Wednesday, October 25, 2006

ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்

புதுடெல்லி, அக்.24-: ராணுவத்தில் உளவாளிகளின் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி, டெல்லியில் ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீரிலும், டெல்லியிலும் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ரிதேஷ்குமார், அனில் குமார் என்ற 2 பேர், பாகிஸ்தானின் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. யுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. அவர்கள் மீது ராணுவ விசாரணையும், போலீஸ் விசாரணையும் நடைபெறும். உள்துறையும் இதுபற்றி விசாரிக்கும். இந்த 3 விசாரணைகளின் மூலம், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளி யார்? என்பது தெரிய வரும்.

இந்திய ராணுவ ரகசிய ஆவணங்கள், காஷ்மீரில் இருந்து, டெல்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் அவை காட்மாண்டு கொண்டு செல்லப்பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்ப உளவாளிகள் திட்டமிட்டு இருந்தது, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துஇருக்கிறது.

ராணுவம், கடற்படை, விமானப்படையில் உளவாளிகளின் ஊடுருவல் இருக்கிறதா? என்பது கண்டறியப்படும். உளவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

நன்றி: விகடன்.காம்

Monday, October 23, 2006

ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்

ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற மேலும் ஒரு ராணுவ வீரர் கைது!

புதுடில்லி: ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நபரிடம் விற்க முயன்ற ராணுவ வீரர் ஒருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களில் கைது செய்யப்படும் இரண்டாவது ராணுவ வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியின் தெற்கு மேற்கு பகுதியில் உள்ள மகிபால்பூர் என்ற பகுதியில் வசிப்பவர் அனில் குமார். ஹவில்தாரான இவர் ராணுவ குழு காப்பீட்டு பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்திய ராணுவ ரகசியங்களை டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக டிரைவரிடம் இவர் அளிக்க முயன்றார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனில் குமாரை டில்லி போலீசார் கைது செய்தனர். அந்த டிரைவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். அவரை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்தியதாக பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து டில்லி வந்த விமானத்தில் பயணம் செய்த ரிதீஷ் குமார்(24) என்ற ராணுவ வீரரையும் டில்லி போலீசார் கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்தே அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் காஷ்மீரில் உள்ள லே பகுதியில் சிக்னல் மேனாக பணியாற்றுபவர். காத்மாண்டுவில் உள்ள சிலரிடம் இவர் இந்திய ராணுவ ரகசியங்களை விற்க முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ரிதீஷ் குமாரிடம் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பமான பென் டிரைவ் மற்றும் சில முக்கிய ராணுவ ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் ரிதீஷ் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து இருக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து டில்லி போலீஸ் துணை கமிஷனர் (சிறப்பு பிரிவு) அலோக் குமார் கூறுகையில்,""பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் ஒருவர் காத்மாண்டுவில் உள்ளார். அவரிடம் முக்கிய ஆவணங்களை அளிக்கும் முயற்சியில் ரிதீஷ் குமார் ஈடுபட்டுள்ளார் என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்தே அவரை நாங்கள் கைது செய்தோம். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக ரிதீஷ் குமார் செயல்பட்டு வந்துள்ளார். இதற்கு முன்பு சில ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அவருக்கு இரண்டு முறை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பணம் அளித்துள்ளது. ரிதீஷ் குமார் ராணுவத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகிறது. ராணுவத்தில் மேலும் சிலர் இது போல் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பணிபுரிகின்றனரா என்பதை அறிய, ரிதீஷ் குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம்,'' என்றார்.


தினமலர்-23/10/06