மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - பேரா. ஆ. சிவசுப்பிரமணியன்
வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.
மனுவின் காலம்
மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.
மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்
மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.
மனு செய்த கொடுமை
நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.
தமிழ்நாட்டில் மனுதர்மம்
தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.
‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’
என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.
பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’என்று குறிப்பிடுகிறார்.
பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.
‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும்செய்யுள் வடிவில் அமைந்தன.
ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.
மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.
நன்றி: விழி