ஜனநாயகத்தைக் கண்டுபிடித்தவர் அத்வானி!
"கட்சியின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியில் இல்லாதக் காரணத்தாலேயே நான் ராஜினாமா செய்கின்றேன். மத்தியப் பிரதேச பட்ஜட் கூட்டத்தொடருக்குப் பின் இதுதொடர்பான விரிவான தகவலை நான் வெளியிடுவேன்"
மத்தியப் பிரதேச மாநில பாஜகவின் முகம் என பாஜக அகில இந்திய தலைமையினால் கருதப்படும் பாஜகவின் மூத்த தலைவர் கோபினாத் முண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெரிவித்த வாசகங்கள் இவை.
அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 4000 பேரும் கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்தார்களாம்.
டெல்லிக்குச் சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் முண்டே மறுத்திருந்தார்.
ஆனா, இதெல்லாம் பழைய கதை!
நேற்று (செவ்வாய்க் கிழமை) டெல்லிக்குச் சென்ற முண்டே, அத்வானி, வெங்கையா நாயுடு, ராஜ்னாத் சிங் ஆகியோரை சந்தித்தார். அத்வானியுடனான 5 மணி நேர சந்திப்பு முடிந்தவுடன் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
பல வருடங்களாகக் கட்சியில் இருந்த அனுபவத்தை வைத்து, 'கட்சியில் ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக' புகார் கூறிய முண்டே, ஒரே நாளில், அதுவும் 5 மணி நேர சந்திப்பிலேயே தனது கூற்றினை மாற்றிக் கொண்டதைப் பார்த்தால், காணாமல் போயிருந்த ஜனநாயகத்தை அந்த 5 மணி நேரத்தில் அத்வானிதான் கண்டுபிடித்துக் கொடுத்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.
அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வரும்போது, வரலாறு பாட புத்தகங்களில் 'ஜனநாயகத்தை கண்டுபிடித்தவர் அத்வானி' என்று எழுதப் பட்டால் யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது.
நல்லா கூத்தடிக்கறாங்கப்பா!