Tuesday, November 28, 2006

ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...


"நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு 'கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை - நானா? அல்லது அவர்களா?).

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. 'வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.

இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: "பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''

(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh at aol dot com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)

தமிழாக்கம்: அப்துல் அலீம் சித்தீக்
நன்றி: மக்கள் உரிமை

Sunday, November 12, 2006

அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

சனி, 11 நவம்பர் 2006
புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி வகித்திருந்த கமாண்டர் J C கல்ராவை மத்திய உளவுத்துறை CBI நேற்று கைது செய்தது.

திரு. கல்ரா இந்தியக் கடற்டையில் இருந்து இவ்வாண்டு ஜனவரியில் விருப்ப ஓய்வு பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Ltd) எனும் மத்திய அரசு நிறுவனத்தில் தற்போது வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

நேற்று காலை SCOPE (Standing Conference Of Public Enterprises) Complex எனப்படும் மத்திய அரசு நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் கட்டிடத்தில் அவரது அலுவலறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னரே கல்ராவின் நோயிடாவில் உள்ள வீட்டிலும் அலுவலகத்திலும் மத்திய உளவுத்துறை தணிக்கைச் சோதனை நடத்தியிருந்தது. இவர் பல பாதுகாப்பு ரகசியங்களை அந்நிய சக்திகளுக்கு விற்றதற்கான ஆதாரங்களும் இச்சோதனையில் சிக்கின.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்படை கேப்டன் சலாம்சிங் ராத்தோரை விசாரிக்கும் பொழுது கல்ராவைக் குறித்த விவரங்கள் உளவுத்துறைக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் இராணுவ இரகசியங்கள் கடத்தி விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் கல்ராவிடமிருந்து கிடைத்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் அபிஷேக் வர்மா என்ற தொழிலதிபரிடம் தொடர்ந்து உளவுத்துறை விசாரணை நடத்திவருகிறது. இவ்வழக்கின் முக்கிய எதிரியான ரவி சங்கரன் எனும் நபர் பிரிட்டனில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது. இவரைக் கைதுசெய்ய இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாகவும் CBI தெரிவித்துள்ளது.

இதற்குமுன்னர் RAW-வில் இருந்த சில உயரதிகாரிகளின் நாட்டிற்கெதிரான துரோகமும் இங்கே நினைவுகூரத் தக்கது.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

பின் குறிப்பு: தேசிய கீதமாகக் கூட அங்கீகரிக்கப்படாத ஒரு பாடலை பாட விருப்பமில்லை என்று சொன்னதற்காக முஸ்லிம்களின் தேசபக்தியை சந்தேகப் பட்டவர்கள், ராணுவம், RAW போன்றவற்றின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை காசுக்காக விற்கும் இந்தத் தேசத்துரோகிகளைப் பற்றி ஏன் குரலெழுப்புவதில்லை என்பது இன்னும் புரியாத புதிர்!

Sunday, November 05, 2006

முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

புதுடெல்லி, நவ.5:
முக்கிய ஆவணங்களை திருடியதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தது.

இது பற்றி சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கடற்படை ரகசியம் கசிவு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. ஒய்வு பெற்ற ராணுவ
கேப்டன் சலாம் சிங் ரத்தோர் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது ராணுவம் தொடர்பான பல
முக்கிய ஆவணங்களை அவரது வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது. இது அவரது வீட்டில்
இருந்ததை அலட்சியப்படுத்த முடியாது. ஆவணங்களை திருடி, ரத்தோர் விற்க
முயன்றுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து ராணுவ இயக்குனரகத்தின் அனுமதி பெற்று
ரத்தோர் மீது அரசு ஆவண ரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று
முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணுவத்திலிருந்து கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார் ரத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன் 5 நவம்பர் 2006

Wednesday, November 01, 2006

ரகுநாத் கோவில் தாக்குதல்: குற்றவாளிகள் யார்?

ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது.

கடந்த 2002 மார்ச் 30 அன்று ஆயுதம் தாங்கிய இரண்டு தீவிரவாதிகள் ரகுநாத் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதற்கு முன்னதாக அப்பாவி மக்கள் கூடும் ரகுநாத் பஜார் எனும் கடைவீதியில் கையெறி குண்டுகளை வீசி பல கடைகளையும் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியிருந்தனர். இத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் கடும் காயமடைந்தனர். காவல் படையினர் திருப்பித் தாக்கியதில் அந்த இருவரும் கொல்லப் பட்டனர்.

துணிகரமாக நிகழ்த்தப்பட்ட இந்த மாபாதகச் சம்பவம் தொடர்பாக ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த ஜம்மு நீதிமன்றம் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கூறியது. நீதிபதி சுபாஷ் சந்திர குப்தா தனது தீர்ப்பில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிகக்கடுமையாக சாடினார். இந்த வழக்கில் 84 பேர் சாட்சியம் அளித்திருந்த போதிலும், குற்றம் சுமத்தப் பட்ட ஆறு முஸ்லிம்களுக்கும் இக்கோயில் தாக்குதலில் தொடர்பு உள்ளதற்கான ஒரு ஆதாரம் கூட காவல் துறையால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை.

அதற்கு மாறாக, வீரேந்தர் சர்மா என்பவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியதற்கு இந்த வழக்கின் விசாரணை கோப்புகளில் போதுமான தகவல்களும் போதுமான முகாந்திரமும் இருந்த போதிலும் இவர் மீது குற்றம் சுமத்தப் படவோ, கைது செய்யப்படவோ இல்லை. குறைந்தபட்சம் இவர் விசாரிக்கப்பட கூடவில்லை. 'இவர் ஏன் கைது செய்யப்படவில்லை?' என்பதற்கு காரணம் தெரிவிக்கும்படி நீதிபதி சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இக்கோயில் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு, இப்போது நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுவிக்கப் பட்டிருக்கும் அப்பாவிகளின் பெயர் விபரம் வருமாறு; மஹ்மூது அஹமது, மரூஃப் கான், சர்ஃப்ராஸ் கான், கபீர்தீன், முனீர் ஹுசைன் மற்றும் சபீர் அஹமது.

சத்திய மார்க்கம்.காம்