விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!
தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு. மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட, மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும், இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.
"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.
சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.
மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.
இஸ்லாமியர்கள் போரிட்டவரலாற்றை இன்று நினைத்தாலும் உடல் மெய்சிலிர்க்கும்.
சுதந்திர தின வைரவிழாவுக்கு இன்னும் 23 நாட்கள்...
.
இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள்!