Sunday, May 06, 2007

விபச்சாரிகளின் வங்கி!

தலைப்பைப் பார்த்துவிட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம். நம் நாட்டுச்சட்டப்படி விபச்சாரம் தண்டனைக்குறிய குற்றம். இருப்பினும் இங்கே ஒரு சாதனையாகச் சொல்லப்பட்டுள்ள செய்தியை படிக்கும்போது விபச்சாரம் ஒரு தேசிய தொழிலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை

மே 05, 2007 கொல்கத்தா:

விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்கத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆதரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ரெட் லைட் ஏரியாவான சோனாகாச்சி பகுதியில்தான் முதலில் இந்த வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. அங்கு கணிசமான அளவு விபச்சாரப் பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விபச்சாரப் பெண்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்த கூட்டுறவு வங்கி ரூ . 15 லட்சம் வரை கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களைத் தேடிப் போய் அவர்களுக்கு இந்த வங்கி சேவை செய்து வருகிறது.

கொல்கத்தாவில் 2, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 7 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது. வங்கியன் கடன் வழங்கும் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சாந்தனு சாட்டர்ஜி வங்கியின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், செக்ஸ் உழைப்பாளிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த வங்கியை தொடங்கினோம். இப்போது தினசரி ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்யப்படுகிறது என்றார்.

இந்த வங்கியின் தலைவரும் , செக்ஸ் உழைப்பாளியுமான அமிதா தாஸ் கூறுகையில், இன்னும் நிறைய சிவப்பு விளக்குப் பகுதிகளில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

வங்கியின் ஆண்டு முதலீட்டின் அளவு ரூ. 9 கோடியைத் தொட்டு விட்டதாம்.

இந்த வங்கியில் கணக்குத் தொடங்க எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ. 15 தான். தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்குமாறு விபச்சாரப் பெண்களிடம் இந்த வங்கி பிரசாரம் செய்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள் . தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள். தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.

இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விபச்சாரப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனராம்.

====

விபச்சாரிகள்- செக்ஸ் தொழிலாளர்களாம்!

தொழிலாளர்களின் ஆட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது! பாலியல் சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் கண்டவனுக்கும் முந்தானை விரிக்கும் விபச்சாரிகளின் செயலை உழைப்பு என குறிப்பிடுவது சரியா? காடு-கழனிகளில் அரைவயிற்றுடன் ஒருநாளின் மூன்றில் இரண்டு பங்கு கால்கடுக்க, உடல்நோக உழைக்கும் விவசாயினுடைய உழைப்பும் இதுவும் ஒன்றா?

விபச்சாரத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வேண்டுமாம்! நாடு உருப்படுமா? அதேபோல் 'குடிமகன்'களுக்கும் வங்கி லோன் வழங்கி அரசே உதவலாமே! வங்கி வழங்கும் கடன்தொகையால் ஆணுறையை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த கடனை அவலமான இந்த தொழிலிலிருந்து வெளிப்பட்டு வேறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கொடுக்கலாமே!


இத்தகைய அவலங்களைக் கண்டுகொள்ளாமல் போனால் வெகுசீக்கிரம் அன்னை பாரதம் என்று அறியப்படும் நம்நாடு வேறு பெயரில் அறியப்படும் அபாயம் இருக்கிறது.

6 comments:

said...

ஐயா, தங்களின் இந்த புரிதல் எனக்கு வியப்பளிக்கிறது. தமிழச்சியின் இந்த பதிவை படித்து பாருங்கள்.

காலகாலமாகவே இந்த தொழில் முறை விபச்சாரமென்பது எப்போதுமே ஆதிக்க சக்திகளின் வக்ரங்களை தணித்துக்கொள்வதற்காகவே ஏற்படுத்தப்படுகிறது. மன்னராட்சிக்காலங்களில் மாற்றரசனை வெற்றி கொண்ட மன்னர்கள் அவர்களது நாட்டில் வாழ்ந்து வரும் குடும்பபெண்கள் பலரையும் சிறையெடுத்து வந்து வேண்டும் வரை அனுபவித்து பின் துப்பி விடுவார்கள். வேற்று நாட்டில், தங்கள் வாழ்வை இழந்த அந்த பெண்கள் வேறு எப்படி வாழ முடியும்? இப்படி தான் தொழில் முறை விபச்சாரம் உருவானது. அப்படி படுகுழியில் விழுந்தவர்களின் சந்ததிகளும் அங்கிருந்து எழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளத்தான் நம் வருணாசிரம தர்மம்(!!??!!??) இருந்ததே. மூவலூர் ராமமிருதம் அம்மாள் போன்ற போராளிகள் அது ஒரு குலத்தொழிலென்ற மாயையை உடைத்தெறியும் வரை இது தொடர்ந்தது.

இப்போது காலம் மாறிவிட்டதுதான். ஆனாலும் இப்போதும் ஒரு முறை பலாத்காரப்படுத்தப்பட்டுவிட்ட பெண்ணின் நிலை நம் சமூகத்தில் என்ன? அவள் வாழும் வகையென்ன? அப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து மீண்டு வருதலென்பது பேச்சளவில் மட்டுமே சாத்தியம். எத்தனையோ இடங்களில் போலீஸாரே தங்களது மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க ரவுடிகளையும் இத்தகைய பெண்களையும் தங்கள் தொழிலை தொடருமாறு வற்புறுத்துவது வழக்கமான ஒன்றுதான். இவர்களை முதலீடாக வைத்து தொழில் நடத்தும் முதலாளிகள், இவர்களின் மூலம் பிழைக்கும் தரகர்கள் இவர்களனைவரும் வெளியே வருதல் எத்தனை சிரமமென்பதை இவர்களுக்கு நடுவே களப்பணி செய்துவரும் எத்தனையோ சமூக சேவகர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

//சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள் . தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள். தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.//
கௌரவமான வாழ்க்கையைத்தான் அவர்களுக்கு தர முடிவதில்லை. குறைந்தது நோயற்ற வாழ்வையாவது தருவோமே என்கிற முயற்சிதானிது என்பதை இந்த வரிகள் உணர்த்தவில்லையா? அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைத்து(அது பெண் குழந்தையாயிருக்கும் பட்சத்தில் இது சாத்தியம் இல்லை) அதன் மூலம் அவர்கள் அந்த சகதியிலிருந்து கடைசிக்காலத்திலாவது வெளி வரலாமில்லையா? இப்படியான நோக்கில்தான் இந்த வங்கிகள் செயல்படுகின்றனவேயொழிய விபச்சாரத்தை வளர்ப்பதற்காக அல்ல.

"பெண்டிர் தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர்" என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்வது போல நம் வீட்டுப்பெண் அந்த நிலையிலிருந்தால் எப்படி பார்ப்போம் என்று யோசித்து பாருங்களேன். எந்த மனிதனும் (இதில் பெண்ணும் அடக்கம்) குறைந்த பட்சம் சுயமரியாதையோடே வாழ விரும்புவர். அதை அவர்களுக்கு தர நாம் மிகப்பெரிய அமைப்புகளுடன் போராட வேண்டியிருக்கும். அது உடனடியாக இயலாத போது அவர்களை ஆரோக்கியத்தோடாவது வாழ வழி செய்வோமே.

தாங்களே விரும்பி தேர்ந்தெடுத்தது இத்தொழில் என்று சொல்லும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாரும் சோனா கட்சிலோ மும்பையின் சேரிப்பகுதிகளிலோ வசிப்பவர்களல்லர். அவர்கள் நிச்சயம் நல்ல வசதியான வாழ்வையே வாழ்ந்து வருவார்களாயிருக்கும். அவர்களுக்கு இது போன்ற வங்கிகள் தேவையில்லை.

எனவே அவர்களின் மீது சற்றே கருணையுடன் இந்த விஷயத்தை அனுகுங்களேன்.

said...

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் அதானுங்களே இந்திய நாட்டின் சமத்துவம்

said...

விபச்சாரிகளுக்கு தனி வங்கியா? தெரியாமத்தான் கேட்கிறேன். வாங்கிய கடனைக் கட்டத் தவறினால் எப்படி வசூல் செய்வார்கள்?

வெட்கம்,மானம்,ரோசம் உள்ளவர்கள் கஷ்டப்பட்டாவது கேவலத்திற்குப் பயந்து திருப்பிக் கொடுப்பார்கள். இந்த உழைக்கும் மகளிரிடம் சாத்தியமா?

போறப் போக்கைப் பார்த்தால் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் கூட லோன் கொடுப்பார்கள் போலிருக்கு! கொடுமையடா சாமி!!

said...

சகோதரி லக்ஷ்மி,
என்ன சொல்ல வருகிறீர்கள்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விபச்சாரம்தான் கடைசி தீர்வா?

நாய் கடித்தால் அதற்கு சரியான மருத்திட வேண்டும். மென்மேலும் கடிபட ஏற்பாடு செய்யக் கூடாது. அத்தகைய ஏற்பாடுகள்தான் இத்தகைய வங்கிகள்.

மரைக்காயர் சொல்லி இருப்பதுபோல், இவ்வங்கிகள் விபச்சாரத்திலிருந்து மீள விரும்பும் பெண்களுக்கு கடனுதவி வழங்கலாம். வட்டியைக் கூட தள்ளுபடி செய்து கண்ணியமான வேறுதொழில் செய்து மறுவாழ்வு பெற உதவலாம.

விடுத்து,மென்மேலும் விபச்சாரத்தில் திளைத்திருக்க நிதியுதவி செய்வது முட்டாள்தனமானது.

சொல்லப்படும் காரணங்கள் நியாயமாகப் படவில்லை.

said...

ஐயா மரைக்காயர் அவர்களே.. விபச்சாரம் என்பது உலகின் தொன்மையானத் தொழில்.

அதை ஒழிப்பதென்பது இந்த உலகத்தில் ஆண்களாகிய நாம் உயிருடன் இருக்கின்றவரைக்கும் முடியவே முடியாது..

ஏதோஇ இந்த அளவிற்காகவாது அந்தப் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களே என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்..

அந்தப் பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டது, அல்லது நுழைந்தது அவர்களாகவே அல்ல. கண்டிப்பாக நம் ஆண்களால்தான். இதில் ந்தச் சந்தேகமும் முதலில் உங்களுக்கு இருக்கவே கூடாது. கஸ்டமர்களாக சென்று தினமும் தொழிலை நடத்துவது நாம்தானே ஸார்.. அவர்கள் அழைத்தால் போய்விடுவதா?

"முடியாது. போக மாட்டோம்..
வர மாட்டோம்.
வீட்டில் எங்களுக்கு மனைவி இருக்கிறாள்.
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்..
இது ஒரு ரெண்டு நிமிஷ வேலை.
இதுக்குப் போய் நான் இம்புட்டுக் காசு செலவழிக்க மாட்டேன்.
இது கெட்டப் பழக்கம்..
இதைச் செஞ்சா எனக்கு நல்ல சாவு வராது..
சொர்க்கத்துக்குப் போக முடியாது..
பார்க்குறவன் என்னைத் தப்பா நினைப்பான்.."

- இப்படியெல்லாம் சொல்லிவிட்டுப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பெண்கள் இன்றைக்கு ஒரு பகுதியையே சுற்றி வளைத்து, அதற்கு மறைமுகமாக அரசும் அனுமதியளிக்கும் சூழலை ஏற்படுத்தி, இன்றைக்கு அதுவும் கொல்கத்தா மக்களின் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்று.. கொல்கத்தாவின் புராதனச் சின்னம் என்ற பெயரையும் பெற்றிருக்காது.

தவறு நம் மீதுதான்.. பெண்கள் பாவம்.. நாம் கையில் உருட்டி விளையாடிய தாயக்கட்டைகள். அன்றும் இன்றும் என்றும்..

said...

சகோதரி லக்ஷ்மி அவர்களே, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அவற்றுடன் நானும் பெருமளவில் உடன்படுகிறேன் என்றபோதிலும் எனக்கு சில மாற்றுக்கருத்துக்களும் இருக்கின்றன.

விபச்சாரம் நமது சமுதாயத்தில் புறையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அவலம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அதை சட்டம் போட்டோ, அல்லது சில தலைவர்கள் / சமூக அமைப்புகளின் முயற்சியாலோ குறுகிய காலத்தில் துடைத்தெறிவது இயலாத காரியம். But it requires a continuous and conscious effort by the society as the whole.

இந்த அவலத்தில் புதிதாக யாரும் ஈடுபடாமல் இருக்க ஆங்காங்கு தடைக்கற்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு வழிவகைகள் சுலபமாக்கப்பட வேண்டும். வெளியேறுவது தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை discourage செய்யும் வகையிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவெல்லாம் தானாக நிகழ்ந்து விடாது. அதைத்தான் conscious effort என்று குறிப்பிட்டேன்.

ஆனால், இந்த அணுகுமுறைக்கு நேர்மாற்றமாக, இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மேலும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, இப்பெண்களுக்கு இத்தொழிலையே தொடர ஊக்குவிக்குமேயொழிய, இதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தாது.

இந்த கருத்தைத்தான் நான் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறேன்.

தங்களின் கூட்டு முயற்சியால் ஒரு வங்கியைத் தொடங்கி திறம்பட நடத்த முடிந்தவர்களுக்கு வேறொரு தொழிலை தொடங்கி நடத்துவது இயலாத காரியமா என்ன?