'திண்ணை.காம்'-ல் மலர் மன்னன் என்பாருடன் நடந்த ஒரு விவாதத்தில் எதிர்வினையாக சகோ.வஹ்ஹாபி அவர்களின் வலைப்பதிவில் கண்ட பதிவு இது! (ஆனால் திண்ணை.காம்-ல் இது வெளியானதாகத் தெரியவில்லை) கோவையில் என்ன நடந்தது என்பதை பல ஆதாரங்களுடன் விளக்கும் ஒரு தொகுப்பு ஆவணமாகவே இதைக் காண்கிறேன். வஹ்ஹாபி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.
************
பலமுறை சொன்னதுதான்; மீண்டும் சொல்வதில் தவறில்லை: எந்த ஒன்றைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றி முழுக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் அடிப்படை அளவாவது தெரிந்து கொண்டு எழுதுதல் நலம். இல்லையெனில், சென்ற வாரத் திண்ணையில் 'ஹிட்லிஸ்ட்-ல் பெயர் வருவதற்கு' எழுதிய கார்கில் ஜெய்யும் மலர் மன்னனைப் போலவே இறுதிவரை 'அங்கீகாரம் இல்லாத' வரிசையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.
தனக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி எழுதாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, "தஸ்லீமா அக்காவிடம் போய்க் கேள்; ரஸூல் அண்ணனிடம் கேள்" என்றெல்லாம் எழுதி, தன் அறியாமையைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமா? அவ்விருவரைக் குறித்து அலசி ஆராயா விட்டாலும் குறைந்த பட்சம் திண்ணையில் மட்டுமாவது என்ன பேசப் பட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டு ஜெய் எழுதியிருக்கலாம்.
போகட்டும்.
ஹிட் லிஸ்ட் உருவாகும் அடிப்படையைப் பார்ப்போம்:
இலங்கைக்கு நமது அமைதிப் படையை அனுப்பிய 'குற்றம்' செய்ததால் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஹிட் லிஸ்ட்டில் வந்தார்.
சீக்கியரின் பொற்கோவிலில் இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட 'குற்றம்' செய்ததால் இந்தியாவின் இரும்பு மனுஷி என்றழைக்கப் பட்ட இந்திராகாந்தி ஹிட் லிஸ்ட்டில் ஏறினார்.
இவ்விரு பிரதமர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெயரும் ஹிட் லிஸ்ட்டில் ஏற்றப் பட்டது. அப்பெயருக்குச் சொந்தமானவர் காந்திஜி.
"இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் சொந்த நாடு. அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறிய 'குற்றம்' செய்ததால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றார்.
இதுபோல் நிறைய காட்டுகள் உள. அவை அனைத்தும் சொல்லும் ஒரேயொரு செய்தி என்னவெனில், "ஹிட் செய்பவர்களின் பார்வையில் 'குற்றம்' செய்பவர்களாகக் கருதப் படுபவர்கள்தாம் ஹிட் லிஸ்ட்டுக்குள் கொண்டுவரப் படுவார்கள்" என்பதே.
முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கை என்பதே, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்பதுதான். "ஒருவனே" என்றபோதே, "இரண்டாமவர் இல்லை - அவர் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக இருப்பினும்" என்பது அடக்கம்.
இந்த அடிப்படையைக்கூட அறியாமல், "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?" என்று மலர் மன்னர் திண்ணையில் சவால் விட்டதற்குச் சில சகோதரர்கள் பதில் எழுதினர்; நானும் அவரது கூற்றிலுள்ள அறியாமையைச் சுட்டிக் காட்டி விளக்கம் எழுதி இருந்தேன்.
முஸ்லிம்களின் கொள்கையைச் சொல்வது 'குற்றம்' என்று கருதும் 'ஜிஹாதி'களுக்கு அவ்வாறு சொல்லும் இபுனு பஷீர் வகையறாக்களை ஹிட் லிஸ்ட்டில் வைக்கும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அது மலர் மன்னனுக்கு எப்படித் தெரியும்? இதே ஐயத்தை ஜெய் கிளப்பியிருக்கிறார்.
ஒரேயொரு வாய்ப்புள்ளது.
மலர் மன்னனுக்கு வடநாட்டில் நிறைய 'முக மதிய' நண்பர்கள் இருப்பதாக அவரே திண்ணையில் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒட்டுத் தாடியை உடைய 'ஜிஹாதி'களாக இருப்பதற்கும் அவர்களது ஹிட் லிஸ்ட்டில் இபுனு பஷீருடைய பெயரும் அவரைப் போலவே அறிவிப்புச் செய்யும் என் போன்றோரது பெயர்களும் ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
அல்லது, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் 'குற்றம்' செய்பவர்களைத் தமிழக அளவில் அழித்தொழிக்கும் எண்ணத்தோடு தென்காசியில் குண்டு வைத்த 'ஜிஹாதி'களது ஹிட் லிஸ்ட்டில் எங்களுடைய பெயர்கள் இருப்பதற்கோ ஏறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.
***
அடுத்து, முஸ்லிம்களைத் தடுக்கும் காவல்துறையின் கதி என்னவாகும் என்பது கார்கில் ஜெய்யிக்குத் தெரியாது என்பதால் அதைக் கோவை அல்-உம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
கோவையில் அல்-உம்மா என்ற அமைப்பே துடைத்தெறியப் பட்டதைக்கூட அறியாமல் எழுதும் ஜெய்யிக்குக் கோவைக் கலவவரங்கள் குறித்து நிறைய செய்திகள் சொல்ல வேண்டும்.
கோவை நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் அதேவேளை சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றை மூன்றாகப் பிரித்துக் கொள்தல் நலம்:
- உக்கடம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை.
- காவல்துறையும் காவிகளும் கைகோர்த்துக் கொண்டு கோவையின் முழு முஸ்லிம் சமுதாயத்துக்கே எதிராக ஆடிய கோரத்தாண்டவம்.
- தொடர் குண்டு வெடிப்புகள்.
1. காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலைகடந்த 1997 நவம்பர் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று ஒரு பைக்கில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பயணித்ததற்காகக் போக்குவரத்துக் காவலர் செல்வராஜினால் தடுக்கப் பட்டு, அபராதம் செலுத்துமாறு பணிக்கப் பட்டனர்.
செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டு அபராதத் தொகையை அம்மூவரும் செலுத்தியிருந்தால் கோவை கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சாத்தானின் ஆணவக் குணம் மேலோங்கியதால் அம்மூவரும் தம் சகாக்கள் சிலரைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்து, கடமையைச் செய்தக் காவலர் செல்வராஜை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர்.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளர் இராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டிலுள்ள அல்-உம்மா அலுவலகத்திற்குக் காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும் அல்-உம்மாவின் பொதுச் செயலாளர் அன்சாரீ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ்(22), ஷபி(22), மற்றும் ஷஃபி(20) ஆகிய மூன்று முஸ்லிம் வாலிபர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
சரணந்தவர்களை விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி, உரிய/உச்சபட்ச தண்டனை வழங்கியிருந்தால் 19 அப்பாவி முஸ்லிம் உயிர்களைப் பலிவாங்கிய கொடுமையையும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கானச் சொத்துகளின் நாசத்தையும் முஸ்லிம் பெண்களின் மானபங்கத்தையும் கோவை சந்தித்திருக்காது.
***
2. கோவை முஸ்லிம்களுக்கு எதிரான காவி-காவலர்களின் போர்காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் (30.11.1997) கோவை நகர் முழுதும் காவி-காவலர்களின் கோரத் தாண்டவம் அரங்கேறியது. காவலர் செல்வராஜின் உடல் வைக்கப் பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீவைத்தும் எரித்தனர். அந்தப் பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனைப் பார்த்த காவிக் கலவரக் கும்பல் நேராக அந்த வேனுக்குச் சென்று வேனில் இருந்த ஹபீப் ரகுமான் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றது.
சற்று நேரங் கழித்து, மருத்துவமனை வளாக நிலவரம் தெரியாமல் உக்கடப் பகுதிக் கலவரத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரைப் பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிஃபும் சுல்தான் என்பவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவ்விருவரையும் கொல்வதற்குக் காவிப்படை ஓடிவந்தது. அவ்விருவரும் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு ஓடினர். ஆனால் வன்முறைக் காவிகள் அவர்களை விரட்டிப் பிடித்துத் தாக்கினர். ஆரிஃபை அடித்துக் கொன்றனர். சுல்தான் பலத்த காயங்களுடன் தப்பி ஓடி விட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் கொலைவெறிக் காவிகள் குவிந்திருப்பதை அறியாமல் லியாகத் அலிகான் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவரை மருத்துவமனையின் வசலிலேயே வன்முறைக் கும்பல் தடியால் அடித்துக் கொன்றது.
அந்தக் கலவரத்தில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மட்டும் ஹபீப் ரகுமான், ஆரிஃப், லியாகத் அலிகான் ஆகிய மூவர் கத்தியால் குத்தப் பட்டும் அடித்தும் கொலை செய்யப் பட்டனர்.
ஹாரிஸ் என்ற இளைஞர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப் பட்டான்.
அந்தக் கொடுமையை ஜூனியர் விகடன் [7 டிசம்பர் 1997] நம் கண்முன் கொண்டு வருகிறது:
"கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஓர் ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட - வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகி விட்டது."
காவிக் கொலைவெறியர்களோடு காவலர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய கோவைக் கொலைகளுள் அரசு மருத்துவமனை வளாகக் கொலைகள் தொடர்பாக மட்டும் 14 காவியரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்து, பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகிய மூவர் விடுதலை செய்யப் பட்டனர்.
ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேற்காணும் 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, "11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை" என்பதாகக் கூறி அனைவர் மீதும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். கோவை மருத்துவமனை வளாகக் கொலை பாதகர்கள் அனைவரும் அந்த வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலையானபோது
நீதிதேவதை கண்களை மட்டுமின்றி முகத்தையே மூடிக் கொண்டாள். இது, 30.11.1997இல் நடந்தேறிய கோவை அரசு மருத்துவமனை வளாக வன்முறைக் கொலைகளும் அவை சார்ந்த வழக்குகள் மட்டுமே.
கோவை நகர் முழுதும் நடந்தேறிய காவி-காவலர்கள் ஆடிய கோரத் தாண்டவம் குறித்து பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (13-26 டிசம்பர் 1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்:
"மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (30.11.1997) வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சிசாலை-டவுன்ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவியரும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கையக் கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர்
சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்துத் தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன. (தான் தேர்தலில் ஜெயித்தால் "முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்" என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியுமிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தண்டபாணி).
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர்; அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர்.
ஹபீபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது.
வார்டு பாய் ஒருவர் அவரை ஓர் அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக்
காப்பாற்றினார்.
தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்
தலைவி அழுது கொண்டே 'எனது கல்யாணப் பட்டுச்சேலை எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை' என்று நம்மிடம்
சொன்னார். 'அருகிலுள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள்
தங்களுக்கு உதவ முன்வரவில்லை' என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.
"பிரபலப் பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் 'எ காங் இன் தி வீல்' என்ற தலைப்பில் 3 ஜனவரி 1998இல் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன; அல்லது சூறையாடப்பட்டன; கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றம் சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு இது சிறிய பிரச்சினை அல்ல. 12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரின் தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை."
தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி 14 டிஸம்பர் 1997 இதழில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:
"நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட
(முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதைக் கடைகள், முதல்தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர்தான் தீ வைப்புச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில், 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட, சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்"
காவிகளோடு காவலர்கள் கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்களைக் கொடூரமாகக் கொன்றும் அவர்தம் சொத்துகளைச் சூறையாடியும் ஆடிய
கோரத் தாண்டவம் வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டு, டெல்லியில் இயங்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடமும் சமர்ப்பித்து முறையாக நீதி கோரப் பட்டது. அப்போது கிடைக்க வேண்டிய நீதி கிடைத்திருந்தால் கோவை குண்டுவெடிப்பு நாசம் தவிர்க்கப் பட்டிருக்கும்.
***
3. கோவை குண்டு வெடிப்பு1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.
காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 7.4.2000இல் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 166 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை 7.3.2002இல் தொடங்கியது.
சிறையில் அடைக்கப்பட்ட 166 பேரில்,
3 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்ளை உறுதிப் படுத்தியோ மறுத்தோ, விசாரிக்கப் பட்ட 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அம்மூவரும் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்தது.
இவ்வழக்கில் கைதான சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கையின் எந்த இடத்திலும் இவர்களது பெயர்கள் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை.
ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் ஒருவரைக் குற்றவாளி/நிரபராதி என்று உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. FIR பதிவு செய்யாமல், எந்தவித ஆவணமும் இல்லாமல், சாட்சிகளும் இல்லாமல் சர்தாரும் அப்துல்லாஹ்வும் சிறைவாசம் அனுபவித்த கொடுமையும் இவ்வழக்கில்தான் நடந்தேறியது.
45 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.
இக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மஅதனி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மஅதனி மனுக் கொடுத்தார். மஅதனியின் மனுவை உச்சநீதி மன்றம் காது கொடுத்துக் விசாரிக்கக்கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது.
முஸ்லிம் 'தீவிரவாதி' மஅதனியிடம் இப்படிக் கறாராக நடந்து கொண்ட இதே உச்சநீதி மன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்த ஜெயேந்திரருக்கு,
அவ்வழக்குத் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.
"மஅதனியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.
சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மஅதனியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரைக் குறைந்தபட்சம் மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
சில மாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓர் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அவ்வறிக்கையில் பேரா. அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர் வீராசாமி, கவிஞர் சுகிர்தராணி, வழக்கறிஞர் ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மஅதனி பிணையில் விடுவிக்கப்படவில்லை. (அந்த அறிக்கையையும் அதில் கையெழுத்திட்டவர்களையும் "
தீவிரவாதிகளுக்குப் பால்" வார்ப்பதாகச் சாடி திண்ணையில் ஒரு கட்டுரையும் வந்தது).
ஆனால் இப்போது மஅதனி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மஅதனியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீஸ் ஆகியவை எப்படி ஈடுகட்டும்? இது மஅதனிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட
அனைவருக்குமான கேள்வி.
கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டபோது சிறுவன் அப்பாஸுக்கு வயது 16. அவனுக்குச் சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவனுக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவன் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, 'எய்ட்ஸ்' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவனது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை மருத்துவமனையின் அலட்சியம் என்பதா, அல்லது மருத்துவத் துறையிலும் புகுந்து கொண்டு பழி தீர்த்துக் கொள்ளும் காவிவெறி என்பதா?.
இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இம்முஸ்லிம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், பிணைகூட கிடைக்காமல் ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது?.
'தடா'சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில்கூட, நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டுப் பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரணக் குற்றவியல் சட்டங்களின்கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 166 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை.
எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப் படாத மஅதனிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மஅதனி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.
இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால்,
இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டு்கால 'தண்டனையை' அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில, தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
மஅதனி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போலப் பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.
ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், "இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக"க் 'கண்டுபிடித்து'த் தீர்ப்பளித்தது. "இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்" என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், "இந்நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக" எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலஸும் நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.
கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின்படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும், எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
"
இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் சில முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; மாறாக, இந்துத் தீவிரவாதிகளும் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை" என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும்.
இச்சட்ட பூர்வ உரிமை முஸ்லிம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, கோவை கலவரத்தைப் பற்றி சிறப்பு நீதிமன்றம் வாய் திறக்கவே மறுத்துவிட்டது.
குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே 'அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. "குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ஆனால், "உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக"க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.
இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாஃபைச் சாட்சி சொல்ல போலீஸார் அழைத்து வந்தனர். முனாஃப் நீதிமன்றத்திலேயே, "தன் அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீஸார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை" அம்பலப் படுத்தியதோடு, போலீஸார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.
விசாரணையின்போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபோது, போலீஸாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி 'உதவி' செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியோ, போலீஸாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.
குற்றவாளிகளைச் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீஸார் 'அடையாளம் காட்டி' இருக்கின்றனர். போலீஸாரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை போலீஸார் தயார் படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.
கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்தது. "இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரைப் பிடித்துச் சென்று போலீசில் அன்றே ஒப்படைத்ததையும் போலீஸார் அவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும் அந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும் 'கைது செய்யப் பட்ட' 38 முஸ்லிம்களுக்கும் எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.
அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு, சம்பந்தம் சாலை உள்ளிட்ட
மூன்று 'வெவ்வேறு இடங்களில்' குண்டு வைத்த தீவிரவாதிகளை 'நேரில் பார்த்த சாட்சியாக' விஜயகுமார் என்ற ஒரே ஆள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல
62 சாட்சிகள், 'வேறுபட்டப் பல இடங்களில்' குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை 'நேரில் பார்த்த சாட்சிகளாக' நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், 'இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் மிக முக்கியமான குற்றவாளியாக முன் நிறுத்தப்பட்ட
மஅதனிக்கு எதிராக அழைத்து வரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீஸாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீஸ் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள்; அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?
காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீதான கொலை
வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மஅதனி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றித் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முஸ்லிம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக்
கண்டுகொள்ளவேயில்லை.
***
நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பட்டது.
அல்-உம்மாவின் தலைவர் கோவை பாஷாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலாளர் அன்ஸாரீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது.
தங்களின் ஆணவத்தால் தங்களையே அழித்துக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் சொந்தச் சமுதாய மக்களின் விலை மதிப்பற்ற 19 உயிர்களையும் கோடிக்கணக்கில் உடமைகளையும் தம் சமுதாயப் பெண்கள்தம் மானத்தையும் இழந்து வீதியில் நிற்பதற்கு முதல் காரணமானவர்களான அல்-உம்மாவின் அந்த பைக் வீரர்கள் மூவரும் முஸ்லிம்களின் மன்னிப்புக்குக்கூட அருகதை அற்றவர்கள்.காவலர் செல்வராஜ் கொலை, கோவைக் கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவை குறித்து இன்னும் ஏராளம் எழுதலாம். இவற்றையெல்லாம் அறியாமல் வெறுமனே, "கோவை அல்-உம்மாவிடம் கேட்டுக் கொள்" என்று இல்லாத ஓர் அமைப்பிடம் போய்க் கேட்கச் சொன்ன கார்கில் ஜெய் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். நான் பொய் எழுதியிருக்கிறேனாம். மலர் மன்னன் உண்மையை எழுதியிருக்கிறாராம். இரண்டையும் இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறாராம்.
போகிற போக்கில் சேறடிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை முன்வைத்து எழுதுபவன் என்று திண்ணை வாசகர்களுக்கு வஹ்ஹாபியைப் பற்றி நன்கு தெரியும். உண்மைகளை ஜெய் நிரூபிக்கட்டும். அதற்கு முன்னர் இக்கட்டுரையில் இணைப்பாகவும் ஆறாவது சுட்டியாகவும் கொடுக்கப் பட்டுள்ள உயிரோடு எரிக்கப் படும் இளைஞனையும் அதை ஆசையோடு வேடிக்கை பார்க்கும் கடமை தவறாத காவலரையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.
ஃஃஃ
சுட்டிகள்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80806056&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805152&edition_id=20080515&format=html
http://poar-parai.blogspot.com/2008/01/rss.html
http://newscap.wordpress.com/2008/02/04/
http://to.wahhabi.googlepages.com/Kovai_violance.jpg
http://nihalvu.blogspot.com/2006/06/blog-post.html
http://www.keetru.com/vizhippunarvu/sep07/jawaahirullah.php
http://www.thinnai.com/?module=displaystory&story_id=206100610&format=html
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1193:2008-05-04-17-14-12&catid=36:2007&Itemid=78
http://www.hindu.com/2006/03/08/stories/2006030809270500.htm
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1096:2008-05-01-08-55-50&catid=36:2007&Itemid=78