரவி அப்பாசாமி என்பவருக்கு மதுராந்தகத்தைச் சேர்ந்த பெருமாள் ரெட்டி என்பவர் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், கோயம்பேடு 100 அடி சாலையில் பெருமாள்சாமிக்குச் சொந்தமான பூர்வீக நிலமான 26 கிரவுண்ட் நிலத்தை நீங்கள் 2005ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு கடந்த மார்ச் மாதம் பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த நிலத்தை ரூ. 14 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு எனக்கு பெருமாள்சாமி விற்று விட்டார்.


ஆனால் நீங்கள் அவரை மிரட்டி ரூ. 31கோடிக்கு வாங்கியுள்ளீர்கள். எனவே இது செல்லாது என்று கூறியிருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார்.


இதை விசாரித்த நீதிமன்றம், மாம்பலம் போலீஸாரை இதுகுறித்து விசாரிக்கப் பணித்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி அப்பாசாமி வழக்கு போட்டார். அதில், 2005ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டேன். நிலத்துக்கு பெருமாள்சாமி அதிக விலை சொல்லியபோதும் அதை ஏற்றுக் கொண்டு கடந்த மார்ச் மாதம் ரூ. 31 கோடியைக் கொடுத்து நிலத்தைப் பதிவு செய்தேன்.


ஆனால் தனது உறவினரான பெருமாள் ரெட்டி மூலம் திடீரென வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பெருமாள்சாமி. அவருக்கு முறையாக நிலத்தை விற்கவில்லை பெருமாள்சாமி. நிலத்தை விற்பது தொடர்பாக அவர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்பத்திரம் போலியானது, அது பதிவு செய்யப்படவில்லை.


மேலும் இப்போது கூடுதலாக ரூ. 61 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறி பெருமாள்சாமி, அவரது மகன் சந்தோஷ் ரெட்டி, ஆகியோர் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பெருமாள் ரெட்டி கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. போலியான பத்திரத்தை வைத்துக் கொண்டு ரவி அப்பாசாமியை மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து பெருமாள் ரெட்டி, சந்தோஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். பெருமாள் சாமி ரிஷி, அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


பெரும் நில மோசடியில் ஈடுபட்டுள்ள பெருமாள் சாமி, வெறும் விளம்பரங்கள் மூலமே வளர்ந்தவர். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இவரது ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்க முடியும்.


தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் சம்பந்தியான பெருமாள்சாமி, பெருமளவில் நில மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.




பின் குறிப்பு:
'ரிஷி'(?!) சாரோட போட்டோவில நெத்தியில நீ....ளமா போட்டிருக்காரே நாமம்.. அதைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?

0 comments: